முத்தமழை – 41
இன்று விடியலிலேயே கிளம்பி கீழே வந்திருந்தான் கர்ணன். அவனின் வரவிற்காகவே காத்திருந்ததைப் போல கிளம்பி அமர்ந்திருந்தனர் பார்வதி பாட்டியும், சொக்கலிங்கமும்.
உறக்கமில்லா விழிகள் சிவந்து போயிருக்க, பார்த்ததுமே புரிந்தது, இரவெல்லாம் தூங்கவில்லையென்று.
மனைவியை அவள் வீட்டில் விட்டு இன்றோடு பத்து நாட்கள் ஆகியிருந்தது. அன்றைய தாயின் பேச்சிற்கு பிறகு அவளை தனியே விடவே அவனுக்கு பயமாக இருந்தது.
அதனால் அடுத்த நாளே சீதாவின் பொறுப்பில் விட்டவன், வந்தனா தொடங்க இருக்கும் ஹோட்டலுக்கு திட்டங்கள் போட்டு கொடுக்க சொன்னான்.
அன்றிரவு மனைவியை அவள் வீட்டில் விட்டு வரும் போது தன் கையனைப்பில் வைத்தபடியே “இங்க பாரு அம்மு.. அவளுக்காக நான் செய்வேன் தான்.. ஆனா அவ விளையாட்டுத்தனமா இருந்தா எப்படி ஒரு தொழில் வச்சுக் கொடுக்க, ஹ்ம்ம் அவக்கிட்ட பேசு, அவ கூடவே இரு, என்ன பண்றானு பாரு.. இந்த மாமாவோட இத்தனை வருச உழைப்பைத் தூக்கி அவளுக்கு கொடுக்க போறேன், அதை எப்படி திருப்பி வாங்கனும்னு உனக்குத்தான் தெரியனும்.. என் பிள்ளைங்களுக்கு என்னோட சொத்துனு கொஞ்சமாவது இருக்கனுமில்ல..” என அவளிடம் பேசி பேசியே அவளையும் சமாதானம் செய்து, தன்னையும் சமாளித்து வந்திருந்தான்.
வல்லிக்கும் இப்போது தன் மனதிற்குள் அலையடித்து கொண்டிருக்கும் பிரச்சினைகளில் இருந்து ஒரு விடுதலை தேவையாக இருக்க, கணவனுக்காக இந்த வேலையில் இறங்கிவிட்டாள்.
இதோ பத்து நாட்கள் முழுதாக முடிந்திருக்க, ஹோட்டலின் வேலையும் முடிந்திருந்தது.
வந்தனாவின் விளையாட்டுத்தனமெல்லாம் எங்கேயோ போயிருந்தது. அதிலும் ஜோனோடு சேர்ந்து அவள் விவரிக்கும் திட்டங்கள் நிச்சயம் இவள் ஜெயித்து விடுவாள் என்ற எண்ணத்தை எல்லோருக்கும் கொடுத்திருந்தது.
இதோ இந்த பத்து நாட்களில் விடியலில் கிளம்பினால், இரவு அனைவரும் உறங்கிய பின்தான் வீடு வருவான்.
காலையில் பாட்டியையும், அப்பாவையும் பார்த்துவிட்டு செல்ல நேரம் ஒதுக்கினால், இரவில் யாழினியோடு நேரம் செலவழிப்பான்.
இப்போது யாழினி மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்க, அவளுக்கென்றே தனியாக ஒரு காரை வாங்கிக் கொடுத்து, தனியாக போய் வரும்படி வைத்துவிட்டான்.
வீட்டில் மற்ற யாரிடமும் பேசுவதில்லை. சுமித்ராவோ, சுந்தரோ வழக்கம் போல இவனை கண்டுகொள்வதில்லை.
வல்லி இருக்கும் போது அறை வரைக்கும் பிள்ளைகளை விடும் சுமித்ரா, சுந்தரை கர்ணன் அடித்ததில் இருந்து, அறையை விட்டு வெளியில் கூட விடுவதில்லை .
அனைத்தையும் மௌனமாகவே கவனித்து, தன் அன்றாட வேலைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் கரணன்.
தந்தை இருமும் சத்தம் கேட்டு நிகழ்வுக்கு வர, இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை என்று வீட்டில் தென்பட்ட அமைதி கூற, “போலாமா ப்பா..” என்று தந்தையிடம் கேட்டபடி, அவரின் சட்டைய நன்றாக இழுத்து விட்டு, நெஞ்சை நீவி விட்டான்.
“போலாம் தம்பி.. நீ காஃபி குடிக்கலயா..?” என்றவரிடம்,
“வேண்டாம் ப்பா.. போற வழில பார்த்துக்கலாம்..” என்று பதில் சொல்லியபடியே பாண்டியனைப் பார்க்க, பாண்டியன் வேகமாக வந்து வீல்சேரைப் பிடித்துக்கொள்ள, பார்வதி பாட்டியின் கையைப் பிடித்தபடி முன்னால் நடந்தான் கர்ணன்.
“ஏன் தம்பி.. இப்படியே எவ்ளோ நாள் இருக்க முடியும். வனிதா மேலதான் தப்பு.. அதுக்காக அவளை அப்படியே விட முடியாது இல்லையா? அவளுக்கு உங்க அப்பா மேல பாசம் இல்லாம இருக்கலாம், ஆனா அவருக்கு அப்படி இல்லையே தம்பி. வனிதாவை நினைச்ச ரொம்பவே கஷ்டப்படுறார், அது என்னனு பார்த்து சீக்கிரம் முடிச்சு விடு..” என்ற பாட்டியின் பேச்சில் கர்ணனின் உடல் இறுகிப் போனது.
“பாட்டி.. இப்போ ஏன் அந்த பேச்சு..? நான் என்ன செஞ்சாலும் சரியாதான் இருக்கும்னு அப்பாவுக்கு தெரியும். கொஞ்ச நாள் இப்படியே இருக்கட்டும் விடுங்க..” என்றதும், பார்வதி பாட்டிக்கும் அடுத்து எதுவும் பேச தோன்றவில்லை.
அவன் சொல்வதும் உண்மைதானே, கொஞ்ச நாள் இப்படியே இருக்கட்டும், அப்போதுதான் புத்தி வரும் என்று நினைத்துக் கொண்டார்.
ராஜலட்சுமி மிகவும் அமைதியாக இருந்தார். கர்ணனிடம் பேசவில்லை என்றாலும் அவனுக்கு எதிராக பேசாமல் இருந்ததில்லை.
அவன் வீட்டில் இல்லாத நேரம் சொக்கலிங்கத்திடம் ‘என்ன இருந்தாலும் நான் ரெண்டாவதுனு காட்டிட்டீங்கல்ல, அவன் தான் உங்களுக்கு முக்கியம், நானோ என் பிள்ளைங்களோ இல்லை..” என புலம்பிக்கொண்டே தான் இருக்கிறாள்.
இவர்கள் மூல கர்ணன் காதிற்கு போவதில்லை. பாண்டியன் அவனிடம் எதையும் மறைப்பதில்லை.
அதனால் எப்படியும் எல்லாவற்றிற்கும் சேர்த்து தான் கர்ணன் முடிவெடுப்பான் என்று புரிந்து கொண்டனர் பெரியவர்கள் இருவரும்.
அன்று கர்ணன் பதறியடித்தெல்லாம் ஸ்டேஷனுக்கு செல்லவில்லை. அவனுக்கு முன்னே வசந்த் சென்று ஓரளவுக்கு அனைத்தையும் சரி செய்துதான் வைத்திருந்தான்.
இறுக்கம் சூழ்ந்த கடினமான முகத்துடன் உள்ளே வந்த கர்ணன், நேராக சென்று இன்செபெக்டரின் எதிரில் அமர, அவனின் ஆளுமையான உயர்த்தில் அந்த காவலரே சற்று அசந்து தான் போனார்.
கர்ணனைப் பார்த்ததுமே அதுவரை கூச்சலிட்டு கொண்டிருந்த கூட்டம் சட்டென அமைதியாகிவிட, “இங்க பாருங்க சார்.. எங்களுக்கு நியாயம் கிடைக்காம இங்க இருந்து போக மாட்டோம்..” என்ற மாப்பிள்ளையின் அம்மாவை கர்ணனின் கூர்விழிகள் துளைத்தது.
“அவங்க டிமாண்ட் என்ன சார்.?” என்று கேட்டான், எந்த முகப்பூச்சும் இல்லாமல்.
“அது.. அது..” என அந்த இன்ஸ்பெக்டர் இழுக்க,
“ஓபனா பேசலாம் சார்.” என்ற கர்ணன் “எவ்வளவு எதிர்பார்க்கிறாங்க?” என நேரடியாக கேட்க
“சார்.. சார்.. அவங்க டிமாண்ட் மணி இல்ல.. நீங்க தப்பா எடுத்துக்கிட்டிங்க.. அவங்களோட டிமாண்ட் உங்க வீட்டு பொண்ணு தான்..” என அந்த இன்ஸ்பெக்டரும் பட்டண கூறிவிட
இறுகிப் போய் அமர்ந்திருந்த கர்ணன் எதையும் யோசிக்கவில்லை. நேராக சென்று அங்கு சுந்தருடன் நின்றிருந்த வனிதாவின் கணவன் ரமேஷை ஓங்கி உதைத்து தள்ளி இருந்தான்.
“ஏய்..” என ரமேஷின் பெற்றோரும், வனிதாவும் பதறிக் கொண்டு வர,
“ஷ்.ஷ்..” என உதட்டில் விரல் வைத்து அவர்களை அடக்கி இருந்தான்.
பின் சுந்தரிடம், வனிதாவைக் காட்டி “இவளுக்கு தான் அறிவு இல்ல, கூடப்பிறந்தவன்னு அவ மேல பாசம் இல்ல.. ஆனா உனக்கும் கூடவா இல்ல, இப்படி ஒருத்தனுக்கு எப்படிடா யாழியை கட்டி வைக்க மனசு வருது.. பணம் சொத்து அது மேல அவ்வளவு ஆசையா உங்களுக்கு.? என இப்போது சுந்தரை ஓங்கி அறைந்திருக்க, அந்த இடமே சட்டென அமைதியாகிவிட்டது.
“உங்க பொண்ணு சுமித்ராவை இப்படி ஒரு குடிகாரனுக்கு கட்டி வைக்க உங்களால முடியுமா? சொல்லுங்க யார் வீட்டு பொண்ணு எப்படியோ போனா பரவாயில்லை, அப்படித்தானே..” என்றதும் ரமேஷின் பெற்றோரால் கர்ணனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.
“ஸார்.. இவன் ஒரு ட்ரக் அடிக்ட்.. அதை மறைச்சு எங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்துருக்காங்க. எங்களுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சு. எங்க பொண்ணுக்கு விருப்பமில்ல. அதை சொன்னா கேட்காம, எங்க மேல கம்ப்லைன்ட் கொடுத்துருக்காங்க, பொண்ணுக்கு விருப்பமில்லனு தெரிஞ்சும் கட்டாயப்படுத்தி, அவளை மனசளவுல கஷ்டப்படுத்தி மன அழுத்தத்துக்கு தள்ளிட்டாங்க. இதனால எங்க பொண்ணு சூசைட் வரைக்கும் போயிட்டா. இதுக்கெல்லாம் நான் கம்ப்ளைன்ட் பண்றேன், நீங்க ப்ராப்பரா ப்ரசீட் பண்ணுங்க..” என்றதும் அனைவரும் அதிர்ந்தே போயினர்.
“இல்ல.. இல்ல தம்பி.. உங்க தங்கச்சி பிடிவாதமா கேட்கவும் தான் நாங்க இவ்ளோ தூரம் அடம் பிடிச்சோம், மத்தபடி எங்களுக்கு பெருசா விருப்பமில்ல. நீங்க எது செய்றதா இருந்தாலும், உங்க அம்மாக்கிட்டயும், உங்க தங்கச்சிக்கிட்டயும் கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க..” என மாப்பிள்ளையின் அம்மா பதறியடித்து கூற, கர்ணன் வனிதாவை பார்த்த பார்வையில், அவளுக்கு பயத்தில் இதயமே நின்றுவிடும் போல் இருந்தது.
அனைவரையும் பேசி சமாளித்து வீட்டுக்கு வர, மனைவியும் தங்கையும் முட்டிக்கொண்டு நிற்க, கர்ணனால் சுத்தமாக முடியவில்லை.
‘வீடே வேனாண்டா.. என்ன காட்டுக்கு அனுப்புங்க’ என்று கதறும் அளவுக்கு அவனின் சொந்தங்கள் இருந்தால் அவனும் தான் என்ன செய்வான்.
“நீ உன்னோட ரூமுக்கு போ..” என கடினமான குரலில் கூற, பெண்கள் இருவரும் அமைதியாகிவிட, யாழினி வல்லியைத் தயக்கமாக பார்த்து “சாரி வல்லி” என அறைக்கு சென்று விட்டாள்.
“நீ வா..” என மனைவியை நகர்த்தி, தங்கள் அறைக்கு அழைத்து வந்தவன் ஜோன்சும், வந்தனாவும் சேர்ந்து செய்த தில்லாலங்கடி வேலைகளை கூற, தலையே வெடித்து விடும் போல் ஆனது வல்லபிக்கு.
“என்ன பாவா இதெல்லாம்.? எப்படி இவ்ளோ தைரியம் இவங்களுக்கு? அதுங்கதான் பைத்தியங்க, இந்த யாழினிக்கு என்னாச்சு? அவ எப்படி சம்மதிச்சா?” என கேட்டு கேட்டு மூவரையும் திட்டிக்கொண்டே இருக்க, கர்ணனுக்கு அதுவரை இருந்த டென்சன், கோபம் எல்லாம் போக, மனைவியின் அருகில் மனம் லேசாக உணர்ந்தான்.
அடுத்த நாள் காலையில் மனைவிக்கே சொல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு கோயம்புத்தூர் வந்தான்.
நடந்த எதையும் அவர்களிடம் மறைக்கவில்லை கர்ணன், வந்தனா செய்ததையும் சேர்த்தே தான் சொன்னான. அதற்கு சீதாவிடமிருந்து அவளுக்கு நன்றாக அடி விழுந்தது வேறு ஒரு கதை.
“இவளை இப்படியே விட்டா சரி வராது தம்பி, சீக்கிரம் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து தள்ளி விட்டுடுவோம்.. அவளாச்சு, அவ புருசனாச்சு.. தினம் தினம் இவ கூட போராடி எனக்கு பிபி அதிகமானது தான் மிச்சம்..” என சீதா புலம்ப,
“சீதாம்மா நீங்க செய்றது ரொம்ப தப்பும்மா.. என்னோட வாழ்க்கையில நான் ஒரு பெரிய லட்சியம் வச்சிருக்கேன், அந்த லட்சியம் நிறைவேறாம கல்யாணம், கன்றாவினு எந்த கமிட்மென்டும் வச்சிக்க மாட்டேன். கல்யாணம் பண்ணி வைக்கனுமா? உன் பையனுக்கு பண்ணு, இல்ல நீ பண்ணிக்கோ.. என்னை பண்ணுனு சொல்லாத..” என்ற நேரம் டேபிளில் இருந்த புத்தகம் அவளை நோக்கி பறந்து வர,
“சீதாம்மா வன்முறை ஆகாது..” என கர்ணனின் பின் நின்று கத்த, அங்கிருந்த அத்தனம் பேரின் முகத்திலும் புன்னகை வந்தது.
“ம்ச் தனு.. உனக்காக நான் என்னோட சேவிங்க்ஸ் எல்லாம் இன்வெஸ்ட் பண்ணலாம்னு இருக்கேண். டென் டேய்ஸ் டைம், அதுக்குள்ள பக்காவா எல்லாம் ரெடியாகி, நீ உன்னோட ஹோட்டலை ஓபன் பண்ணனும், அப்போதான் உன்னை ஒரு லட்சியவாதினு நான் நம்புவேன்..” என இயல்பாக கூற,
“மாமா.. நிஜமாவா? நிஜமாவே வா? வல்லி உனக்குத் தெரியுமா? சூப்பர்.. சூப்பர் மாமா.. எல்லாம் ரெடியா தான் இருக்கு.. நீங்க ரெடியா இருங்க, டென் டேய்ஸ்ல என்னோட ஹோட்டல் செரிமனிக்கு..” என ஆனந்தமாக கூற, பெரியவர்கள் மூவரும் புரியாத படம் பார்ப்பது போலவே அமர்ந்திருக்க,
“ஆமாம் எல்லாம் ரெடின்னா, அப்போ பேரும் ரெடியா தான இருக்கும்.. என்ன பேர் உன்னோட ஹோட்டலுக்கு..” என கர்ணன் சிரித்துக்கொண்டே கேட்க,
“யுனிக்கே, கேட்சியா ஒரு பேரு மாமா.. ‘ஹோட்டல் தின்னை.. தின்னைக்கு வாங்க தின்னுட்டு போங்க..’ எப்படி..?” என இல்லாத காலரைத் தூக்கிவிட்டு பேச, இப்போது அதிர்ச்சியில் உறைந்து போனது அவளின் குடும்பம் மட்டுமல்ல கர்ணனும் தான்.