Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 11

காதல் கசக்குதைய்யா – 11

by Vathani S

வர வர காதல் கசக்குதைய்யா – 11

“மாமா.. என்ன பேசுறீங்க.?” எனக் கேசவன் முன்னே வர, “போதும் கேசவா, இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம். இவங்களை வெளியேப் போகச் சொல்லு..” என அதிர்ந்து நின்றிருந்த பேரன்கள் இருவரையும் பார்த்து சொல்ல,

“மாமா எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம், கொஞ்சம் பொறுமையா இருங்க, இத்தனை வருஷம் கழிச்சு வந்துருக்காங்க, அவங்களை வருத்தப்படுத்தாதீங்க. நாம கஷ்டப்பட்டது எல்லாம் போதாதா.?” எனக் கேசவன் பேச,

“என்ன சொன்ன.? இத்தனை வருஷம் கழிச்சு வந்துருக்காங்களா, யாரு வரச் சொன்னா.? நீ சொன்னியா இல்ல உன் அத்த சொன்னாளா..? யாரும் சொல்லல. அப்புறம் ஏன் வந்தாங்க.. எதுக்கு வந்தாங்க.? முதல்ல வெளியேப் போகச் சொல்லு..” என கர்ஜனையாக சொல்ல,  கேசவன் செய்வதறியாது நிற்க, கணவரின்  குரல் கேட்டு ஓடிவந்த குருவம்மாவும் அப்படியே நிற்க, வீடே நிசப்தத்தின் சொந்தமானது.

அந்த நிசப்தமே சொன்னது, முத்துலிங்கத்தின் இந்தக் குரலுக்கு யாரும் பதில் பேசமாட்டார்கள் என்று. சுற்றிலும் ஒரு முறைப் பார்த்த ஆதன் “தாத்தா..” என முன்னே வர, அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் ஆதித்யன். அந்தக் கைப்பிடியின் அழுத்தம் அடுத்த அடி, ஆதனை எடுத்து வைக்கவிடவில்லை.

“வெளியப் போகலன்னா என்ன செய்வீங்க..” மிக மிக நிதானமாகக் கேட்டான் ஆதித்யன். “வெளியேப் போக முடியாது. ஏன் போகனும்.. இது என் அம்மா வீடு.. நான் இங்க தான் இருப்பேன். வெளியேப் போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.. கண்டிப்பா உங்களுக்கு இல்லை”  என அதே நிதானத்துடன் சொல்ல, கேசவனும், குருவம்மாவும் அதிர்ந்து நிற்க, முத்துலிங்கம் கனன்று கொண்டிருந்த கோபம் மாறாமலே அனல் பார்வையால் முறைத்துக் கொண்டிருந்தார்.

“என்ன.. ஏன் முறைக்கிறீங்க.. நீங்க முறைச்சா..” என சுத்தி இருப்பவர்களைக் காட்டி “இவங்க வேணும்னா பயப்படலாம். நான் ஏன் பயப்படனும். நான் பவித்ராவுக்கு மட்டும் பையன் இல்ல. முகுந்தனுக்கும் பையன் தான். இந்த வீட்டு  வாரிசுதான். அதை இல்லைன்னு யாராலையும் சொல்ல முடியாது..” என்று ஆதித்யன் தொடர்,

“ஆதி ஷட்டப் டா… பிரச்சினை வேணாம். பொறுமையா பேசலாம்..” என ஆதன் அதட்ட,

“எப்பு… பொறு ராசா.. இவ்வளவு கோவம் எதுக்கு. இப்பதான் அந்த ஆத்தா கண்ண தொறந்து எங்களப் பார்த்துருக்கான்னு நான் சந்தோசப்பட்டேன். அதையும் கெடுத்துடாதப்பு. உன் தாத்தன் தான், நான் உன் அம்மச்சி தான், நீங்க எங்க பேரனுங்க தான். விடப்பு சத்தம் வேண்டாம். தாத்தன எதிர்த்து பேசாத சாமி..” எனக் குருவம்மா கெஞ்சல் குரலில் சொல்ல,

“ஓ.. நாங்க உங்க பேரன்னு இப்போ தான் தெரியுதா உங்களுக்கு.? அதுவும் நான்.. நான் உங்க பேரன்னு தெரியுதா.. பார்ரா.. வந்ததுல இருந்து கண்ணு என் பக்கம் கூட திரும்பல.. இப்போ எப்படி பேரன் ஆனேன். என்னை உங்க பேரனா ஏத்துக்க முடியல, என்னை இல்லை.. என் அப்பாவை ஏத்துக்க முடியல. அதனால என் அப்பா மாதிரி இருக்குற என்னை உங்களால் ஏத்துக்க முடியல, அப்படித்தான..” எனக் கண்டனக் குரலில் கேட்க, குருவம்மாவின் முகம் விழுந்துவிட்டது.

உண்மையும் அதுதான்.. ஆதித்யன் காரில் இருந்து இறங்கியதுமே குருவம்மாவின் முகம் யோசனையானது. பின்னாடியே ஆதனும் இறங்க, யோசனையான முகம் மலர்ந்துவிட்டது. அவர் நினைத்தது சரிதான் என்பது போல தன் மகள் பவித்ராவைப் போலவே ஆதன் அவர் முன் நிற்க, யார் வந்து உண்மையை விளக்க வேண்டும். ஆதனைக் கவனித்த அளவிற்கு அவர் தன் மூத்தப் பேரனைக் கவனிக்கவில்லை.

அதற்கு காரணம் முகுந்தன். முகுந்தனின் ஜாடை ஆதித்யனுக்கு, என்ன  தான் மகளின் கணவனாக இருந்தாலும், ஒரு காலத்தில் தன் வீட்டில் கூலி வேலைப் பார்த்தவர்களின் மகன். அதுமட்டுமில்லாமல் வேற்று இனத்தவன். அதனால் அவரால் ஆதித்யனோடு ஒன்ற முடியவில்லை. ஆனால் அதற்காக பாசம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரால் வெளிக்காட்ட முடியவில்லை.

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ, வந்ததில் இருந்து ஆதித்யன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். முதலில் அதைப் பார்த்து வருத்தமடைந்தவன் நேரம் செல்ல, செல்ல முத்துலிங்கத்தின் பேச்சும் சேர்ந்து கொள்ள, கோபமாக மாறிவிட்டது. அந்தக் கோபம் தான் அவனுடைய வார்த்தைகளாக சிதறியது.

“எங்கம்மா தப்பு செய்தாங்க தான் இல்லைன்னு வாதாட நாங்க வரல, ஆனா அந்தத் தப்பை செய்ய தூண்டினது யாரு.? நீங்க தான். நீங்க எல்லோரும் தான். பாசம் காட்டுறேன், அன்பு வைக்குறேன்னு சொல்லி அவங்களை எதுவும் செய்ய முடியாத ஒரு சுழலுக்குள்ள தள்ளீ விட்டுட்டீங்க. அதுல இருந்து அவங்க வெளிய வரவேயில்லை.”

“உங்களுக்கு எல்லாம் பயந்துட்டு, வீட்டை எதிர்த்து அப்படி எதுவும் செய்தா உங்களுக்கு துரோகம் செய்த மாதிரியாகிடும். அவமானமாகிடும்னு நினைச்சாங்க. நீங்க வளர்த்த வளர்ப்பு சரியில்லைன்னௌ ஆகிடும். அது உங்களுக்கு அசிங்கம்ன்னு பயந்தாங்க.”

“இந்த குடும்பத்துக்கு எந்த தலைகுனிவும் வரக்கூடாதுன்னு தான், கேசவ்ப்பா கூட கல்யாணத்துக்கு சரின்னு சொன்னாங்க. அவங்க ஓகேன்னு சொன்னதும் உங்க பிரச்சினை முடிஞ்சதுன்னு அம்மாவை விட்டுட்டீங்க. அவங்க மனசை யாருமே பார்க்கல, நீங்க யாருமே பார்க்கல..” என்றவன், தன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, ஒரு நெடுமூச்சை விட்டான்.

பின் முத்துலிங்கத்திடம் வந்தவன் ஆனா அவங்க யாரையும் விடல, உங்களையும் விட முடியாம, அப்பாவையும் மறக்க முடியாம தான் தற்கொலை செய்துக்கப் போனாங்க. அப்படி அவங்க இறந்துப் போயிருந்தா உங்களுக்கு எல்லாம் பிரச்சினையே இருந்திருக்காது. நீங்களும் உங்க குடும்ப கவுரவத்தையும் ஜாதிப் பெருமையையும் காப்பாத்திருப்பீங்க. நிம்மதியாவும் இருந்துருப்பீங்க.”

ஆனா அவங்க அதிர்ஷ்டம், உங்களோட துரதிருஷ்டம் என் அப்பா அவங்களை காப்பாத்திட்டார். அப்பாவும் அந்த மனுஷன் உங்கக்கிட்ட கொண்டு வந்து விடுறேன்னு தான் சொன்னார். அப்படி கொண்டு வந்து விடுறதுக்கு என்னைக் கொன்னுடுங்கன்னு என் அம்மா சொன்னதால, அவங்க உயிரைக் காப்பாத்த தான் இந்த ஊரை விட்டே போனாங்க..” என ஆவேசமாகப் பேசியவன்,

கேசவனிடம் சென்று “உங்களுக்குத் தெரியுமா.. இங்க இருந்து போய் ரெண்டு வருஷம் ரெண்டு பேரும் தனித் தனியாதான் இருந்துருக்காங்க. ஒருவேளை அம்மாவோட மனசு மாறினா, உங்கக்கிட்ட கொண்டுவந்து விடனும்னு, உங்களுக்கு கல்யாணம் ஆனதும் தான் அவங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்காங்க. இதுல் என் அப்பாவை எல்லோரும் குறை சொல்லுவீங்களா..”

“உங்களை விட நூறு மடங்கு அவர் மனைவியை அவர் நல்லா பார்த்துக்குறார். இதுக்கு மேல என்ன வேனும் உங்களுக்கு..” என தொடர்ந்து பேசியவன், இடுப்பில் இரு கைகளையும் வைத்து, தலையைப் பின்னுக்குத் தள்ளி, இருபக்கமும் ஆட்டியவன், “இதுக்கு தான் அப்பா வரமாட்டேன்னு சொன்னாங்க போல,” என தனக்குத் தானேப் பேசியபடி, ஆதனைப் பார்த்து ‘கிளம்பலாம்’ என்பது போல் தலையை அசைத்தான்.

அவன் முடித்த நிமிடம் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி ஆட்கொண்டிருந்தது அந்த இடத்தை. ஆதித்யன் தன்னைக் கவனித்து எல்லார் முன்பும் சொன்னதைப் பார்த்து குருவம்மாவுக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், தான் செய்த தவறை நினைத்து தன்னையே நொந்து கொண்டார். எவ்வளவு அறிவு, துணிவு, எப்படி பேசுகிறான் என அவர் அதிர்ந்து நின்ற நேரம்,

கேசவன் “ஆதி.. கொஞ்சம் அமைதியா இரு. அத்தை அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க. நீ தப்பா புரிஞ்சிக்காத, அவங்க ஏதோ ஒரு யோசனையில… ஆது நீ சொல்லுடா..” என மற்றவனை அழைக்க,

“நோ ப்பா.. உங்களுக்கு எல்லாம் இது சாதாரணமா இருக்கலாம், பட் எனக்கு அப்படி இல்லை. என் அண்ணனை ஒதுக்கி எனக்கு எந்த சொந்தமும் வேண்டாம். இத்தனை வருஷமும் நீங்க எல்லாரும் இருந்தும் நாங்க இல்லாம தான் இருந்தோம், இனியும் அப்படியே இருந்துக்குறோம். என் அம்மாவும் இதையெல்லாம் விரும்பமாட்டாங்க” எனக் கேசவனிடம் சொன்னவன், ஆதியிடம் “ஆதி கிளம்பலாம் டா..” என வெளியேற ஆரம்பித்து விட்டான்.

இதையெல்லாம் பார்த்த குருவம்மா, ‘கடவுளே.. அவ்வளவுதானா..’ என எண்ணியபடியே தன் நெஞ்சைப் பிடித்தப்படி கீழே சரிய, “அப்பத்தா..” என்றபடி அவரைப் பிடித்திருந்தாள் ஆரணி.

எல்லோரும் ஆதனை சமாதானப்படுத்துவதில் கவனமாக இருக்க, குருவம்மா விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.

 சுந்தரி வீட்டில் இல்லாததால், கதிரவனோடு சென்ற பெண்கள் இருவரும் உடனே திரும்பியிருக்க, வீட்டில் நடந்த பேச்சு வார்த்தைகளைக் கேட்டு, கேசவன் வேண்டுமென்றே தங்களை அப்புறப்படுத்தி இருப்பது அப்போது தான் அங்கு வந்த ஆரணிக்கு புரிந்தது.

ஆதித்யன் பேசியவற்றைக் கேட்டவளுக்கு  மனம் முழுக்க பாரம். அவன் சொன்னதில் அனைத்தும் உண்மைதானே. இத்தனை வருடங்கள் கழித்து ஆசையாக வந்தவனிடம் ஒதுக்கத்தைக் காட்டினால் என்ன செய்வான். அதனால் தான் கோபத்தில் பொங்கிவிட்டான். ஆனால் அவன் பேசியதில் கடைசியில் எதையோ மறைப்பது போல் தோன்றியது அவளுக்கு. அப்படி என்ன மறைக்கிறான், என யோசனையிலேயே அவர்களிடம் பார்வையைப் பதித்து இருந்தாள். அண்ணனை விட்டுக் கொடுக்காமல் ஆதன் பேசியதைக் கேட்டதும், அண்ணனும் தம்பியும் ரொம்ப பாசம் போல என்றும் எண்ணிக் கொண்டாள்.

ஆதித்யன் குருவம்மாவிடம் பேச ஆரம்பிக்கும் போதே அவரை மட்டுமே கவனிக்க ஆரம்பித்திருந்தாள் ஆரணி. அதனால் குருவம்மா கீழே விழ ஆரம்பிக்கும் போதே “அப்பத்தா” எனக் கத்தியபடியே ஒடிவந்து அவரைப் பிடித்திருந்தாள்.

ஆரணியின் சத்தத்தைக் கேட்டு ஆண்கள் அனைவரும் திரும்பி பார்க்க, ஆரணி தன் மடியில் அப்பத்தாவை வைத்து “அப்பத்தா.. அப்பத்தா..” என அவர்  கன்னத்தில் தட்டிக் கொண்டிருக்க, நிகிதா தண்ணி எடுக்க உள்ளே ஓடியிருந்தாள்.

அடுத்தடுத்த நிமிடங்கள் பரபரப்பாகக் கழிய, குருவம்மாவை பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இதையெல்லாம் பார்த்த ஆரணி உடனே பாண்டியனுக்கு அழைத்துச் சொல்லிவிட, அமைதியாக கேட்டவர் ஒன்றும் சொல்லாமல், உடனே கிளம்பி வருவதாக சொல்லிவிட்டார்.

பல பல திக் திக் நிமிடங்கள் கடந்து கொண்டிருக்க, ஆளுக்கொரு மூலையில் ஒவ்வொருவரும் அமர்ந்திருக்க, நிகிதா மட்டும் ஆதனை முறைத்துக் கொண்டிருந்தாள்.  அண்ணனோடு அமர்ந்திருந்த ஆதனும், அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் கெஞ்சும் பாவனையோடு.

‘அதிர்ச்சி’தான் என்று மருத்துவர் வந்து சொன்ன பிறகு தான் அனைவரும் ஆசுவாசமாக மூச்சை விட்டனர். ஆதித்யனால் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. தேவையில்லாமல் பேசி அவர்களை வருத்தப்படுத்தி விட்டோமோ என்று கஷ்டமாக இருந்தது. ஆனாலும் ஆபரேஷன் தான் புரையோடிய புண்ணுக்கு சரியான வைத்தியம் என்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.

அப்போது அவனருகில் நிழல் பட, நிமிர்ந்து பார்த்தவன் முன்னே காஃபி கப்புடன் நின்றிருந்தாள் ஆரணி. யோசனையாகப் பார்க்க, “அப்புச்சி தான் கொடுக்க சொன்னாங்க, உங்களுக்கு தலைவலியாமே.. எடுத்துக்கோங்க அத்தான்.” என முறையோடு சொல்ல,

அவள் பேசியது எரிச்சலைக் கொடுத்தாலும், அத்தான் என்றது ஏனோ மனதை வருடிச் சென்றது, சிறு தலையசைப்புடன் கஃபியை எடுத்துக் கொண்டான். அவன் காஃபியை எடுக்கவும் தானும் ஒன்றைக் கையில் வைத்தபடி அவனருகிலே உட்கார்ந்து விட, ‘என்ன’ என்பது போல் யோசனையாகப் பார்த்தான்.

“ஒன்னுமில்ல.. சிங்கிளா இருக்கீங்களே உங்களோட மிங்கிளாகலாம்னு உக்காந்தேன். வேண்டாம்னா போறேன்..” என எழப் போக, “இட்ஸ் ஓகே சிட்..” என்று தன் காஃபியில் கவனம் செலுத்தினான். ஆனால் அதுவரை இருந்த மன இறுக்கம் ஆரணியின் இந்த கிண்டல் பேச்சில் சற்றே தளர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

“உங்க தாத்தா நம்மளையே பார்க்குறாரா..” என்றான் தலையை அவள் பக்கம் திருப்பாமலே..

“எஸ்.. என் அப்புச்சி மட்டுமில்ல, எல்லாருமே நம்௳ளைத்தான் பார்க்குறாங்க.. ஆமா ஏன் கேட்குறீங்க..”

“சும்மாதான்.. அவருக்கு என்னை பிடிக்கலதானே, நீ என்கூட வந்து பேசுற, அப்புறம் உன்னையும் பிடிக்காம போயிட போகுது..” என்றான் ஆதித்யன். அவள் பக்கத்தில் வந்ததுமே அவனுக்குள் ஒரு திட்டம். அதை எப்படி செயல்படுத்துவது என்ற யோசனையில் தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“என்ன.. என்னைப் பிடிக்காம போயிடுமா.. என் அப்புச்சிக்கா.. செம காமெடி பன்றீங்க அத்தான். அவங்க ரெண்டு பேருக்கும் நானென்றால் உசுரு. எனக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க தெரியுமா.? நான் கேட்டா முடியாது, இல்லைன்னே சொல்ல மாட்டாங்க..” என சிலாகிப்பாக பேச,

“ம்ம்ம்.. அப்ப சரி.. நான் நினைச்சது நடந்துடும்..” என்றபடியே ஆதனைத் தேட, அவனோ யார் கண்ணிலும் படாத ஒரு தூணின் மறைவில் நின்று, நிகிதாவிடம் எதற்கோ கெஞ்சிக் கொண்டிருக்க, அவளோ அவனை கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தாள்.

‘அய்யோ இது வேறையா.. நிக்கிதா தான் ஆதன் சொன்ன பொண்ணா.. அவன் ரூட் கிளியர் ஆகிடும்..’ என்று நினைத்தவன், ஆரணியிடம் திரும்ப, அவளோ காஃபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

‘எதோ ஃபில்டர் காஃபிய கொடுத்த மாதிரி என்ன ரசிப்பு மேடத்துக்கு, என மானசீகமாகத் தலையில் தட்டிக் கொண்டவன், “எங்கூட மிங்கிளாக உனக்கு விருப்பமா..?” என சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டான் ஆதித்யன்.

“எத மிங்கிளாகவா.. எதுக்கு என் அப்பா ஹிட்லர் அவதாரம் எடுக்கவா.. ஆள் விடுங்க சாமி…” என அவளும் சாதாரணமாகச் சொல்ல, ஆதித்யனுக்குத் தான் சுருக்கென்றானது. கேட்டிருக்கக் கூடாதோ என்று இப்போது யோசித்தான்.

அவன் அமைதியானதைக் கண்டவள், “என்ன நீங்க ஒரு கிண்டல் பேச்சைக் கூட தாங்கிக்க மாட்டேங்குறீங்க. இப்படி எல்லாத்துக்கும் அப்செட் ஆனா எப்படி. எப்படி உங்க கூட காலம் முழுக்க குப்பை கொட்டுறது. நான் வேற ஒரு தடவை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன். அதனால என்ன செய்றீங்கன்னா இந்த ஷார்டெம்பர் மாதிரியான் டிசிசீஸ்க்கு ட்ரீட்மென்ட் இருக்காம். சீக்கிரம் எடுங்க. அப்போதான் நம்ம லைஃப் நல்லாருக்கும். ஓகே.. அப்புச்சி கண்ணுல தீப்பொறி பறக்குது, நாம டீட்டைலா அப்பூறம் பேசுவோம்..” என்று மிகவும் சாதாரணமாகப் பேசிவிட்டு, முத்துலிங்கத்திடம் சென்றுவிட்டாள். ஆரணியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்தது ஆதித்யன் மட்டுமல்ல, அவனிடம் பேசலாம் என்று வந்த கேசவனும் தான்.

You may also like

Leave a Comment

About Me

Featured