Home Antiheroதளிர் – 05

தளிர் – 05

by Vathani S

தளிர் 5

நரேன் அழைத்துச் சொன்ன அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையில் இருந்தான் ரவி. வந்த வேகத்தில் என்ன ஏதென்று யோசிக்கும் முன்னே, அமர்ந்திருந்த விக்ரமின் சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்திருந்தான்.

“மனுசனாடா நீ? உன்னையெல்லாம் கொன்னாக்கூட தப்பே இல்ல. ஒரு துரோகிக்காக அப்பாவி பொண்ணோட வாழ்க்கையில விளையாண்டதும் இல்லாம, அவ உயிரோடவும் விளையாட ஆரம்பிச்சிட்டியா? ச்சே மிருகம்டா நீ… உன்னையெல்லாம் கொன்னாக்கூட என் ஆத்திரம் அடங்காது.” என அவனை உதறித் தள்ளியவன் மருத்துவரைக் காண ஓடினான்.

ரவி உள்ளே வந்த வேகத்தில் இதைத்தான் செய்வான் என்பதை உணர்ந்த நரேன், வேகமாக வந்து ரவியைப் பின்னாடியாகப் பிடித்துக்கொண்டான். ஆனாலும் முதல் அடியைத் தடுக்கவுமில்லை, அடுத்த அடி விழ சம்மதிக்கவுமில்லை.

தடுத்துப் பிடித்தவன், “சீனியர் நீங்க டாக்டர பார்த்துட்டு வந்துடுங்க.” என ரவியின் காதோடு சொல்ல, அவனையும் முறைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

ரவி கிளம்பிய பிறகு, ‘ஊப்ஸ்’ என்றபடியே விக்ரமைப் பார்க்க, அவனோ நரேனை ஒரு பார்வை பார்த்தானே தவிர, முகத்தில் வேறெந்த உணர்வுகளையும் காட்டாமல் அப்படியே இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.

அந்தப் பார்வையே சொன்னது, ‘உனக்கு இருக்குடா’ என்று. ஆனாலும் நரேன் இதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. இதற்கெல்லாம் பயந்தால் இவனிடம் வேலை செய்ய முடியுமா என்ன? தூசு தட்டுவது போல தட்டிவிட்டு, விக்ரமின் பின்னால் சென்று நின்றுகொண்டான்.

டாக்டரைப் பார்த்துவிட்டு வந்த ரவி, விக்ரமின் அருகில் ஒரு இருக்கையை விட்டு தள்ளி அமர்ந்து முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டான்.

அவன் மனதில் இப்போது குற்ற உணர்ச்சி தாண்டவமாடியது. ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் யோசிக்க வைத்தது.

***

விக்ரம் வீட்டில் பேசுவதற்கு முன்னே ஸ்வாதி வந்து விக்ரமைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னதும், அவனுக்கு விருப்பமா? என்றக் கேள்வியைத்தான் முன் வைத்தான் ரவி.

“என்னை ஒருத்தனுக்குப் பிடிக்காம போகுமா?” என்ற ஸ்வாதியின் பேச்சில் எரிச்சல் வந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை ரவி. விக்ரமிற்கு அவளைப் பிடித்திருக்கிறது என்பதே போதுமானதாக இருந்தது அவனுக்கு. பிடித்தத்திற்கும் விருப்பத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை அன்று அறிந்திருக்கவில்லை அவன்.

தங்கையைப்பற்றி, அவளது குணத்தைப்பற்றி தெரிந்தவன் ஸ்வாதிக்கு நல்ல கணவனாக இருப்பான், என்றுத் தங்கைக்காக மட்டுமே யோசித்தான் ரவி. அந்த இடத்தில் நல்ல நண்பனாக செயல்பட மறந்துவிட்டான்.

ஸ்வாதிக்கு நல்ல அண்ணனாக சுயநலமாகவே யோசித்து, எங்கே காலப்போக்கில் அவர்களுக்குள் பிரச்சனை வந்து பிரிந்து விடுவார்களோ என்று பயந்துதான் ரித்தியை திருமணம் செய்யக் கேட்டான்.

பெண் எடுத்து, பெண் கொடுத்தால் இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்ற எண்ணம்தான் அவனுக்கு. காலம் கடந்தே நண்பனுக்காக அன்று யோசிக்கத் தவறியதை உணர்ந்தான்.

ஸ்வாதியின் செயல்களில் ரித்தியும் விக்ரமும்தான் மனதளவில் அதிகம் அடி வாங்கியிருந்தனர். ஆனால் மொத்தமாக உருக்குலைந்து போனது நிசப்தி மற்றும் நரேனின் வாழ்க்கை. அடுத்து யோசிக்க முடியவில்லை அவனால்.

தன் சுயநலத்தால் இன்று மூவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிப் போனதில், அவனுக்கு அவனையேப் பிடிக்கவில்லை. எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் எதுவுமே சரியாகவில்லையே, இனி என்ன என்ன நடக்குமோ, என்ற கேள்விகள் மனதில் உலா வர, விக்ரமும் இனி அமைதியாக இருக்கமாட்டான் என்பதும் புரிந்தது.

‘இனி என்ன?’ என்ற கேள்வியோடு அமர்ந்திருந்தவனின் தோளில் ஒரு கரம் விழ, அதில் நிமிர்ந்தவன் பார்வையில் பட்டது, கலக்கமாக நின்ற மனைவியின் முகம்தான்.

வியர்வை அரும்ப, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பதட்டத்தில் வந்து நின்றவளைப் பார்த்ததுமே புரிந்தது அவனுக்கு. மிகவும் பயந்திருக்கிறாள் என்று.

உடனேத் தன்னை சமாளித்தவன் அவளது கைகளைப் பிடித்து அழுத்திக் கொடுத்து, இருவருக்கும் இடையில் இருந்த இருக்கையில் அமர வைத்தான்.

“என்ன சொன்னாங்க?” என்ற ரித்தியின் வார்த்தைகூட காற்றாகத்தான் வந்தது.

“வெயிட் பண்ண சொன்னாங்க, சர்ஜரி போயிட்டு இருக்கு.” என்றவன், “அத்தைக்கிட்ட சொன்னியா? தசிக்குட்டி எழுந்துட்டாளா? நிசா இல்லைன்னு அழுதாளா?” என விக்ரம் அருகே இருப்பதைக்கூட மறந்து கேட்க, “ம்ம்… அம்மா பார்த்துப்பாங்க.” என்றதோடு ரித்தி முடித்துக்கொண்டாள்.

ஆனால் அதுவரை வேலை செய்யாத விக்ரமின் உணர்வுகள் ‘தசிக்குட்டி’ என்ற வார்த்தையில் உணர்வுக்கு வந்தது. சட்டென்று திரும்பியவன் அதுவரை இருந்த உணர்வுகளை சட்டென்று மறைத்து, தங்கையிடம், “எதுக்கு இந்த நேரத்துல அலைஞ்சிட்டு இருக்க? கிளம்பு உன்னை வீட்டுல விட்டுட்டு, நான் ஆஃபிஸ் போறேன்.” என்றதும் அவனை உறுத்து விழித்தவள்,

“உன் வேலையைப் பார்த்துட்டு போ, எனக்குப் போகத் தெரியும்.” என முகத்தில் அடித்தாற்போல் பேசியவள், முகத்தை வேறுபுறம் திருப்ப, அங்கு கூரிய பார்வையுடன் நரேன் அவளைப் பார்ப்பது தெரிய, அதற்குமேல் அங்கு அமர முடியாமல் எழுந்துவிட்டாள்.

அப்போது உள்ளே இருந்த மருத்துவர் குழு வெளியே வர, அனைவரின் கவனமும் அங்கே சென்றது. வந்த மருத்துவரில் ஒருவர், “மிஸ்டர் விக்ரம், உங்க வொய்ஃப்க்கு ரொம்ப நல்ல நேரம்னு நினைக்கிறேன்.” என்றதும்,

“என்னோட வொய்ஃப் இல்ல, என் குழந்தைக்கு அம்மா. ஜஸ்ட் என் குழந்தைக்கு அம்மா அவ்ளோதான்.” என இறுக்கமாகச் சொல்ல,

அதைக் கேட்டதும் ஏதோ வீட்டுப் பிரச்சனை என்று புரிந்துகொண்ட அந்த மருத்துவர், “ஓகே உங்க குழந்தையோட அம்மா ஜஸ்ட் மிஸ்ஸானாலும் அந்த குண்டு அவங்க கழுத்துலதான் பாஞ்சிருக்கும் ஆர் நெஞ்சில. பட் காட் க்ரேஸ் அந்த மாதிரி எதுவும் நடக்கல. புல்லட் கையை நல்லா துளைச்சிட்டுப் போயிருக்கு. சோ காயம் கொஞ்சம் ஆழம்தான். சர்ஜரி செஞ்சிதான் புல்லட் ரிமூவ் செய்திருக்கோம். கண்டிப்பா டூ மன்த்ஸ் ரெஸ்ட் எடுக்கணும். அன்ட் இது எந்த வகையான புல்லட்னு விசாரிச்சு சொன்னா பெட்டர். இதோட ரியாக்சன்ஸ் தெரிஞ்சாதான் நான் மெடிசின் ப்ரிஸ்க்ரைப் பண்ண முடியும்.” என்றதும்,

“ஏன், ஏன் டாக்டர் இதனால என்னப் பிரச்சனை?” என்றான் ரவி பதட்டமாக.

“எஸ்… நிறைய பிரச்சனை இருக்கு மிஸ்டர். புல்லட்ல யூஸ் செய்ற கெமிகல்ஸ் எப்படி ரியாக்ட் ஆகும்னு தெரியாதே. அன்ட் சில கெமிக்கல்ஸோட ரியாக்ஷன்ல அந்த உறுப்பு செயல்படாம போகவும் வாய்ப்பிருக்கு.” என்று மருத்துவர் கூறவும், ரித்தியின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

தன்னைப்போல் கணவனின் கையைப் பிடித்துக்கொண்டவள் பயத்துடன் அண்ணனைப் பார்க்க, அவனும் ரித்தியின் கையைப் பிடித்து அழுத்திக்கொண்டான்.

“இப்போ இந்த புல்லட்ட லேபுக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அங்க இருந்து ரிசல்ட் வந்ததும்தான் அடுத்த ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் ஆகும். பட் இப்போ அவங்க மயக்கத்துல இருக்காங்க. இன்னைக்கு முழுவதுமே இப்படித்தான் இருப்பாங்க. லேடிஸ் யாராச்சும் இருந்தா வச்சுக்கோங்க. இல்லைன்னா நோ ப்ராப்ளம் நம்ம சிஸ்டர்ஸ் பார்த்துப்பாங்க. யூ கேரியான்.” என்றுவிட்டு நகரப்போக,

“தேங்க் யூ டாக்டர்.” என்றான் விக்ரம். அப்போதும் அவன் முகத்தில் உணர்ச்சிகள் எதுவுமில்ல. அவனை ஒரு பார்வை பார்த்தவர், அவன் தோளைத் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்.

“நரேன் நீ இங்க இருந்து எல்லாம் பார்த்துக்க, உடனே என் பின்னாடி வரணும்னு எந்த கட்டாயமும் இல்ல.” என்றவனை எரித்து விடுவது போல் பார்த்த ரித்தி கணவனிடம் திரும்பி, “ரவி நான் வெளிய இருக்கேன், நீங்க பார்த்துட்டு வந்து சொல்லுங்க. எனக்கு உள்ள வந்தா வாமிட்டிங் சென்ஷேசனா இருக்கு.” என்றபடியே நடக்கப் போக,

அவள் கையைப் பிடித்த விக்ரம், “ஒரு நிமிசம் இரு.” என்றவன், ரவியைப் பார்த்து, “நாளைக்கு கேஸ் ஃபைல் ஆகுது. நான் அட்டென்ட் பண்ணுவேன், அவளுக்கு யார் லாயர்? என்னை மீறி எவன் கிடைச்சான். அவனை நாளைக்கு கோர்ட்ல பார்த்துக்குறேன்.” என்றவனை உணர்வுகள் அற்ற பார்வையில் வெறித்த ரவி, மனைவியைப் பார்த்து, ‘ப்போ’ என்பது போல் தலையசைக்க, அவளும் ஒன்றும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.

இவர்கள் இருவரும் கண்ணில் இருந்து மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மறைந்ததும், “நரேன் யார் வேலை இது? அந்த மினிஸ்டர் கேஸ் எடுக்க வேண்டாம்னு எத்தனை தடவை சொன்னேன், கேட்கவே மாட்டீங்களா?” என்றுக் கத்த,

“நான் என்ன செய்ய முடியும் சீனியர்? பாஸ் என்ன சொல்றாரோ அதைத்தான் நான் செய்ய முடியும். அவர்தான் இந்த கேஸ் நம்மக்கிட்ட கண்டிப்பா வரணும்னு சொன்னார். அதைத்தான் நான் செஞ்சேன்.” என்றான் அவனும்.

“ஏன்டா பார் கவுன்சிலவே விலைக்கு வாங்கிடுவீங்களா? அவ்வளவு செல்வாக்கு…” என்றவன் யோசனையில் நிற்க, “சீனியர் இது மினிஸ்டர் கேஸுக்காக பண்ண அட்டாக் இல்ல.” என்றவனை புருவம் சுருக்கிப் பார்க்க, “எஸ் சீனியர், இது பாஸுக்கான அட்டாக் இல்ல.” என்றவன் அங்கிருந்து சென்றுவிட, இப்போது குழப்பத்தின் மத்தியில் அமர்ந்துவிட்டான் ரவி.

இங்கு வெளியில் வந்த விக்ரமின் முகமோ கல்லாக இறுகிப் போயிருந்தது. ரித்தியை காரில் இருக்க வைத்தவன் தன் மொபைலை எடுத்துக்கொண்டு தனியாகச் சென்று, ஒரு நம்பருக்கு அழைத்தான். அழைப்பு எடுத்ததும், “நான் என்ன சொன்னேன், நீ என்ன பண்ணிட்டு இருக்க ராஸ்கல்?” என்றுக் கடித்தப் பற்களுக்கிடையே சீறினான்.

“பாஸ் நீங்க சொன்னதைத்தான் செஞ்சேன் பாஸ்.” என்றவனின் குரலிலேயேத் தெரிந்தது முழு போதையில் இருக்கிறான் என்று.

“நீ புடிங்கின வரைக்கும் எல்லாம் போதும், மூடிட்டு போய் வேலையைப் பாரு.” என கெட்ட வார்த்தையில் திட்ட,

“எதுக்கு பாஸ் இவ்வளவு கோபம்? இப்பவும் ஒன்னும் ஆகாது. நம்ம ப்ளான் சக்சஸ்தான். அந்த ப்ளடி ***யை போட்டுத் தள்ளிட்டு பேபியை நம்மக்கிட்ட கொண்டு வந்துடலாம். நாம ஹேப்பியா செலிப்ரேட் பண்ன வேண்டிய டைம் பாஸ் இது.” என்ற எதிர்முனைக் குரலுக்கு,

“ஸ்டாப்பிட் நான்சென்ஸ் ப்ளடி***. நான் உனக்கு பாஸா, இல்ல நீ எனக்கு பாஸா? என்னோட பேபி என் கைக்கு வர வரைக்கும் இந்த மாதிரி எந்த முட்டாள்தனமும் செய்யக்கூடாது ரைட். புரியுதா? அப்படி மீறி எதுவும் செஞ்சா நீ கூவத்துலதான் மிதக்கணும் பொணமா.” என்ற இறுகியக் குரலில், “எஸ் பாஸ்.” என்ற எதிர்முனைக் குரல் பம்மியது.

தங்கையை வீட்டில் விட்டவன், அடுத்து சென்று நின்றது தாய் ரேணுகாவிடம்தான். அவரோ அதிராமல் அவனை மேலிருந்து கீழ் பார்க்க, “நீங்ககூட இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கவே இல்லம்மா.” என்றான் ஆற்றாமையாக.

“நான் என்ன செஞ்சிருக்கணும் விக்ரம்? அதையும்தான் நீயே சொல்லேன்.” என்றத் தாயின் கேள்விக்கு, அவனால் பதில் சொல்ல முடியவில்லை. தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

பின் ஒரு முடிவோடு, “உங்ககிட்ட என்னால எதையும் சொல்ல முடியாதுமா. ஆனா எல்லாம் சரியாகும், நான் சரி செய்வேன்னு மட்டும் நம்புங்க, அது போதும். ப்ளீஸ்மா நான் நிசப்திக்காகத்தான் இதெல்லாம் செய்றேன். முதல்ல அதைத் தெரிஞ்சிக்கோங்க.” என்றவனை நம்பாமல் பார்த்தார் ரேணுகா.

“எஸ்மா, எல்லாம் போகப்போக உங்களுக்கேத் தெரியும். கண்டிப்பா நான் ஏன் இப்படி நடந்துக்குறேன்னும் புரியும். இப்போ அவளுக்கு ஹாஸ்பிடல்லகூட லேடிஸ் வேணும். நீங்க போறீங்களா, இல்ல மெய்ட் அரேஞ்ச் செய்யட்டுமா?” என்றவனிடம், கூரியப் பார்வையை செலுத்தியவர், “உன்னை முழுசா நம்பினதுக்கு கிடைச்ச பலன்தான் ஸ்வாதி.” என்றார் அழுத்தம் திருத்தமாக.

அதில் அவனது முகம் விழுந்துவிட, ‘இவனைப் பார்த்து பயந்து நடுங்க ஒரு கூட்டமே இருக்க, இவன் என்னவென்றால்…’ ஸ்வாதியின் நினைவு வந்ததும் வழக்கம்போல் ஒரு கோபமும் வந்துவிட, “பாப்பா உள்ள தூங்குறா, அவ எழுந்ததும் பால் ஆத்திக் கொடு. நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன். இந்த தடவையும் உன்னை முழுசா நம்பித்தான் இந்தப் பொறுப்பைக் கொடுக்குறேன்.” என்றவரை அமைதியாகப் பார்த்தான்.

அடுத்து ரேணுகா எதுவும் பேசவில்லை. நிசப்திக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட, அவனோ உள்ளேத் தூங்கும் தன் பொக்கிசத்தைக் காண பயந்து அப்படியே அமர்ந்துவிட்டான்.

‘விக்கி… எனக்கு குழந்தை ரொம்ப பிடிக்கும் விக்கி. உன் குழந்தை எனக்குப் பிடிக்காம போகுமா? ஆனா இந்தக் குழந்தை வேண்டாம் விக்கி. இது அவ குழந்தை. அவ வயித்துல வளருது. அப்போ அவளை மாதிரியே பிறக்கும். அப்படி பிறந்துட்டா என்னால தாங்கவே முடியாது விக்கி. செத்துடுவேன் விக்கி.’ என்ற ஸ்வாதியின் அழுகைக் குரல் மனதில் ஒலித்து, வழக்கம்போல அவன் நிம்மதியை சூரையாடிக் கொண்டிருக்க, “ப்பா…” என்ற ஒரு மழலையின் குரல் அந்த அபஸ்வரத்திலும் சங்கீதமாக ஒலித்தது.

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

You may also like

1 comment

mriomrio28399 February 2, 2026 - 3:55 pm

அப்படின்னா, நிசப்தியா பயமுறுத்த விக்ரம் ஏற்பாடு பண்ண ஆள் தானா அந்த ஸூட்டர்…?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured