Home Ongoing NovelsComedy storyஅட.. இது டம்மி பீசு.!

அட.. இது டம்மி பீசு.!

by Vathani S

அட… இது டம்மி பீசு!

அத்தியாயம் 2 

கிராமத்தின் வடக்குச் சாலை அன்றைய மாலையில் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தது. சூரியன் மறைந்து வானம் செம்பழுப்பு நிறத்திலிருந்து மெதுவாக சாம்பல் நிறத்துக்கு மாறிக் கொண்டிருந்தது. அந்தச் சாலையில் மனிதர்கள் நடமாடுவது அரிது. அதனால்தான் கபிலனின் பழைய மோட்டார் சைக்கிள் எழுப்பிய சத்தம் அந்த அமைதியை வெட்டி ஓடியது.

மாளிகையின் இரண்டாவது மாடி ஜன்னல் அருகே நின்றிருந்த காசிநாதன் காதுகளை நிமிர்த்தினான்.

“வண்டிச் சத்தம்…”

அவன் முகத்தில் ஒரு பரபரப்பு.

எழுபத்தைந்து வருடங்களாக அந்த மாளிகையில் இருந்தும், ஒவ்வொரு முறையும் யாராவது உள்ளே வருவதாகத் தெரிந்தால் அவனுக்குள் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். இந்த முறை மட்டும் வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, தோல்விகளை விட அவனிடம் அதிகமாக இருந்தது.

“மல்லிகா… மல்லிகா… சீக்கிரம் வா!”

மேல்மாடியில் பழைய மரக்கட்டிலில் படுத்துக்கொண்டு சலிப்பாகக் கிடந்த மல்லிகா, “என்னடா இப்போ?” என்று கேட்டபடியே கீழே இறங்கினாள்.

“யாரோ வர்றான்.”

“கரண்ட் பில் எடுக்கவா?”

“அட இல்ல. நம்ம வீட்டுக்கே.”

மல்லிகா ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.

தொலைவில் ஒரு பைக் மெதுவாக மாளிகையை நோக்கி வந்துகொண்டிருந்தது.

“இவனுக்கு என்ன தலையெழுத்தோ…”

“இந்த தடவை நிச்சயமா பயமுறுத்திடுவேன்.”

மல்லிகா சிரித்தாள்.

“அந்த வசனத்தை நான் கடந்த ஐம்பது வருஷமா கேட்டுட்டே இருக்கேன்.”

காசி அவளைப் பொருட்படுத்தவில்லை.

“பிளான் நம்பர் இருபத்தேழு.”

“அது என்ன?”

“வாசல் கதவு தானா திறக்கணும்.”

“கடைசித் தடவை என்னாச்சுன்னு ஞாபகம் இருக்கா?”

காசியின் முகம் சுருங்கியது.

எப்படி மறக்க முடியும்?

மூன்று வருடங்களுக்கு முன் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டைப் பார்க்க வந்திருந்தான். காசி பெரிய ஸ்டைலாக கதவை தானாகத் திறந்தான்.

புரோக்கர் பயப்படுவான் என்று நினைத்தான்.

ஆனால்…

“அட… ஆட்டோமேட்டிக் டோரா? வசதி நல்லாருக்கே!” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டான்.

அதற்குப் பிறகு காசி கோபத்தில் கதவை அடைக்க நினைத்தபோது, பழைய கீல் உடைந்து கதவே கீழே விழுந்தது.

அந்த புரோக்கர் சிரித்துக்கொண்டே, “ரிப்பேர் செலவு மட்டும் ஜாஸ்தி வரும் போல…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அந்த அவமானம் இன்னும் காசியின் மனதில் பசுமையாக இருந்தது.

“இந்த தடவை அப்படி நடக்காது.”

“சரி. அடுத்த பிளான்?”

“ஜன்னல் தானா அடிக்கணும்.”

“அதையும் இரண்டு முறை ட்ரை பண்ணிட்டியே.”

“இந்த தடவை டைமிங் வேற.”

மல்லிகா கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

“சரி… நீ பண்ணு. நான் சிரிக்கிறதுக்கு ரெடியா இருக்கேன்.”

அதே நேரத்தில் கபிலன் மாளிகை வாசலுக்கு வந்து பைக்கை நிறுத்தினான்.

அவன் முதலில் வீட்டைப் பார்த்தான்.

பிறகு சுற்றிலும் பார்த்தான்.

பழைய கல் தூண்கள்.

பாசி படர்ந்த சுவர்.

சில உடைந்த ஜன்னல்கள்.

வாசலில் சாய்ந்து கிடந்த இரும்புக் கதவு.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தை,

“செம்ம லொக்கேஷன்.”

மாளிகைக்குள் நின்றிருந்த காசி அதிர்ச்சியடைந்தான்.

“என்ன சொன்னான்?”

“செம்ம லொக்கேஷனாம்.”

“அட… வீட்டைப் பார்த்து பயப்படாம லொக்கேஷன் பார்க்கிறானே?”

கபிலன் பைக்கிலிருந்து இறங்கி, சட்டை கைகளை மடித்துக்கொண்டான்.

பிறகு மிகவும் சாதாரணமாக வாசலை நோக்கி நடந்தான்.

அவன் முகத்தில் பயத்தின் நிழல் கூட இல்லை.

காசியின் இதயத்துடிப்பு அதிகரித்தது.

“இப்போ…”

அவன் கையை மெதுவாக உயர்த்தினான்.

பல வருடப் பயிற்சிக்குப் பிறகு இன்னும் சரியாக வராத அந்தச் சிறிய பேய் சக்தியை ஒன்றாகக் குவித்து, பழைய மர ஜன்னலை நோக்கி செலுத்தினான்.

“படார்!”

என்று ஜன்னல் பலமாக அடித்தது.

வெற்றி!

காசியின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

“இப்போ ஓடுவான்…”

என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

ஆனால்…

கபிலன் அமைதியாக நின்று ஜன்னலைப் பார்த்தான்.

பிறகு தலையை உயர்த்தி சுவரை ஆராய்ந்தான்.

“ஹ்ம்…”

என்று சிந்தித்தபடி மெதுவாகச் சொன்னான்.

“காற்று அடிச்சா இப்படி அடிக்குது போல…”

என்று சொல்லிவிட்டு, தனது பையில் இருந்த சிறிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.

அதில் ஏதோ எழுதினான்.

காசி வாயைப் பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தான்.

“அவன்… என்ன எழுதுறான்?”

மல்லிகா சிரிப்பை அடக்க முடியாமல் அருகே வந்தாள்.

கபிலன் எழுதியதை எட்டிப் பார்த்தாள்.

அதில் ஒரே ஒரு வரி.

“ஜன்னல் கீல் மாற்ற வேண்டும் – செலவு சுமார் ₹850.”

மல்லிகா மெதுவாகக் காசியைப் பார்த்தாள்.

“வாழ்த்துகள்.”

“எதுக்கு?”

“எழுபத்தைந்து வருஷத்துல முதன்முறையா…”

காசி நம்பிக்கையுடன் கேட்டான்.

“பயந்துட்டானா?”

மல்லிகா தலையசைத்தாள்.

“இல்ல.”

“அப்போ?”

“உன் பேய் வேலைக்கு Estimate போட்டுட்டான்.”                                

காசிநாதன் தன் வாழ்க்கையில் பல அவமானங்களைச் சந்தித்திருந்தான். ஆனால் ஒரு பேய் எழுப்பிய சத்தத்தைக் கேட்டுவிட்டு, அதற்கே பழுதுபார்க்கும் செலவைக் கணக்குப் போட்ட மனிதனை அவன் இதுவரை பார்த்ததில்லை.

அவன் ஜன்னலருகே நின்றபடியே வாயைப் பிளந்தான்.

“மல்லிகா…”

“என்ன?”

“இவன்… கொஞ்சம் வித்தியாசமா இருக்கான்.”

“இப்போதான் தெரியுதா?”

காசி பதில் சொல்லவில்லை.

கீழே கபிலன் மாளிகையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு சுவரையும், ஒவ்வொரு ஜன்னலையும், ஒவ்வொரு தூணையும் நிதானமாக ஆராய்ந்தான். சில நேரங்களில் தலையைச் சாய்த்து அளவு பார்த்தான். சில இடங்களில் தரையைத் தட்டிப் பார்த்தான்.

காசிக்கு ஒன்றுமே புரியவில்லை.

“இவன் வீடு வாங்க வந்தவனா… இல்ல சிவில் இன்ஜினியரா?”

“ரெண்டுமே இல்ல.”

“அப்போ?”

“உன்னை வேலை இழக்க வைக்க வந்தவன்.”

“அதென்ன?”

“பொறுமையா இரு. இன்னும் ஐந்து நிமிஷம்.”

அதற்குள் கபிலன் மாளிகை வாசலை அடைந்திருந்தான்.

பழைய மரக்கதவு பாதி திறந்தபடியே இருந்தது.

கபிலன் மெதுவாக அதைத் தள்ளினான்.

“க்ரீச்…”

என்று நீண்ட சத்தத்துடன் கதவு திறந்தது.

காசி கண்களில் மின்னல்.

“இதுதான் சந்தர்ப்பம்.”

அவன் இரண்டு கைகளையும் விரித்தான்.

மாளிகைக்குள் பல வருடங்களாகத் தேங்கியிருந்த குளிர்ந்த காற்று ஒரே நேரத்தில் சுழன்று எழுந்தது. உலர்ந்த இலைகள் தரையில் சுற்றிச் சுழன்றன. சிலந்தி வலைகள் அசைந்தன. மேலே தொங்கியிருந்த பழைய விளக்கு மெதுவாக ஆடியது.

கபிலன் வாசலிலேயே நின்றான்.

காசியின் முகத்தில் நம்பிக்கை மலர்ந்தது.

“இப்போ… இப்போதான்…”

கபிலன் மெதுவாகக் குனிந்து தரையைப் பார்த்தான்.

“அடடா…”

காசி சிரித்தான்.

“பயந்துட்டான்…”

அடுத்த நொடியே கபிலன் சொன்னான்.

“இவ்வளவு தூசியா? முதல்ல பத்து பேரை வச்சு கிளீன் பண்ணணும்.”

காசி முகத்தைப் பிடித்துக்கொண்டான்.

“ஐயோ…”

மல்லிகா சுவரில் சாய்ந்து சிரித்தாள்.

“உன்னோட பேய் effect-க்கு முன்னாடி Cleaning estimate வந்துடுச்சு.”

கபிலன் உள்ளே நுழைந்தான்.

ஒவ்வொரு அடியும் மாளிகை முழுக்க எதிரொலித்தது.

அவன் நடுக்கூடத்தை அடைந்ததும், சுற்றிலும் பார்த்துவிட்டு இரு கைகளையும் இடுப்பில் வைத்தான்.

“சூப்பர்…”

காசி மெதுவாக அவன் பின்னால் சென்று நின்றான்.

“இப்போ பாரு…”

என்று சொல்லிக்கொண்டே, கபியின் காதருகே முகத்தைக் கொண்டு வந்து மெதுவாக,

“வெளியே போ…”

என்று கரகரத்த குரலில் சொன்னான்.

கபிலன் திடீரென்று திரும்பினான்.

காசி மகிழ்ச்சியில் கண்களை மூடிக்கொண்டான்.

“இப்போ மயங்கி விழுவான்…”

ஆனால் கபிலன் பின்னால் யாரும் இல்லாததைப் பார்த்துவிட்டு, மேலே கூரையை நோக்கிப் பார்த்தான்.

“புறா.”

காசி உறைந்துபோனான்.

“என்ன?”

“புறா கூடுகட்டிருக்கும். அதுதான் சத்தம்.”

மல்லிகா வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

“காசி… உன் Voice modulation-ஐ புறாவுக்கு credit கொடுத்துட்டான்.”

காசி அவளை முறைத்துப் பார்த்தான்.

“நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?”

“நான் சும்மாதான் இருக்கேன். நீதான் தினமும் comedy பண்ணிக்கிட்டு இருக்க.”

கபிலன் மாளிகையின் நடுவே இருந்த பழைய மர நாற்காலியைப் பார்த்தான்.

அதில் படிந்திருந்த தூசியை ஊதிவிட்டு உட்கார்ந்தான்.

காசியின் கண்கள் விரிந்தன.

“அது…”

“என்ன?”

“அது என் chair.”

“இப்போ முன்னாடி நின்னு சொல்.”

“அவனுக்குக் கேட்காதே.”

“அப்போ?”

“எனக்குக் கோபம் வருது.”

அடுத்த கணம் கபிலன் தன் பையைத் திறந்து ஒரு டிபன் பாக்ஸை எடுத்தான்.

அதைத் திறந்ததும் எலுமிச்சை சாதத்தின் வாசனை மாளிகை முழுக்க பரவியது.

காசி குழப்பமடைந்தான்.

“இவன்…”

“சாப்பிடப் போறான்.”

“இங்கயா?”

“ஆமாம்.”

கபிலன் முதல் உருண்டையை எடுத்து வாயில் போட்டான்.

“ஆஹா… அம்மா கைப்பக்குவமே தனி.”

என்று ரசித்துச் சாப்பிட்டான்.

காசி அதிர்ச்சியில் மல்லிகாவைப் பார்த்தான்.

“எழுபத்தைந்து வருஷமா…”

“என்ன?”

“இந்த வீட்டுக்குள்ள…”

“ஹூம்?”

“யாராவது உட்கார்ந்து சாப்பிடுறதை இப்போதான் பார்க்கிறேன்.”

மல்லிகா சிரித்துக்கொண்டே,

“பாவம்… வீட்டையே தன்னோட வீடு மாதிரி நினைச்சுட்டான்.”

என்று சொன்னாள்.

காசி திடீரென்று உற்சாகமாக எழுந்தான்.

“ஒரு நிமிஷம்…”

“இப்போ என்ன பிளான்?”

“இவன் சாப்பிடுறான்ல…”

“ஆமா.”

“டிபன் பாக்ஸை பறக்க வைக்கிறேன்.”

மல்லிகா இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்தாள்.

“அடடே… இது பெரிய சொதப்பலுக்குப் போகுதே…”

காசி கண்களை மூடி முழு சக்தியையும் கைகளில் குவித்தான்.

டிபன் பாக்ஸ் மெதுவாக அசைந்தது.

இன்னும் கொஞ்சம்…

இன்னும் கொஞ்சம்…

திடீரென்று…

டப்!

டிபன் பாக்ஸ் கபிலன் மடியில் இருந்து கீழே விழுந்தது.

காசி வெற்றிக் களிப்பில் குதித்தான்.

“ஆஹா! இந்த தடவை வேலை ஆயிடுச்சு!”

கபிலன் அமைதியாக கீழே விழுந்த டிபன் பாக்ஸை எடுத்தான்.

சுற்றிலும் பார்த்தான்.

பிறகு மிகவும் சாதாரணமாகச் சொன்னான்.

“இந்த வீடு சரியாத்தான் இருக்கு…”

காசி மகிழ்ச்சியுடன் மல்லிகாவைப் பார்த்தான்.

“பார்த்தியா? இப்போ நம்புறான்.”

கபிலன் அடுத்த வரியைச் சொன்னான்.

“…ஆனா தரை சமமா இல்ல. Floor leveling பண்ணணும்.”

மல்லிகா இனிமேல் சிரிப்பை அடக்க முடியாமல் தரையில் உட்கார்ந்தாள்.

காசி மெதுவாக சுவரில் சாய்ந்தான்.

“மல்லிகா…”

“என்ன?”

“எனக்கு ஒரு சந்தேகம்.”

“சொல்லு.”

“இவன் மனுஷனா… இல்ல என்னை சோதிக்க கடவுள் அனுப்புன ஒற்றனா?”

You may also like

1 comment

M. Sarathi Rio July 14, 2026 - 1:04 pm

அதுல இவனுக்கு சந்தேகம் வேறயா..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured