Home Antiheroதூரம் – 07

தூரம் 7

இளங்கோ வீட்டிற்குள் நுழையும் போது வீடே நிசப்தமாக இருந்தது. முன்பெல்லாம் அவனின் வண்டி சத்தம் கேட்டதுமே வாசலில் வந்து நிற்பாள் மனைவி.

பிரச்சனை என்றானபின் அவனின் கோபத்திற்கு பயந்து வெளியே வந்து நிற்பதில்லை. அதன்பிறகு அது வழக்கமாகிவிட்டது. இன்று ஏனோ மனைவியின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்பது போல் இருந்தது.

எப்படி அவள் முன் போய் நிற்பது என்ற யோசனையிலேயே அறைக்குள் நுழைய, ஹாலில் டம்ளர் வைக்கும் சத்தம் கேட்க, காஃபி என்று புரிந்தது.

அவனுக்குத் தேவையான அனைத்தும் அந்தந்த நேரத்திற்கு சரியாக நடந்துவிடும். அந்த வகையில் கொடியை அடித்துக்கொள்ள முடியாது.

உடை மாற்றி வந்தவன், காஃபியை எடுத்துக்கொண்டு மனைவியைத் தேட, கிச்சனில் சத்தம் கேட்டது.

‘இருபத்தி நாலு மணி நேரமும் கிச்சன்ல என்னதான் செய்வாளோ?’ என்று மனதுக்குள் புலம்பியபடியே டிவியை ஆன் செய்ய உள்ளே வந்தார் சுப்பு.

மகனின் வண்டியைப் பார்த்துதான் வந்தார். அவருக்கும் குழந்தைகள் இல்லாமல் பேச வேண்டும். இதுதான் அதற்கு சரியான நேரம் என்று வந்திருந்தார்.

தன் அன்னையைப் பார்த்தவன், “வாம்மா… காஃபி குடிக்கிறீயா?” என்றதும், காஃபியோடு வந்தாள் கொடி. அதை மாமியாரிடம் கொடுத்துவிட்டு நகர போக,

“நாளைக்கு சீனிசார் வீட்டுல ஃபங்க்ஷன். ஃபேமிலியோட போகணும். நீங்க மூனு பேரும் ரெடியாகி வந்துடுங்க. நான் அங்க வந்துடுவேன்.” என சுவற்றிடம் சொல்வது போல சொல்ல, ‘சரி’ என்று தலையசைத்தவள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

“தம்பி, சின்னப்பத்தாவை போய் பார்க்கவே இல்லையா? நீ போயே ஒரு வாரத்துக்கு மேல ஆச்சுன்னு நந்தினி சொன்னா…” என பேச்சை ஆரம்பிக்க,

“ஆமாம்மா… அதுக்குள்ள வந்து சொல்லிட்டாளா? இன்னைக்கு போய் பார்க்குறேன். எப்படி இருக்காங்க அப்பத்தா?” என்றான் சிரித்தபடியே.

“அதுக்கென்ன… இன்னும் மாமியார்தனத்தை காமிச்சிகிட்டுத் தான் கெடக்கு, சந்திரா தான் பாவம். நம்ம வெங்கடேஷ், அவனுக்கு தெரிஞ்ச குடும்பம் ஒன்னு நந்தினியை கேட்குறாங்கனு சொல்றான் தம்பி. நான் உங்கிட்ட பேசிட்டு அதுக்குப்பிறகு சந்திராக்கிட்ட பேசலாம்னு சொல்லிருக்கேன். உனக்கு எப்படின்னு சொல்லு தம்பி…” என்றதும்,

“சரிம்மா…” என்றவன் தம்பிக்கு உடனே அழைத்து விவரம் கேட்டவன், “சரி, நான் சித்திக்கிட்ட பேசுறேன்.” என்றுவிட்டு “வேறென்னடா?” என கேட்க,

“அது… அது… ஒன்னும் இல்லண்ணா… அண்ணி எப்படி இருக்காங்க?” எனவும்,

“ஒரு நிமிசம் இரு.” என்றவன், “ம்மா அவளை கூப்பிடுங்க.” என தாயிடம் கூற, அவரோ எதற்கென்றே கேட்காமல், “கொடி” என சத்தமாக அழைக்க,

“சொல்லுங்கத்த…” என வந்தவளிடம், “தம்பிதான் கூப்பிட்டான்.” எனவும் கணவனைத் திரும்பி பார்க்க, அவளிடம் போனை நீட்ட, ‘யார்’ என்ற கேள்வியோடு வாங்கி, “ஹலோ!” என்றதும், “அண்ணி எப்படி இருக்கீங்க?” என்றான் வெங்கடேஷ்.

“சொல்லுங்க தம்பி, நல்லா இருக்கேன். நீங்க, வனிதா, பசங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?” என்றாள் மெதுவான குரலில்.

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணி, வனிதா நேத்து உங்ககிட்ட பேசுனேனு சொன்னாளே…”

“ஆமா தம்பி பேசினா. சின்னத் தம்பிக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னா. இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு? அழாம பார்த்துக்கோங்க தம்பி, அழுதாதான் அவனுக்கு சேராதே…” எனவும்,

“இந்த வாரம் வரோம் அண்ணி, நீங்களே அவனுக்கு சொல்லுங்க. உங்க பேச்ச மட்டும்தான் அவன் கேட்குறான்.” என சிரிக்க,

“சரி தம்பி வாங்க, பிள்ளைக்கு வேறு எதாவது வேணுமான்னு வனிதாவை கேட்டு சொல்லுங்க தம்பி. நான் அப்புறம் வனிதாவுக்கு கூப்பிட்டு பேசுறேன், இப்போ வைக்கட்டுமா?” என கேட்கவும்,

“அண்ணி…” என இழுத்தவன்,

“என்ன தம்பி?” என்றாள் கொடி யோசனையாக.

“ஸாரி அண்ணி! நான் முன்னாடியே இதை செஞ்சிருக்கணும். நீங்க எனக்கு அம்மா மாதிரி, நீங்க கஷ்டப்படும் போது நான் பார்த்துட்டு சும்மாவே இருந்துட்டேன்.” என வருத்தமாக கூற,

“அதெல்லாம் ஒன்னுமில்ல தம்பி, நான் வைக்கிறேன்.” என்று அடுத்து எதுவும் பேசாமல் போனை கணவனிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இந்த பேச்சை யார் எடுத்தாலும் அவளுக்கு தாள முடிவதில்லை. தன்னுடைய இரக்க குணத்தை தவறாக ஒருவர் பயன்படுத்தி ஏமாற்றியதை ஞாபகப்படுத்துவது போலவே உணர்வாள்.

அதனால் யார் இந்த பேச்சை எடுத்தாலும், உடனே வேண்டாமென ஒதுக்கிவிடுவாள். சொல்லி கேட்கவில்லையென்றால் ஒதுங்கிவிடுவாள்.

கடனை தன் தந்தை அடைத்துவிட்டார் என்று கணவனிடம் அவளே இன்னும் சொல்லவில்லை. அதற்குள் மாமியார், கொழுந்தன் என அனைவரும் பேச, அவனிடம் சொல்லிவிடுவார்களோ? அதற்கும் கத்துவானோ என்று பயந்து போனாள் கொடி.

மனைவியை பார்த்து யோசனையாக போனை வாங்கியவன், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாயிடம், “என்னம்மா?” என்றான்.

“அது… தம்பி… உங்க மாமனாரும் உங்க அப்பாவும் போய், அந்த பரமன் கணக்கை முடிச்சுட்டு வந்துருக்காங்க.” என மெதுவாக சொல்ல,

“சரிமா, அதுக்கு என்ன?” என மிகவும் சாதாரணமாக கேட்டான் இளங்கோ. அந்த பேச்சில் வெகுவாக அடி வாங்கினாள் கொடி. அங்கு நிற்க முடியவில்லை அவளால்.

“என்ன தம்பி இப்படி பேசுற? அந்த கடனால தான இவ்வளவு பிரச்சனையும் வந்தது. அதுதான் அந்த கடனை கட்டி முடிச்சாச்சே, இன்னும் என்ன தம்பி? கொடி கூட சாதாரணமா பேசலாம் இல்ல?” என மகனிடம் பாவமாக கேட்க,

“சரிமா, நீ சொன்னா சரிதான். வேற என்னம்மா?” என்றான் அப்போதும் வெகு சாதாரணமாக.

“தம்பி…” என பரிதாபமாக விழித்தார் அவனைப் பெற்றவர்.

“ம்மா, அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் சொல்றேன். எங்க பிரச்சனையில நீங்க யாரும் தலையிடாதீங்க. கடன் வாங்கினதோ, திருப்பி கொடுத்ததோ பிரச்சனை இல்ல. என்கிட்ட சொல்லாம மறைச்சதுதான் பிரச்சனை. இது ஒரு தடவையோட நிக்கல, மூனு தடவை.” என்று இறுக்கமாய் கூற,

“தம்பி நீ நல்லா யோசிச்சு பாரு, கொடி உன்னை மதிக்காம, உன்னை ஏமாத்தணும்னு எதுவும் செய்வாளா? அப்போ இருந்த பயமும் பதட்டமும் தான் காரணம். உனக்கு இதெல்லாம் புரியாம இருக்குமா?” எப்படியாவது மகனுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுப்பு பேசிக்கொண்டே போக,

“அம்மா போதும், நீங்க கிளம்புங்க.” என்றான் பட்டென.

“தம்பி!” என்றார் பரிதாபமாக.

“நீங்க கிளம்புங்கம்மா, நான் அப்புறம் பேசுறேன். என் அம்மாவே ஆனாலும் என் விஷயத்துல தலையிடுறது எனக்கு பிடிக்கல. நாங்க ஒன்னும் நேத்து கல்யாணம் செஞ்சு இன்னைக்கு வாழ்க்கையை ஆரம்பிக்கல. விவரம் இல்லாம வாழ்றதுக்கு. என் வாழ்க்கையை நானே சரி செஞ்சுக்குவேன், உங்களுக்கு வேற வேலை இருந்தா பாருங்க.” என்றான் எரிச்சலாக.

“என்ன தம்பி, என்ன பேசுற? இதுல உன் வாழ்க்கை மட்டும் இல்ல, ரெண்டு குழந்தைங்களோட வாழ்க்கையும் இருக்கு. உனக்கும் நாற்பதை நெருங்கிடுச்சு. வயசு இருக்கும் போதே வாழணும் தம்பி.” என்றவரின் குரல் நலிந்து போனது, மகன் பார்த்த பார்வையில்.

“அத்தை போதும், இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க.” அதுவரை அமைதியாக இருந்த கொடி.

“கொடி நான் சொல்றது உனக்காவது புரியுதா, இல்லையா?” என்றார் மன்றாடலுடன்.

“வேண்டாம் அத்தை, இதுக்கு மேல இந்த பிரச்சனையை பத்தி யாரும் பேச வேண்டாம். அவர் சொல்றது சரிதானே? நாங்க ஒன்னும் நேத்து கல்யாணம் செஞ்சு வாழ ஆரம்பிக்கல. எப்படியும் வாழ்ந்துடுவோம், இனி இந்த பேச்சு வேண்டாம் அத்த…” என்றாள் முடிவாக.

“நான் சொல்றதை என்னைக்கு தான் ரெண்டு பேரும் கேட்டு இருக்கீங்க? உங்களால பாதிக்கப்பட போறது ரெண்டு குழந்தைங்கதான். என்ன செஞ்சாலும் யோசிச்சு செய்யுங்க. பிள்ளைகளை மனசுல வச்சுட்டு செய்யுங்க.” என்றவர், இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு கிளம்பி விட்டார்.

அதற்குமேல் அவரால் மகனிடம் பேச முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தானும் ஒரு காரணம் என்றுதான், இவ்வளவு இறங்கி வந்தார். இல்லையென்றால் சுப்புவாவது இறங்கி வருவதாவது, அதிலும் பிடிக்காத மருமகள் கொடிக்காக.

மாமியார் கிளம்பவும் கொடியும் பின்கட்டுக்கு செல்ல,

“இப்போ கேட்ட பணத்தை ஏன் நீ அப்போவே உங்க அப்பாக்கிட்ட கேட்கல?” என்ற கணவனின் குரல், அவளை அப்படியே நிறுத்தியது.

அவனிடம் திரும்பி பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாது அப்படியே நின்றிருந்தாள்.

“பதில் சொல்லுங்க மேடம், ஏன் இதை நீங்க முன்னாடியே செய்யல?” என்றான் கிண்டலாக.

“அப்போ… அப்போ… தோனல.” என்றாள் திணறிக்கொண்டு.

“நீ இவ்வளவு நாள் வெயிட் பண்ண காரணம் என்ன தெரியுமா? இந்த பணத்தை நான் கொடுப்பேனா, மாட்டேனானு செக் பண்றதுக்கு. என்கிட்ட இருந்து எதுவும் கிடைக்காதுனு தெரிஞ்ச பிறகு உங்க அப்பாக்கிட்ட போய் கேட்டுருக்க. இதுதான் உன்னோட திட்டம்.” என்றான் கொஞ்சமும் அந்த கிண்டல் குறையாமலே.

கணவனின் பேச்சிலிருந்த கிண்டல் பெண்ணவளை மொத்தமாய் துடிக்க வைத்தது.

“இல்ல… இல்ல… அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. எங்க அப்பாகிட்ட பணம் கேட்கணும்னு நான் யோசிக்கவே இல்ல. இது என்னுடைய தப்பு, நான்தான் சரி செய்யணும்னு நினைச்சேன். அதனாலதான் இந்த பணத்தை நானே கட்டணும்னு நினைச்சு வேலைக்கு போனேன். நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா தான் இதை ஏத்துக்கிட்டேன்.

எப்போ பணம் கேட்டுருந்தாலும் என் அப்பா கொடுத்திருப்பார். எனக்குத்தான் அது தேவையில்லைன்னு தோனுச்சு.” என ஆதங்கமாக பேசியவள், கழுத்தில் வலி எடுக்கவும் சட்டென்று பேச்சை நிறுத்தி கழுத்தை வேக வேகமாக நீவி விட்டாள்.

அப்போதும் வலி குறையாமல் போக, அவனைக் கண்டுகொள்ளாமல் வேகமாக கிச்சனுக்குள் சென்று குளிர்ந்த நீரை எடுத்துக் குடித்தாள்.

மனைவியின் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ வித்தியாசமாக தோன்ற, தன்னுடைய கோபத்தை எல்லாம் ஒதுக்கி பின்னாலேயே சென்று, “என்ன… என்ன செய்து உனக்கு?” என தன் கையைக் கொண்டு அவள் கழுத்தைத் தொட முயல,

அவன் கையை வேகமாக தட்டிவிட்டவள், “ ஒன்னும்… ஒன்னுமில்ல… நேத்து ஊருல ஜூஸ் குடிச்சது சேரல போல, சளி பிடிச்சிகிட்டு. தொண்டை கட்டுன மாதிரி இருக்குது, அவ்வளவுதான்.” என பதட்டமாக சொன்னவள், அவனிடமிருந்து பிரிந்து வேக வேகமாக வெளியில் வந்தாள்.

கொடியின் உடல் பயத்தில் நடுங்கத் தொடங்கியது. அவளால் நிற்கக் கூட முடியவில்லை. எங்கே கணவன் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம் வேறு அவளை ஆட்டிப்படைக்க, நின்றிருந்த இடத்திலேயே அப்படியே அமர்ந்து விட்டாள்.

தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவிற்கு ஏதோ தவறாகப்பட்டது.

மீண்டும் தன்னிடம் எதையும் மறைக்கிறாளோ என்று சந்தேகம் தோன்றியது, ஆனால் மனைவியின் முகத்தில் தெரிந்த பயமும் பதட்டமும், தப்பை மறைக்கக் கூடியதாக தெரியவில்லை. மாறாக தன்னுடைய ரகசியம் வெளியில் தெரிந்து விடுமோ என்ற எண்ணத்தில் வந்தது போல் அவனுக்கு புரிந்தது.

அவள் அமர்ந்ததற்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், “மறுபடியும் எங்கிட்ட எதையும் மறைக்கிறியா?” என்றான். அந்த குரலில் என்ன இருந்தது என்று கொடியால் அனுமானிக்க முடியவில்லை.

ஆனால் அவனிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. பல நாட்களுக்குப் பிறகான கணவனின் நெருக்கம் அவளுக்கு இனிக்கவில்லை. இந்த ஒதுக்கம் கூட நல்லது என சில நாட்களாக அவள் நினைப்பதுதான்.

அதனால், ‘இல்லை’ எனும் விதமாக தலையை ஆட்ட, அது பொய் என்று அவளது நடுக்கமே காட்டிக்கொடுத்தது.

“உனக்கு வேறு எதுவும் எங்கிட்ட சொல்லணுமா?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டான். எப்படியும் உண்மையை வாங்கிவிடும் நோக்கத்தில்.

“இல்ல… பணம் விசயம் சொல்லணும்னு இருந்தேன். அத்தையே சொல்லிட்டாங்க, வேற ஒன்னுமில்ல.” என்றுவிட்டாள் திடமாக.

குனிந்திருந்தவளையே சில நொடி விடாமல் பார்த்தவன், “சின்னதம்பிக்கு என்னாச்சு?” என்றான் தம்பி மகனை மனதில் வைத்து.

“அது வழக்கம் போல ரொம்ப நேரம் அழுததுனால, காய்ச்சல் வந்துடுச்சு. வேற ஒன்னுமில்ல. இந்த வாரம் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்னு சொன்னாங்க.” என்றாள் மெல்ல.

இப்போது குரலில் சத்தமே இல்லை, வலியும் அதிகமானது. அவன் அருகில் இருப்பதால் கழுத்தைத் தேய்க்கவும் பயமாக இருந்தது. இதெல்லாம் இளங்கோ கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

என்ன நினைத்தானே சட்டென்று எழுந்தவன், “நான் சந்திரா சித்தி வீட்டுக்கு போயிட்டு வரேன்.” என வேகமாக கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பவும் தான் கொடிக்கு மூச்சே சீரானது. காலை நீட்டி சுவரில் சாய்ந்தமர்ந்தவள், கழுத்தை மெல்ல வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

விழிகள் வழக்கம் போல எதிர்சுவற்றை வெறிக்க ஆரம்பித்தது. அடுத்தவர் திரும்பிப் பார்க்கும்படி வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை, இன்று விதியானது திருத்தி வாழ வைக்கிறதே என, கண்களில் துயரங்களின் சின்னங்கள் தோன்றியது.

**

You may also like

1 comment

M. Sarathi Rio July 8, 2026 - 10:22 pm

Super, Super, Super, Super, Super

Reply

Leave a Comment

About Me

Featured