Home Love - Family - Romanceமுத்தமழை – 49

முத்தமழை – 49

by Vathani S

முத்தமழை – 49 

வல்லிக்கு ஐந்தாம் மாதம் பூ வைக்க வந்திருந்தனர் வல்லியின் வீட்டினர். 

இதில் ராமசாமியின் பங்காளி வீட்டினரை வைத்தே அனைத்தையும் செய்ய வைத்திருந்தார் சீதா.

ராஜலட்சுமியின் பேச்சை இன்றளவிற்கும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே இந்த ஒதுக்கத்திற்கு காரணம். 

ஆனால் அதற்காக அவர்கள் யாழினியை விட்டு விடுவார்கள் என்றில்லை.

அது வெற்றியும், யாழினியும் பேசி எடுக்க வேண்டிய முடிவு. இருவரும் சிறு பிள்ளைகள் அல்லவே, அவர்களின் முடிவு எதுவென்றாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தனர் வீட்டினர்.

‘எப்படி இவர்களை மட்டம் தட்டலாம்?’ என காத்திருந்த வனிதாவிற்கும், ராஜிக்கும் இவர்களின் ஒதுக்கம் மிகுந்த ஏமாற்றம் தான். 

வந்தவர்கள் யாழினியோடு கூட அதிகம் ஒட்டி உறவாடவில்லை.

இதையெல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர் சுமித்ராவின் வீட்டினர். 

வழக்கம்போல சுமித்ரா எதிலும் கலந்து கொள்ளவில்லை.  ஊருக்கு பயந்து ரெடியாகி வந்து கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்.

பிள்ளைகளயும் கிளப்பி பள்ளிக்கு அனுப்பியிருந்தாள். சுந்தரும், ரமேஷும் பேருக்கு கர்ணனுடன் நின்றிருந்தனர்.

வல்லியின் சித்தி நலங்கு வைத்து பூ வைக்க, அடுத்து அவர்களின் குடும்பம் வைக்க, கடைசியாக சீதா வைக்கப் போக, சரியாக அந்த நேரம் வந்து நின்றாள் வனிதா.

வேண்டுமென்று தான் செய்கிறாள் என்று புரிய, ஒதுங்கலாம் என நினைத்த சீதா, வல்லியின் முகத்தில் தெரிந்த கோபத்தில் வீம்புக்கென பொட்டும் வைத்து, பூவையும் சூடி பெண்ணின் பின் நின்றுகொண்டார். அதன்பிறகே வல்லியின் முகம் சாதாரணமானது.

இப்போது, தான் வைக்க வேண்டுமா? என எரிச்சல் வந்தது வனிதாவிற்கு. சீதாவை வம்பிழுக்க என வந்துவிட்டாள். இப்போது வைக்காமல் போனால், அனைவரும் தன்னையே கிண்டலும் கேலியும் செய்வார்கள் என புரிய, வல்லியைப் பார்த்தாள்.

வல்லியின் முகத்தில் அடக்கப்பட்ட கிண்டல் புன்னகை நெளிய, பல்லைக் கடித்தாள் வனிதா.

‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ என்ற பார்வையோடு வல்லி அமர்ந்திருக்க, அப்படியே சேரோடு கீழேத் தள்ளும் வேகம் வனிதாவிற்கு. 

தனியாக சிக்கியிருந்தால் நிச்சயம் யோசிக்காமல் செய்திருப்பாள். ஆனால் கூட்டத்தில் அது முடியாதே, எரிச்சலோடு நிற்க, “ஒன்னு பூவை வை.. இல்ல ஒதுங்கி நில்லு, எதுக்கு இப்படி வாயும் வயிறுமா இருக்குற புள்ளைய வெறிச்சுப் பார்த்துட்டு இருக்க, உனக்கு பின்னாடி ஆளுங்க நிக்கிறாங்க.” என பார்வதி பாட்டியின் கடுமையில், வேண்டா வெறுப்பாக பூவை மட்டும் வைத்துவிட்டு கீழிறங்கினாள் வனிதா.

அவளுக்கு, கர்ணனின் “என்ன உன்கிட்ட வந்து நான் கெஞ்சனுமா? என் பொண்டாட்டிக்கு வந்து செய்னு, உனக்குத்தான் நான் தேவை. எனக்கு நீ அப்படி ஒன்னும் அவசியமில்லை. எனக்கு நீ என்ன செய்றியோ, அதுதான் உனக்கும் திரும்பி கிடைக்கும்..” என மிகவும் கண்டிப்புடனும், கோபத்துடனும் அழைத்து பேசியதில், அவன் மேல் மிகுந்த கோபம்.

அவனுக்கும் இப்படி மிரட்டுவதில் விருப்பமில்லை, போனால் போகட்டும் என்ற எண்ணம் தான். 

ஆனால் வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் சொல்லியும் கேட்காமல், வீம்புக்கென வராமல் இருக்கவும் தான், கோபத்தில் அழைத்து கத்தியிருந்தான்.

வனிதா கீழிறங்கவும் “ஓவரா பண்ணுதுடி இந்த சூனியக்காரி.. எனக்கு வர்ர கோபத்துக்கு அவளுக்கு கும்பி பாகம் தான் பார்த்துக்கோ..” என வல்லியின் காதை கடித்தாள் வந்தனா.

“வந்து..” என வல்லி அதட்ட,

“ம்ச்.. சும்மா என்னை அதட்டாதே வல்லி.. அவ பார்வையே சரியில்ல. ஒரு நாள் எங்கிட்ட மாட்டட்டும் என் கடையில பிரியாணி போட்டுடுறேன்..” என நரநரவெனப் பல்லைக் கடிக்க, வல்லிக்கு சிரிப்பும் வந்தது, பயமும் வந்தது.

வந்தனா யாழி போலவோ, தன்னைப் போலவோ யோசித்து செய்பவள் அல்லவே.. யாரையும், எதப்பற்றியும் யோசிக்காமல் செய்துவிட்டுத்தான் பிறகே யோசிப்பாள். அப்படி போய் வனிதா இவளிடம் சிக்கிக் கொள்ளக்கூடாதே என நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அந்த நாள் விரைவில் வரப்போவதை அறியாமல்.

வல்லபியின் இந்த விழாவிற்கு உணவு அனைத்தும் வந்தனாவின் ஹோட்டலில் இருந்துதான் வந்திருந்தது. 

ஐந்து வகை சாதம், ஐந்து வகை ஸ்வீட், ஐந்து வகை காரம் என அனைத்தும் ஐந்து வகையில் செய்து அசத்தியிருந்தாள் வந்தனா.

அதிலும் வல்லிக்கும், கர்ணனுக்கும் பிடித்த பிஸ்தா கேக் பார்க்கவே நாவில் எச்சில் ஊற வைத்தது.

சுமித்ராவும், வனிதாவும் ஒதுங்கி நிற்க, பாட்டியும் யாழினியும் தான் வந்தவர்களை கவனித்து அனுப்பினர்.

அதில் யாழினிக்கு நிற்க நேரமில்லை என்பதால், இந்த பிரச்சினைகள் அவளுக்கு தெரியவில்லை.

வல்லியின் சித்தி வந்து ராஜியிடம் முறையாக “வல்லியை ஒருநாள் மட்டும் அழைத்து செல்லட்டுமா?” என கேட்க,

ராஜிக்கு சட்டென தன் மாமியார்தனத்தில் தலையில் கொம்பு முளைத்தது.

“இதென்ன புதுசா ஆரம்பிக்கிறீங்க? அஞ்சு மாசத்துல அழைக்கிற பழக்கம் எங்க இருக்கு? இது பூ வச்சுட்டு போற பங்க்ஷன்தானே, இல்ல சீமந்தமே இவ்ளோதானா?” என கிண்டலாக கேட்க, 

“இல்ல.. இல்ல சம்மந்தி.. பொண்ணு ஆசப்பட்டுச்சு..” என வந்தவர் இழுக்க,

“மாசமா இருக்குற புள்ளைக்கு ஆசை வரத்தான் செய்யும், ஆனா அதுக்காக சம்பிரதாயத்தை மாத்த முடியுமா? இருந்து இருந்து இப்போதான் என் பையனுக்கு ஒரு நல்லது நடந்திருக்கு. அதை கெடுக்குற மாதிரி யாரும் எதுவும் சொல்லாதீங்க, செய்யாதீங்க..?” என்றவரின் குரல் சட்டென உயர்ந்துவிட, அனைவரின் பார்வையும் இவர்களின் மேல் விழுந்துவிட, கையைப் பிசைந்தார் வல்லியின் சித்தி.

கர்ணன் வேகமாக அங்கு வந்து ‘என்ன.?’ என விசாரிக்க, “ஹ்ம்ம் உன் பொண்டாட்டிக்கு அவங்க கூடவே போகனுமாம்..” என்றார் மகனிடம் இடக்காக.

“வல்லிக்கா..?” என்றவன் மனைவியைப் பார்க்க, அவளோ சீதாவைப் பார்த்தாள்.

‘ஓ.. அவர்தான் கேட்க சொல்லிருப்பார்.’ என புரிந்தவன் “இருக்கட்டும் அத்த…இன்னொரு நாள் கண்டிப்பா அழைச்சிட்டு வரேன்..” என்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவன் மனைவியிடம் வந்தான்.

“என்னடி இதெல்லாம். அத்தை கேட்டா, வேண்டாம்னு சொல்லி சமாளிக்கலாம்ல. இப்போ அதை வச்சு அவங்க ஒரு பிரச்சினை பண்ணுவாங்க. என்ன உன் பங்குக்கு ஒரு பிரச்சினையை ஆரம்பிக்கனுமா?” என்றான் பல்லைக் கடித்தபடி.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன். சீதாம்மா கேட்டாங்க. நான் அவங்ககிட்ட பேசி சமாளிக்க முன்னாடியே சித்தி கேட்க போய்ட்டாங்க..” என்றாள் அவளும் கோபத்துடன்.

ஏற்கனவே வெற்றி வராதது பெண்ணுக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்திருந்தது. மேலும் சீதாவும் ஒதுங்கி ஒதுங்கி போனது அவளுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்க, இப்போது அவளும் பதிலுக்கு கத்தியிருந்தாள்.

“ம்ச் வல்லி என்ன இது?” என சீதா மகளை அதட்ட, 

“ம்ச்.. போங்க சீதாம்மா..” என்றவள் ஆரத்தி எடுக்கும் முன்னே மனையில் இருந்து எழப் பார்க்க, “ஹேய் என்ன என்ன பண்ற நீ..?” என வல்லியின் சித்தி பிடித்து அமர வைக்க, மனைவியின் மேல் அத்தனை கோபம் கர்ணனுக்கு.

தங்களுக்கான ஒரு சிறு விழா, அதைக்கூட மகிழ்வோடு அவர்களால் கொண்டாட முடியவில்லை.

முதல்நாள் தான் சுந்தரைப்பற்றி அவன் கேட்ட செய்திகள் அவன் கைக்கு வந்திருந்தன. அதை எப்படி வீட்டுக்குத் தெரியாமல் சமாளிக்க, என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தான்.

இதில் மனைவி வேறு, காலையிலிருந்து முகத்தைத் திருப்ப, வாழ்வே வெறுத்துப் போனது. அந்த கோபத்தில் தான் மனைவியிடன் கத்தியிருந்தான்.

ஒருவழியாக ஆரத்தி எடுத்து, வல்லியை சாப்பிட அழைக்க கர்ணனும் மனைவியோடு அமர்ந்துவிட்டான்.

நிச்சயம் அவளால் இத்தனையும் சாப்பிட முடியாது என்று தெரியும். வீம்புக்கென்றே தன்னை தேடமாட்டாள், அழைக்கவும் மாட்டள் என புரிய, அவளுக்கு முன்னே வந்து அமர்ந்துவிட்டான்.

வல்லியின் சித்தியும் யாழினியும் பரிமாற, இன்ஸ்டன்ட்  போட்டோகிராபர் ஆகியிருந்தாள் வந்தனா.

அவள் கையில் கேமராவைப் பார்த்ததுமே கர்ணனுக்கு சிரிப்பு வந்துவிட, “மாமா வல்லிக்கு ஊட்டுங்க..” என கேமராவில் கண் பதித்தபடி கூற, சொந்தங்கள் எல்லாம் அவளின் சேட்டையில் ஒதுங்கிவிட, யாழினி மட்டும் அவர்களோடு நின்றாள்.

“வல்லிக்கண்ணு.. இப்போ நீ ஊட்டு..” என்றதும் வல்லி அவளை முறைக்க,

“சீக்கிரம் ஊட்டு வல்லி, மாமா வாயில ஆல்ரெடி மூனு கொசு போயிடுச்சு..” என சிரிப்பு வராமல் கூற, வல்லிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“அடிங்க்.. உனக்கு என்னை கிண்டல் பண்ணலன்னா தூக்கமே வராதாடி..” என்றவன் பேசிக்கொண்டே மனைவிக்கு மெதுவாக அனைத்தையும் ஊட்டி முடித்திருந்தான்.

வல்லியும் வேண்டாம் என எந்த வீம்பும் செய்யாமல் சாப்பிட்ட்ட் முடிக்க, “ஏங்க என்னங்க செஞ்சிட்டு இருக்கீங்க? எதுக்கு கேமராவை எடுத்தீங்க..?” என மூச்சிரைக்க ஒருவன் ஓடிவந்து வந்தனாவிடம் கேமராவை வாங்க,

“என்ன பாஸ் நீங்க.. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம, எக்ஸ்பென்சிவான கேமராவை கண்ட இடத்துல வச்சிட்டு போய்ட்டீங்க.. நான் பாருங்க, சேஃபா உங்களுக்கு எடுத்து வச்சிருக்கேன். இதுக்கு நீங்க எனக்கு தேங்க்ஸ்தான் சொல்லனும்..” என்றாள் அலட்டாமல்.

“எத கண்ட இடத்துல போட்டு வச்சிருந்தேனா? கேமரா ஸ்டேண்ட்ல தானங்க இருந்தது..” என்றான் பாவமாக.

“ஆனா தனியாதான இருந்தது..” என்றாள் அசால்ட்டாக.

கொலைவெறி வந்தது அந்த கேமரா மேனுக்கு.. “சார்..” என்றான் கர்ணனைப் பார்த்து பரிதாபமாக.

“அது கொஞ்சம் மூளை வளர்ச்சி குறைஞ்ச பொண்ணு, நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ரோ.. இனி கவனமா இருங்க..” என அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே “மாமா..” என கத்தியபடி அவனிடம் ஓடி வந்தாள்.

“ஏய்..ஏய்..” என வேகமாக மனைவியின் பின்னால் சேஃபாக நின்றவன் “உன் கதையெல்லாம் எனக்குத் தெரியாதுனு நினைக்காத, நான் இன்னும் வல்லிக்கு சொல்லல..” என்றான் சிரித்தபடியே..

“ஹலோ என்ன என் கதை.. அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல..” என்றவள், “வல்லி நாளைக்கு அந்த மலமாடு இருக்கானுல்ல அவனை உனக்கு கால் பண்ண சொல்லிருக்கேன். என்னோட பெருமையை எடுத்துச் சொல்லு, எத்தன பேர் எனக்கு ப்ரபோஸ் பண்ணி தலை தெறிக்க ஓடிருக்காங்கன்னு மறக்காம சொல்லு..” என்றாள் தெனாவெட்டாக.

கர்ணன் “இவ என்னடி சொல்றா?” என மனைவியிடம் கேட்க, வல்லியும் யாழியும் சிரித்துக் கொண்டனர்.

“மாம்ஸ்.. அந்த மலமாடு எனக்கு ப்ரபோஸ் பண்ணான், நான் இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்லியும் கேட்கல, அதான் முதல்ல எனக்கும், என் பாட்னருக்கும் அசிஸ்டென்டா இரு, உன் ட்ரெயினிங்க் பீரிய்ட்ல உன்னோட வொர்க் சேடிஸ்ஃபை ஆச்சுன்னா, அப்புறம் பார்க்கலாம்னு சொல்லிருக்கேன்.” என்றாதும் கர்ணனுக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது.

“வல்லி..” என அதிர்ந்தவன், ஒரு மிகப்பெரிய டிடெக்டிவ் ஏஜென்சி பேரைச் சொல்லி, ‘அங்க இருந்து இவளுக்கு பாடிகார்டா போட்டா, என்ன பண்ணிருக்கா பாரு..” என்றான் அதிர்ச்சி விலகாமலே.

“மாம்ஸ்.. நீங்க என் பின்னாடியே சுத்துற வேலையை அவருக்கு கொடுத்தீங்க, அதே வேலையைத்தான் நானும் கொடுத்திருக்கேன்..” என்ற போது அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் வசந்த்.

இவனைப் பார்த்ததும் பெண்கள் மூவரும் சிரிக்க, கர்ணன் மட்டும் பாவமாக பார்த்து வைத்தான்.

“என்ன லுக் பாஸ் இது.. ஏதோ பலியாடை பார்க்குற மாதிரி பாவமா பார்த்துட்டு இருக்கீங்க..” என மிகவும் சாதாரணமாக கேட்க, வெடித்துச் சிரித்தனர் பெண்கள் மூவரும். 

You may also like

1 comment

M. Sarathi Rio July 14, 2026 - 10:13 pm

அடப்பாவி..! உன்னை வைச்சு காமெடி பண்றாங்கடா என் வென்று.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured