Home Antiheroதூரம் – 22

தூரம் – 22

by Vathani S

தூரம் 22

அப்போதுதான் குழந்தையைக் குளிக்க வைத்து தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் கொடி.

உள்ளே வந்த மருமகனைப் பார்த்ததும், “வா தம்பி!” என்ற தேவிக்கு மகிழ்ச்சியில், “பாப்பாவை இப்பதான் குளிக்க வச்சோம், கொடி பால் கொடுத்து தூங்க வச்சுட்டு இருக்கா.” என்றதும்,

“சரி அத்தை, நான் போய் பார்க்கிறேன்.” என்றவன் அடுத்து அவர் பேசும் முன் அறைக்குள் நுழைந்துவிட்டான்.

எப்போதும் வாசலைப் பார்த்து அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுக்கக்கூடாது என தேவி கூறியிருக்க, அறையின் வாசலுக்கு முதுகு காட்டி அமர்ந்தபடி குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தாள் கொடி.

அவன் வந்ததை இன்னும் அறியவில்லை அவள். இளங்கோவும் இருவரையும் தொல்லை செய்ய வேண்டாமே என மீண்டும் ஹாலில் வந்து அமர்ந்துவிட,

அதை கவனித்த தேவி, “தம்பி, பாப்பா பால் குடிக்கட்டும். இப்ப நீ போனா உன் பொண்டாட்டி உன்ன பாத்துட்டு பிள்ளைய பாக்காம விட்டுடுவா. பாப்பா பால் குடிச்சி முடிச்சா அவளே சத்தம் போடுவா, அப்போ உள்ள போய்க்கலாம். நான் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்றவர் சமையல் அறைக்குள் நுழைய, இளங்கோ அவர் சொன்னதை நினைத்து சிரித்துக் கொண்டான்.

அவன் வரும்போது இருந்த மனநிலை இப்போது இல்லை. மனைவியையும் குழந்தையையும் உடனே பார்க்க வேண்டும் போல் உள்ளுக்குள் பேரவா தோன்றியது.

மோர் எடுத்து வந்து இளங்கோவிடம் கொடுத்தவர், “தம்பி சாப்பாடு எல்லாம் ரெடி ஆயிடுச்சு. நீங்க போய் முகம், கை, கால் கழுவிட்டு வந்துடுங்க. நீங்களும் கொடியும் ஒன்னா சாப்பிடுவீங்களாம்.” என்றதும் அவனாலும் மறுக்க முடியவில்லை.

மனைவியையும் குழந்தையையும் பார்த்து விட்டால் அதன்பிறகு அவனை அவர்களிடமிருந்து எதற்கும் அசைக்க முடியாது. அதனால் எல்லா வேலையையும் முடித்துவிட்டு சென்றுவிடலாம் என்று எண்ணியவனாய், அவனும் பின்பக்கம் இருக்கும் குளியலறைக்கு சென்று விட்டான்.

இளங்கோ அங்கிருந்து நகர்ந்த நொடி, வேகமாக மகளின் அறைக்குள் சென்ற தேவி, “கண்ணு, தம்பி வந்திருக்கு… சீக்கிரம் பாப்பாவுக்கு பால் கொடுத்து முடிச்சிட்டு வெளிய வா. ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்துருவீங்களாம். அப்புறம் உங்க அத்தையப்பத்தி எதுவும் தம்பிக்கிட்ட சொல்லாத. ஊர்ல இருந்து உன்னைய பார்க்க வந்திருக்கு. இதெல்லாம் தெரிஞ்சா மனசு ரொம்ப வருத்தப்படும்.” என மகளுக்கும் சொல்லி அதே வேகத்துடன் வெளியேறினார் தேவி.

கணவன் வந்துவிட்டான் என்பதே பெரும்பலம் போல் தோன்றியது கொடிக்கு. அவனில்லாத நாட்கள் பாலைவனத்தில் தவம் கிடந்தது போலிருந்தது.

ஏனென்றே தெரியாமல் விழிகளில் நீர் வடியத் தொடங்கியது. அதற்கு மாறாக முகம் மலர்ந்து விகசித்தது.

குழந்தைக்கு தட்டிக் கொடுத்து உறங்க வைத்தவள் தேவியை அழைக்க, அவரும் வந்து குழந்தையை அள்ளி தொட்டிலில் கிடத்திவிட்டு நகர, உள்ளே வந்தான் இளங்கோ.

அவனைப் பார்த்ததும், “மாமா!” என கண்களை விரிக்க, வேகமாக வந்து அப்படியே அணைத்துக் கொண்டான்.

இருவருக்கும் பேச்சே இல்லை. தன் கண்ணீரால் கணவனின் மார்பை நனைத்தவளை, முதுகை வருடி ஆறுதல் படுத்திய இளங்கோவின் விழிகளும் ஈரத்தில் பளபளத்தது.

“பூம்மா… பூம்மா…” என நெடுநேரம் வரை அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தவன், மனைவி சற்று தேறிக்கொண்டாள் என்றான பிறகே அவளை விடுத்து மகளிடம் சென்றான்.

மகளைப் பார்த்த இளங்கோவிற்கு அதிர்ச்சிதான். அப்போது வீடியோ கால் வசதியெல்லாம் இல்லையே. சுப்புவையே உரித்து வைத்து பிறந்திருந்தாள் மகள்.

“என்னடி…” என அதிர்ச்சியும் ஆச்சரியமும் உண்டான குரலில் அவன் கேட்க, சத்தமாக சிரித்துவிட்டாள் கொடி.

“என்ன மாமா?” என சிரித்தபடியே கேட்டவள், “உங்க அம்மாவையே நினைச்சிட்டு இருந்தேன்ல, அதுதான் அப்படியே பிறந்திருக்கா.” என என்னவென்று உணரமுடியாத குரலில் கூறி முகத்தைக் குனிந்து கொள்ள, அப்படியே தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

உண்மைதானே! தினம் தினம் அவரையே நினைக்கும்படி ஒரு பிரச்சனையை கிளப்பிக்கொண்டு தானே இருந்தார்.

அதை உணர்ந்தவன், “நான் வந்துட்டேன்ல, இனி நான் பார்த்துக்குறேன். இதுவரை என்ன நடந்தாலும் சாரி…” என பேசி மனைவியை சமாதானம் செய்ய,

“ஸாரி மாமா… நான் இதெல்லாம் சொல்லக் கூடாதுனு தான் நினைச்சேன்…” என அவன் நெஞ்சில் சாய்ந்து அப்படியொரு அழுகை.

யார் யாரைத் தேற்ற முடியும்? தன் நெஞ்சிலிருந்து மனைவியின் முகத்தை நிமிர்த்தினான். அவள் கண்ணில் கரை காணாத நேசம் கண்ணீராக வழிந்தது.

அதைத் துடைத்தவன், “எங்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லுவ? விடு, இனி இப்படி நடக்காம பார்த்துக்கலாம். ம்ம்…” என தண்ணீர் கொடுத்து, அவளை ஆசுவாசப்படுத்தி வெளியில் அழைத்து வந்தான்.

அதற்குள் தேவி, இளங்கோ வந்ததை அனைவருக்கும் சொல்லிவிட, சங்கர் உடனே வந்துவிட்டார். அடுத்தடுத்து அமுதா, ஆனந்தி குடும்பம் வந்துவிட்டது.

அதன்பிறகு இருவருக்கும் தனிமையே கிடைக்கவில்லை. இரவும் அவனோடு அனுப்ப தேவி யோசிக்க, வெறியே வந்துவிட்டது இளங்கோவிற்கு.

அதை உணர்ந்த கொடி, “ம்மா, என்ன பண்றீங்க? மாமா இன்னும் பாப்பாவை கூட சரியா பார்க்கல. நீங்க செய்றதை பார்த்து டென்சன் ஆகுறார்.” என பல்லைக் கடிக்க,

“எனக்கு மட்டும் ஆசையா? இப்போதான் புள்ள பெத்த உடம்பு…” என இழுக்க, “ம்மா…” என மீண்டும் கொடி பல்லைக் கடிக்க, “சூதானமா இருந்துக்கோ கண்ணு, உனக்காகத்தான் சொல்றேன்.” என அவர் மனதே இல்லாமல் கூற,

“சரிம்மா.” என்றவளுக்கும் கணவனின் நிலை புரியாமல் இல்லை. ஆனாலும் இப்போதைய சூழல் அதற்கு தக்கவாறு இல்லையே?

அன்றைய இரவு இருவருக்கும் தூங்கா இரவாகிப் போனது. வெகுநேரம் வரை இருவரும் பேசிக்கொண்டே இருந்ததில் தூங்க தாமதமாகி விட, அவர்கள் கண் அசந்த நேரம் சரியாக பசிக்கு அழ ஆரம்பித்தாள் குழந்தை. குழந்தையின் சத்தத்தில் தேவியும் வந்துவிட்டார்.

அதன்பிறகு எங்கே தூங்க? ஹாலில் மாமானாருடன் படுத்து தூங்க வேண்டியதாகிப் போனது.

அடுத்தநாள் தன் தந்தைக்கு அழைத்தவன், “ப்பா நல்ல நாள் பாருங்க, பாப்பாவையும் கொடியையும் அங்க அழைச்சிட்டு வர்றதுக்கு.” என்றவன், அந்த வாரத்திலே அழைத்தும் வந்துவிட்டான்.

முதலில் ஒருவாரம் தேவி வந்து உடனிருந்து அனைத்தையும் சொல்லிக் கொடுத்து செல்ல, மகன் இருப்பதால் சுப்புவும் பெரிதாக எந்த பிரச்சனையும் செய்யவில்லை.

அதோடு தன்னைப் போலவே பேத்தியும் இருக்க, அவளோடு ஐக்கியமாகிவிட்டார்.

இளங்கோ வந்து ஒரு மாதம் முடிய, மனைவியையும் குழந்தையையும் விட்டுச் செல்ல முடியாமல், அதிலும் கொடியின் பயமும் ஏக்கமும் அவனைக் கொல்லாமல் கொல்ல, எதைப் பற்றியும் யோசிக்காமல் வேலையை விட்டுவிட்டான்.

அதை ஒரு பெரும் பிரச்சனையாக்கினார் சுப்பு. சங்கருக்கும் தேவிக்கும் இதில் வருத்தம்தான். மகளைத்தான் கண்டித்தனர். “உன்னாலதான் தம்பி வேலையை விட்டுடுச்சு, இப்போ பாரு எல்லாரும் அவரை எப்படி பேசுறாங்கன்னு…” என தேவி திட்ட,

பேச்சிதான், “நான்தான் என் பேரனை இருக்க சொன்னேன், அதனால என்ன? இனி யாரும் எதுவும் பேசக்கூடாது.” என பேச்சை முடித்துவிட்டார்.

ஆனால் சுப்புவின் பிறந்த வீட்டில் கொடியால்தான் இளங்கோ வேலையை விட்டான் என அவருக்கு கொம்பு சீவ, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது.

நர்த்தனாவிற்கு ஆறு மாதம் என்ற நிலையில் மீண்டும் கொடி கர்ப்பமானாள்.

முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தைக்கு மசக்கை பெரும்பாடு படுத்த, நர்த்தனாவை சுப்புவே பார்க்கும்படி ஆகிவிட்டது.

அடுத்த குழந்தை உண்டான நேரம், இளங்கோவும் வேலையில்லாமல் வீட்டில் இருக்க தன் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதிலும் ஆயிரம் குறைகள் கண்டுபிடித்தார் சுப்பு. மகன் இல்லாத நேரம் கொடியிடம் தன் வார்த்தை ஜாலத்தை காட்டினார்.

மனைவியின் மூலம் தெரியாவிட்டாலும், நந்தினி மற்றும் சந்திரா மூலம் அனைத்தும் தெரிந்துவிடும்.

இதை அப்படியே விட மனம் இல்லாதவன் ஒரு நாள், “அம்மா நான் மிலிட்டரிக்கு போனது உங்களுக்கு பிடிக்கல, பயந்தீங்க. இப்ப அந்த வேலையை விட்டுட்டு உங்க கூட இருந்தாலும் பிரச்சனை பண்றீங்க. என்னதான் செய்யணும்? வேலையை விட்டுட்டு வந்தது நான், என்னைத்தான் நீங்க பேசணும். அவளை எதுக்கு பேசுறீங்க? இப்படியே தொட்டதுக்கெல்லாம் சண்டை கட்டிட்டு இருந்தா, நான் தனியா போயிடுவேன்.” என்று ஒரே போடாக போட்டு விட்டான். அதில் சற்று கலவரமானவர் அதன்பிறகு கொடியிடம் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

இளங்கோவும் தான் வேலை பார்த்த திண்டுக்கல் ரயில்வே மேனேஜர் சீனி சாரிடம் மீண்டும் சென்றான்.

தன் பிரச்சனையை அவரிடம் எடுத்துக் கூற, முதலில் வேலையில் சேரமுடியாது என்றுதான் கூறினார். ஆனாலும் இளங்கோ வேலைக்கு வர ஆரம்பித்தது முதலே, அவன் மீது தம்பி என்ற உணர்வு வர, அவன் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பாமல், நீண்ட விடுமுறை என்றே அனுப்பி வைத்து இருந்தார்.

எனவே இனி இதுபோல் நடக்காது என்று அவனிடம் உறுதி வாங்கியவர், சில பல சான்றிதழ்களை வைத்து தன்னுடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் உபயோகித்து அவனை மீண்டும் ரயில்வே பணியில் அமர்த்தினார்.

அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் இறக்கம் என்பதே இல்லை, அனைத்தும் ஏற்றம் தான்.

நவீன் பிறக்கும் போது மனைவியின் கூடவே இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான் இளங்கோ. மகனின் இந்த வளர்ச்சி சுப்புவின் வாயை சற்று அடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மருமகளிடம் பிரச்சனை செய்வதைக் குறைத்துக் கொண்டார்.

காலங்கள் ஓடியது, குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர்.

திண்டுக்கல் சரகத்தில் இருந்து தேனிக்கு அசிஸ்டன்ட் இன்ஜினியராக மாற்றலாகி வந்தான். மனைவி, குழந்தை என குடும்பம் அழகாக சென்றது.

நர்த்தனாவின் ஐந்தாவது வயதில், வெங்கடேஷுக்கு அவளின் மாமன் மகளான வனிதாவுடன் திருமணம் நடந்தது. முன்னமே வெங்கடேஷ் இங்கு இருக்க மாட்டேன் என்று கூறியிருந்ததால், அவனுக்கு வருசநாட்டிலேயே வீடு பார்த்து செட்டில் செய்தனர்.

குழந்தைகளும் வளர ஆரம்பிக்க, தன் வீட்டிற்கு முன்னே இருந்த இடத்தில் முதலில் தனக்காக ஒரு வீட்டைக் கட்டினான். பின்பு பின்னால் இருந்த வீட்டை இடித்துக் கட்டலாம் என்ற போது, கந்தவேல் வேண்டாம் என்று விட்டார். அதனால் அந்த வீட்டை ஆல்டர் செய்து கொடுத்தான்.

இளங்கோவின் இந்த வளர்ச்சி ஊருக்குள்ளும் பெரிதாக பேசப்பட்டது. கொடிக்கு பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, ஊருக்குள்ளும் இதனால் நல்ல மரியாதை கிடைத்தது.

‘ஏம்மா இன்ஜினியர் பொண்டாட்டி’ என்ற அழைப்புகளால் பெரிதும் கவரப்பட்டாள். நாளடைவில் அது அவளுக்கு ஒரு போதையாகிப் போனது.

அந்தப் பெயருக்காகவே நிறைய உதவிகள், சிறு சிறு பண உதவிகள், கடன் வாங்குபவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து என இளங்கோவிடம் கேட்காமலே செய்ய ஆரம்பித்தாள்.

அப்படியே தெரிந்தாலும் சின்ன சின்ன உதவி தானே செய்கிறேன், அதற்கு என்ன சொல்லிவிடப் போகிறான் என்ற எண்ணமும் தோன்ற, அதை அப்போது பெரிதாக எடுக்காமல் விட்டு விட்டாள் பெண்.

காலையில் 7 மணிக்கு அரக்க பறக்க செல்பவன், இரவு வீடு வர எட்டு மணி ஆகிவிடும். அதனால் அவன் கண்ணிலும் இதெல்லாம் பெரிதாய் விழுந்ததேயில்லை.

அதன்பிறகு குழந்தைகள், நந்தினியைப் பார்ப்பது, பெற்றோர்களைப் பார்ப்பது என அவன் நேரம் வீட்டுக்குள்ளேயே முடிந்துவிடும். இதனால் கொடியின் செயல் அவனுக்கு தெரியாமலே போனது.

இப்படியே செல்ல திடீரென ஒரு நாள் தேவிக்கு உடல் நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக சங்கர் அழைத்துக் கூற, அடித்துப் பிடித்து ஓடினர் குடும்பத்தினர்.

மகளைப் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல, கொடியைப் பார்த்ததுமே தேவியின் உயிர் பிரிந்தது.

அதன்பிறகு சங்கரையும் கொடியையும் தேற்றுவதே பெரும்பாடாகிப்போனது அனைவருக்கும்.

மகள்கள் மூவரும் ஆள் மாற்றி ஆள் இருந்து, சங்கரைப் பார்த்துக் கொண்டனர்.

மனைவியை இளங்கோ பார்த்துக் கொண்டான். சில மாதங்களில் இருவரும் தேறிக்கொள்ள, மீண்டும் அவரவர் வாழ்க்கைச் சக்கரம் சுழல ஆரம்பித்தது.

அப்படியான ஒரு நாளில், மகளிர் குழுவில் இருந்து லோன் தருவதாக சிலர் கொடியைத் தேடி வந்தனர்.

அது பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அவளிடம் எடுத்துக் கூற, அந்த ஊரில் உள்ள பெண்கள் சிலரும் கொடியிடம் அதை வாங்கிக் கொடுக்கும்படி கேட்க, உதவி என்றதும் வழக்கம்போல சரி என்று விட்டாள் கொடி.

அன்று இரவு, கணவனிடம் இதைப் பற்றி பேச, “இதெல்லாம் இப்ப புதுசா வந்திருக்கு கொடிமா. பணத்தை வாங்கிட்டு ஏமாற்றுவது தான் நடக்குது. அதனால நீ இதுல எதுவும் தலையிடாத…” என்றான் கணவன்.

“அது வந்து மாமா நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன், ஊருக்குள்ள பொம்பளைங்களுக்கும் ஒரு உதவியா இருக்கும் இல்ல மாமா. இந்த ஒரு தடவை வாங்கி கொடுத்து பார்க்கிறேன், எதுவும் பிரச்சனையா இருந்தா இதுல இருந்து நான் விலகிடுறேன். நம்பிக்கை கொடுத்துட்டு ஏமாத்தகூடாது தானே மாமா?” என கணவனை சமாதானம் செய்தாள் அவனின் கொடி.

“கொடி, இதுதான் கடைசியா இருக்கணும். இதுக்கு பிறகு இந்த மாதிரி வேலை எல்லாம் எதுவும் செய்யக்கூடாது. நாம உதவி தான் செய்வோம், ஆனா அது நமக்கு பிரச்சனையா வந்து முடியும். பணம் விஷயத்துல எப்பவும் சரியா இருக்கணும்.” என இளங்கோ கண்டிப்பாக சொல்லிவிட, முதல்முறையாக கொடிக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

அவனுக்குத் தெரியாமல் தான் செய்வது எல்லாம் தெரிந்தால், பிரச்சனை பெரிதாகுமோ என்று பயமும் ஒருங்கே எழுந்து சற்று அவளைக் கலவரமுறச் செய்தது.

இனி அனைத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும், கணவனுக்குத் தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது என்று நினைத்தவளுக்கு, அது நடக்காமல் போனது தான் அவளது துரதிருஷ்டமோ!

பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும். பணம் இல்லை என்றால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும். பணம் இன்றி மனிதனாக வாழ முடியும். ஆனால் மனிதர்களுடன் வாழவே முடியாது என்ற பாடத்தை அவளுக்கு புரியவைக்க, காலம் தான் ஓடிவரப்போகுதே…

***

You may also like

1 comment

M. Sarathi Rio July 25, 2026 - 2:26 pm

Super, Super, Super, Super, Super

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured