Home Love - Family - Romanceமுத்தமழை – 50

முத்தமழை – 50

by Vathani S

முத்தமழை -50 

ஒரு வழியாக அன்றைய விழா சிறப்பாக முடிந்தது. லிங்கமும், பாட்டியும் தம்பதிகளின் அழகை பார்த்து பார்த்து ரசித்தனர்.

“யாழி மறக்காம இன்னைக்கு ரெண்டு பேருக்கும் சுத்தி போடனும், உன் ஆத்தா கண்ணு, கொல்லிக்கொண்ணு. எம் பேத்தியை முறைச்சிக்கிட்டே திரிஞ்சா..” என்றார் வல்லிக்கு பாலை ஆற்றியபடி.

“ம்ம் பாட்டி மெதுவா பேசுங்க, அம்மாவுக்கு கேட்டுட போகுது. மறுபடியும் ஒரு பிரச்சினையை ஆரம்பிச்சிட போறாங்க..”

“க்கும்.. உன் அம்மாவுக்கு நான் புதுசா வேற ஒரு பிரச்சினையை எடுத்துக் கொடுக்கனுமா? அதெல்லாம் அவ பையிலேயே இருக்கும்..”

“விடுங்க பாட்டி.. அவங்களைத்தான் நமக்கு தெரியுமே.!”

“என்ன பொம்பளையோ, என்ன ஜென்மமோ? பெத்த புள்ளைங்க வாழ்க்கையில அப்படி என்ன வீம்போ?”

“ம்ம்.. கொஞ்ச நாள்தான் பாட்டி, எல்லாம் சரியாகிடும். வாங்க.. வல்லிக்கு பாலைக் கொடுத்துட்டு, அப்படியே தேங்காயை சுத்திட்டு வந்துடலாம்..” என பேசியபடியே ஹாலுக்கு வந்தனர் இருவரும்.

அப்போது சுந்தரும், ரமேஷும் ஏதோ மிக தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட, “என் பேரன் வாழ்க்கையை கெடுக்க இன்னும் என்ன என்ன திட்டமெல்லாம் போடுவானுங்களோ?” என புலம்பிக்கொண்டார் அந்த பாட்டி.

இங்கு ராஜலட்சுமியின் அறையில் “வனி, சுந்தர் சொல்றதை மட்டும் தான் இனி கேட்கனும். நாம என்ன திட்டம் போட்டாலும் அது சரியா நடக்கறது இல்ல. இனிமேல் அவனே பார்க்கட்டும், நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இருந்தா போதும்.” என்றார் ராஜலட்சுமி மகளிடம்.

“ம்மா.. அவனுக்கு என் அளவுக்கு கூட அறிவில்ல ம்மா.. அவன் அப்படி என்ன செஞ்சிடுவான்… பெருசா ப்ளான் பண்றான், ஆனா வசமா கர்ணன்கிட்ட மாட்டப்போறான் பாரு..”

“ச்சீ.. வாயைக் கழுவு.. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. உனக்கு எப்பவும் அவனை மட்டமா பேசியே பழக்கமாகிடுச்சு. அவனுக்கும் மூளை இருக்கு, யோசிப்பான். சுந்தர் அதையெல்லாம் யோசிச்சுதான் ப்ளான் பண்ணிருக்கான்..”

“என்னமோ போ ம்மா… ரொம்ப ஈசியா முடிஞ்சிருக்க வேண்டிய ஒன்னை, வளர்த்து பெரியாளாக்கிட்ட, இப்போ அதை வெட்டவும் முடியல, குத்தவும் முடியல..”

“ம்ச் வனி போதும்.. இங்க வச்சு அந்த பேச்ஸே வேண்டாம். எனக்கு உன் மாமியார் மேலயும், சுமி மேலயும் நம்பிக்கையே இல்ல. சட்டுனு கட்சி மாறிட்டா என்ன பண்றது?”

“என்ன பண்றது? பாயாசத்தை போட்டுடுட வேண்டியதுதான்.” 

“உன் வாய்க்குதான் இப்படி எல்லார்கிட்டயும் வாங்கிக் கட்டுற, முதல்ல உன் புருசனைக் கூப்பிட்டு கிளம்பு..” என்று  மகளிடம் கடிந்து கொண்டிருந்தார்.

இங்கு, இன்று முழுவதும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அலைந்த மனைவியை ஒருவாறு சமாதானம் செய்திருந்தான் கணவன்.

“ம்ச்.. இந்த சாரியை மாத்தி விட எவ்ளோ நேரம் பண்றீங்க..” என்ற குரல் சலிப்பாக வந்தாலும், பெண்ணின் முகம் முழுக்க சிவப்பின் வர்ணம்.

“ஹ்ம்ம் ஏன் சொல்லமாட்டா.. இப்போதான் கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியும், நான் உன்னை இப்போதான் முதல் தடவை பார்க்கிற மாதிரியும் எவ்ளோ வெட்கம், சினுங்கல். இதெல்லாம் பார்த்துட்டு மாமாவால சும்மா இருக்க முடியுமா?” என்றான் நைட்டியின் ஜிப்பை மேலும் கீழும் ஏற்றி விளையாடியபடி..

“ம்ச் விடுங்க பாவா.. பாட்டி எப்போ வேணும்னாலும் வருவாங்க.” என அவன் கையைப் பிடிக்க,

“ம்ம் வந்தா கதவைத் தட்டுவாங்க..” என்று தன் கைகளுக்குள் அள்ளிக்கொண்டு தன் ஜாதிமல்லித் தோட்டத்திற்குள் நுழைந்தான்.

பால்கனி கதவைத் திறந்ததுமே, மலரின் வாசம் அவனை வேறொரு உலகுக்கு அழைக்க, வழக்கம்போல ஊஞ்சலில் தான் அமர்ந்து, தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

“நான் வெற்றியைக் கூப்பிடலன்னு நீ நினைக்கிறியா?” என்றான் பொறுமையாக.

“நீங்க கூப்பிட்டும் அண்ணா வரலன்னா, அதுவும் என் ஃபங்க்சனுக்கு வரலன்னா ரொம்ப கோபமா இருக்காங்கன்னு புரியுது. அந்த கோபம் யாழியை ரொம்ப கஷ்டப்படுத்திடுமோன்னு பயமா இருக்கு..” என்றாள் வருத்தமாக.

“அவங்க பிரச்சினைல நாம ஓரளவுக்கு மேல தலையிடக்கூடாது அம்மு.. அது அவங்களுக்கு பிடிக்காமலும் போகலாம் இல்லையா? கொஞ்ச நாள்ள ரெண்டு பேரும் புரிஞ்சு சரி பண்ணிப்பாங்க..” என்றான் பெண்ணின் தோளை வருடி.

“ஹ்ம்ம்.. சரி பண்ணிக்குவாங்கதான். ஆனா யாழி ஆஸ்ட்ரேலியா போயிட்டா எப்படி சரியாகும்..”

“கண்டிப்பா யாழி போகனும் அம்மு. அம்மாவும், வனியும் இப்போ அமைதியா இருக்காங்க, இனி எப்பவும் இப்படியே இருப்பாங்கன்னு நம்பிடக்கூடாதில்லையா? அவங்க சரியான நேரம் பார்த்து காத்திட்டு இருக்காங்க. அந்த நேரத்தை நான் கொடுக்கக்கூடாதுனு நினைக்கிறேன். இங்க இருந்தா வனியும், அம்மாவும் சும்மாவே இருக்கமாட்டாங்க அம்மு..”

“ம்ம் புரியுது தான் பாவா.. ஆனால் ரெண்டு வருசம் எப்படி தனியா இருப்பா.. சமாளிப்பாளா?”

“சமாளிக்கனும்.. அவளுக்கு இங்க நிறைய பொறுப்புகள் இருக்கு அம்மு.. அதையெல்லாம் மேனேஜ் பண்ண, இன்னும் திறமையை வளர்த்துக்கனும். கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் மேனேஜ் பண்ணிப்பா. அங்க ஆளீஸ் இருக்கா, அவ ஃபேமிலி இருக்கு. பேபி பிறந்த பிறகு நாமளும் போயிட்டு வரலாம்..”

“ஹ்ம்ம்.. அண்ணா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நினைச்சாலே பயமா இருக்கு..”

“அவனோட கேரியர்ல இது பீக் டைம். கண்டிப்பா அவனோட திறமையை அவன் நிரூபிக்கனும், அப்போதானே மாமாவுக்கு அத்தைக்கும் பெருமை. ஏன் நீங்களே என் அண்ணனு பெருமை பீத்துவீங்க. அதுக்காக இதெல்லாம் சமாளிச்சுதான் ஆகனும்..” என்று முடிக்க, கணவனின் தோளில் சட்டென அடித்தாள் பெண்.

அதில் சிரித்தவன் “அம்மு.. நீ இங்கேயே இரு.. தூங்கிடாத. நான் பால் வாங்கிட்டு வரேன்..” என அவளை அங்கேயே விட்டு வெளியில் வந்தான் .

தன் அறையில் இருந்து வெளியில் வந்த கர்ணன் நேராக தந்தையின் அறைக்குச் சென்றான்.

சென்ற சில நிமிடங்களிலேயே ஹாலுக்கு வர, பாண்டியன் சொக்கலிங்கத்தின் வீல் சேரைத் தள்ளியபடி வந்தார்.

அப்போதுதான் சாப்பிட்டு ஹாலுக்கு வந்த இருவரும் யோசனையாக பாண்டியனைப் பார்க்க, கர்ணனோ “சாப்பிட்டாச்சா மாப்பிள்ளை..?” என்றான் ரமேஷிடம்.

‘இப்போ எதுக்கு என்னை இழுக்குறான்?’ என்ற யோசனை வந்தாலும், “ஹான் ஆச்சு மச்சான்..” என வேகமாக பதிலும் வந்து விழுந்தது.

“ஒரு டென் மினிட்ஸ் உட்கார முடியுமா? உங்ககிட்ட பேசனும்..?” என்றதும் இருவருக்கும் உள்ளுக்குள் திக்கென்றிருந்தது. 

ஆனாலும் அதை வெளியில் காட்டாமல் சோபா இருக்கும் இடம் வர, சுந்தர் தன் அறை நோக்கி நடந்தான்.

“நீ எங்க போற சுந்தர்… உன்கிட்டயும் தான் பேசனும். இப்படி உட்கார்..?” என்றான் கர்ணன்.

‘இருவரும் பாலக்காடு சென்று வந்தது தான் தெரிந்து விட்டதோ?’ என்று யோசித்தபடியே அமர, அவர்களுக்கு எதிரில் கர்ணனும் அமர்ந்தான்.

“கோவைல நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு கொஞ்சம் ஃபன்ட் தேவைப்படுது. அப்பாக்கிட்ட சொன்னேன், ஓக்கேன்னு சொல்லிட்டார். நீங்களும் சொன்னா ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்று இருவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தபடி கர்ணன் கூற, ‘ஊப்ஸ்’ என பெருமூச்சு விட்டனர் இருவரும்.

“இவங்க எதுக்கு ஓக்கே சொல்லனும். அப்போ இது ஃபேமிலி பிசினசா?” என இடையில் வந்தாள் வனிதா.

“கிட்டத்தட்ட அப்படித்தான். அவங்க இன்வெஸ்ட் பண்றதை பொறுத்து.. இது நம்ம ஃபேமிலி மனில இருந்து ஸ்டார்ட் பண்றது இல்ல. அவங்க அவங்களோட ஓன் மணில இருந்து ஸ்டார்ட் பண்றது.. சோ..?” என இழுக்க,

“எங்களுக்கு எந்த சொந்தப்பணம் இருக்கு. எல்லாமே பிசினஸ்லதான் ரொட்டேட் ஆகிருக்கு..” என்றான் சுந்தர் வெடுக்கென.

“அப்படியா? லாஸ்ட் ஃபைவ் யேர்ஸா ஒவ்வொரு மந்தும் ரெண்டு பேர் அக்கவுன்டுக்கும் 10 லக்ஸ் ட்ரான்ஸ்ஃபர் ஆகிருக்கே, அது என்ன பணம்..?” என இப்போது சோபாவில் சாய்ந்தமர்ந்து நிதானமாக கேட்க, ரமேஷிற்கு சர்வமும் அடங்கியது.

“அது.. அது சாலரி போலத்தான்..” என்றான் ரமேஷ்.

ஆனால் கர்ணனின் பார்வை சுந்தரிலேயே நிற்க, “அது உங்க பணம் இல்ல.. எங்களோட சம்பாத்தியம்..” என்றான் சுந்தர்.

“ஓக்கே.. அப்போ அதை சாலரின்னு வச்சுக்கலாம். சோ நீங்க இதை உங்களோட பிசினஸா பார்க்கல..” என கால் மேல் கால் போட்டு அமர, கர்ணனின் ஒவ்வொரு செய்கையும் ராஜலட்சுமிக்கு புளியைக் கரைத்தது.

“தம்பி இப்போ எதுக்கு அதெல்லாம்.. பத்து லட்சமெல்லாம் நமக்கு ஒரு பணமா? அதோட யார் எடுத்தது? நம்ம தம்பிதான..” என பூசி முழுக பார்க்க,

“இதே பணத்தை என் புருசன் எடுத்திருந்தாலும் நீங்க இதே வார்த்தையை தான் சொல்லிருப்பீங்களா?” என்ற குரலில் அனைவரும் மாடிப்படியைப் பார்த்தனர்.

கர்ணன் சென்று வெகு நேரமாகியும் வரவில்லையே என்று யோசித்தபடியே கீழே வந்தவளின் காதில் விழுந்தது தான் இந்த வார்த்தைகள்.

“ஏய் அறிவில்ல உனக்கு? ஆம்பளைங்க பேசிட்டு இருக்கும் போது நீ ஏன் இடையில வர..?” என வனிதா வழக்கம்போல கத்த,

“ஏன் நீங்க கூடத்தான் இடையில பேசுனீங்க? என் புருசன் பொறுமையா பதில் சொல்லல, அதேமாதிரி என் கேள்விக்கு நீங்களும் பதில் சொல்லுங்க..” என்றவாறே சென்று சொக்கலிங்கத்தின் அருகில் நின்றாள் வல்லி.

“ம்மா இவளுக்கு எவ்ளோ திமிர் பார்த்தியாம்மா.?” என ஆங்காரத்தில் கத்த,

“வனி..” என்ற கர்ணனின் ஓங்கியக் குரல் “அவ என் பொண்டாட்டி. உனக்கு அண்ணன் பொண்டாட்டி, ஒழுங்கா அண்ணின்னு கூப்பிட்டு பழகு. சுமியை அப்படித்தான கூப்பிடுற..” என கண்டனமாக கூற,

“தம்பி.. அது வல்லிக்கு வயசு கம்மி இல்லையா?” என ராஜி மகளுக்கு சப்போர்டிற்கு வர,

“சரி… வயசு குறைவுதான். அதுக்காக மரியாதைக் குறைவா பேச சொல்லிருக்கா, எல்லாம் நீ கொடுக்குற இடம்..” என பாட்டி ராஜியைத் திட்ட,

“பாட்டி இதுல நீங்க தலையிடாதீங்க. இது எங்க வீட்டு பிரச்சினை. ஒரு விசேசத்துக்கு வந்தோமா, நாலு நாள் இருந்தோமான்னு போகனும். அதை விட்டுட்டு இங்கேயே டேரா போடக்கூடாது.. உங்களை யாரும் இங்க பஞ்சாயத்து பண்ண கூப்பிடல.. உங்க வேலையை மட்டும் பாருங்க..” என முடிக்கும் முன்னே மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் ராஜ்லட்சுமி.

“எவ்ளோ திமிர் டீ உனக்கு.. யாருக்கிட்ட என்ன பேசனும்னு தெரியாது. அவங்களை யாருன்னு நினைச்ச, என்னோட சித்தி. உன் வாய்க்கு வந்ததையெல்லாம் அவங்களை பேசுவியா? முதல்ல இங்க இருந்து கிளம்பு.. மாப்பிள்ளை இவளை இழுத்துட்டு கிளம்புங்க..” என மகளை சராமாரியாக அடிக்க, யாருமே அவளை அடிக்காதீங்க என வந்து தடுக்கவில்லை. இவளுக்கு இந்த அடி தேவைதான் என பார்த்துக்கொண்டே இருந்தனர்.

வல்லியும், யாழியும் பாட்டியின் இருப்பக்கமும் நின்று “பாட்டி அவதான் பைத்தியம்னு உங்களுக்குத் தெரியுமே, இதெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க… வாங்க..” என யாழி அழைக்க, அவரின் அதிர்ந்த தோற்றமே அவர் இன்னும் அந்த பேச்சில் இருந்து வெளியில் வரவில்லை என்று காட்டியது.

“பாட்டி..” என கர்ணன் அவர் தோளைத் தொட்டு உலுக்க, “இருக்குற இடத்துல இருந்தா தான் மதிப்புன்னு எனக்குத் தெரியும் கண்ணா.. உன் கூட இருக்கனும்னு நினைச்சேன்..” என்றவரின் குரல் உடைய, ‘பாட்டி’ என்று தன்னோடு அனைத்துக் கொண்ட கர்ணனின் விழிகளும் கலங்கித்தான் போனது.

You may also like

1 comment

M. Sarathi Rio July 15, 2026 - 8:34 pm

அப்பாவமே..! ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, கடைசியில மனுசனை கடிச்ச மாதிரி, பாட்டியையும் பேசிப்பூட்டாங்களா..?

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured