காதல் – ஃபைனல்
பின்லாந்தின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமுமான ஹெல்சிங்கில் அமைந்திருந்த யுனிவர்சிடி ஆஃப் ஹெல்சிங்கியில் தான், தன்னுடைய மேற்படிப்பிற்காக ஆரணி வந்திருந்தாள்.
ஆரம்பத்தில் இங்கு பொருந்திப்போக மிகவுமே சிரமப்பட்டாள் பெண். பிறகு மெல்ல மெல்ல இங்கு தன்னைப் பொருத்திக் கொண்டாள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மனைவியைப் பார்க்க ஓடிவந்த ஆதியும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
காதலிக்கவில்லை. காதல் வரவே இல்லை என்று புலம்பியவன் இன்று மனைவியை விட்டுப் பிரிய முடியாமல் எல்லோரின் கிண்டல்களையும் தாங்கிக்கொண்டு அவளைப் பார்க்க ஓடிவிடுகிறான்.
கதிர் கூட “டேய் வரும்போது ஆருவ மட்டும் கூட்டிட்டு வருவியா.? இல்ல உன் புள்ளைங்களையும் கூட்டிட்டு வருவியா.?” எனக் கிண்டலடித்து அவனை ஒருவழியாக்கியிருந்தான். அதெல்லாம் ஆதியின் மூளையில் ஏறினால்தானே.
“அப்படி வந்தா தான் என்ன.? இதுவும் டைம் ஸேவர் தானே, இங்க வந்தா எங்களுக்கு டைம் இருக்காது. இவங்ககிட்ட பேபிய விட்டுட்டு நாங்க எங்க வேலையை பார்ப்போம்.. எல்லாம் ப்ளான் பண்ணித்தான் பன்றோம்?” எனப் பதில் கொடுக்க,
“இங்க ஒரு நல்லவன், காதலும் வேணாம் கல்யாணமும் வேணாம்னு சுத்திட்டு இருந்தான், அவனை நீ பார்த்த.. நீ பார்த்த..” என நக்கலாகக் கேட்க,
“அவன் இந்நேரம் அவன் பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பன்றதுனு யோசிச்சிட்டு இருக்கானோ என்னவோ.. உனக்கு என்னய்யா வேணும். கலை வேற உன்னை அப்போ இருந்து தேடிட்டு இருந்துச்சு. போய் என்னனு கேளு..” என அவனைத் துரத்திவிட்டு விட்டு, மனைவிக்கு அழைத்தான்.
அவளோ கடந்த சில நாட்களாக நடக்கும் வழக்கம்போல போனை எடுக்காமல் இவனை சுத்தலில் விட, ‘இவளோட’ எனச் சலித்தவனின் உதட்டோரம் புன்னகை விரிந்தது.
‘மேடம் முறுக்கிட்டா TMT கம்பிதான், வளைக்கவே முடியாது’ மனைவியைப் பற்றி யோசித்ததுமே உள்ளம் துள்ளியது, உடலும் சூடானது.
இந்தியாவில் இருந்து கிளம்பும் வரைக்கும் ஏன், அவளை அங்கு சென்று விடும் வரைக்குமே பிரிவைப் பற்றி யோசிக்கவில்லை ஆதித்யன். படிக்க வந்திருக்கிருக்கிறாள், நன்றாக படிக்கட்டும், அதோடு அவனுக்கு கிடைக்காத வாய்ப்பு தன் மனைவிக்கு கிடைத்திருக்கிறது அதனால் அவளை நல்லமுறையில் விட்டு வரவேண்டும் என்ற எண்ணம்தான்.
ஆனால் அதெல்லாம் அவன் கிளம்பிய நிமிடம் மனைவியின் விழியில் நீர் கோர்த்து, அதை வழியவிடாமல் புன்னகையுடன் கணவனை வழியனுப்பிய நிமிடம் காணாமல் போனது. அந்த நிமிடம் அந்த பிரிவை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவளைக் காற்றுக்கூட புக முடியாதபடி இறுக்கியணைத்தவனின் அனைப்பில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த பெண்ணவளுக்கு அந்த நொடி தன் காதல் பொய்த்துப் போகவில்லை என்று உணர முடிந்தது. அதனாலே அவளும் கணவனை இறுக்கியனைத்துக் கொண்டாள்.
இருவரும் காதலை உணர்ந்த நிமிடம் அப்போதுதான். ஆனால் என செய்ய முடியும். வேறுவழியில்லாமல் பல பத்திரங்களைச் சொல்லி அங்கிருந்து கிளம்பியவன் அடுத்த ஆறாவது மாதம் அவளிடம் சென்று நின்றான்.
‘என்ன இது’ என அவள் ஆச்சரியப்பட, “என்னைப் பார்க்காம நீ ஏங்கிப் போயிட்டன்னு நிக்கி சொன்னா..” என பொய்யாகக் காரணம் சொன்னவன் ஒரு மாதம் அவளோடு இருந்து விட்டுத்தான் கிளம்பினான்.
முதல்முறை கிளம்பும்போது வீட்டில் உள்ளவர்கள் எதுவும் சொல்லவில்லை. புதிதாக மணந்தவர்கள், அதோடு ஆரணியும் தனியாக இருப்பதால் போய் வருவது நல்லதுதானே என்று விட்டுவிட்டனர்.
அடுத்த ஆறாவது மாதமும் அவன் கிளம்பவும் தான் எல்லோருக்கும் ‘என்னடா இவன் இஷ்டத்துக்கு போயிட்டு வந்துட்டு இருக்கான்’ என யோசிக்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் ஆதனின் வேலை சென்னையிலேயே என்றாகிவிட, ஆதனும் நிக்கியும் சென்னை வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். ஆகாஷிற்கு அவனது கம்பெனியில் சிங்கப்பூருக்கு அனுப்ப, மணிமொழி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து அவர்கள் சிங்கப்பூர் சென்றுவிட்டனர்.
பாண்டியனின் வேலை பதவி உயர்வுடன் தேனிக்கு மாற்றலானது. அவர்களும் சேலத்தைக் காலி செய்து சொந்த ஊருக்கே வந்துவிட, சங்கரும் வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டார். மகளும் சொந்தங்களும் அங்கிருக்க அதுவே அவருக்கு வசதியெனப்பட பெரியவர்களிடம் கேட்டு மாற்றிக்கொண்டார்.
முகுந்தனும் பவித்ராவும் ஆதித்யனைக் கேட்டு, தங்களின் இத்தனை வருட ஆசையான இயற்கை விவசாயத்தை முத்துச்சாமியின் உதவியுடன் பார்க்க ஆரம்பித்தனர்.
இப்படி வீட்டினர் எல்லாம் அவரவர் வேலையைச் சரியாக செய்ய, இதுவரை சரியாக செய்து கொண்டிருந்த ஆதித்யனோ மனைவியின் மந்திரக்கோலின் பிடியில் சிக்கித் தவித்து, அதிலிருந்து மீளமுடியாமல் அவளிடமே சரணடைந்து கொண்டிருந்தான்.
இப்போது மூன்றாவது முறையாக அவன் மனைவியிடம் கிளம்புவதைப் பார்த்துதான் குடும்பம் மொத்தமும் வீட்டில் கூடியிருந்தது. ஆதனும் நிக்கியும் கூட வந்துவிட்டனர்.
“டேய் பேராண்டி இது உனக்கே சரியா படுதா சொல்லு, நீ வந்து ஆறு மாசம் முடியல, அதுக்குள்ள மறுபடியும் போறேன்னு சொல்றது தப்பில்லயா..” என வழக்கம்போல ஹாலில் சத்தமாக குருவம்மா ஆரம்பிக்க, அவரைச் சுற்றி எல்லோரும் கவலையாக உட்கார்ந்திருக்க, ஆதனும் நிக்கியும் மட்டும் நமுட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தனர்.
மனைவியிடம் பேசலாம் என்று நினைத்தவன் அம்மத்தாவின் சத்தத்தில் ‘ஷப்பா’ என நெற்றியை நீவிக்கொண்டு “என்னதான் பாட்டி உங்களுக்கு வேணும்..” என்றான் சலிப்பாக.
“ஆதி அம்மா சொல்றது தப்பில்லதானே. இப்போதானே போயிட்டு வந்த. இன்னும் நாலு மாசத்துல அவ இங்கயே வந்திருவா. அதுக்கு ஏன் நீ போயிட்டு வந்துட்டு சொல்லு..” என்றார் பவித்ரா.
அவரை முறைத்துக் கொண்டே தன் தாத்தாவைப் பார்க்க, ‘இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல’ என்ற பார்வையை அவர் கொடுக்க, இப்போது பாண்டியனைப் பார்த்தான்.
“ஆதி நீ ஒன்னும் சின்ன பையன் கிடையாது. ஒவ்வொன்னும் சொல்லி சொல்லி புரிய வைக்க, இப்போ உனக்கு இங்க வேலை அதிகம்னு தெரியும். உன் ஹெட் கூப்பிட்டு சொல்றார். இந்த நேரம் ஏன் நீ இத்தனை நாள் லீவ் போட்டுருக்க, இன்னும் கொஞ்ச நாள்ள ஆரு வந்துடுவா. இல்ல நான் போய் அழைச்சிட்டு வரேன். நீ ரிஸ்க் எடுக்காத..” என்றவரிடம்,
“மாமா இந்த டைம் நான் கண்டிப்பா போகனும். அவ என்னை ரொம்ப தேடுறா. இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் நடந்துக்கிட்டதே இல்ல. சோ ப்ளீஸ் இந்த முறை விடுங்க..” என அழுத்தமாக முடித்துவிட்டான்.
பாண்டியன் முகுந்தனைப் பார்க்க ‘விடு’ என்றுத் தலையசைக்க, அமைதியாகிவிட்டார்.
“அப்படியென்ன அந்த ராங்கிக்கு என் பேரனைத் தேடுதாம், பையனைப் போட்டு படுத்தி எடுக்குறா.. வரட்டும் பேசிக்குறேன்..” என குருவம்மா புலம்ப, அதை வழக்கம்போல நிக்கி வீடியோ எடுத்து ஆரணிக்கு அனுப்பி வைத்துவிட்டாள்.
அதைப் பார்த்தவள் உடனே வீடியோ காலில் அழைத்துவிட்டாள். “கெழவி நான் இல்லன்னதும் ரொம்பத்தான் பேசுற, என்ன எங்கிட்ட பயம் போச்சா உனக்கு.. நான் வந்து உன்னை என்ன பண்றேன் பாரு..” என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, எல்லாரும் அதிர்ந்து நிக்கியைப் பார்த்தனர். இது அவள் வேலைதான் என எல்லாருக்கும் தெரியுமே.
“அடியே அல்லிராணி கம்முனு இருக்கமாட்டியா.. ஆரு சும்மாவே அம்மத்தாவை வச்சு செய்வா.. இனி காரணம் கிடைச்சா விடுவாளா.?” என ஆதன் மனைவியின் காதைக் கடிக்க,
“பின்ன நாங்க எல்லாம் யாரு.. நட்புன்னா சூர்யா-தேவான்னு மட்டும் பேர் சொல்லமாட்டாங்க சர், ஆரணி-நிகிதான்னும் சொல்லுவாங்க..” எனக் கெத்தாக அவனிடம் பதில் சொல்ல, குருவம்மா என்ன சொல்வாரோ என்று எல்லோரும் அவரையேப் பார்க்க, அவரோ பேத்தியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “க்கும்” எனத் தோள்பட்டையில் முகத்தை இடித்துக்கொண்டு போய்விட்டார்.
ஒரு நீண்ட வாக்குவாதத்தை எதிர்பார்த்த அனைவரும், குருவம்மா அமைதியாகப் போகவும் தான் ஆசுவாசமடைந்தனர். அதன்பிறகு ஆதித்யன் அவன் இல்லாத நேரம் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி ஆதனிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.
வெளியே வந்த ஆண்கள் இருவரும், “முகுந்தா ஆதி இப்படி செய்றது உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே” எனப் பாண்டியன் கேட்க,
“என்னப்பா சொல்ற, எனக்கு என்ன வருத்தம். அவன் இப்படி இருக்கிறதுதான் எனக்கு சந்தோசமே. எங்க வாழ்க்கையைப் பார்த்து காதல் கல்யாணம்ன்னா காத தூரம் ஓடுவான். எப்படி அதை மாத்துறதுன்னு தெரியாம நாங்க முழிச்சிட்டு இருக்கும் போதுதான் அவனே வந்து ஆருவை கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு சொன்னான். அப்புறம் உங்கிட்ட பேசி, ஆருக்கிட்ட பேசி இப்போ அவனை இப்படி பார்க்கவே சந்தோசமா இருக்கு. பணம் எப்போ வேணும்னாலும் சம்பாதிச்சிக்கலாம் பாண்டி. நம்ம புள்ளைங்க சந்தோசம் தான் நமக்கு முக்கியம். அவன் போயிட்டு வரட்டும் பார்த்துக்கலாம்..” என்ற முகுந்தனை அனைத்துக் கொண்டார் பாண்டியன்.
மகளின் பின்னால் அலையும் மருமகனை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். ஆனால் அது மற்றவருக்கும் பிடிக்காமல் போய்விடக்கூடாதே. சொந்தமே என்றாலும் பாண்டியனுக்கு இது சற்று பயம் கொடுக்கத்தான் செய்தது. ஆதித்யன் கிளம்பும் ஒவ்வொரு முறையும் அந்தப்பயம் வராமல் போனதில்லை. இப்போது முகுந்தனிடம் பேசியபிறகு அந்தப்பயம் தேவையே இல்லை என்று புரிந்தது அவருக்கு.
இங்கு வேகமாக சமையலறைக்குள் வந்த குருவம்மா மருமகளிடம் ஆரணிக்கு கொடுத்துவிட வேண்டிய பொடி வகைகளைச் செய்ய ஆரம்பித்தார். அதிலும் குறிப்பாக மாங்காய் தொக்கு, புளித்தொக்கு, மாங்காய் ஊறுகாய் என புளிப்பாகவே அனைத்தையும் செய்ய பெண்களுக்கு என்ன புரிந்ததோ ஆனந்தமாக விழிகளை விரித்தனர்.
“என்னங்கடி ரெண்டு பேரும் கண்ணை ஆந்தை மாதிரி விழிக்கிறீங்க. எம்பேத்தி எங்குடும்பத்துக்கு வாரிச கொடுக்கப் போறா. அவளுக்கு இதெல்லாம் செய்யாம வேற யாருக்கு செய்யப்போறேன்.” என்று பேசினாலும், வேலைகள் வேகமாக நடந்தது.
“அம்மா இது ஆதிக்கு தெரியுமா.? நம்மக்கிட்ட சொல்லவே இல்ல இந்தப்பையன்..” என்ற பவித்ராவிடம், “முதல்ல உன் மருமகளுக்கேத் தெரியுமான்னு தெரியல. அவளுக்கும் இன்னும் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். சரி இவன் போய் பார்த்துட்டு சொல்லட்டும், அதுவரைக்கும் யாருக்கும் சொல்ல வேண்டாம், நீங்களும் காட்டிக்காதீங்க.” என்றவர் மற்ற வேலைகளைப் பார்க்க, பெண்களும் இணைந்து கொண்டனர்.
“நிக்கி ஆதி சொன்ன அந்த ஃபார்மவுஸைப் பார்க்க நாளைக்கு நாம மேகமலை போயிட்டு வந்துடலாம். எப்படியும் அங்க ஒன்வீக் ஆகிடும். சோ அதுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் எடுத்து வை. குளிருக்கு தேவையான மெட்டீரியல்சும் எடுத்துக்கோ, நான் ஆதியை மதுரையில் விட்டுட்டு வந்துடுறேன்..” எனவும், அதுவரை புன்னகை முகமாய் சரியென்றவள் கடைசி வாக்கியத்தில் அரண்டு போய் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் தன்னையே நொந்து கொண்டவன், அவளைத் தனக்கருகில் இழுத்துக் கொண்டான். ஆதன் தனியாக கார் ஓட்டுகிறேன் என்றாலே நிகிதாவிற்கு பயம் சொல்லாமல் கொல்லாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். அதைப்புரிந்து கொண்ட ஆதனும் முடிந்தளவு தனியாகக் கார் ஓட்டுவதை தவிர்த்து விடுவான். ஆதித்யனே முதலில் இவனுக்கு ஒரு ட்ரைவரைத்தான் வைத்திருந்தான். ஆதன் மொத்தமாக சரியாகி அவனது கைகள் நடுக்கமெல்லாம் குறைந்தபிறகே அவனாகக் காரை எடுக்கவிட்டான்.
“அன்னைக்கு நான் ஒரு கோபத்துல, நீ எனக்கு இல்லையோ என்ற ஆதங்கத்துலயும் பயத்துலயும் செஞ்சது கண்ணா. இன்னும் அதையே நினைச்சிட்டு இருப்பியா. இப்போ இந்த உயிர் எனக்கு வெல்லக்கட்டி தெரியுமா? அதனால நான் ரொம்ப ரொம்பவே கவனமா இருப்பேன் பயப்படாத..” என மனைவியை இறுக்கமாக அனைத்து தலையில் அழுத்தமாக முத்தமிட்டான் ஆதன்.
ஒருவழியாக வீட்டில் உள்ளவர்களை சமாளித்து, இனி இந்த சண்டிராணியை எப்படி சமாளிக்க என்ற பெருங்கவலையில் ஃபின்லாந்த் வந்திறங்கினான் ஆதித்யன்.
அப்போதுதான் கல்லூரியிக்கு கிளம்புவதற்காக எழும்பியிருப்பாள் போல, இவன் சென்று கதவைத் தட்டவும், கலைந்த தலையும், நழுங்கிய உடையுமாக வந்து கவைத் திறந்தவளைப் பார்த்து அதிர்ச்சியாகிப் போனான்.
“என்னடி இது..” என்றவன் அவளை அனைத்துக்கொண்டே உள்ளே வர,
“ம்ச்.. எனக்கேத் தெரியல, எழுந்துக்கவே முடில. தூக்கம் தூக்கமா வருது. டயர்டா இருக்கு, தலையைத் தூக்கவே முடியல, பயமா இருக்கு..” என்றவள் தேம்பி தேம்பி அழ,
“ஹேய் குட்டிம்மா ஒன்னுமில்ல, ஒன்னுமில்லடா அதான் நான் வந்துட்டேனே. இரு முதல்ல ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாம்.” என்றவனுக்கும் பயமே வர, முதலில் அவளைப் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு சென்று தேவையான டெஸ்டுகள் எடுத்து அவள் கர்ப்பம்தான் என்று உறுதியாக இருவருக்குள்ளும் அதுவரை இருந்த பயம் போய் பேரமைதி நிலவியது.
மனைவியின் நடுங்கியக் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன் வீடு வந்ததும் தான் விட்டான். அவளுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து, படுக்க வைத்தவன் கைகளைப் பிடித்துக்கொண்டே “பயந்துட்டியா..” என்றான்.
“ம்ம்.. ரொம்பவே, நான் இதுக்குப் பயந்துதான் இப்போ இதெல்லாம் வேண்டாம் சொன்னேன். சேஃபா சேஃபா ன்னு சொல்லிட்டு என்ன செஞ்சி வச்சிருக்கீங்க, உங்களை..” என அவன் மண்டையில் கொட்ட,
“ச்சு விடுடீ.. இப்போவும் சேஃப்தான். நீ இங்க இருக்கும் போதே பேபின்னா, ஊருக்குப்போய் ஒரு வருஷம் ரெஸ்ட் எடுக்கலாம். அப்புறம் என் ஓட்டத்துல நீயும் கூட ஓடுற மாதிரி இருக்கும். அம்மா-அப்பா மட்டும் எவ்வளவு பார்ப்பாங்க. இப்பவே வர்ர இடமெல்லாம் வாங்கிப் போட்டுக்கிட்டு இருக்காங்க, இப்போ மேகமலைல ஒரு ஃபார்ம், அதெல்லாம் என்னால மட்டும் எப்படி மேனேஜ் செய்ய முடியும். நீயும் கூட இருந்தா ஃபீல் பெட்டர் இல்லையா..” என்றவனிடம்,
“ஃப்ராடு.. ஃப்ராடு எப்படியெல்லாம் ஏமாத்திருக்கீங்க, உங்களை நம்பி.. அச்சோ இப்போ எப்படி வீட்டுக்கு சொல்ல, எல்லாரும் என்னை கிண்டல் செய்வாங்க, அதுலயும் அப்பத்தா என்னை ஓட்டியே கலாய்ச்சிடும் அவ்வ்..” என முகத்தை மூடிக்கொண்டாள்.
“அம்மத்தாவுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும் போல, அதனாலத்தான் உனக்கு தேவையான் ஐட்டம் எல்லாம் செஞ்சி கொடுத்துருக்காங்க, இரு பேசுவோம்..” என வீட்டுக்கு அழைத்தான்.
அவர்கள் அழைப்பை ஏற்றதும் “பேராண்டி என்ன எல்லாம் நல்ல விசயம்தானே, நான் கொள்ளுப்பாட்டியாகிட்டேனா..” எனச் சிரிக்க,
“அப்பத்தா..” என்ற ஆரணியின் சினுங்கல் அதுதான் உண்மை என்று சொல்ல, எல்லோருக்கும் மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை. பவித்ரா இங்கிருந்தே இருவருக்கும் சுற்றிப்போட்டார்.
ஆதன்-நிக்கி, கதிர்-கலை மற்றும் ஆகாஷ்-மணி என அனைவரும் வாழ்த்த, நிக்கிக்குத்தான் இருப்பே கொள்ளவில்லை. “நாமளும் போய் பார்த்துட்டு வரலாமா.?” என ஆதனை நச்சரிக்க, “எத.” என ஷாக்கானவன் “ஃபின்லாந்த் என்ன நம்ம ஊருக்கு அடுத்த ஊரா.? இவங்கதான் சொன்ன பேச்சைக் கேட்காம போனா உனக்கு என்னடி. அதெல்லாம் இன்னும் நாலே மாசத்துல அவ வந்துடுவா, அப்போ நீ அவக்கூடவே இருந்து பார்த்துக்கோ..” என்றுவிட்டான். அதில் ஒருவாரம் பேசாமல் அவனை சுத்தலில் விட்டாள் என்பது தனிக்கதை.
நாட்கள் அதன்பாட்டிற்கு கழிய, ஆதி இந்தியா வந்த அடுத்த வாரத்தில் பாண்டியனும் ரம்யாவும் சென்று மகளுடன் இருந்து அவள் படிப்பை முடித்த கையோடு இந்தியா கூட்டி வந்துவிட்டனர். அப்போது அவளுக்கு ஆறு மாதங்கள் வேறு.
வீட்டில் இருப்பவர்கள் அவளைத் தாங்க, ஆதியின் வேலையைப் பொறுத்து, ஒன்பதாம் மாதம் வளைகாப்பு என வீட்டினர் முடிவெடுத்தனர்.
சீரும் சிறப்புமாக சீமந்தம் முடிய, ஆரணியின் விசேசத்தின் போது திடீரென நிக்கி மயங்கிவிழ, அவளைக் கவனித்த குருவம்மாவிற்கு இரட்டைச் சந்தோசம். நிகிதாவும் பிள்ளை உண்டாகியிருந்தாள்.
பிறகென்ன வேண்டும். வீடே கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டது. அன்றிரவு மனைவிக்கு உடைமாற்ற உதவி செய்து சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து, பாலை பருகவிட்டவன், பின் வழக்கம்போலத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
திருமணத்திற்கு முன் இருந்த சண்டைகளோ, வாக்குவாதங்களோ எதுவும் இப்போது கிடையாது. இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தார்போல இருவருக்குள்ளும் பேரமைதி.
“நான் இப்படியெல்லாம் காதல் வந்து பைத்தியமா அலைவேன்னு யாராச்சும் சொல்லியிருந்தா நம்பியிருக்கவே மாட்டேன்.” என்றவனின் தோளில் சாய்த்திருந்த தன் தலையால் லேசாக இடித்துவிட்டு சிரித்துக்கொண்டாள் ஆரணி.
“நிஜமாதாண்டீ.. ஆனா இப்போ இந்த ராங்கியைத் தாண்டி வேற யோசிக்க முடியல. என்னை என்னவோ பண்ணிட்டடி. இதுவே முத்திப்போச்சுன்னு சொல்லிட்டு இருக்காங்க ஆதனும், கதிரும். இன்னும் நீ என்னவெல்லாம் செய்யப்போறயோ.” என்றவன் ‘இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே’ என்ற பாடலை ஹம் செய்ய, ஆரணிக்குள் புதுரத்தம் பாய்ந்த உணர்வு.
அவளிடம் தன் காதலை உணர்ந்த நொடியில் இருந்து ஆதித்யன் இப்படித்தான், தனக்குத் தெரிந்த அளவில் தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். அது ஆரணிக்கும் பிடித்திருக்க, கணவனின் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தாள் பெண்.
ஏழாண்டுகளுக்குப் பிறகு…
“ஆரும்மா ஆதிப்பா இப்ப வந்துடுவாங்க, சீக்கிரம் கீழ இறங்கி வாங்க..” என்ற நிக்கியின் மகன் தூயவனைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரணி.
“என்னாச்சு..” என்றவன், “அம்மாச்சி உங்களைத் தேடமாட்டாங்க, பாப்பா அழறா சீக்கிரம் வாங்க, ஆதிப்பா வந்துட்டா உங்கள நீல் டவுன் போட சொல்வாங்க..” என்றான் பாதுகாப்பிற்கு நின்ற ஆதன்-நிக்கியின் மகன் தூயவன்.
“தூயாக்கண்ணா ஆதிப்பா அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க, நீ போய் அம்மத்தாக்கிட்ட பாப்பா அழறா சொல்லு, நான் இப்ப வரேன்.” என அனுப்பி வைத்தவள், தனக்குப் பின்னால் மறைந்து அமர்ந்திருந்த நிகிதாவைப் பார்த்து “மச்சி நோ டிஸ்டர்பன்ஸ், இப்ப அந்த பாட்டில்ல ஓபன் செய்.” என்று சொல்லி முடிக்கும் முன்
“தான் கெட்டதுமில்லாம தன் வனத்தையும் சேர்த்து கெடுத்துச்சாம் ஏதோ ஒன்னு, அது மாதிரி அந்த ராங்கிங்க தான் அடங்காம சேட்டன்னு பார்த்தா, புள்ளைங்களயும் சேர்த்து கெடுத்து வச்சிருக்காளுங்க..” என்ற குருவம்மாவின் சத்தம் கேட்க,
“மச்சி கெழவி ஆரம்பிச்சிருச்சுடி, இனி இங்க இருந்தா நமக்கு டைம் சரியில்லைன்னு அர்த்தம், நான் பெத்த இளவரசி தான் போய் இழுத்துட்டு வந்திருப்பாள், அப்படியே எகிறி குதிச்சு ஓடிரலாம்.. ” என்ற ஆரணியின் பேச்சைக் கேட்டு மரத்தில் இருந்து முதலில் நிக்கி குதித்தாள். அடுத்து ஆரணி குதிக்க, சரியாக அதே நேரம் உள்ளே வந்து அவளுக்கு முன்னே நின்றான் ஆதி.
“அவ்வ்வ்” என்றவளைப் பார்த்து “அடங்கவே மட்டியாடி, உன்னைப் பார்த்து புள்ளைங்களும் கெட்டுப்போச்சு..” என வழக்கமாக அவன் திட்ட ஆரம்பிக்க, சைட் கேப்பில் நித்தி எஸ்ஸாக அதைக் கவனித்த, ஆதியின் செல்ல மகள் தூரிகா, “ப்பா.. ப்பா நிக்கிம்மா போறா..” எனப் போட்டுக்கொடுக்க, “ஈஈஈ” என்று வந்து வரிசையில் அமைதியாக நின்றுவிட்டாள்.
“மச்சி.. இவ எல்லாத்துலயும் ஆதி அத்தான் மாதிரின்னா, போட்டுக்கொடுத்து எட்டப்பன் வேலைப் பார்க்குறதுல நீயேதான்” என நிக்கி ஆரணியின் காதைக் கடிக்க, “ச்சும்மா இருடி, கவனிக்கலன்னு வாத்தி மறுபடியும் லெட்சர் எடுக்க ஆரம்பிச்சிடப் போகுது” என, இருவரின் குசுகுசுப் பேச்சைக் கேட்ட ஆதியோ “எப்படியோ போய் தொலைங்க” என்றுவிட்டு மகளைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்.
ஆதி உள்ளே போகவும், “ஏன் மச்சி ஒரு ரோஸ் மில்க் குடிக்க நம்ம வீட்டுல நமக்கு பிரைவேசி இல்லாம போச்சே” என நொந்து கொண்டே பிள்ளைகளைத் தேடி போனார்கள்.
ஆதியன்-ஆரணிக்கு ஏழு வயதில் துருவனும், ஐந்து வயதில் தூரிகாவும் இருக்க, ஆதன்-நிக்கிக்கு ஆறில் தூயவனும், மூன்றில் துவாரகாவும் என ஆண் ஒன்று பெண் ஒன்று என இருவருக்கும் இரண்டு பிள்ளைகள்.
ஆதனும் இப்போது அண்ணனுக்கு துணையாக தேனிக்கே வந்துவிட்டான். காரணம் இப்போது அவர்களது தொழில் அதிகமாகியிருந்தது.
குமுளி, மூணார், மேகமலை என மூன்று இடங்களிலும், மிளகு, காபி, ஏலம் என விவசாயம் சூடு பிடிக்க, ஊரில் இருக்கும் வேலைகளைப் பார்க்க ஆள் வேண்டும் என்பதால் ஆதனை மொத்தமாகவே வரவைத்து விட்டான்.
பிள்ளைகள் இருவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கியது பெற்றோருக்கு அத்தனை மகிழ்ச்சி.
இதோ இப்போதும் கூட வீரபாண்டி கோவில் திருவிழா ஆரம்பித்திருக்க, இன்று கடைசி நாள். அதற்கான வேலைகளில் தான் வீட்டு ஆண்கள் அனைவரும் ஓடிக் கொண்டிருந்தனர்.
திருவிழா ஆரம்பித்து முடியும் எட்டு நாட்களும் அவர்கள் தான் அன்னதான பொறுப்பு.
அதற்கான பொறுப்புகளைக் கொடுத்து ஒரு ஆளை வைத்துவிட்டு, பிள்ளைகளை அழைத்து வரலாம் என்று தான் வீட்டுக்கு வந்திருந்தான் ஆதித்யன்.
மனைவியோ குழந்தையை விட மோசமாக இன்னும் மரமேறி குதித்து கொண்டிருக்கிறாள், இவளை என்னதான் செய்வது என வழக்கம்போல தனக்கு தானே புலம்பிக் கொண்டான்.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்று, அம்மனைத் தரிசித்து வெளியில் வர, அப்போது பூஞ்சட்டி எடுத்துக் கொண்டு கூட்டமாக சிலர் வர, அவர்களுக்கு வழிவிட்டவர்கள், திருவிழா கடைகளைச் சுற்றி அழுத்து ஒருவழியாக வீடு வந்தனர்.
பெரியவர்கள் அனைவரும் அலுப்பில் உறங்க சென்று விட, ச
குழந்தைகளுக்கு எல்லாம் பார்த்து, உறங்க வைத்து அருகில் வந்த மனைவியை முறைத்துப் பார்த்தான் ஆதி.
“ம்ச் இன்னும் என்ன மாமா..” எனச் சினுங்க,
“எத்தனை தடவை சொல்றது மரத்து மேல ஏறாதீங்கன்னு, உங்களப் பார்த்து அவங்களும் கத்துக்கிட்டு கீழ விழுந்து வாரனும், அப்படித்தானே” எனப் பல்லைக் கடிக்க,
“நோ டென்சன் மாம்ஸ், குட்டீஸ்க்கு எல்லாம் பக்காவா ட்ரெயின் பண்ணிட்டு தான் ஏற வைப்போம், அதனால கீழ விழுந்துடுவாங்கன்னு பயப்படாதீங்க, யாமிருக்க பயமேன், ஆரணி இருக்க பயப்படலாமா.?” என்றவளைப் பாவமாக பார்த்து “அதுதான்டீ என் பயமே” எனவும்,
“மாமா” எனப் பல்லைக்கடிக்க, “ஹா ஹா..” என வாய்விட்டு சிரித்தவன் அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.
“நீ என் முன்னாடி வந்து குதிச்சதும், இந்த வீட்டுக்கு வந்த பர்ஸ்ட் நாள் ஞாபகம் வந்தது. இன்னும் அப்படியே இருந்தா என்ன செய்ய.” என்றவன் அவள் காது மடலை உரச, “கூசுது” என நெளிய, “அதுக்குதானே இதெல்லாம் செய்றது” என்றவனின் உதடுகள் காதோரத்திலிருந்து கீழிறங்கி அவனுக்கேயான இடங்களைத் தேடி பயணித்தது.
“மாமா திருவிழா..” என அவனில் திணறியவளிடம்,
“அதான் முடிஞ்சு போச்சே,” என மேலும் முன்னேற,
“வயசான பிறகு தான் நீங்க ஓவர் வேல பார்க்குறீங்க மாமா.” என அவனைச் சீண்ட,
“ஆஹான். வயசாகிடுச்சு, பெர்பாமன்ஸ் பத்தலன்னு சொல்லாம சொல்றியா செல்லக்குட்டி, இப்ப பாரு மாமாவோட பெர்பாமன்ஸ..” என அவள் மேல் தன் கனத்தை மொத்தமாக பட்டவன், அவளை மொத்தமாக தனக்குள் விழுங்க ஆரம்பித்தான்.
அவர்களது வாழ்க்கை, சீண்டலும், சினுங்கலும், சண்டையும், சமாதானமும் என எப்போதும் இப்படியே இருக்க வாழ்த்தி நாமளும் விடைபெறும்.