Home Antiheroதூரம் – 21

தூரம் 21

“என்ன பயம் உனக்கு?” என்றான் மிகவும் மென்மையாக. என்ன சொல்வதென்று தெரியவில்லை பெண்ணுக்கு.

“இந்த கல்யாணம் பிடிக்கலையா? இல்ல, என்னை பிடிக்கலையா? என்ன இருந்தாலும் சொல்லு, பேசிக்கலாம்.” என்றான் பொறுமையாக.

அப்போதும் அமைதியாகவே இருந்தாள் கொடி. தாங்கள் இருப்பதினால் தான் பேச யோசிக்கிறாளோ என்று நினைத்த கணேசன், “இளா இங்க பின்னாடி கார்டன் மாதிரி ஒரு இடம் இருக்கு, கொடியை அங்க கூப்பிட்டு போய் பேசு. எதுவா இருந்தாலும் இப்போவே முடிச்சிடுங்க, அதுதான் உங்க லைஃப்க்கு நல்லது.” எனவும் அரண்டே போனாள் கொடி.

அதே பயத்தோடு தன் அக்காக்களைப் பார்க்க அவர்களும், ‘போ’ என்பது போல் சொல்ல, நடுக்கத்துடனே தான் இளங்கோவைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்க்க, என்ன நினைத்தானோ எழுந்து கை கொடுத்து அவளையும் எழுப்பி அழைத்துக்கொண்டு நடந்தான்.

“மாமா கொடிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையோ? இப்படி நடுங்குறாளே…?” என தன் கணவனிடம் அமுதா வருத்தமாக கேட்க,

“நாம மட்டும் விருப்பப்பட்டா கல்யாணம் செஞ்சோம்? அப்பாம்மா சரின்னு சொன்னாங்க, பண்ணிக்கிட்டோம். இன்னைக்கு முக்கால்வாசி பொண்ணுங்க கல்யாணம் அப்படித்தானே நடக்குது அம்மு.” என்றாள் ஆனந்தி, தன் கணவனின் முறைப்பை கண்டுகொள்ளாமல்.

“கொடிக்கு இளா மேல விருப்பம் இல்லதான், ஆனா பிடிக்காம எல்லாம் போகாது. அவளுக்கு பயமே அத்தையை நினைச்சுதான். அந்த பயத்தை போக்க வேண்டியது இளாதான். அவன் சரி செஞ்சிக்குவான், நீ கவலையை விடு.” என தங்கையை சமாதானம் செய்தாள்.

இங்கு தனியாக அழைத்து வந்தவன் தன்னருகில் அமர வைத்து, “இப்போ சொல்லு, இந்த குட்டி பூ மண்டைக்குள்ள என்ன தான் ஓடுது?” என அவள் தலையை லேசாகத்தட்டி கேட்க,

“அது… அது…” என திணறியவளை, அவன் ஆழ்ந்து பார்க்கவும், “அது மாமா, அத்தைக்கு என்னை பிடிக்காது. இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் இறங்கி வந்துருக்காங்கன்னா, அவங்க விருப்பப்பட்டு இல்லைதானே? உங்க மேல இருக்குற பாசமும் மறுபடியும் நீங்க அவங்களை விட்டுட்டு போயிடுவீங்களோ என்ற பயமும்தானே காரணம். என் மேல பாசமோ, விருப்பமோ இருந்து சரி சொல்லலையே?” என தயங்கி தயங்கி என்றாலும் தெளிவாக சொல்லிவிட்டாள்.

“சரி, இந்த பூம்மாவுக்கு அவங்களை பிடிக்குமா?” என்றான் மற்றதையெல்லாம் விடுத்து.

“அது எப்படி பிடிக்கும்?” என்றாள் பட்டென்று, அதில் அவன் சிரிக்க திருதிருத்தாள் பெண்.

“அது… அது… சாரி! தெரியாம…” என திணற,

“அதனாலென்ன? இப்படி உண்மையை சொல்லுறது தான் நல்லது.” என அவளை சமாதானப்படுத்தியவன், “சரி, ஒருவேளை கல்யாணம் நடந்தா, என் பூம்மாவுக்கு பிடிக்காத அவங்களை என்ன செய்வா? அவ எப்படி நடந்துக்குவா?” என பொறுமையாக கேட்க,

அவனின் பேச்சு அவளுக்கு கொஞ்சம் ரசனையைக் கொடுத்தது நிஜமே. அந்த ரசனையோடே, “கொஞ்சம் கொஞ்சமா என்னை புரிய வச்சி, பிடிக்க வைப்பேன். அப்படியும் அவங்க மனசு மாறலன்னா நான் ஒதுங்கிப்பேன். உங்களுக்காக வேணும்னா எல்லாத்தையும் பொறுத்து அட்ஜஸ்ட் செய்துக்குவேன்.” என்றாள் திருத்தமாக.

“ம்ம்… எல்லாத்துக்கும் பொறுத்து போகணும்னு எல்லாம் இல்ல பூம்மா. எதுக்கும் ஒரு அளவுதான். என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச என் பூம்மாவையும் அவங்களுக்கு பிடிக்கும். உடனே எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கக் கூடாது. ஆனா கண்டிப்பா சீக்கிரமாவே நடக்கும். என்னை நம்பி என் பூம்மா என்கூட வந்தா போதும்.” என்றான் நேசம் நிறைந்த குரலில்.

அந்த குரல் அவளையும் வசியப்படுத்த அதிலும் அவனின், ‘பூம்மா’ அவளை கிறங்க வைக்க, “ம்ம்…” என்றாள் வெட்கம் நிறைந்த புன்னகையுடன்.

“ம்ம்ம் சொன்னா பத்தாது, உன் அத்தையை பிடிக்காதுனு பட்டுன்னு சொன்ன மாதிரி, என்னை பிடிக்கும்னும் பட்டுன்னு சொல்லணும். அப்போதான் இங்கே இருந்து போக முடியும்.” என்றவன் அவளை நெருங்கியமர,

“மாமா ப்ளீஸ்… இப்படியெல்லாம் வேண்டாம். யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க.” என முணுமுணுத்தபடியே அவனிடமிருந்து தள்ளியமர,

“ப்ச் என்னடி நீ… ரெண்டு நாள்ல கல்யாணம், பக்கத்துல உக்காரக்கூட இவ்வளவு டென்சன் பண்ணுற?” என டென்சன் ஆனவன், “என்ன பிடிக்குமா? பிடிக்காதா? அதை மட்டும் சொல்லு.” என அவள் கையைப் பிடித்து நகர விடாமல் செய்ய,

“பிடிக்கத்தான் செய்யுது மாமா.” என்றாள் சிணுங்கியபடியே, அதில் அட்டகாசமாக சிரித்தவன்,

“ஷப்பா! இந்த வார்த்தையை வாங்க எவ்ளோ பேச வேண்டியிருக்கு?” என்றான் மட்டற்ற மகிழ்ச்சியில்.

“ஆனா உங்களுக்கு… எப்போதில இருந்து என்னை பிடிச்சது? அது… அது ஏன் மாமா?” என்றாள் முகம் மலர வெட்க சிரிப்புடன்.

“ம்ம் ஏன் பிடிக்கும்? எதுக்கு பிடிக்கும்? ரொம்ப ஈசியா கேட்டுட்ட, ஆனா உன்னை நினைச்ச அந்த நாள்…” என இளங்கோ மனதுக்குள் நினைத்து சிரித்தபடியே, “பூம்மா இங்க பாரேன், என் கண்ணையே பார்க்கணும் ம்ம்…” என்றவன் கைகள், அவள் முகத்தை தனக்கு நேராக நிறுத்தி வைக்க,

அவன் குரலின் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவளாய் அவளும் அவன் முகத்தை விழிகள் விரிய பார்க்க, “உனக்கு நினைவிருக்கா? நீ பெரிய பொண்ணான போது அப்பாக்கு ஆக்ஸிடென்ட் ஆகி உன் சடங்குக்கு வர முடியாம போயிடுச்சு. அப்போ தாய்மாமன் சீர் செய்ய அப்பத்தா என்னைத்தான் கூப்பிட்டுகிட்டு வந்தாங்க.

அப்போ நீ நலங்கு வச்ச முகத்தோட என்கிட்ட சீர் புடவை வாங்க வந்து என் முகத்தை பார்த்தியே… ஹப்பா! ஒரு நிமிஷம் என் மூச்சே நின்னு போச்சுடி. அந்த மை வச்ச கண்ணுக்குள்ள தான் என் வாழ்க்கையின் மொத்தமும் இருக்குன்னு, அந்த ஒரு நொடியே புரிஞ்சிக்கிட்டேன் பூம்மா.

எப்படி சொல்றதுன்னு சத்தியமா தெரியலடி…” என்றவனின் உணர்வுகளைப் புரிந்தவள், தயங்கினாலும் தன் முகத்தைப் பிடித்திருந்த கைகளில் கன்னத்தை சாய்க்க,

அந்த முகத்தை மேலும் இறுக்கமாக பிடித்து தன் பெருவிரல்களால் அவள் கன்னத்தை வருடியவன், “அன்னைக்கு நீ அவ்வளவு அழகுடி! எப்போதும் என்னை பார்த்து ஓடி ஒளியும் அந்த குட்டிப்பெண்ணைத் நான் தேட, ஆனா வந்து நின்னதோ என் தேசத்தின், என் நேசத்தின் அரசி.” என்றான் மிகமிக ரசனையாக.

“மாமா…” என்றவளுக்கு கூச்சமும் வெட்கமும் சேர, அவனிடமிருந்து முகத்தை விலக்க அவனும் விட்டுவிட்டான்.

தாவணியின் முந்தானையை சுருட்டியபடி, “எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதே…” என்றாள் முணுமுணுப்பாக.

“அதனால் என்ன? நீயும் படிச்சிட்டு இருந்த, உன் கவனத்தை அது கலைச்சிட கூடாதில்லையா?” என்றவன் அவள் கையைப் பிடித்து தனக்குள் இறுக்கி, “நல்லா யோசிச்சிக்கோ பூக்குட்டி, இப்போ பிடிக்குற இந்த கையை என் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் விடவே கூடாது.” என்றான் மென்மையாக.

விழிகள் மலர, முகம் சந்தோசத்தில் ஜொலிக்க, “ம்ம்…” என்றாள் பெண் தலையாட்டி.

“சரி சொல்லு, உனக்கு என்ன வேணும், நம்ம கல்யாணத்துக்கு?” என்றான்.

“அதெல்லாம் இப்போ எதுவும் வேண்டாம் மாமா. நான் அங்க வந்த பிறகு வாங்கி கொடுங்க போதும்.” என தெளிவாக பேசியவளின் வார்த்தையில் இருந்த பயம் அவனுக்கு புரியாமல் இல்லை.

தன் தாய்க்கு பயந்து சொல்கிறாள் எனப் புரிய, அதன்பிறகு அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.

அடுத்த இரண்டு நாட்களில் மிகவும் விமர்சையாக வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் இளங்கோ, பூங்கொடியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை எடுத்து முதல் முடிச்சிட, நாத்தனார் முடிச்சிட்டு அந்த திருமணத்தை முடித்து வைத்தாள் நந்தினி.

அடுத்தடுத்து மறுவீடு, விருந்து என அனைத்துமே நன்றாக நடந்தது. சங்கருக்குத்தான் மிகவும் வருத்தம், மற்ற பிள்ளைகளை விட கொடிதான் அவர் கைக்குள்ளேயே வளர்ந்தவள்.

இன்னுமே சில வருடங்கள் தங்களோடு வைத்திருந்து, அதன்பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என யோசித்திருந்தார்.

இளங்கோவும் சுப்புவும் செய்த ரகளையில் வேறு வழியில்லாமல் திருமணத்தை முடித்துவிட்டார். மறுவீடு முடிந்து கிளம்பும் மகளின் கையைப் பிடித்தபடியே கலங்கிய கண்களோடு வெகுநேரம் நின்றார் மனிதர்.

கொடியோ, அப்போதே வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நிலையில் தான் இருந்தாள். தேம்பி தேம்பி அப்படியொரு அழுகை.

அதில் ஆனந்தியும் அமுதாவும் கூட்டு சேர்ந்துகொள்ள, நொந்து போனான் இளங்கோ. பரிதாபமாக தன் சகலைகளைப் பார்க்க, அவர்களும் இதழ்களுக்குள் சிரித்தபடி அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

எப்படியும் இவர்கள் உதவ மட்டார்கள் என புரிந்தவன், தன் அத்தை தேவியைப் பார்க்க அவரும் உடனே, “ஆனந்தி எல்லாம் எடுத்து வச்சிட்டியா பாரு? அம்மு அந்த பலகார பானை எங்க வச்சிருக்க? ஏங்க, அந்த நகைப்பையை எடுத்துட்டு வாங்க.” என மூவரையும் விரட்ட, சட்டென்று மூவரும் அங்கிருந்து நகர பாவமாக விழித்தாள் கொடி.

அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவன், மனைவியின் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான். அந்த அழுத்தத்தில் அவளும் சற்று ஆசுவாசமாக, தன் கைக்குட்டையை நீட்டி, “முகத்தை துடை, அழுது அழுது முகமெல்லாம் சிவப்பாகிடுச்சு.” எனவும்,

“அப்போ நான் அழக்கூட கூடாதா? அழுதா முகம் இப்படித்தான் ஆகும், இதுகூட தெரியாதா?” என அவனிடமே சண்டைக்கு கிளம்பினாள்.

“இன்னைக்குதான்டி தாலியே கட்டினேன், அதுக்குள்ள அடிக்க வந்தா எப்படி? ஒரு மூனு நாளாச்சும் கொஞ்சம் மாப்பிள்ளை முறுக்க காட்ட விடுடி…” என இளங்கோ பாவம் போல் சிரிக்க,

“அப்படியெல்லாம் கேப் கொடுக்க முடியாது. அதுதான் தாலி கட்டியாச்சே…” என கொடியும் சிரிக்க,

“ம்ம் மேடம் சிரிக்கணும்முனா எங்களை நாங்களே டேமேஜ் பண்ணிக்கணும், அப்படித்தான?” என்றவன் மனைவியை தோளோடு அணைத்து,

“உன் ஃபீலிங்க்ஸ் எனக்கு புரியுது, அதுக்காக அழுதுட்டே இருக்கக்கூடாது. வீக்லி ஒன்ஸ் இங்க கண்டிப்பா வரலாம். ஓகேதானே?” என சமாதானம் செய்ய, “ம்ம்…” என்று சந்தோசமாகவே தலையசைத்தாள் இளங்கோவின் கொடி! இளங்கொடி!

திருமணம் முடிந்து அன்றோடு இரண்டு வாரங்கள் முடிந்திருந்தது. அடுத்த வாரம் அவன் மீண்டும் எல்லைக்கு செல்லவேண்டும்.

அதைக் கூறியதிலிருந்து கொடியின் முகம் வாடிப்போனது. அழுது அழுது முகமே சிவந்து போனது. “நீங்க இப்படி போறீங்கன்னா, என்னை ஏன் கல்யாணம் செஞ்சீங்க?” என நினைத்த நேரமெல்லாம் அவனோடு சண்டை வேறு.

தன்னைப் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறாளே என கோபமெல்லாம் இல்லை இளங்கோவிற்கு. பிரிவை நினைத்துதான் அழுகிறாள் என புரிய, இவள்தான் வேண்டும் என அவன் பட்ட கஷ்டங்கள் கூட இப்போது இனித்தது.

ஒருவழியாக மனைவியை சமாதானம் செய்து இளங்கோ கிளம்ப, அடுத்து ஒரு வாரம் மகள் கூடவே இருந்தார் தேவி.

அவரும் அடுத்து கிளம்ப, இதற்காகவே காத்திருந்ததைப் போல தன் ஆட்டத்தை ஆரம்பித்தார் சுப்பு.

‘எதற்கெடுத்தாலும் சண்டை, அங்க போகாத, இங்க நிற்காத, புருசன் இல்லாத நேரம் எதுக்கு வெளிய நின்னு வேடிக்கை பார்க்குற, இதெல்லாம் என் மகனுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா? ஊர் என்ன பேசும்னு கூட தெரியாதா? என்னத்த தான் சொல்லி உங்க வீட்டுல உன்னை வளர்த்தாங்ளோ?’ என எப்போதுமே குத்தலாக பேசிக் கொண்டு இருந்தார்.

கொடியின் துணைக்கு நந்தினியை அவளுடன் படுக்கச் சொல்லிருக்க, அவள் மூலமாக வீட்டில் நடப்பதை எல்லாம் அறிந்த அப்பத்தா, மகனையும் மருமகளையும் கூப்பிட்டு சத்தம் போட, அதுவும் கொடியின் மேல்தான் இறங்கியது.

இளங்கோ சென்று இரண்டாவது மாதத்திலேயே கொடி உண்டாகிவிட, சந்திராவின் மூலம் வீட்டில் நடப்பதை எல்லாம் அறிந்த இளங்கோவுக்கு மனைவி மேல் அத்தனை கோபம், எதையுமே தன்னிடம் சொல்லவில்லை என்று. பிள்ளை உண்டான நேரத்தில் பேசி அவளைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்தவன் சுப்புவிற்கு அழைத்து,

“ம்மா, கொடியை கொண்டு போய் அத்தைக்கிட்ட விட்டுடுங்க. உங்களுக்கும் அவளை பார்த்துக்க சிரமமா இருக்கும்.” என்றதோடு பேச்சை நிறுத்தி, தன் அத்தையிடமும் சொல்லிவிட்டான். அதனால் மூன்றாம் மாதம் பிறந்த அன்றே தேவியும் வந்து பூ, பழம் வைத்து அழைத்து சென்றுவிட்டார்.

அடுத்து சீமந்தமும் மண்டபத்திலேயே வைத்து, அப்படியே அழைத்துப் போகவும் செய்து விட்டான் இளங்கோ.

தன் மகனின் மாற்றம் அனைத்திற்கும் கொடிதான் காரணம் என, வழக்கமான மாமியாராக மாறி மருமகள் மீது மேலும் மேலும் வன்மத்தை வளர்த்துக்கொண்டார் சுப்பு.

குழந்தை பிறந்து மூன்றாம் மாதம் போல் திரும்பி வந்தவனிடம், மருமகளைப் பற்றி குறையாக சொல்லி அவன் மனதில் மனைவி பற்றி தவறான அபிப்ராயத்தை திணிக்க நினைத்தார்.

ஆனால் அவனுக்குத்தான் தெரியுமே, தன் மனைவியைப் பற்றி. எவ்வளவோ கொடுமைகள் நடந்தும் ஒருமுறை கூட தன் தாயைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட அவனிடம்  பேசியதில்லையென்று.

கேட்டாலும் உடனே பேச்சை மாற்றிவிடுவாளே என மனைவியை நினைத்து பெருமூச்சை விட்டான்.

தாய் பேசிய அனைத்தையும் கேட்டவன், அவருக்கு பதில் சொல்லாமல் மனைவி, மகளைப் பார்க்க கிளம்பிவிட்டான். ஆனால் முகம் மிக தீவிரமாக இருந்தது. அதைப் பார்த்த சுப்புவிற்கு ஏக மகிழ்ச்சி.

அவர் கணக்கு மெய்யாகுமா? பொய்யாகுமா?

ஆனால் காலம் தான் வேறு கணக்கு வைத்திருக்கே… எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என நினைத்த இளங்கோவிற்கு வாழ்ந்தாலே போதும் என்ற நிலைமைக்கு கொண்டு வந்திடுவாரோ…

***

You may also like

1 comment

M. Sarathi Rio July 24, 2026 - 9:49 pm

Super, Super, Super, Super, Super

😉😉😉
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured