சரி – 10
விடியற்காலையின் மெல்லிய குளிர் இன்னும் முழுவதுமாக விலகியிருக்கவில்லை.
ஊருக்குள் நுழையும் சாலையின் இருபுறமும் இருந்த வேப்ப மரங்களின் இலைகளில் பனித்துளிகள் மின்னிக் கொண்டிருந்தன.
தூரத்தில் கோவிலின் மணி ஒலி கேட்டது. அந்த ஓசையோடு சேர்ந்து சேவல்களின் கூவும் சத்தமும், பால் கறக்கும் மாடுகளின் சங்கிலி சலசலப்பும், அடுப்பில் எரியும் விறகின் வாசனையும் ஒன்றாக கலந்து, அந்தக் கிராமத்திற்கு மட்டுமே உரிய ஒரு காலையை உருவாக்கிக் கொண்டிருந்தது.
வேந்தனின் வீட்டிலும் அந்த காலை வழக்கம்போலவே ஆரம்பித்திருந்தது.
வாசலில் ஆதினி போட்டிருந்த கோலம், பனித்துளிகளால் இன்னும் அழகாகத் தெரிந்தது. அதன் மீது ஒரு பூ கூட விழாமல் இருக்க வேண்டும் என்பதுபோல், அதைத் தாண்டியே நடந்தார் தாத்தா. திண்ணையில் அமர்ந்து செய்தித்தாளை விரித்துக் கொண்டவர், முதல் பக்கத்தைப் பார்த்தவுடன் புருவத்தைச் சுருக்கினார்.
“இப்ப எல்லாம் நியுஸ்பேப்பரைத் திறந்தாலே சண்டை… அரசியல்… கொலை… இதுதான்…” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
சமையலறையில் இருந்து அதை கேட்ட பாட்டி, “அதை விட்டுட்டு விளையாட்டு பக்கம் படிங்க… மனசாவது அமைதியா இருக்கும்…” என்று சிரித்தார்.
அந்தச் சின்ன உரையாடலே வீட்டில் இருந்த இறுக்கத்தை கொஞ்சம் குறைத்தது.
ஆதினி அடுப்பின் அருகே நின்றபடி இட்லியை இறக்கிக் கொண்டிருந்தாள். திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்த நாளில், ஒவ்வொரு வேலையையும் தயக்கத்தோடு செய்தவள், இன்று யாரும் சொல்லாமலே எது எங்கே இருக்கிறது என்று தெரிந்து செய்து கொண்டிருந்தாள்.
அது பழக்கம். அல்ல… அந்த வீட்டை மெதுவாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததற்கான அறிகுறி.
“ஆதிம்மா…” பாட்டியின் அழைப்புக்குத் திரும்பிப் பார்த்தாள்.
“வேந்தனுக்கு சட்னில கொஞ்சம் காரம் அதிகமா வைம்மா… அவனுக்கு அப்படித்தான் பிடிக்கும்.”
“சரிங்க பாட்டி…” என்று சொல்லிவிட்டு மிக்ஸியில் இருந்த சட்னியை மீண்டும் திறந்து இரண்டு பச்சை மிளகாயை சேர்த்தாள்.
அந்தச் சிறிய விஷயம் கூட அவளுக்கு புதிதாக இருந்தது.
ஒரு மனிதனின் விருப்பங்களை தெரிந்து கொள்வது… அவனைப் புரிந்து கொள்வதற்கான முதல் படியாக இருக்கலாம். ஆனால்… அதைப் புரிந்து கொள்ள வேண்டிய மனிதன் மட்டும், இன்னும் அவளிடமிருந்து பல அடிகள் தள்ளியே நின்று கொண்டிருந்தான்.
அதே நேரத்தில், மேல்மாடியிலிருந்து வேந்தன் இறங்கி வந்தான்.
வெள்ளை நிற முழுக்கை சட்டை, கருநிற பேண்ட், கையில் கடிகாரத்தை மாட்டிக் கொண்டபடியே வந்தவன், வழக்கம்போல் நேராக சுமதியின் புகைப்படம் முன் நின்றான்.
ஒரு நொடி…
இரண்டு நொடி… எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த அமைதியே அவனது பிரார்த்தனையாக இருந்தது.
பிறகு திரும்பி வந்து மேஜையில் அமர்ந்தான்.
ஆதினி அமைதியாக காலை உணவை எடுத்து வைத்தாள்.
“இன்னைக்கு Site-க்கு போறீய கண்ணா?” என்று தாத்தா கேட்டார்.
“ஆமாம் தாத்தா… ஈரோடு ப்ராஜெக்ட்-ல ஸ்லாப் வொர்க் ஆரம்பிக்குது. அதுக்கு முன்னாடி எல்லாம் செக் பண்ணணும்.”
“அந்த அபார்ட்மென்ட் வேலைதானே?”
“ஆமா தாத்தா…”
“நல்லா பார்த்துக்கோப்பா. ஒரு வீடு கட்டுறது வெறும் சுவரை மட்டும் எழுப்புறது இல்ல… ஒரு குடும்பம் நிம்மதியா வாழுற இடத்தை உருவாக்குறது.”
தாத்தாவின் வார்த்தைகளுக்கு வேந்தன் மெதுவாகத் தலையசைத்தான்.
“அதனால்தான் என்னோட வேலையில எந்த காம்ப்ரமைசும் நான் பண்ண மாட்டேன்.” அந்த ஒரு வரியை ஆதினி கவனமாகக் கேட்டாள்.
அவன் எப்போதும் குறைவாகத்தான் பேசுகிறான். ஆனால் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்… அவன் எப்படியான மனிதன் என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில், மூர்த்தி வேகமாக வெளியே வந்தார். முகத்தில் யோசனை.
அலைபேசியை சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டவர், காலை உணவைக் கூட தொடாமல் தண்ணீர் மட்டும் குடித்தார்.
“என்ன ப்பா… சாப்பிடலையா?” என்று பாட்டி கேட்டார்.
“ஒரு அவசர வேலைம்மா… ஊர்ல கொஞ்சம் பிரச்சனை. போயிட்டு வந்துடுறேன்.” என்று சொல்லிவிட்டு கிளம்ப முயன்றவரை, வேந்தன் அழைத்தான்.
“அப்பா…” மூர்த்தி திரும்பிப் பார்த்தார்.
“நேத்து சொன்ன நிலப் பிரச்சனையா?”
“ம்ம்ம் ஆமா வேந்தா.”
“நான் சைட் போய் வொர்க் முடிச்சுட்டு மதியத்துக்குள்ள வந்திடுறேன்.”
மூர்த்தி சில நொடிகள் மகனைப் பார்த்தார்.
“உன்னோட வேலையும் முக்கியம் வேந்தா… நான் பார்த்துக்கறேன்.”
“வேலை எப்பவும் இருக்கும் தானே ப்பா…” வேந்தன் மெதுவாகச் சொன்னான். “வீட்டுக்குள்ள பிரச்சனை வந்துட்டா….?”
அந்த ஒரு வாக்கியம்… மூர்த்தியின் மனதில் இருந்த பல வருட இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க ஆரம்பித்தது.
அதை கவனித்துக் கொண்டிருந்த ஆதினி…
இந்த அப்பா–மகன் உறவு வெளியில் தெரிந்த அளவுக்கு தொலைவில் இல்லை என்பதை முதல் முறையாக உணர்ந்தாள்.
மூர்த்தி கிளம்பிய சில நிமிடங்களிலேயே வீட்டின் முன் எழுந்திருந்த தூசி மெதுவாக அடங்கிப் போனது. ஆனால் அவர் விட்டுச் சென்ற பதற்றம் மட்டும் அங்கேயே நின்றது.
தாத்தா செய்தித்தாளை விரித்திருந்தாலும், ஒரு வரியைக் கூட முழுமையாகப் படிக்க முடியவில்லை. பாட்டி வழக்கம்போல வீட்டைச் சுற்றியிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய பார்வையும் அடிக்கடி வாசலைத் தேடிச் சென்று கொண்டே இருந்தது.
ஆதினி பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த கைகளைத் துடைத்துவிட்டு வெளியில் வந்தாள். அந்த வீட்டில் இன்னும் புதிதாக இருந்தாலும், யாருடைய முகத்தில் என்ன உணர்வு இருக்கிறது என்பதை இப்போது அவளால் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
மூர்த்தி வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், இந்த வீட்டில் ஏன் இப்படி ஒரு அமைதி வந்து விடுகிறது என்ற கேள்வி மட்டும் இன்னும் அவளுக்குப் புரியவில்லை.
அந்த அமைதியை உடைத்தது வேந்தன்தான்.
காரின் சாவியை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்தவன், தாத்தாவின் அருகில் ஒரு நிமிடம் நின்றான்.
“தாத்தா… நேத்து ராத்திரி அந்த இரண்டு ஊர் விஷயத்தை அப்பா சொன்னாரே… பெரிய பிரச்சனையா?”
தாத்தா செய்தித்தாளை மடித்து அருகில் வைத்தார். சில நொடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு மெதுவாக, “பிரச்சனை நிலத்துல இல்லப்பா… மனசுல…” என்றார்.
வேந்தன் புரியாமல் பார்த்தான்.
“இருபது வருஷமா அந்த எல்லை அப்படித்தான் இருக்கு. யாருக்கும் பிரச்சனை இல்ல. ஆனா தேர்தல் நெருங்குறதுனால, சில பேருக்கு பழைய விஷயமெல்லாம் புதுசா நினைவுக்கு வரும்.”
அந்த வார்த்தைகளில் அனுபவம் இருந்தது.
வேந்தன் ஒரு பெருமூச்சை இழுத்துக் கொண்டான். “அப்பா மறுபடியும் நடுவுல மாட்டிக்குவாரு…” என்றான் வருத்தமாக.
“அதுதான் உன் அப்பன்.” தாத்தாவின் குரலில் பெருமை இருந்தது.
“யாராவது சண்டைன்னு வந்தா, ‘எனக்கென்ன?’ன்னு கதவை மூடிக்கிட்டு இருக்கத் தெரியாது. அதனாலதான் எதிரியும் சம்பாதிச்சிருக்கான்… மரியாதையும் சம்பாதிச்சிருக்கான்.”
வாசலின் தூணில் சாய்ந்து நின்றிருந்த ஆதினி, அந்த உரையாடலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
திருமணத்திற்கு முன்பு, மூர்த்தியைப் பற்றி அவள் கேள்விப்பட்டது இரண்டு விதமான கருத்துகள் மட்டுமே. சிலர், “ஊருக்காக உயிரைக் கொடுப்பார்…” என்பார்கள். இன்னும் சிலர், “தேவையில்லாத விஷயத்துல தலையிட்டு எதிரிகளை வளர்த்துக்கிறாரு…” என்பார்கள்.
இப்போது அந்த இரண்டு கருத்துகளுமே உண்மையாக இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது.
அதே நேரத்தில், வேந்தனின் அலைபேசி ஒலித்தது.
திரையில் ராஜாவின் பெயர்.
“சொல்லு ராஜா…”
“சார்… இங்க சைட்ல கான்கிரீர் போர் பண்ணுறதுக்கு முன்னாடி இஞ்சினியர் ஒரு டவுட் சொல்றாரு. நீங்க வந்தா நல்லா இருக்கும்.”
வேந்தன் ஒரு நொடி யோசித்தான். “சரி… இன்னும் இருபது நிமிஷத்துல வந்துடுறேன்.” என்றான்.
அழைப்பை முடித்தவன் மீண்டும் வீட்டுக்குள் திரும்பினான். தண்ணீர் குடிக்கத்தான் வந்தான் என்று நினைத்த ஆதினி, அவன் நேராக பூஜையறைக்குள் செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
சுமதியின் புகைப்படத்தின் முன் சில நொடிகள் அமைதியாக நின்றவன், மனதிற்குள் ஏதோ சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால்… ஆதினி மட்டும் கவனித்தாள்.
அவன் இன்னும் தன் அம்மாவிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறான்…
அவள் இல்லையென்ற உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தாலும், அவளை இழந்த வெறுமையை மட்டும் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
அந்த நொடி… பாரி வேந்தன் என்ற மனிதனைப் பற்றி, ஆதினியின் மனதில் இருந்த இன்னொரு தவறான கணிப்பு… அமைதியாக உடைந்து விழுந்தது.
வேந்தனின் கார் ஈரோடு புறவழிச்சாலையைத் தாண்டி, “VP Constructions” என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த தற்காலிக அலுவலகத்தின் முன் வந்து நின்றது.
கார் உள்ளே நுழைந்தவுடன் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் மரியாதையுடன் கேட்டைத் திறந்தார். அந்த இடமே ஒரு தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் இரும்புக் கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இன்னொரு பக்கம் லாரிகளில் இருந்து சிமெண்டு மூட்டைகள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இடைவிடாமல் ஓடிக் கொண்டிருந்த கலவை இயந்திரத்தின் சத்தம், தொழிலாளர்களின் பேச்சு, அளவீடு பார்க்கும் பொறியாளர்களின் விவாதம் என்று ஒவ்வொரு மூலையிலும் வேலை மட்டுமே தெரிந்தது.
காரிலிருந்து இறங்கிய வேந்தன் வழக்கம்போல யாரிடமும் தேவையில்லாத சிரிப்போ, தேவையில்லாத அதிகாரமோ காட்டவில்லை. எதிரில் வந்த ஒவ்வொருவருக்கும் தலையசைத்து விட்டு நேராக கட்டிடம் எழுந்து கொண்டிருந்த பகுதியை நோக்கி நடந்தான்.
அவன் வருவதைப் பார்த்ததும் Site Engineer அரவிந்தும், Project Manager ராஜாவும் அவசரமாக வரைபடங்களுடன் அவனை நோக்கி வந்தனர்.
“சார்… மூன்றாவது பிளாக்கோட Staircase landing-ல கொஞ்சம் level difference வருது…” என்றான் அரவிந்த்.
வேந்தன் உடனே வரைபடத்தை வாங்கிப் பார்க்கவில்லை. முதலில் நேராக அந்த இடத்திற்கே நடந்தான். சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அளவுகளைப் பார்த்தான். பிறகு தரையில் முழங்காலிட்டு அமர்ந்து மெசரிங்க் டேபை எடுத்தவன், தானே மீண்டும் ஒரு முறை அளந்து பார்த்தான்.
“Drawing தப்பு இல்ல…” என்று அமைதியாகச் சொன்னான்.
இருவரும் அவனைப் பார்த்தனர். “நேத்து shutter alignment கொஞ்சம் நகர்ந்திருக்கு. அதான் difference.” என்று யோசனையானான்.
“சார்… இப்போ என்ன பண்ணலாம்?” என்றான் ராஜா.
வேந்தன் பதில் சொல்லும் முன் மீண்டும் ஒரு முறை கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“இதை இப்போவே உடைச்சு மறுபடியும் போடுங்க.” அந்த ஒரு வார்த்தையில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
“சார்…” என்று தயக்கத்துடன் ஆரம்பித்த ராஜாவை நிறுத்தியவன், “செலவு எவ்வளவு ஆகும்னு எனக்கு தெரியும். ஆனா நாளைக்கு இங்க ஒரு crack வந்தா… அதுக்கு விலை சொல்ல முடியாது.”
அவன் குரல் உயரவில்லை. ஆனால்… அவன் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
“ஒரு வீடு வாங்குறவங்க, தங்களோட வாழ்க்கை முழுக்க சேர்த்த பணத்தை நம்பி நமக்குக் கொடுக்குறாங்க. அந்த நம்பிக்கையில ஒரு சின்ன விரிசல் கூட வரக்கூடாது.”
அந்த வார்த்தைகளை கேட்ட தொழிலாளிகள் முதல் பொறியாளர்கள் வரை யாரும் மறுபேச்சு பேசவில்லை.
அதே நேரத்தில், ராஜாவின் அலைபேசி ஒலித்தது. அழைப்பை எடுத்தவன் சில நொடிகள் கேட்டுவிட்டு வேந்தனை நோக்கித் திரும்பினான்.
“சார்… அந்த புது டவுன்ஷிப் ப்ராஜெக்ட் விஷயமா Revenue Office-ல இருந்து phone வந்துருக்கு.”
“என்ன சொல்றாங்க?”
“நில அளவீடு இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்காம். வில்லேஜ் சைட்ல இருந்து ஒரு கம்ப்ளைன்ட் போயிருக்காம்.” வேந்தனின் புருவம் மெதுவாகச் சுருங்கியது.
“யாரு கம்ளைன்ட் கொடுத்தது.?”
“இன்னும் details சொல்லல சார்… ஆனா அந்த நிலம் இருக்குற பகுதி…” ராஜா ஒரு நொடி தயங்கினான். “…மூர்த்தி சார் பஞ்சாயத்து பார்க்கப் போயிருக்குற அதே ஏரியாதான்.” என்றான் மெதுவாக.
வேந்தன் உடனே எதுவும் பேசவில்லை. அவன் பார்வை தூரத்தில் இருந்த காலி நிலத்தை நோக்கிச் சென்றது.
காலை வீட்டை விட்டு கிளம்பும்போது, அப்பாவின் முகத்தில் பார்த்த பதற்றம்…
இப்போது இந்த Project-உடன் இணைந்து நிற்கிறது.
இது வெறும் நிலத் தகராறா…?
அல்லது…
யாரோ திட்டமிட்டு நகர்த்தும் விளையாட்டின் முதல் நகர்வா?
அந்தக் கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால்…
வேந்தனின் உள்ளுணர்வு மட்டும்,
“ஏதோ சரியில்லை…” என்று அமைதியாக எச்சரிக்க ஆரம்பித்திருந்தது.
1 comment
நான் தான் அப்பவே சொன்னேனே, ஏதோ சரியில்லைன்னு.
😉😉😉
CRVS (or) CRVS 2797