Home Antiheroதூரம் – 10

தூரம் 10

மகளின் கலங்கிய முகம் கண்டு, “என்ன ராசாத்தி?” என்ற தாயிடம்,

“என்னம்மா?” என நந்தினி வெடுக்கென்று பேச,

“என்னடி… என்னாச்சு… அங்க எதுவும் பிரச்சனையா?” என்றார் சந்திரா பதட்டமாக.

மகளின் குரலும் சரியில்லை, முகமும் சரியில்லையே?

“ம்ச்!” என்றவள் கேட்டை பூட்டிவிட்டு காவலுக்கு இருக்கும் மணியை அவிழ்த்து விட்டுவிட்டு, வெளித் திண்ணையிலேயே அமர்ந்துவிட, அதுவும் ஓடி வந்து நந்தினியின் மடியில் படுத்துக்கொண்டது.

“என்ன கண்ணு, சொன்னாத்தான அம்மாவுக்கு தெரியும். உனக்கு விருப்பமில்லன்னா விட்டுடலாம். ஏன் கொடிக்கு இதுல விருப்பம் இல்லையா?” என மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டைப் பற்றித்தான் ஏதோ பிரச்சனை என நினைத்து சந்திரா பேச,

“ம்மா, கொஞ்ச நேரம் சும்மா இரு. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.” என பல்லைக் கடித்தவள், “அண்ணி எவ்வளவு நல்லவங்க, யாரை பத்தியும் தப்பா பேசமாட்டாங்க, யாரையும் குறை சொல்லமாட்டங்க. மரியாதை குறைவா யாரையும் நடத்தமாட்டாங்க. அவங்க சத்தமா பேசிக்கூட நான் பார்த்ததில்ல. அப்படிப்பட்டவங்க வாழ்க்கையே இங்க மோசமா போயிடுச்சு. நானெல்லாம் எம்மாத்திரம்?

எனக்கு கல்யாணமே வேண்டாம். இனி அந்த பேச்சே எடுக்காதீங்க. நான் இப்படியே இருந்துக்குறேன்.” என்றவள் சந்திராவின் மடியில் படுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

“என்ன கண்ணு… என்ன கண்ணு…” என சந்திரா பரிதவிக்க, கந்தவேலு வந்து வாசலில் நின்றார். அவரைப் பார்த்ததும், “வாங்க மாமா!” என்றபடியே எழுந்து சென்று கேட்டை திறந்தார் சந்திரா.

“என்னாச்சு மாமா? ஏன் இவ வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கா?” என தாய்க்கே உரிய தவிப்பில் கேட்க,

“அது சந்திரா… ஆத்தா தூங்கிடுச்சா?” என்றார் தயக்கமாக.

“தம்பி வந்துட்டு போனதுமே அத்த தூங்கிடுச்சு மாமா.” என்றவர் யோசனையாக கந்தவேலை பார்க்க, அவரோ ஒரு பெருமூச்சுடன் வருத்தமாக வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்ல,

“என்ன மாமா… என்ன சொல்றீங்க? கொடி இப்போ எப்படி இருக்கா?” என சந்திரா பதட்டமாக கேட்க,

“தூங்கிட்டா… அந்த மாத்திரையோட பவர் போல…” என்றவர், “ராசாத்தி அழுதுட்டே வரவும் மனசே கேட்கல சந்திரா. அதான் பார்த்துட்டு போக வந்தேன்.” என்றவர் மகளின் அருகில் அமர்ந்து,

“என்ன கண்ணு இது, இதுவரைக்கும் எப்படியோ? இனி உன் அண்ணன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவான் கண்ணு. அவன் மேல நம்பிக்கையில்லையா?” என்று பரிவாக கேட்க,

“முளைச்சு மூனு இலை விடல, அவ எல்லாம் என்ன பேச்சு பேசுறா பார்த்தீங்களா ப்பா? இதுக்கெல்லாம் யார் காரணம் ப்பா? இவர் தானே?” என்றாள் கோபம் குறையாமல்.

“தப்புத்தான்… அவனைப் பார்த்துதான் பிள்ளைங்களும் பழகினாங்க, இன்னைக்கு நடந்ததை பார்த்தே அதிர்ச்சியில் இருப்பான். இனி எல்லாத்தையும் சரியாக்குவான் கண்ணு, அவன் பிள்ளைங்களையும் சேர்த்துதான் சொல்றேன்.” என பேசி பேசியே மகளை சமாதானம் செய்தார்.

“சங்கர் அண்ணனுக்கு சொல்ல வேண்டாமா மாமா? ஏற்கனவே கோபத்துல இருப்பாங்க, இதை சொல்லலன்னா இன்னும் கோபம் அதிகமாகிடும்.” என்றார் சந்திரா.

“இல்லம்மா, இந்நேரத்துல வேண்டாம், பயந்துக்குவாங்க. விடியவும் கொடிக்கிட்ட பேசிட்டு மாமாவுக்கு சொல்லிக்கலாம். நாளைக்கு ஹாஸ்பிடல் கூப்பிட்டு வந்துடலாம்.” என்றவர்,

“கண்ணு, அழுதது போதும். உங்க அண்ணியை எப்படி சமாளிக்கிறதுனு யோசி. மருமகளை ஆஸ்பத்திரி கூட்டிட்டு வர்ற வேலையை நீதான் செய்யணும். சும்மா அழுது உடம்பக் கெடுத்துக்காத…” என மகளை அதட்டிவிட்டு, இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

“இந்த பொண்ணு ஏன்டி இப்படி இருக்கா?” என சந்திரா அங்கலாய்ப்பாய் கேட்க,

“அண்ணி பாவம் ம்மா… கொஞ்ச நாளாவே அவங்க முகமே சரியில்ல. அண்ணனோட கோபம் குறைஞ்சிடும், எல்லாம் சரியாகிடும்னு பார்த்தா… ப்ச்!” என கோபமும் ஆற்றாமையுமாக பேசிய நந்தினி, கடைசியில் சலிப்பாக முடித்தாள்.

“சரி விடு, எல்லாம் சரியாகிடும். அவளுக்கு ஒன்னும் இருக்காது. இந்த அமாவாசைக்கு போய் கோவில்ல விளக்கு போட்டுட்டு வா. உன் பெரியாத்தாளையும் இழுத்துட்டு போ, பிள்ளைய எப்படி வளர்த்து வச்சிருக்கு பார். முதல் தடவை பேசும் போதே வாயில நாலு போட்டுருந்தா இன்னைக்கு இவ்ளோ பேசுவாளா அந்த பொடுசு…” என சந்திரா மகளிடம் கூறிவிட்டு வீட்டுக்குள் செல்ல, நந்தினிக்கு மனதே ஆறவில்லை.

பூங்கொடி அண்ணன் மனைவியாவதற்கு முன்பே அவளின் அத்தை மகள். அதோடு ஆனந்தி, அமுதாவை விட சின்னவளான கொடிதான் நந்தினியின் கவனத்தை அதிகம் இழுத்தாள்.

பின்னர் இளங்கோ வீட்டில் சண்டையிட்டு கொடியைத் திருமணம் செய்ததும், தனக்கு பிடித்த அண்ணியையே அண்ணன் திருமணம் செய்து கொண்டது அத்தனை மகிழ்ச்சி, அந்த குட்டி பெண்ணிற்கு.

நந்தினியின் வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் கொடி எவ்வளவு முக்கியமானவள் என்று எல்லோருக்கும் தெரியும். படிக்க போக வேண்டாமென மறுத்த சுப்புவிடமும் பேச்சியிடமும், படிக்க வைத்தே ஆகவேண்டும் என வாதிட்டு கல்லூரியில் சேர்க்க வைத்தவள்.

இன்று யாரையும் தேடாமல் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க முக்கியக் காரணம், இளங்கோவாக இருந்தாலும் அதை இளங்கோவின் மூலம் செய்ய வைத்தது கொடிதான்.

படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவள். அதனாலே நந்தினி படித்தே ஆகவேண்டும் என்று முடிவாக நின்றாள்.

கொடியின் முயற்சியால் மட்டுமே அனைத்தும் நந்தினிக்கு சாத்தியமானது. எனவே தான் அவளுக்கு ஒன்று என்றால் நந்தினியால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை.

அன்றைய இரவு அனைவருக்கும் மிக மோசமாகவே கழிந்தது.

வழக்கம் போல காலை ஐந்தரைக்கு அலாரம் அடிக்க, வெகு நேரம் கழித்து உறங்கியதாலோ என்னவோ யாருமே எழுந்து கொள்ளவில்லை.

ஆனால் அலாரம் அடிக்காமலே எழுந்து கொள்ளும் கொடி, இன்று இரண்டாவது அலாரத்தில் தான் எழுந்தாள்.

எழுந்தவளின் பார்வையில் விழுந்தது, தனக்கு எதிரே சோபாவில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த கணவன்தான்.

பல மாதங்கள் ஆகிவிட்டது, இப்படி அவனை நேராக பார்த்து. பார்வையை அவனிடமே பதித்தாள். காதோரம் நரைத்த முடியை வைத்து தான் நாற்பது வயதை நெருங்கிவிட்டான் என்றே சொல்ல முடியும்.

‘ம்ச்! நான் என்ன சின்ன பொண்ணா? இப்படி பார்த்துட்டு இருக்கேன், வயசுக்கு வந்த பொண்ண வச்சிட்டு என்ன செஞ்சிட்டு இருக்கேன் நான்?’ என யோசித்தவளுக்கு பெருமூச்சும் சலிப்பும் ஒன்றாக வந்தது.

‘உனக்கு ஆசை வந்து என்ன செய்ய? உன்னோடு ஒரே கட்டிலில் படுக்கக்கூட பிடிக்காமல் தான் சோபாவில் உறங்குகிறான்.’ என அவள் மனதை திட்டிய வார்த்தைகளை உள்வாங்கியபடியே, பார்வையை அவனிடமிருந்து விலக்கியவள் இறங்க முற்பட, புடவை வராமல் இழுபட்டது.

‘என்ன இது?’ என திரும்பி பார்க்க, தன் புடவையை சுருட்டி கைகளில் வைத்தபடி மகன் உறங்க, சட்டென்று நீர் இறங்கியது அவள் விழிகளில்.

ஒரு தாயாக அவள் தோற்கவில்லை, மனம் சிறிதளவில் சமாதானம் ஆனது.

மகனிடமிருந்து மெதுவாக புடவையை உருவியவள், அதை சரியாக உடுத்திக்கொண்டு வெளியில் வர, ஹாலில் கந்தவேலு படுத்திருக்க மற்றொரு அறையில் பாட்டியும் பேத்தியும் படுத்திருந்தனர்.

வாசல் தெளித்து கோலம் போட்டு முடிக்கும் நேரம், சந்திரா பால் எடுத்துக்கொண்டு வந்தவர், “இப்போ எப்படி இருக்கு கொடி?” என பாலை கொடுக்க,

“பயப்பட ஒன்னும் இல்லத்த, மாத்திரை போட்டதுமே படுக்கணும். நேத்து லேட்டாகிடுச்சு, அதான் அப்படியே தூங்கிட்டேன்.” எனும் போதே பால்காரன் மணியை அடிக்க,

“சரி கொடி, நான் பாலை அளந்து ஊத்திட்டு வரேன். முதல்ல நீ டீயை வச்சு குடி, அப்புறம் குளிக்கலாம்.” என்றவர் அவர் வீட்டுக்கு செல்ல, சந்திராவின் கண்டிப்பில் மெல்ல சிரித்தபடியே வீட்டுக்குள் வந்தாள் பூங்கொடி.

இந்த பேச்சு சத்தத்தில் கூட கந்தவேலு விழிக்கவில்லை. அவளுக்குமே இப்போது டீ குடித்தால் நன்றாக இருக்குமென தோன்ற, ஒரு அடுப்பில் பழைய பாலை வைத்துவிட்டு, மற்றொன்றில் இப்போது வாங்கிய பாலை வைத்தாள்.

பாத்திரங்கள் கழுவி அடுக்கப்பட்டிருக்க, சுப்பு செய்திருப்பார் என்று புரிந்தது. நேற்றிரவு சமைத்த அனைத்தும் ப்ரிஜில் வைக்கப்பட்டிருக்க, அதை எடுத்து வெளியில் வைத்தவள் வேறு என்ன சமைப்பது என யோசிக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்டு திரும்ப, இளங்கோதான் நின்றிருந்தான். அவளை மேலிருந்து கீழ் ஆராய்ந்து பார்த்தவன், “இப்போ பரவாயில்லையா?” என்றான் முகத்தை அழுந்த துடைத்தபடி.

“ஹான்! பரவாயில்ல. இப்போ நல்லாத்தான் இருக்கேன்.” என அவனைப் பார்க்காமல் பாலில் டீத்தூளை போட்டபடி கூற,

“பத்து மணிக்கு கிளம்பி ரெடியா இரு, ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்.” என்று கூறியபடியே மனைவியையே பார்க்க,

“இல்ல… இல்ல… வேண்டாம். நாளைக்கு போய்க்குறேன், இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, டாக்டர் யாரும் இருக்கமாட்டாங்க.” என பதட்டமாக கூற,

“அதுமட்டும் தான் காரணமா? இல்ல, இன்னும் இருக்கா?” என்றான் தாடையைத் தடவியபடி.

“வேற என்ன… அதெல்லாம் ஒன்னுமில்ல.” என்றாள் பட்டென்று.

“சரி.” என வெளியில் நடக்க ஆரம்பிக்க,

“அது…” என இழுக்க ஆரம்பித்தவளின் பேச்சில் இளங்கோ நின்று திரும்பி பார்க்க,

“அது வந்து நான் உங்களை மயக்குறதுக்காகவோ, உங்களை என் பக்கம் திருப்புறதுக்காகவோ நான் அப்படி செய்யல. நிஜமாவே நேத்து நான் தூங்கிட்டேன். அதுக்கு பிறகு என்ன நடந்ததுனு தெரில. மன்னிச்சிடுங்க, இனி இப்படி நடக்காம பார்த்துக்குறேன். என்னால உங்க தூக்கம் கெட்டதுக்கு சாரி.” என தலையைக் குனிந்தபடியே கூற, வெற்றுப் பார்வை ஒன்றை வீசிவிட்டு வெளியேறினான்.

‘சொல்ல நினைச்சதை சொல்லியாச்சு.’ என ஒரு மனம் பெருமூச்சுவிட, மற்றொரு மனமோ நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டான். எதுக்கு நீ இவ்வளவு பேசுற?’ என சலிக்க, அதுவும் சரிதான் என நினைத்தபடி டீயை ஊற்றி அவனுக்கு ஹாலில் வைத்து விட்டு, தனக்கும் சந்திராவிற்கும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

இங்கு முகத்தைக் கழுவ வெளியில் வந்த இளங்கோவோ, அந்த சுவற்றிலேயே சாய்ந்துவிட்டான். மனைவியின் பேச்சு அவன் இதயத்தைக் கத்தியால் கீறிக் கொண்டிருந்தது.

‘பைத்தியக்காரா என்னடா பண்ணி வச்சிருக்க அவளை? இன்னைக்கு இந்த பேச்செல்லாம் அவ பேச யார் காரணம் யாரு? நீதான… நீ மட்டும்தான்.

ராணி மாதிரி பார்த்துக்குவேன், மகாராணி மாதிரி வச்சிக்குவேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு, வீட்டு வேலைக்காரியை விட மோசமா நடத்தி வச்சிருக்க.

இதுதான் உன்னோட காதலா? காதல்னா என்னனு தெரியுமா? இந்த வயசுக்கு மேல உனக்கு தெரிஞ்சா என்ன, தெரியலைனா என்ன?’ என மானாவாரியாக மனம் வசைபாட, “ஊப்ஸ்…” என ஒரு பெருமூச்சைவிட்டு தன் ஆதங்கத்தை எல்லாம் வெளியேற்றியவன், குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவி தன்னை சமன் செய்ய முனைந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே செய்து கொண்டிருந்தானோ கந்தவேலின், “தம்பி!” என்ற குரல் கேட்க, முகத்தைத் துடைத்தபடி வெளியில் வந்தான்.

“என்னப்பா?” என வந்த இளங்கோவை ஓடி வந்து கட்டிக்கொண்ட நவீன், “ப்பா… அம்மாவை காணோம்… எங்கப்பா? ஊருக்கு போயிட்டாங்களா? எங்கிட்ட கோச்சுட்டு போயிட்டாங்களா?” என அழ ஆரம்பித்துவிட்டான்.

“நவீ… நவீ இங்க பாரு… ஒன்னுமில்ல… அம்மா எங்கேயும் போகல, அப்பத்தாவை பார்க்க போயிருப்பா, இப்போ வந்துடுவா.” என சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் நேரம், மூவரையும் யோசனையாக பார்த்தபடி உள்ளே வந்தாள் கொடி.

“ஹேய், எங்கடி போய் தொலைஞ்ச?” என மனைவியைப் பார்த்து கத்த, அதற்குள் தந்தையிடமிருந்து தாயிடம் வந்திருந்தான் நவீன்.

கணவன் பேசியதில் அரண்டு போய் நின்றிருந்தவள், மகனின் செய்கையில் அவனை வயிற்றோடு கட்டிக்கொண்டு, “ஒன்னுமில்ல… ஒன்னுமில்ல…” என சமாதானம் செய்தபடி தன் மாமனாரைப் பார்க்க,

அவரோ, “நவீ எந்திருச்சதும் உன்னை காணலன்னு பயந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டான்.” எனவும், மகனை அணைத்தபடியே கணவனைப் பார்க்க,

“காலங்காத்தால வந்துட்டா, உயிர எடுக்க…” என பல்லைக் கடித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

கொடிக்கோ சில மாதங்களுக்கு பிறகு கிடைத்த மகனின் பாசமும் பரிவும் கண் கலங்க வைக்க, அததை வெளியில் காட்டாமல் மகனை சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

உன்னை நேசிக்காதவர்களிடம் அன்பைத் தேடினால் உன் சுயமரியாதையை இழக்க நேரிடும். அப்படி சுயமரியாதையை இழந்து கிடைக்கும் அன்பானது, முள் கிரீடம் போன்றது என சொல்வார்கள். ஆனால் தாயன்பு என்று சுயமரியாதையை எதிர்பார்த்தது? அது தன்னமில்லாதது. தூரங்களையும் துரத்தியடிக்குமே… இதோ துரத்தியடிக்க ஆரம்பித்துவிட்டதே…

***

You may also like

Leave a Comment

About Me

Featured