தூரம் 20
சுப்பு தன் வீட்டில் திருமண பேச்சை எடுத்ததுமே இளங்கோ உறுதியாக சொல்லிவிட்டான், பூங்கொடியைத்தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று. அது சுப்புவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ஏற்கனவே தன் அப்பத்தாவிடம் கொடி படிப்பை முடித்ததும் பெண் கேளுங்கள் என சொல்லிருந்தான் இளங்கோ. அவரும் தக்க சமயம் வரட்டும் என காத்திருக்க, சுப்புவோ மகனுக்கு நிச்சயம் வரை யோசித்துவிட்டார்.
அப்போது இளங்கோ திண்டுக்கல் ரயில்வேயில் ட்ரெயினியாக இருந்தான். வார விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வரமுடியும். அதனால் வீட்டில் நடக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் அவனுக்கு தெரியாமலே போனது. முக்கியமாக தன் தாயைப்பற்றி.
வார இறுதியில் வீட்டிற்கு வந்தவனிடம் சுப்பு மீண்டும் திருமண பேச்சை எடுக்க, கொடியைத் தவிர வேறு யாரையும் பார்க்க வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டான் இளங்கோ.
ஆனாலும் சுப்பு அதை கேட்பதாக இல்லை. நேராக போடிக்கு சென்று தேவியின் வீட்டில் பிரச்சனை செய்ய, அப்போதுதான் அவர்களுக்குமே இளங்கோ, கொடியை விரும்பும் செய்தியே தெரியும்.
அப்போது கொடி பன்னிரண்டாம் வகுப்பில் இருந்தாள். படிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க அவர்களுக்கும் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் சுப்புவின் இந்த பேயாட்டத்தில் எரிச்சலான சங்கர், அவரின் சொந்தத்தில் அவசரமாக மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.
அதை பேச்சியிடம் கூற ஊருக்கு வந்த தேவியிடம், ‘என் மகனை மயக்கிட்டா உன் பொண்ணு.’ என மீண்டும் சண்டையிட, கந்தவேலுவும் பேச்சியும் சுப்புவை ஒருவழி செய்துவிட்டனர்.
“என் பொண்ணை பேச நீ யாரு? உனக்கு பொண்ணெடுக்க விருப்பமில்லன்னா உன் பையனத்தான் நீ கண்டிக்கணும். அதைவிட்டுட்டு இன்னொரு வீட்டுக்கு போன பொண்ணை பேசுவியா? அதெப்படி இந்த வீட்டுல பெரிய மனுஷியா நான் உயிரோட இருக்கும் போது, என்னை கேட்காம நீ என் பேரனுக்கு பொண்ணு பார்ப்ப? டேய் கந்தா, இதுதான் நீ பெத்தவளுக்கும் கூட பொறந்தவளுக்கும் தர மரியாதையா?” என மருமகளிடம் ஆரம்பித்து மகனிடம் முடிக்க,
“ஆத்தா கொஞ்சம் அமைதியா இரு, நான் என்னன்னு விசாரிக்கிறேன்.” என்ற கந்தவேலு மனைவியிடம்,
“ஏன்டி பெத்த அப்பன் நான் இன்னும் முழுசாதானே இருக்கேன் உன் முன்னாடி. இல்ல செத்துகித்து போயிட்டேனா? என் பையனுக்கு கல்யாணம் பேசுற, எங்ககிட்ட எதுவும் கேட்காம உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்க. அப்போ இந்த வீட்டுல நானும் எங்கம்மாவும் யாரு, சொல்லுடி…” என காட்டமாக கேட்க,
“என் பையனுக்கு பொண்ணு பார்க்க நான் யாரை கேட்கணும்? என் அண்ணன் பொண்ணுதான் எனக்கு மருமவளா வரணும். வேற யார் வந்தாலும் நான் மனுஷியா இருக்கமாட்டேன். என் பையனை எப்படி சமாதானம் செய்யணும்னு எனக்குத் தெரியும்.” என மேலும் மேலும் வார்த்தைகளை விட,
பொறுத்து பார்த்த பேச்சி, சுப்புவின் பிறந்த வீட்டினரை வரச்சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்.
“அத்தை, பெரியவங்க நீங்க எதுக்கு வர சொல்லி இருக்கீங்கனு எங்களுக்கு எதுவும் புரியல.” என தன்மையாக பேச்சை ஆரம்பித்தார் சுப்புவின் பெரிய அண்ணன்.
“இந்த வயசுக்கு மேல உன் தங்கச்சியை வைத்து பஞ்சாயத்து பண்றதுல எனக்கும் விருப்பம் இல்லை. ஆனா அவ பண்றது ஒன்னும் சரியில்லை. என் பேரனுக்கு பொண்ணு பாக்குறா, என் பையனுக்கு, எனக்கு எதுவும் சொல்லாமல். அவ இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு இருந்தா அப்ப இந்த வீட்ல நானும் என் பையனும் யாரு? அவ உன் பொண்ண கேட்டு வந்து இருக்கா, நீ ஏன் எங்ககிட்ட எதையும் சொல்லலை? அப்போ உனக்கு உன் தங்கச்சிதான் முக்கியம், நாங்கயில்ல. எங்க மேல இருக்கிற மரியாதை முக்கியம் இல்ல, அப்படித்தானே?” என பேச்சி பிடிபிடி என பிடிக்க,
“அத்தை உங்களுக்கு தெரியாம சுப்பு செய்யமாட்டானு நினைச்சுதான், நாங்க சரின்னு சொன்னோம். உங்களுக்கும் மாப்பிள்ளைக்கும் தெரியாதுனு எனக்கு தெரியாது அத்தை.” என தன்மையாகவே பதில் சொன்னார் சுப்புவின் அண்ணன்.
“ஏன்யா, உன் வீட்டுல பணம், காசு கொட்டி கிடக்குதுன்னா நாங்க பொண்ணு எடுத்தோம்? எதோ எங்க குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துப்பா, என் பிள்ளைகளை அனுசரிச்சு போவானு நெனச்சு பொண்ணு எடுத்தா, அவ என் பொண்ணை மதிக்காம அவ கட்டுன வீட்ல போயி அசிங்கமா பேசிட்டு வந்து இருக்கா. நாளைக்கு அந்த இடத்துல என் பொண்ணு எப்படி வாழுவா? இதே மாதிரி உன் சம்சாரம் உன் தங்கச்சி வீட்டில் வந்து பேசியிருந்தா நீ என்ன செஞ்சிருப்ப?” என்றார் விடாமல்.
அதைக்கேட்ட அங்கிருந்த சுப்புவின் அண்ணன்கள் இருவராலும் எதுவும் பேச முடியவில்லை, தங்கையை தான் முறைத்துக் கொண்டிருந்தனர்.
“மச்சான், நீங்க எங்களை தப்பா நினைச்சுக்கக் கூடாது. இளங்கோவுக்கு என் அக்கா பொண்ணு கொடிதான் விருப்பம். அவளைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன்னு உன் தங்கச்சிகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கான். அப்படி சொல்லியும் கேட்காம உங்ககிட்ட வந்து பேசி இருக்கானா, இவளை என்ன செய்ய? நீங்களே இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு போயிருங்க.
எந்த நேரமும் வீட்ல சண்டை கட்டிக்கிட்டு, வீடு வீடாகவே இல்ல.” என கந்தவேலு தன் மச்சான்களிடம் கூறிவிட, சுப்புவிற்கு கோபம் கூடியதே தவிர குறையவில்லை.
சுப்புவின் அண்ணன்களை விட அண்ணிகளுக்கே பெண் கொடுக்க மிகவும் விருப்பம். இரு வீட்டிலும் இரு பெண்கள் இருக்க, இளங்கோவையும் வெங்கடேஷையும் எப்படியும் முடித்துவிட வேண்டும் என்றே நினைத்திருந்தனர்.
அதனாலே சுப்பு ஊருக்கு வரும்போதெல்லாம் தேனாக பேசி தங்கள் ஆசையை வெளிக்காட்டியிருந்தனர். இப்போது இளங்கோ இல்லை என்றான பிறகு மிகவும் வருத்தமே. பேச்சி இல்லையென்றாலும் கூட எப்படியாவது கந்தவேலை சமாளித்திருப்பார்கள். ஆனால் பேச்சி, பேசக்கூட இடம் கொடுக்கவில்லையே.
அமைதியாக சென்றுவிட்டனர்.
அன்றைக்கு பிறகு திருமணத்தைப் பற்றி சுப்பு எதுவும் பேசவில்லை. அந்த வார இறுதியில் வீட்டிற்கு வந்த இளங்கோவிடம் சந்திராவும் பேச்சியும் நடந்ததைக் கூற, தாயிடம் சென்று எதையும் கேட்கவில்லை அவன்.
அடுத்த நாள் காலையில் நேராக கிளம்பி தன் அத்தை வீட்டுக்கு சென்றவன் தேவியிடம், “அத்தை எனக்கு கொடி மேல விருப்பம். அவ படிச்சு முடிக்கட்டும்னுதான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ இவ்வளவு பிரச்சனை வந்ததுக்கு அப்புறம், உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியாது. அதனால தான் வந்து சொல்றேன். கொடியை என்னைத்தவிர வேற யாருக்கும் கொடுக்கக் கூடாது. அவ படிப்பு முடிக்கட்டும். எனக்கும் ட்ரைனிங் முடியுது.
முடிஞ்சதும் போஸ்டிங் போட்டுருவாங்க. அதுக்கு பிறகு கல்யாணத்தை பத்தி பேசலாம். நீங்க அவசரப்பட்டு மாமா பேச்சைக் கேட்டு வேற எங்கேயும் கொடியை நிச்சயம் பண்ணிடக்கூடாது.” என்றவன்,
தன் மாமனிடம் திரும்பி, “மாமா, அம்மா என்ன பேசி இருந்தாலும் அதை மனசுல வச்சுக்காதீங்க. அம்மாவுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். இந்த வாழ்க்கையில எனக்கு கொடி மட்டும்தான் மனைவி. வேற யாரும் இல்லை. கொடியில்லாமல் என் வாழ்க்கையும் இல்லை. இதுக்கு மேல என்ன சொல்லணும்னு எனக்கும் தெரியல. அம்மா கோபம் குறைந்து அவங்களே வந்து பொண்ணு கேட்பாங்க. அப்படி கேட்கும் போது மட்டும் இல்லன்னு சொல்லிடாதீங்க.” என்றவன்,
அங்கு அதிர்ந்து நின்றிருந்த கொடியைப் பார்த்து, “இது எதையும் யோசிக்காம நல்லா படிக்கணும், சரியா?” என்று மட்டும் அவளிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.
“கொடி நீ உள்ள போ.” என்ற தேவி, “என்னங்க, தம்பி இப்படி பேசிட்டு போறான்?” என வருத்தமாக தன் கணவனிடம் கூற,
“விடு தேவிமா, அதுதான் உன் மருமகன் சொல்லிட்டு போறானே, அவங்க அம்மாவே வந்து பொண்ணு கேட்பாங்கன்னு. அவங்க வந்து கேட்கட்டும், கேட்ட பிறகு பாத்துக்கலாம். அதுவரைக்கும் கொடிமா படிக்கட்டும்.” என சங்கர் மனைவியைத் தேற்றி தன்னையும் தேற்றிக்கொண்டார்.
மறக்காமல் தன் மற்ற மகள், மருமகன்களிடமும் சொல்லிவிட்டார். ஆனந்திக்கு இது ஆச்சரியம் தான். ஆனால் அமுதாவிற்கு அப்படியில்லை. இளங்கோ இப்படித்தான் ஒருநாள் வந்து நிற்பான் என்று முன்னமே அறிந்திருந்தாள்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட புரியவில்லை கொடிக்கு.
இளங்கோவை அவளுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்றெல்லாம் தெரியாது. பிடிக்கும் வகையறாக்குள் இன்னும் வரவில்லை அவன்.
இளங்கோவின் அம்மாவை அவளுக்கு பிடிக்காது. சிறுவயதிலிருந்தே தங்கள் மூன்று பேரையும் பார்த்தாலே முகத்தை திருப்புவார் சுப்பு.
ஆனந்தியும் கொடியும் அமைதியாக போனாலும், அமுதா வெடுக்கென்று பேசி விடுவாள். அதையும் சொல்லிக் காட்டி பேசுவார் சுப்பு. அதனால் சுப்புவிடமிருந்து எப்போதுமே தூரமாக தான் இருப்பாள் கொடி. இப்போது இளங்கோ பேசிச் சென்றது வேறு அவள் மனதை வெகுவாக அழுத்தியது.
அங்கிருந்து நேராக ஊருக்கு வந்தவன் நேராக சந்திராவின் வீட்டிற்கு சென்று விட்டான். அப்போதுதான் நடேசனுக்கு இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான கடிதம் வந்திருக்க, நடேசனை மதுரையில் ரயில் ஏற்றிவிட்டு வருவதாக சென்ற இளங்கோ திரும்பி வரவே இல்ல.
மூன்று நாட்கள் கழித்து தானும் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக, தன் வீட்டிற்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தான்.
அதைப் பார்த்ததும் பேச்சி மருமகளை, “உனக்கு இப்ப நிம்மதியா? என் பேரனுங்க ரெண்டு பேரையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே… நடேசனையே நான் போகக்கூடாதுனு சொன்னேன், இப்ப இவனும் போயிட்டான். நீ இதைத்தானே எதிர்பார்த்த… ஒரு மகனோட வாழ்க்கையையே கெடுத்துட்டியே… நீ எல்லாம் என்ன அம்மா?” என கண்டபடி திட்டியவர், சந்திராவையும் விட்டு வைக்கவில்லை.
முன்னமே நடேசனை ராணுவத்திற்கு அனுப்பக் கூடாது என்று தான் சொல்லியிருந்தார் பேச்சி. நடேசன் அதையெல்லாம் காதில் வாங்கியதாக இல்லை. அப்போதே, அனைவரையும் இளங்கோதான் சமாதானம் செய்திருந்தான். இப்போது அவனும் கூடவே போய்விட ஓய்ந்து போய்விட்டார் பேச்சி.
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் சுப்புவிற்கு நரகம்தான். எந்த நேரமும் பேச்சி திட்டிக்கொண்டே இருக்க, கந்தவேலு மனைவியிடம் பேசுவதே இல்லை. இதில் இவர்களிடம் வசமாக சிக்கியது வெங்கடேஷ்தான். எல்லா பக்கமும் அவனை ரவுண்ட் கட்டினர்.
ஒரு வழியாக சுப்பு இறங்கி வந்தார். இறங்கி வர வைத்திருந்தான் இளங்கோ.
ஆறு மாதங்கள் கழித்து, சரியாக சொல்ல வேண்டுமென்றால் கொடியின் பரிட்சை முடியவும் வீடு வந்தான் இளங்கோ. அவனிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை சுப்பு தானாகவே சென்று தேவி, சங்கர் தம்பதியிடம் கொடியை பெண் கேட்டார்.
முதலில் யோசித்தாலும் இளங்கோ அன்று சொல்லிச் சென்றதை நினைத்த சங்கர் சரியென்றுவிட்டார்.
ஒரு மாதம் தான் விடுமுறை, மீண்டும் போக வேண்டும் என்றதும், முதலில் திருமணத்தை முடிக்கலாம். அதன்பிறகு மெதுவாக சொல்லி, வேலையை விட வைக்கலாம் என்று வீட்டில் உள்ள அனைவரும் நினைக்க, கொடிக்கோ சுப்புவை நினைத்து பெரும்பயம் மனதிற்குள்.
வழக்கம் போல அதை யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளே மருகிக் கொண்டிருக்க, அன்று அமுதாவும் ஆனந்தியும் தங்கையைப் பார்க்க வீட்டுக்கு வந்தனர்.
கொடியின் சோர்ந்த முகம் அவர்களுக்கு எதனால் என புரிய, “கொடி வா, நாம பக்கத்துல கோவிலுக்கு போயிட்டு வரலாம்.” என பெற்றவர்களிடம் சொல்லி வெளியில் அழைத்து வந்தனர்.
முதலில் கோவில் சென்று வணங்கியவர்கள், பின் பக்கத்தில் உள்ள ஒரு பேக்கரிக்குள் நுழைய, எதுவும் பேசாமல் அவளும் வந்தாள்.
அங்கு கணேசனும் நடராஜும் இருக்க அவர்களைப் பார்த்ததும் முகம் மலர புன்னகை விரிந்தது.
“ஹேய்! இங்க என்ன பண்றீங்க? பிள்ளைங்கள வீட்டுல விட்டுட்டு ஒரே ஜாலிதானா? இருங்க, நிவிக்கிட்ட உங்களை மாட்டிவிடுகிறேன்.” என அவர்களைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தவளை பதில் பேசாமல் நால்வரும் பார்க்க, இப்போது குழப்பமாகிவிட்டாள் கொடி.
அவர்கள் பார்வையில், “என்ன மாமா…” என தடுமாறியபடியே சிரிக்க, குழப்பத்துடன் இருந்தவளின் அருகில் யாரோ அமர்வது போல தெரிய, சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கே இளங்கோவைக் கண்டதும் அதிர்ச்சியில் வேகமாக எழுந்து நின்றுவிட்டாள்.
முகமெல்லாம் வியர்த்தபடியே எல்லோரையும் பாவமாக பார்க்க, அவள் கையைப் பிடித்து சாவகாசமாக தன்னருகில் அமர வைத்துக்கொண்ட இளங்கோ, “என்ன அண்ணி, இவ இப்படி இருக்கா?” என அமுதாவிடம் கேட்க,
“இதுதான் அழகுல மயங்குறது இளா…” என கணேசன் கிண்டலடிக்க,
“மயங்கினா விழணுமே, ஆனா கொடி அப்படியே இருக்காளே… அப்போ இளா இன்னும் மயக்க ஆரம்பிக்கலன்னு சொல்லு.” என நடராஜும் ஆரம்பிக்க,
“மூனு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க. ஏற்கனவே பயந்து போய் இருக்கானுதான் கூப்பிட்டு வந்தேன். இப்போ நீங்க பேசுறத பார்த்தா எழுந்து ஓடியே போவா போல…” என அமுதா மூவரையும் அடக்கி,
“கொடிமா என்ன பயம் உனக்கு? தெளிவா சொல்லு, கண்டிப்பா இளா சரி செய்வான்.” என எடுத்துக் கொடுக்க, அவளுக்கு எங்கே பேச்சு வந்தது.
இளங்கோவின் கைப்பிடிக்குள் இருக்கும் தன் கையைப் பார்த்தவளுக்கு வெறும் காத்துதான் வருது மொமண்ட்.
என்ன இவள் என்று நினைக்கும் காதலானாய் இருப்பதை விட, என்னவள் என்று நம்பும் கணவனாக மாற்றுவாயே உன் காதல் மொழியால்! காற்றை விரட்டி காதலோடும் பேசலாமே!
***
1 comment
Super, suprr, super, super, super
😌😌😌
CRVS (or) CRVS 2797