Home Love - Family - Romanceசரி – 11

சரி – 11

கிராமத்தின் நடுவே இருந்த பழைய ஆலமரத்தடி, பல தலைமுறைகளாக அந்த ஊரின் தீர்ப்புகளைச் சுமந்து நின்ற இடம். நீதிமன்றம் இல்லை. காவல் நிலையமும் இல்லை. ஆனால் அந்த ஆலமர நிழலில் சொல்லப்பட்ட வார்த்தைக்கு இன்னும் மதிப்பு இருந்தது. அதனால்தான் காலை முதலே இரண்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், வயதானவர்களும், இளைஞர்களும் அங்கே கூடியிருந்தனர்.

யாருடைய குரலிலும் அமைதி இல்லை.

“அந்த வரப்பை எங்க தாத்தா காலத்துல இருந்தே நாங்கதான் உழுதுட்டு இருக்கோம்…”

“அதுக்கு பட்டா எங்க பேருல இருக்கு… எப்படிடா அது உங்க நிலம் ஆகும்?”

“பட்டா வாங்கிட்டா நிலம் உங்களோட ஆயிடுமா?”

ஒவ்வொருவரும் ஒவ்வொரு உண்மையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த உண்மைகளுக்குள் கோபம் கலந்திருந்ததால், யாரும் யாருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை.

அந்த நேரத்தில், மூர்த்தியின் ஜீப் மெதுவாக வந்து நின்றது.

ஜீப் நின்ற சத்தம் கேட்டவுடன் சில குரல்கள் தானாகவே அடங்கின. அவர் எந்த அதிகார பதவியிலும் இல்லை. ஆனாலும், அவரை மதித்து அமைதியாகும் பழக்கம் அந்த ஊருக்கு பல வருடங்களாக இருந்தது.

மூர்த்தி அவசரப்படாமல் இறங்கி வந்தார். அங்கே இருந்த வயதானவர்களை முதலில் கைகூப்பி வணங்கினார். பிறகு எந்தப் பக்கத்திலும் நிற்காமல், இரண்டு தரப்புக்கும் நடுவே இருந்த கல்லின் மீது அமர்ந்தார்.

“சரி… இப்போ சண்டை போடுறதுக்கு முன்னாடி, என்ன நடந்துச்சுன்னு ஒவ்வொருத்தரும் சொல்லுங்க.”

அவரது குரல் அமைதியாக இருந்தது.

ஆனால் அந்த அமைதிக்குள்ளேயே ஒரு கட்டுப்பாடு இருந்தது.

இரண்டு தரப்பினரும் மாறி மாறிப் பேச ஆரம்பித்தனர். யாரையும் இடைமறிக்காமல், யாரையும் குறை சொல்லாமல், ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் மூர்த்தி.

சில நேரங்களில் அவர் பேசாமல் இருப்பதே, எதிரில் இருப்பவர்களை இன்னும் அதிகமாகப் பேச வைத்தது.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்துதான் அவர் முதல் கேள்வியைக் கேட்டார்.

“இந்த நிலத்துல கடைசியா அளவீடு எப்போ நடந்தது?”

கூட்டம் முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது.

யாரிடமும் பதில் இல்லை.

“பட்டா யாரு பேருல இருக்குன்னு பேசுறீங்க… ஆனா அளவீடு எப்போ நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல.”

அவர் மெதுவாக எழுந்து நின்றார்.

“அப்படின்னா… நாம பேசுறது உண்மையைப் பற்றி இல்ல. யூகத்தைப் பற்றி.”

அந்த ஒரு வாக்கியம்…

அங்கிருந்த கோபத்தின் வேகத்தை கொஞ்சம் குறைத்தது.

அப்போது கூட்டத்தின் பின்புறம் நின்றிருந்த ஒருவன், சற்றே உரக்க,

“அண்ணே… அளவீடு வேண்டாம். அந்த நிலம் எங்களுக்குத்தான் வேணும்…”

என்று சொன்னான்.

அந்த குரலைக் கேட்ட மூர்த்தியின் பார்வை மெதுவாக அவனை நோக்கித் திரும்பியது.

அவன் முகம்…

அந்த ஊருக்குப் புதிது.

ஆனால்…

அவன் பேசிய விதம் மட்டும்,

இந்தப் பிரச்சனைக்கு பின்னால் வேறு யாரோ இருக்கிறார்கள்

என்ற சந்தேகத்தை மூர்த்தியின் மனதில் முதல் முறையாக விதைத்தது.

மூர்த்தியின் பார்வை கூட்டத்தின் பின்புறம் நின்றிருந்த அந்த இளைஞன் மீதே நிலைத்திருந்தது. அவன் முகத்தில் பதற்றம் இல்லை. மாறாக, வேண்டுமென்றே யாரையோ தூண்டிவிடும் அலட்சியமான திமிர் இருந்தது. அந்த ஒரு பார்வையிலேயே, இந்த ஊரின் ஆள் இல்லை என்பதை மூர்த்தி புரிந்து கொண்டார். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“உன் பேரு என்னப்பா?” என்று அமைதியாகக் கேட்டார்.

“அதைத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?” என்றான் அவன், கூட்டம் முழுக்க கேட்கும்படி.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் சில இளைஞர்கள் கோபமாக முன்னே வந்தனர். “டேய்… யார்கிட்ட பேசுறேன்னு தெரியுதா?” என்று ஒருவர் சட்டையைப் பிடிக்க முயன்றார்.

“நிறுத்துங்க…”

மூர்த்தியின் குரல் சத்தமாக இல்லை.

ஆனால் அந்த ஒரு வார்த்தை போதும் என்பதுபோல், முன் சென்றவர்கள் அனைவரும் அப்படியே நின்றுவிட்டனர்.

அவர் மெதுவாக அந்த இளைஞனின் அருகே நடந்துசென்றார்.

“என்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி, மரியாதையா பேசணும்னு நான் எதிர்பார்க்கல. ஆனா இந்த ஊர்ல வயசுக்கு மரியாதை கொடுக்கிற பழக்கம் இன்னும் இருக்கு. அதை கெடுக்காத.”

அந்த வார்த்தைகளில் கோபம் இல்லை.

அதிகாரமும் இல்லை.

ஆனால் பல வருடங்களாக மனிதர்களை கையாண்ட அனுபவத்தின் உறுதி இருந்தது.

அந்த இளைஞன் ஒரு நொடி அமைதியாக நின்றான். பிறகு, “நாங்க கேட்டது எங்க உரிமைதான்…” என்று சற்றுத் தணிந்த குரலில் சொன்னான்.

“உரிமையை கேட்க யாரும் தடுக்கல.”

மூர்த்தி அவன் கண்களை நேராகப் பார்த்தார்.

“ஆனா உண்மையை விட முன்னாடி உரிமையை வைத்துப் பேச ஆரம்பிச்சா… நாளைக்கு உன்னோட உரிமையையும் இன்னொருத்தன் பறிச்சுட்டு போவான்.”

அந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்த வயதானவர்களின் தலையசைப்பைப் பெற்றன.

சிறிது நேரம் அமைதியாக இருந்த மூர்த்தி, தன் சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்தார். யாரோ ஒருவருக்கு அழைத்தார்.

“தாசில்தார் ஆபீஸ்ல Survey Inspector இருக்காரா? நான் மூர்த்தி பேசுறேன்…”

சில நொடிகள் பேசிவிட்டு அழைப்பை முடித்தவர், அனைவரையும் பார்த்தார்.

“யாரும் இந்த நிலத்துக்குள்ள கால்வைக்கக் கூடாது. யாரும் வேலி போடக்கூடாது. Revenue Department வந்து மறுபடியும் அளவீடு பண்ணும். அதுவரைக்கும் இந்த நிலம் அப்படியே இருக்கும்.”

கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு எழுந்தது.

“அண்ணே… அவ்வளவு நாள் காத்திருக்கணுமா?”

“காத்திருக்கணும்.”

மூர்த்தியின் குரல் இம்முறை அழுத்தமாக ஒலித்தது.

“அவசரத்துல எடுத்த முடிவு சண்டையை முடிக்காது. இன்னொரு சண்டையை ஆரம்பிக்கும்.”

அந்த நேரத்தில் கூட்டத்தின் ஓரத்தில் நின்றிருந்த முதியவர் ஒருவர் எழுந்து வந்தார்.

“மூர்த்தி… நீ சொல்ற முடிவுக்கு நாங்க கட்டுப்படுறோம்.”

அவர் சொன்ன அந்த ஒரு வாக்கியம், மற்றவர்களையும் அமைதிப்படுத்தியது.

மூர்த்தி பெருமூச்சு விட்டார்.

ஒரு பிரச்சனை முடிந்தது என்று நினைத்தார்.

ஆனால்…

கூட்டம் கலைந்து கொண்டிருந்தபோது, அந்தப் புதுமுக இளைஞன் சற்று விலகி நின்று யாருக்கோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“சார்… முதல் திட்டம் வேலை ஆகல…”

அவன் குரல் மிகவும் மெலிதாக இருந்தது.

“…ஆனா கவலைப்படாதீங்க. அடுத்த நகர்வு ரெடியா இருக்கு.”

அவன் யாரிடம் பேசுகிறான்?

எதைப் பற்றிப் பேசுகிறான்?

அது மூர்த்திக்குத் தெரியவில்லை.

ஆனால்…

அவருக்குத் தெரியாமல்,

அவருடைய குடும்பத்தை நோக்கி நகர்ந்த முதல் நிழல்…

அந்த நொடியிலேயே தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.

மதியம் ஒரு மணியை நெருங்கியிருந்தது.

ஈரோடு நகரின் பரபரப்பு அந்த நேரத்திலும் குறையவில்லை. அலுவலக நேரம் என்பதால் சாலைகள் முழுவதும் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. அந்த நெரிசலைக் கடந்து வேந்தனின் கார் மாவட்ட வருவாய் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது.

காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், நேராக கட்டிடத்திற்குள் செல்லவில்லை. சில நொடிகள் அங்கே நின்று சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். அரசு அலுவலகங்களுக்கே உரிய அந்த அவசரமில்லாத பரபரப்பு… கோப்புகளைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்த சிலர்… வரிசையில் நின்ற பொதுமக்கள்… எதுவும் அவனுக்குப் புதிதல்ல.

கையில் இருந்த கோப்பை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவன், நேராக தாசில்தார் அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

“சார் இன்னும் meeting-ல இருக்காங்க…” என்று உதவியாளர் கூறியதும், “பரவாயில்லை… நான் wait பண்றேன்…” என்று அமைதியாக அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

காத்திருப்பது அவனுக்குப் பிடிக்காது.

ஆனால் அவசரப்பட்டு ஒரு கதவையும் தட்டிப் பார்த்ததில்லை.

சில நிமிடங்களில் கதவு திறந்து தாசில்தார் வெளியே வந்தார்.

“அட… வேந்தன்! எப்ப வந்தீங்க?”

“இப்போதான் சார்.”

இருவரும் உள்ளே சென்றனர்.

“உங்க Township Project file பற்றி தான் வந்திருக்கீங்கனு நினைக்கிறேன்.”

வேந்தன் சிரித்தான்.

“அதைத் தவிர வேற காரணமே இல்லை.”

தாசில்தார் மேசையில் இருந்த கோப்பை எடுத்துப் புரட்டினார்.

“உங்க Project-க்கு என்னால எந்த objection-மும் இல்லை. Documents-ம் clear. ஆனா…”

அந்த ‘ஆனா’ என்ற ஒரு வார்த்தை, வேந்தனின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்தது.

“ஒரு anonymous petition வந்திருக்கு.”

“என்ன petition?”

“அந்த Survey Number-ல இருக்குற நிலம் விவசாய பயன்பாட்டுக்கானது. சட்டவிரோதமா layout போடுறாங்கன்னு.”

வேந்தன் கோப்பை வாங்கிப் பார்த்தான்.

ஒவ்வொரு வரியையும் அமைதியாக வாசித்தான்.

வாசித்து முடித்ததும், கோப்பை மூடி மேசையின் மேல் வைத்தான்.

“இந்த petition-ல ஒரு document கூட attach பண்ணல.”

“அதுதான்…”

“அப்புறம்?”

“ஆனா enquiry நடத்தாம file clear பண்ணவும் முடியாது.”

அறைக்குள் சில நொடிகள் அமைதி நிலவியது.

பிறகு வேந்தன் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

“சரி சார்.”

அவ்வளவுதான்.

அவன் கோபப்படவில்லை.

யாரிடமும் சண்டை போடவில்லை.

“எவ்வளவு நாள் ஆகும்?”

“மூணு… அதிகபட்சம் நாலு நாள்.”

“Thank you.”

என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

அவனுடன் வந்திருந்த ராஜாவுக்குத்தான் கோபம் அடங்கவில்லை.

“சார்… இது வேண்டும்னே யாரோ பண்ற வேலை. ஒரு complaint வந்துச்சுன்னு இப்படியே file நிறுத்திட்டா நம்ம project delay ஆயிடுமே.”

வேந்தன் காரின் கதவைத் திறந்தபடியே நின்றான்.

“Delay ஆயிடும்.”

“அப்புறம்?”

“உண்மை நம்ம பக்கம் இருந்தா…”

அவன் மெதுவாக ராஜாவைப் பார்த்தான்.

“…அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லை.”

ராஜா எதுவும் பேசவில்லை.

காரில் ஏறிய வேந்தன், எஞ்சினை ஸ்டார்ட் செய்யப் போகும் நேரத்தில் அவன் அலைபேசி ஒலித்தது.

திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும், அவன் முகத்தில் இருந்த அமைதி சற்றே மாறியது.

“அப்பா…”

அழைப்பை எடுத்தவன்,

“சொல்லுங்கப்பா…”

என்றான்.

மறுமுனையில் மூர்த்தியின் குரல் வழக்கத்தைவிட மிகவும் அமைதியாக இருந்தது.

“வேந்தா… நீ எங்க இருக்க?”

“Revenue Office-லப்பா.”

“வேலை முடிஞ்சதும்… நேரா வீட்டுக்கு வந்துடு.”

“ஏன்? என்னாச்சு?”

சில நொடிகள் அமைதி.

பிறகு…

“நம்ம குடும்பத்தைப் பற்றி…

யாரோ விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க.”

வேந்தனின் கை…

ஸ்டீயரிங்கின் மீது தானாகவே இறுகியது.

மாலைச் சூரியன் மேற்கே சாய்ந்து கொண்டிருந்தான். வீட்டின் முன் இருந்த வேப்பமர நிழல் மெதுவாக நீண்டு திண்ணை வரை வந்து படர்ந்திருந்தது. வீட்டுக்குள் வழக்கமான சத்தங்கள் கேட்டாலும், அந்த மாலையில் ஏதோ ஒரு சோர்வு எல்லோருடைய மனதிலும் ஒட்டியிருந்தது.

வாசலில் கார் நின்ற சத்தம் கேட்டதும், சமையலறையில் காபி வடித்துக் கொண்டிருந்த ஆதினி தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தாள். சில நாட்களாக அவளுக்கு இது பழக்கமாகிவிட்டது. அவன் எப்போது வருகிறான், எப்போது கிளம்புகிறான் என்று கவனிக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்யவில்லை. ஆனால் மனம் தானாகவே அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தது.

வேந்தன் மெதுவாக உள்ளே வந்தான். நாள் முழுவதும் வெளியில் அலைந்த களைப்பு முகத்தில் தெரிந்தாலும், அதை வெளிக்காட்டும் பழக்கம் அவனுக்கு இல்லை. வாசலில் இருந்த செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தவன், வழக்கம்போல் முதலில் சுமதியின் புகைப்படத்தைப் பார்த்தான். ஒரு கணம் அப்படியே நின்று விட்டு, திண்ணையில் அமர்ந்திருந்த மூர்த்தியை நோக்கி நடந்தான்.

அவர் கையில் தேநீர் இருந்தது. ஆனால் குடிக்கவில்லை. வெறுமனே கோப்பையை கையில் பிடித்தபடியே தெருவை பார்த்துக் கொண்டிருந்தார்.

“வந்துட்டியா…”

அவ்வளவுதான் கேட்டார்.

“ம்…”

வேந்தனும் அருகில் அமர்ந்தான்.

இருவருக்கும் நடுவே அமைதி இருந்தது. ஆனால் அது முன்பைப் போல அந்நியமான அமைதி இல்லை. பேச வேண்டிய விஷயம் இருந்தும், எந்த வார்த்தையில் ஆரம்பிப்பது என்று தெரியாத அமைதி.

உள்ளே இருந்து அந்தக் காட்சியைப் பார்த்த ஆதினி,  காபி கோப்பையை எடுத்துக் கொண்டு வந்தாள். எதுவும் பேசாமல் இருவரின் முன்பும் வைத்துவிட்டு திரும்பப் போக நினைத்தாள்.

“ஆதிம்மா…”

மூர்த்தி அழைத்தார்.

அவள் திரும்பிப் பார்த்தாள்.

“நீயும் உட்காரும்மா.”

அவள் ஒரு நொடி தயங்கினாள். பிறகு திண்ணையின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் யாருமே பேசவில்லை.

பிறகு மூர்த்திதான் மெதுவாக ஆரம்பித்தார்.

“வேந்தா… இன்னைக்கு நடந்தது நிலத் தகராறுன்னு மட்டும் நான் நினைக்கல.”

வேந்தன் அமைதியாக அவரைப் பார்த்தான்.

“நம்ம Township போடப் போற நிலமும்… இன்னைக்கு சண்டை நடந்த இடமும்… ஒரே எல்லையில இருக்கு.”

அவன் புருவம் சற்றே சுருங்கியது.

“அதனால?”

“அதனாலதான் யோசிக்கிறேன்.”

மூர்த்தி காபியை கீழே வைத்தார்.

“அந்த நிலத்துக்காக இதுக்கு முன்னாடியும் நிறைய பேர் வந்திருக்காங்க. விலை கொடுத்து வாங்க முயற்சி பண்ணாங்க. சில பேரு மிரட்டியும் பார்த்தாங்க. ஆனா அந்த ஊர்க்காரங்க விற்கல.”

வேந்தன் எதுவும் பேசவில்லை.

“இப்போ திடீர்னு சண்டை ஆரம்பிச்சிருக்கு.”

அவரது குரலில் கவலை இல்லை.

அனுபவம் மட்டும் இருந்தது.

“யாரோ நிலத்தைப் பார்க்குறாங்கன்னு எனக்கு தோணுது.”

வேந்தன் மெதுவாக மூச்சை இழுத்தான்.

Revenue Office-ல் கிடைத்த தகவலும்…

இப்போது அப்பா சொல்வதும்…

இரண்டுக்கும் நடுவே ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல இருந்தது.

“நான் நாளைக்கு அந்த Survey Records எல்லாம் ஒரு தடவை பார்க்கிறேன்.” என்று அமைதியாகச் சொன்னான்.

மூர்த்தி உடனே மறுத்தார்.

“அவசரப்படாத.”

வேந்தன் நிமிர்ந்து பார்த்தான்.

“உண்மை நம்ம பக்கம் இருந்தா… அவசரம் நமக்குத் தேவையில்லை.” அந்த வார்த்தையைக் கேட்ட வேந்தனின் உதட்டில், யாரும் கவனிக்க முடியாத அளவுக்கு ஒரு சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.

அதே வார்த்தையை… இன்று மதியம் Revenue Office-ல இருந்து வெளியே வரும்போது ராஜாவிடம் சொன்னது அவன்தான்.

இப்போது… அதே எண்ணத்தை அவன் அப்பாவின் வாயிலிருந்து கேட்கிறான்.

அந்த நொடி…

கருத்து வேறுபட்டாலும்…

தான் நடக்கும் பாதையும், தன் அப்பா நடந்த பாதையும் ஒன்றுதான் என்ற உணர்வு, வேந்தனின் மனதில் முதல் முறையாக அமைதியாக வேரூன்றத் தொடங்கியது.

திண்ணையின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஆதினி, அந்த மாற்றத்தை வார்த்தைகளால் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால்…

இரண்டு மனிதர்களுக்கு இடையில் பல வருடங்களாக நின்றிருந்த சுவர்…

இன்று ஒரு சிறிய விரிசலை வாங்கியிருப்பதை மட்டும் தெளிவாக உணர்ந்தாள்.

அந்த விரிசல்…

ஒருநாள் ஒரு கதவாக மாறுமா?

அல்லது மீண்டும் மூடிக் கொள்ளுமா?

அதற்கான பதிலை…

காலம்தான் சொல்ல வேண்டும்.

You may also like

1 comment

M. Sarathi Rio July 26, 2026 - 6:50 pm

அப்பா, பிள்ளை ரெண்டு பேருமே உரிமையை விட உண்மைக்குத்தான் முதலிடம் கொடுக்கிறாங்க, அப்படி உண்மைக்கு முதலிடம் கொடுக்கிறவங்க, தங்களோட குடும்பத்தைப் பற்றி யாரோ விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சதுமே, ஏன் டென்சன் ஆகணும்?

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured