தூரம் 23
கணவனுக்கு இதில் விருப்பமில்லை என்று தெரிந்த பிறகு, இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் அனைத்தையும் செய்தாள் கொடி. வெளியில் கொடுக்கல், வாங்கலை குறைத்துக் கொண்டாள். நகைகள் அடமானம் வாங்குவதையும் வட்டிக்கு கொடுப்பதையும் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டாள்.
நந்தினிக்கு சந்திராவின் சொந்தத்திலேயே ஒரு வரன் வர, அவளும் அப்போதுதான் படிப்பை முடித்து இருந்தாள். அனைவருக்குமே அந்த இடம் பிடித்துப் போய் விட அடுத்தடுத்து கல்யாண வேலைகள் வேகமாக ஆரம்பித்தது.
நடேசனும் குடும்பத்தோடு இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு வந்துவிட இளங்கோ, வெங்கடேஷ் என மூவரும் சேர்ந்து கல்யாண வேலைகளைப் பார்த்தனர்.
இரண்டு வீட்டிற்கும் ஒரே பெண் என்பதால், நந்தினியின் திருமணம் மிகவும் விமர்சையாக நடத்தப்பட்டது. குடும்ப வாழ்வும் சுமூகமாகவே சென்றது.
மகளிர் சுய உதவிக் குழுவில் அந்த முறை வாங்கிய அனைவருமே சரியாக பணத்தைக் கட்ட, அவளே குழு தலைவியாக இருந்து, குழு பயனாளிகளிடமிருந்து பணத்தை வசூல் செய்து கட்டி முடித்திருக்க, அடுத்தடுத்தும் வாங்கி கொடுக்குமாறு குழு ஆட்கள் கேட்க,
ஊர் பெண்களுமே, “நீ தான் சரியா பண்ற கொடி, நீயே வாங்கி கொடு. ஏதோ எங்களுக்கு இப்படியாவது உதவி கிடைக்குதே, போன தடவை மாதிரி இந்த தடவையும் பணத்தை சரியா கட்டிடலாம்.” என மிகவும் கெஞ்சி கேட்க, கொடியால் மறுத்து பேச முடியவில்லை.
கணவனிடம் கேட்டால் நிச்சயம் வேண்டாம் என்றுதான் சொல்லுவான். இந்த முறை எதுவும் பிரச்சனையாகவில்லையே, இனி இன்னும் கவனமாக இருக்கலாம் என்று நினைத்து, இளங்கோவிற்கு தெரியாமலே வாங்கி கொடுத்தாள்.
இந்த முறையும் அனைவரும் சரியாக தான் கட்டினர். ஒரு சிலர் ஒரு நாள், இரண்டு நாள் தாமதமானாலும் கொடியே அவர்களுக்கு பணத்தைப் போட்டு கட்டி, அந்த மாத கணக்கை முடித்து விடுவாள்.
கொடி தவறு செய்த இடம் இதுதான். பணம் வாங்கிக் கொடுத்ததோடு நிறுத்தி இருந்தால், இந்த பிரச்சனையே இல்லை. அவர்களுக்காக தன் பணத்தைக் கொடுத்தது தான் பிரச்சனை.
அவளின் கையிருப்பும் குறைய ஆரம்பிக்க, வாங்கியவர்களும் இப்போது தரேன், பிறகு தரேன் என இழுத்தடிக்க, கொடி புது சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டாள்.
ஓரளவிற்கு மேல் சேமிப்பிலும் கை வைக்க முடியாது. இளங்கோவிற்கு தெரிந்தால் பெரும் பிரச்சனையாகிவிடும் என்று பயந்தவள், வார வட்டிக்கு கொடுக்கும் கந்து வட்டிக்காரரிடம் பணத்தை வாங்கி சரி செய்ய ஆரம்பித்தாள்.
அதோடு பணம் வாங்கியவர்களும் அவளுக்கு கொடுத்துவிட, பிரச்சனை யாருக்கும் தெரியாமலே முடிந்துவிட்டது. அதன்பிறகு தான் சற்று ஆசுவாசமானாள்.
கொடியின் இந்த போக்கு சுப்புவிற்கு சந்தேகத்தை வர வைத்தது. கந்து வட்டிக்காரன் பரமனின் வருகையும் அவருக்கு உவப்பாக இல்லை.
இதற்கிடையில் நந்தினியின் கணவன் ஒரு ஆக்சிடெண்டில் இறந்துவிட, குடும்பமே உடைந்து போனது. கொடிதான் நந்தினியை தேற்ற வேண்டியதாக இருந்தது.
திருமணமான மூன்று மாதத்தில் பெண் பிள்ளை விதவையாக வீட்டிற்கு வந்தால், அந்த குடும்பத்தில் எங்கிருந்து சந்தோஷம் இருக்கும்? நந்தினியை வீட்டிலேயே இருக்க வைக்க இளங்கோ ஒத்துக் கொள்ளவே இல்லை.
“வீட்ல இருந்தா அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும். நீங்களும் சும்மா இருக்க மாட்டீங்க. அவளை அப்படியே விட்டுட மாட்டோம், ஆனா அதுக்காக உடனே இன்னொரு கல்யாணம் செய்யணும்னு அவளை டார்ச்சர் செய்யாதீங்க. அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம். அவ அந்த வேதனையில இருந்து வெளியே வரட்டும்.” என முடித்து விட்டான்.
கொடியும் அவளைப் படிக்க வைக்கலாம் என்று யோசனை கூற, அதுவே அனைவருக்கும் சரி என தோன்ற மதுரையில் உள்ள ஒரு கல்லூரியிலும் சேர்த்து விட்டான்.
நந்தினி பிரச்சனையில் இருந்த கொடி, பரமனுக்கு பணம் கட்டுவதை முற்றிலுமாக மறந்திருந்தாள்.
அவனுமே முதலில் கொடி இடம் கறாரக நடந்து கொள்ளவில்லை. ஆனால் பல வாரங்களாக வட்டி கட்டாமல் விடவே, வட்டி தொகையும் அதிகமாகி விட அதனால் சற்று கண்டிப்புடன் பணத்தைக் கேட்டான்.
சரியாக அந்த நேரம் சுப்புவும் வீட்டில் இருக்க, கணவனிடம் கூறி எதுவும் பிரச்சனை செய்வாரோ என்று பயந்தே போனாள். ஆனால் சுப்பு அப்படி எதுவும் செய்யவில்லை. மகனுக்கு தெரியாமல் கொடி எதுவும் செய்ய மாட்டாள் என்ற எண்ணம் அவருக்கு.
வீடு கட்டியதில் மற்றும் நந்தினியின் திருமணம் என்று எதுவும் பணப்பிரச்சனையோ? அதனால் வெளியில் வாங்கி இருப்பானோ என்றுதான் எண்ணியிருந்தார்.
வாங்கிய பணத்திற்கு மேலே வட்டியும் வந்து விட கொடிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கணவனிடம் கூறலாம் என்றாலும் அவனிடம் எப்படி சொல்வது என்ற பயம் வேறு அவளை ஆட்டிப் படைத்தது.
முதலில் கடனைக் கட்டிவிட்டு அதற்குபிறகு அவனிடம் கூறிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள், தன் நகை ஒன்றை அடகு வைத்து அந்தக் கடனை கட்டி விட்டாள். அதனால் பரமனின் வரவும் குறைந்தது.
ஒருநாள் பேச்சுவாக்கில் சுப்பு மகனிடம் இதுபற்றி கேட்க, “அம்மா, கடன் எல்லாம் நான் வாங்கல, எனக்கு கடன் வாங்குறதும் பிடிக்காதுனு உனக்கு தெரியாதா? கொடி யாருக்காவது வாங்கிக் கொடுத்திருப்பா.” என மனைவியின் மேல் இருந்த நம்பிக்கையில் தாயை அடக்கி விட்டான்.
ஆனாலும் சுப்புவின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. ஒரு வழியாக கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு, இலகுவாக செல்ல தொடங்கிய நேரம், மகளிர் குழுவில் இருந்து புதிய கடன் தருவதாக கூறி இருவர் வந்தார்கள்.
அதாவது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு லட்சம் என்பதால், முதலில் ஆள் ஒன்றுக்கு முன் பணமாக 5000 கட்ட வேண்டும் என்றும், ஒரே வாரத்தில் லோன் கிடைத்துவிடும் என்று வந்த இருவரும் கூற, கொடியோ அது வேண்டாவே வேண்டாம் என்று விட்டாள்.
ஏற்கனவே கணவனிடம் மறைத்ததில் இருந்தே, மிகவும் மன அழுத்தத்தில் இருந்தாள். இப்போது புதிதாக இதை செய்து மீண்டும் பிரச்சனைக்குள் விழ அவள் தயாராகவில்லை. அதனால் முடியாது என்று விட்டாள்.
ஆனால் குழுவில் இருந்த பெண்கள் அனைவரும், “இந்த ஒரு தடவை மட்டும் வாங்கிக்கொடு கொடி, ஒரு லட்சம்னா எங்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் தீரும். மாசம் மாசம் தானே கட்ட வேண்டும். எப்படியாவது புரட்டி போட்டு கட்டிடலாம்.” என கொடியிடம் கெஞ்ச, அவளுக்கு செய்யவும் முடியவில்லை, செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.
தன்னால் பல பேர் பயனடைகிறார்கள் என்பதில் அவளுக்கொரு மனதிருப்தி தான். ஆனால் கணவனுக்கு அது பிடிக்கவில்லையே. ஏற்கனவே பலமுறை அவனிடம் சொல்லாமல் செய்தாகி விட்டது. நகை வேறு அடமானத்தில் இருக்கு, இதில் மறுபடியும் செய்ய அவளுக்கு மனம் ஒப்பவில்லை. ஒரேடியாக முடியாது என்று விட்டாள்.
ஆனால் குழு பெண்களோ அப்படியே விட்டு விடவில்லை, பேசிப் பேசியே அவளை செய்ய வைத்து விட்டார்கள். மூன்றாவது முறையாக கணவனுக்கு தெரியாமல் ஒரு செயலை செய்கிறாள். இந்த முறை அவளுக்கே பயம் வந்து விட்டது.
பொதுவாக பெண்களிடம் ஒரு குணம் உண்டு. குடும்பத்துக்குள் எதாவது ஒரு பிரச்சனை என்றால் எப்படியாவது சமாளித்து விடலாம் என்பதுதான். அது ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கைதான். ஆனாலும் அந்த நம்பிக்கை தான் இங்கு பல பெண்களை வாழ வைக்கிறது.
கொடியும் அப்படித்தான் எப்படியாவது சமாளித்து விடலாம் என்று நினைத்து, இந்த முறை மிகமிக கவனமாக, ஒழுங்காக பணம் செலுத்துவோர்களிடம் லோன் பற்றி சொல்லி முன்பணம் வாங்கினாள்.
கிட்டத்தட்ட முப்பது பெண்கள் ஐயாயிரம் வீதம் அந்த லோனுக்காக பணம் செலுத்த, அந்த பணத்தை அங்கு வந்த இருவரிடமும் தந்தாள். அவர்களும் இன்னும் ஒரு வாரத்தில் ஆபீஸ்க்கு வர சொல்லுவோம் என்று சொல்லி, பணத்துடன் சென்றவர்கள், அதன்பிறகு அவளை அழைக்கவேயில்லை.
இதனால் எப்போதும் கொடியிடம் ஒருவித பயமும் பதட்டமும் இருந்து கொண்டே இருந்தது. இளங்கோ கூட, “என்னாச்சு கொடி, உடம்பு எதுவும் சரி இல்லையா? ஏன், இப்பவெல்லாம் டென்ஷனாவே இருக்க?” என கேட்க,
அதற்கு, “அப்பா ஞாபகமாக இருக்கு.” என்றவள் ஒருமுறை சங்கரையும் சென்று பார்த்து வந்தாள்.
பத்து நாட்கள் கடந்த நிலையில் பெண்கள் எல்லாம் கொடியிடம், “என்னாச்சு கொடி?” என கேட்க ஆரம்பிக்க, அதோடு இளங்கோ வீட்டில் இருக்கும் சமயமும் அவர்கள் வந்து விசாரிக்க வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது.
இளங்கோ மனைவியை சத்தம் போட்டு இதுதான் கடைசி, இனி இதுபோல் எப்போதும் செய்யக்கூடாது என்று முடித்து விட்டான்.
அவனுக்கு அந்த கந்துவட்டிக்காரனிடம் பணம் வாங்கியது, நகையை அடகு வைத்தது என எதுவுமே தெரியாது. தெரிந்தால் அதுவும் ஒரு பிரச்சனையாகும்.
நாட்கள்தான் கடந்ததே தவிர, அவர்களின் ஆபீசிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த கொடியும், அந்த ஆபீஸ்க்கு சென்று விசாரிக்க, அங்கு இருந்தவர்களோ அவள் தலையில் பேரிடியை இறக்கினர்.
“அம்மா அவங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்கிட்டோம். நிறைய மகளிர் குழுவில் இதே போல பணத்தை வாங்கி மோசடி பண்ணி இருக்காங்க. அதுல அவங்க மாட்டினதுனால, மேனேஜர் அவங்களை வேலையை விட்டு தூக்கிட்டார்.” என்றதும் கொடிக்கு மயக்கமே வந்துவிட்டது.
இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை. ஊரில் உள்ள பெண்களிடம் சொன்னால் அவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு. கணவனிடம் எப்படி சொல்வது, இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று மிகவும் பயந்து போனாள்.
ஊருக்கு வந்தவள் பித்து பிடித்ததைப் போலவே இருந்தாள். குழு பெண்களிடம் பேசவும் பயம், எங்கே பணத்தை தான் ஏமாற்றி விட்டதாக நினைத்து விடுவார்களோ என்ற பயம்.
திட்டினாலும் பரவாயில்லை, ஏன் அடித்தால் கூட பரவாயில்லை. எல்லாத்தையும் கணவனிடம் கூறி விடலாமா என்று கூட யோசித்தாள்.
அப்போதே அதை செய்திருக்கலாம், அப்படியாவது அவன் நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கலாம். அவனிடம் சொல்லாமல் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு, விடையாக வந்து நின்றான் கந்து வட்டிக்காரன் பரமன்.
ஒன்றரை லட்சம், மிகப்பெரிய தொகைதான். ஆனால் இப்போதைக்கு பிரச்சனையை தீர்க்க வேண்டுமே… நாள பின்ன பணம் கட்டிய பெண்கள் வந்து வீட்டில் பிரச்சனை செய்தால், அது இன்னும் மிகப்பெரிய அவமானமாகிவிடும் என்று நினைத்து, வேறு வழியே இல்லாமல் அரை மனதாக பரமனிடம் வட்டிக்கு பணத்தை வாங்கினாள்.
இப்படி ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் எல்லோரும் தன்னை இழிவாக பேசுவார்களோ என்ற பயம் வேறு.
பணத்தை வாங்கியவள் அந்தக் குழு பெண்களிடம் லோன் கிடைக்காது என்ற உண்மையைக் கூறி பணத்தைத் திருப்பி கொடுத்தாள். பலர் அவளுக்காக பாவம் பார்த்தாலும், சிலர் முன்னே விட்டு பின்னே அவளைப் பற்றி பேசத்தான் செய்தனர்.
கொடி மனிதர்களின் குணத்தை அறிந்த நொடி அதுதான். எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று அவளுக்கும் புரிந்தது. என்ன, எல்லாம் காலம் கடந்த ஞானோதயம்.
பணத்தை கடனாக கொடுத்து பார், நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும்.
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு பார், அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று தெரியும் என்ற பாடத்தை, கொடிக்கு சொல்லி கொடுத்தது காலம் என்ற அரக்கன்.
கணவனுக்கு தெரியாமல் தந்தையிடம் பணத்தை வாங்கி, எப்படியாவது இந்த கடனை கட்டிவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தாள்.
முதல் மூன்று மாதங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. அடுத்தடுத்த மாதங்கள் வட்டிப்பணம் கொடுக்க தாமதமாக, பரமனுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்று இளங்கோவிற்கு விடுமுறை என வீட்டிலிருந்தான். அந்த நேரம் சரியாக பரமனும் வந்து பணம் கேட்க, இளங்கோ இருப்பதால் அடுத்த வாரம் தருகிறேன் என்றவளை சத்தம் போட ஆரம்பித்தான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த இளங்கோ, தன் வீட்டின் முன் புதிதாக ஒரு ஆணின் சத்தம் கேட்கவும் எதுவும் பிரச்சனையோ என்று வேகமாக எழுந்து வெளியே வந்தான்.
வந்தவன் கொடியிடம், “என்ன பிரச்சனை கொடி?” என கேட்க,
அவளோ பயத்தில், “ஒன்னுமில்ல மாமா… ஒன்னுமில்ல…” என பதட்டமாக கூற, மனைவியின் பயமும் பதட்டமும் அவனுக்கு வேறு கதை சொல்ல, அவளையே கூர்மையாகப் பார்த்தான்.
பரமனின் சத்தத்தில் பின் வீட்டில் இருந்து சுப்புவும் வந்திருந்தார். மருமகளின் பயம் எதற்கென்று புரிந்தவர், அதுநாள் வரை மனதுக்குள் வைத்திருந்த வன்மத்தைக் கக்கத் தொடங்கினார்.
கடன் கொடுத்தாலும் வாங்கினாலும் பிரச்சனை தான். கொடுத்தால் உறவு தேயும், வாங்கினால் மரியாதை தேயும்.
***
1 comment
Super, Super, Super, Super, Super
😌😌😌
CRVS (or) CRVS 2797