முத்தமழை – 53
“ம்மா… இந்த யாழி..” என வேகமாக அறைக்குள் நுழைந்து ஏதோ சொல்ல வந்த வனிதாவிடம் “போதும் வனி.. மாப்பிள்ளையைக் கூப்பிட்டு கிளம்பு. இனி நான் கூப்பிட்டா மட்டும் இங்க வந்தா போதும். இதுக்கு மேல உன்னை கூட வச்சுட்டு என்னால சமாளிக்க முடியாது..” என்றார் ராஜலட்சுமி காட்டமாக.
“ம்மா என்ன சொல்ற?” என அதிர்ந்து கேட்க,
“என்ன அம்மா..? எரிச்சல் பண்ணாம கிளம்புடி.. உனக்காக இன்னும் நான் என்ன எல்லாம் அசிங்கப்படனுமோ தெரியல.. அவ்வளவு தூரம் சொல்றேன், அமைதியா இரு.. இருன்னு கேட்டியா? இன்னைக்கு எப்படி ஒரு நிலமையில கொண்டு வந்து நிறுத்திருக்க?”
“ம்மா.. அந்த வல்லி என்னை எப்படி கிண்டலா பார்த்தா தெரியுமா? அப்புறம் அவனும்..”
“போதும் வாயை மூடு.. இனி உன்னால இங்க எந்த பிரச்சினையும் வரக்கூடாது. அவங்க ரெண்டு பேரையும் இந்த வீட்டுல இருந்து எப்படி வெளிய அனுப்பனும்னு எனக்குத் தெரியும்.. இதுக்கு மேல நீ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்..”
“ம்மா ஏன் இப்படி பேசுற? நீயும் மாறிட்டியா?”
“வாயை மூடிட்டு கிளம்புன்னு சொன்னேன்.. யாழி கல்யாணம் முடியுற வரைக்கும் இந்த சொத்தை பிரிக்கிறதைப் பத்தி யாரும் பேசக்கூடாது. அவளுக்கு நான் எல்லாம் பண்ணனும், அதுக்குப் பிறகு இதை பேசலாம்..”
“ம்மா இதுக்கும் உன் பொண்ணு கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்..?”
“இது.. இதுதான் சம்மந்தம்.. நானும் உங்க அப்பாவும் இன்னும் உசுரோடதான் இருக்கோம், நாங்க இருக்கும் போதே அவளை உன் பொண்ணுன்னு சொல்ற, நாளைக்கு சொத்தைப் பிரிச்சிட்டு போயிட்டா, அவளை என்னனு கூட நீயோ, சுந்தரோ பார்க்கமாட்டீங்க. எனக்கு பயமா இருக்கு வனி.. நீ சுயநலம் பிடிச்சவதான், அது எனக்கும் தெரியும்தான். ஆனா கூட பிறந்தவங்களை அவமானப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் நீ யோசிக்காம பேசுற பேச்சு எனக்கு பயமா இருக்கு. வீட்டுக்குள்ள நீ பேசுறதெல்லாம் சரிதான். ஆனா அதை நான் கண்டிக்காம விட்டா, நாளைக்கு நாலு பேர் முன்னாடியும் இதுதான வரும். அப்படி நீ பேசி, நான் கேட்டா என்னால இந்த உசுரை தாங்கிட்டு இருக்க முடியாது..”
“ம்மா.. ஏன் இப்படி பேசுற? நான் போய் அப்படியெல்லாம் யோசிப்பேனா? அது ஏதோ ஒரு கோபத்துல ம்மா.. யாழி நம்ம பேச்சைக் கேட்கலன்னு, அந்த கர்ணன் கூடவே சுத்துறான்னு தான் கோபம். அந்த கோபத்துல தான் ம்மா, பேசிட்டேன். அதுக்காக என்னை தப்பா நினைப்பியா?”
“என்ன கோபமா இருந்தாலும், கூட பிறந்தவளை எப்படி அந்த வார்த்தை கேட்க மனசு வந்தது, அன்னைக்கே உன் வாயை உடைச்சிருக்கனும், தப்பு பண்ணிட்டேன். எனக்கு நீ மட்டும் பொண்ணு இல்ல. அவளும் என்னோட பொண்ணுதான். அவளையும் நான் பார்க்கணும்..”
“ம்மா.. உனக்கு என்னதான் ஆச்சு.? நீ ஏன் இவ்ளோ கோபப்படுற? இப்போ என்ன நான் அமைதியா இருக்கணும், அவ்ளோதான. இருக்கிறேன். அதுக்காக ஏன் நீ டென்சன் ஆகுற.. நான் இனி இங்க தேவையில்லாம வரமாட்டேன், சரியா? யாழிக்கு மாப்பிள்ளை பாரு.. ஆனா அந்த வெற்றி மட்டும் வேண்டாம். அப்படி அவனுக்குத்தான் கொடுப்பேன்னு தெரிஞ்சா, நான் இவ்ளோ பொறுமையா இருக்கமாட்டேன்.”
“உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு.. உனக்கும் இந்த வீட்டுல எடுக்குற முடிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை முக்கியம்.. நான் யாருக்கு வேணும்னாலும் கொடுப்பேன். அதை கேள்வி கேட்க உனக்கு எந்த ரைட்சும் கிடையாது..”
“ம்மா.. என்னதான் ஆச்சு உனக்கு? அவனை எப்படி நம்ம யாழிக்கு?”
“அவளுக்கு அந்த பையனைத்தான் பிடிச்சிருக்காம்..?”
“ம்மா அதெல்லாம் இருந்துட்டு போகட்டும், நீங்க பேசி புரியவச்சு, யாழினி மனசை மாத்துங்க..”
“ஏன் மாத்தனும்? உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ வாழும் போது, அவ மட்டும் பிடிக்காம கட்டிட்டு கஷ்டப்படனுமா? இனிமேல் இது பத்தி நாம பேச வேண்டாம்.. என் பொண்ணுக்கு என்ன செய்யனுமோ? எப்படி செய்யனுமோ அதை நான் பார்த்துக்கிறேன். இப்போ உன் புருசனோட கிளம்பு..”
“ம்மா நீங்க தப்புக்கு மேல தப்பு பண்றீங்க.. நம்ம அந்தஸ்து கவுரவம் என்ன? அவனோட அந்தஸ்து..” என்ற போதே அந்த அறைக்குள் வேகமாக உள்ளே வந்தான் ரமேஷ்.
“போலாம் வனி..” என்றான் மனைவியின் கையைப் பிடித்து இழுத்தபடி,
“என்ன பண்றீங்க? எங்க அம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு போல, ஏதேதோ உளறிட்டு இருக்காங்க. இப்போ நான் கூட இருக்கணும்..” என்ற போது மனைவியை உறுத்து விழித்தான் ரமேஷ்.
“இப்போ நீ என்கூட வரலன்னா, இனி எப்பவும் என்கிட்ட வரமுடியாது. பிள்ளைகளையும் நான் உங்கிட்ட விடமாட்டேன்..” என்றான் இறுகிவிட்ட குரலில்.
“என்ன.. என்னதான் ஆச்சு எல்லாருக்கும்..? ஏன் இவ்ளோ கோபம்..?” என்று கணவனின் கோபத்தில் இறங்கிவிட்ட குரலில் கேட்க,
“மனுஷின்னா சூடு சுரனை இருக்கனும், ஒரு தடவை சொன்னா பரவாயில்ல. உங்க அம்மா எத்தனை தடவை வெளிய போன்னு சொல்றாங்க, அப்பவும் இங்கதான் இருப்பேன்னா, நீ இருந்துக்கோ. நான் இனி உன் வாழ்க்கையில எங்கேயும் இல்ல..” என்றவன், பிடித்திருந்த கையை வெடுக்கெனெ உதறிவிட்டு வெளியில் செல்ல, வனிதாவோ திகைத்து நிற்க, ராஜியோ எதுவுமே நடக்கவில்லை என்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அலட்சியப்படுத்தப்படுவது எந்தளவிற்கு வலிக்கும் என வாழ்க்கையில் முதன்முறையாக உணர்ந்தாள் வனிதா.
இவர்களின் பேச்சைக் கேட்டபடியே கதவோறமாய் நின்றிருந்த யாழினியின் மனநிலையோ சொல்லில் வடிக்க முடியாத நிலையில் இருந்தது.
*******
அடுத்த நாள் அர்ஜுனின் வீடு.. வல்லியையும் கூடவே ராஜியையும் சேர்த்தே தான் அழைத்து சென்றான் கர்ணன்.
அவன் வீட்டிற்குள் நுழையும் போதே, கவிதாவின் மாமனாரின் சத்தம் தான் கேட்டுக் கொண்டிருந்தது.
அர்ஜூன் எதிர்த்து பேச முடியாத இயலாமையில் இருக்க, அவனின் தாயோ மகளைப் பார்த்து வேதனையில் தவிக்க, கவிதாவோ முகம் சிவக்க அடக்கப்பட கோபத்துடன் குழந்தைகளைப் பிடித்தபடி நின்றிருந்தாள்.
இவர்களின் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை போல, அனைவரும் அதிர்ந்து பார்க்க, கவிதாவின் மாமனாருக்கு சொக்கலிங்கத்தைப் பார்த்து சற்று பயம் கூட வந்தது.
“கவிக்கா..” என கர்ணன் வேகமாக சென்று கவிதாவின் கையைப் பிடிக்க, அவளோ அதற்காகவே காத்திருந்தது போல, “எனக்காக இவன் ஏன்டா கஷ்டப்படனூம். எனக்கு அப்பா எல்லாமேதான் செஞ்சார். எனக்கு செஞ்சதுல பாதியை கூட இவன் அனுபவிச்சிருக்கமாட்டான். இப்போ மொத்தமா கடன்ல விட்டுட்டு போயிட்டார். எல்லாத்தையும் வித்தா கூட கடனை அடைக்க முடியாது கர்ணா.. இந்த நேரத்துல நான் அவனுக்கு உதவக்கூட முடியாது. சரி உதவலன்னாலும் பரவாயில்ல, உபத்திரவம் பண்ணாமலாச்சும் இருக்கனும்ல்ல.. இப்போ போய் சொத்தை பிரிச்சு கேட்குறாங்கடா.. என்ன ஜென்மங்கடா இவங்க எல்லாம்..? என் குடும்பத்தை நடுத்தெருவுல விட்டுட்டு நான் மட்டும் சந்தோசமா இருக்கனுமா? என் அப்பாவோட ஆத்மா என்னை மன்னிக்குமா? சொல்லு கர்ணா..” என அவனின் சட்டையைப் பிடித்து கதற,
“கவிக்கா.. நாங்க எல்லாம் இருக்கோம், அப்படியெல்லாம் விட்டுருவோமா? நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுற, இதெல்லாம் மாமாவுக்கு தெரியுமா?” என்றான் கர்ணன் கோபமாக.
“அவனுக்கு தெரியாம நான் எதையும் செய்யமாட்டேன்..” என்றார் அவளின் மாமனார் சட்டென.
“நீ சொல்லு க்கா…” என்றான் அவர் பேசியதை காதில் வாங்காமல்.
“அவர்கிட்ட நான் பேசல..?” என்றாள் ஆத்திரமாக.
“என்ன இது முட்டாள்தனம். முதல்ல நீ அவர்கிட்டத்தானே பேசியிருக்கனும்..” என்றான் கர்ணனும் கோபமாக.
“ஏன்.. ஏன் பேசனும்? அவருக்கு இங்க நடக்குற எதுவுமே தெரியாதுனு நினைக்கிறியா? அப்பா காரியம் முடிஞ்சதும் போனார், இப்போ வரைக்கும் வரல.. நான் எவ்வளவு கஷ்டப்படுவேன்னு அவருக்குத் தெரியும். தெரிஞ்சும் வந்து பார்க்கல. அர்ஜுன் ஒருத்தனா எல்லாரையும் சமாளிக்கிறான், கூட இருந்திருந்தா அவனுக்கு எவ்ளோ நிம்மதியா இருந்துருக்கும். எதுக்கு கர்ணா மாமன், மச்சானெல்லாம். இப்படியான கஷ்டத்துல கூட இருக்கத்தானே. அதுக்கு கூட அவர் இல்லடா..” என்ற போது மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் வந்திருந்தது கவிதாவிற்கு.
“உங்க அப்பா பொறுப்பில்லாம வாங்கி வச்சிட்டு போன கடனுக்கு, என் பையன் வந்து பதில் சொல்லனுமா? நல்லா இருக்கு உங்க நியாயம். ஒரு பொண்ணு, எல்லாம் நல்லா செய்வாங்க, பிக்கல் பிடுங்கல் இல்ல. சொத்தும் கனிசமா பிரியும்னு நினச்சுதான் பொண்ணெடுத்தோம். இப்படி ஏமாந்து, எங்களை சிவனாண்டியா விட்டுட்டு போவாருனு நினைக்கல..” என்றார் அவரின் மாமனார்.
“போதும் ரவி..” என்ற சொக்கலிங்கத்தின் அதட்டலில் அவரின் வாய் தானாக மூடிக்கொண்டது.
அவர் மனைவியை ஒரு பார்வை பார்க்க, கவிதாவின் அம்மாவை அழைத்துக்கொண்டு அறைக்கு செல்ல, வல்லியோ குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வேகமாக கிச்சனுக்குள் சென்றாள்.
“கவி.. நீ இப்படி அழறதை நிறுத்து, மாப்பிள்ளைக்கு ஏதாச்சும் காரணம் இருக்கும். நீ முதல்ல அவர்கிட்ட பேசு..” என லிங்கம் பேச பேசவே,
“உங்க பொண்ணுக்கு டைவோர்ஸ் வேணுமாம் மாமா.. அதை எப்படி கொடுக்கணும்னு கேட்டு சொன்னா, அதை நான் கொடுத்துட்டு பிள்ளைங்கள கூப்பிட்டு போய்ட்டே இருப்பேன்..” என கவிதாவின் கணவன் நிர்மல் உள்ளே வர, அதை கேட்ட அத்தனை பேருக்குமே அதிர்ச்சியைத் தாண்டிய ஒரு உணர்வு தான்.
“என்ன டிவோர்ஸா.?” என அர்ஜூன் வேகமாக கவிதாவிடம் வர,
“என்ன க்கா நீ?” என கர்ணனும் சலிப்பாக கேட்க,
“முதல்ல அதைக் கொடுத்து இந்த குடும்பத்தை தலை முழுகிட்டு வா..” என ரவியும் பேச,
நிர்மலின் குரலைக் கேட்டு, வல்லியோடு இருந்த குழந்தைகள் இருவரும் “அப்பா..” என ஓடிவந்து அவனிடம் தாவியிருந்தனர்.
குழந்தைகள் இருவரையும் அப்படியே அள்ளிக்கொண்டவன் மனைவியை முறைத்தபடியே அவனின் தந்தையிடம் சென்றான்.
“டிவோர்ஸ்தான் கொடுக்கலாம்னு இருக்கேன். அங்க வந்து உங்கக்கிட்ட பேச்சு வாங்கி கஷ்டப்படுறதைவிட, இங்க நிம்மதியா இருந்துட்டு போகட்டும்..” என்றவன், “அப்புறம் டைவோர்ஸ் கொடுத்தா, என்னோட சம்பளம் பாதி, என்னோட சொத்து பாதி அவளுக்கு கொடுக்கனும், அதனால அதுக்கான டாகுமென்ட்ஸை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க, சைன் பண்ணிடுறேன்..” என அவரைப் பார்த்துக்கொண்டே ஒரு பெரிய குண்டைத் தூக்கி தலையில் போட, ‘என்ன பாதி சொத்தா?’ என்று அதிலேயே திக்பிரமை பிடித்து நின்றுவிட்டார் மனிதர்.
அவரை அப்படியே விட்டுவிட்டு அர்ஜூனிடம் வந்த நிர்மல் “சாரி டா.. உன் அக்கா மேல இருந்த கோபத்துல இங்க வராம இருந்துட்டேன்.. தப்புதான்… கண்டிப்பா கூட இருந்துருக்கணும். ஏதோ ஒரு கோபத்துல..” என முடிக்கும் முன்னே “மாமா நமக்குள்ள எதுக்கு சாரியெல்லாம்.. நீங்க அக்காகிட்ட பேசுங்க. சொத்து கொடுக்குறேனுதான் நானும் அம்மாவும் சொன்னோம்..” என்றான் கவலையாக.
“போதும் அர்ஜூன்.. நீயும் அக்கா மாதிரி மாமாவை கஷ்டப்படுத்தாத. அவங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்..” என கர்ணன் கூறும் போது அனைவருக்கும் காபியோடு வந்தாள் வல்லி.
அவளுக்கு ஒரு நன்றியை சொல்லி அனைவரும் வாங்கிக் கொள்ள, ராஜலட்சுமியின் பார்வை அர்ஜூன்-நிர்மல் இருவரின் சேர்ந்திருந்த கரங்களில் படிந்து கர்ணனில் நிலைத்திருந்தது.
ஆம். அந்த சேர்ந்திருந்த இரு கரங்களையும் ஆசையும், ஏக்கமுமாக பார்த்துக் கொண்டிருந்தான் கர்ணன்.