தூரம் 25
அன்று கொடியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நாள். அதிகாலையிலேயே போடிக்கு வந்துவிட்டான் இளங்கோ.
வந்தவனைப் பார்த்ததும் சங்கர் வெளியே சென்றுவிட, முகம் இறுகினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மனைவியின் அறைக்குள் சென்று அமர்ந்தான்.
மனைவியைக் காணவில்லை, குளியலறையில் சத்தம் கேட்டது. குளிக்கிறாள் போலும். அப்போது தமையனை முறைத்துக் கொண்டே நந்தினி வந்து அவனுக்கு எதிரில் அமர, அதைக் கண்டவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“ராசாத்திக்கு இன்னும் கோபம் போகல போல?” என தங்கையை சீண்ட,
“ஆமாம் போகல, இப்ப என்ன?” என நந்தினியும் கோபமாக சொன்னாள்.
“அப்படித்தான் இருக்கணும், கோபத்தை எல்லாம் உடனே குறைச்சிடக்கூடாது. அப்போதான் உன் கோபத்துக்கு மதிப்பு இருக்கும்.” என்றவனைத் தீயாய் முறைத்தாள் நந்தினி.
‘என்ன?’ என்பது போல் புரியாமல பார்க்க,
“உன் தங்கச்சிதானே நான்? உன்னை மாதிரிதானே இருப்பேன், உங்க ரத்தம் தானே எனக்கும் ஓடும்.” என கிண்டலாக கூற, பல்லைக் கடித்தான் இளங்கோ.
“இது நாக்கா இல்ல, தேள் கொடுக்காடி? என்னை திட்ட மட்டும் இந்த வாய்க்கு வலிக்கவே வலிக்காதா?” என கடுப்பானவன், “அண்ணி நைட் நல்லா தூங்கினாளா?” என பதட்டமாக கேட்க,
“ம்ம்ம்… தூங்கினாலும் தூங்கலன்னாலும் உனக்கு என்ன? அதை ஏன் உன்கிட்ட சொல்லணும்?” என்றவள், குளியலறைக் கதவு திறக்கும் சத்தத்தில்,
“உனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வைக்கிறேன், அண்ணியை கூப்பிட்டு வா.” என எரிச்சலாக கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.
“ஷப்பா! இவளை சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு பாதி ஜீவனே போயிடும் போல…” என நொந்தவன் மனைவியைப் பார்க்க, நீலத்தில் வெள்ளைப் பூக்கள் போட்ட நைட்டியில் வெளியில் வந்தாள். தலைக்கு குளித்திருப்பாள் போல, தலையில் துண்டைக் கட்டிருந்தாள்.
கணவனைப் பார்த்தும் பார்க்காதது போல கூந்தலை உலர வைக்க துண்டைக் கழட்ட, கூந்தல் அவளின் இடையைத் தாண்டி விழுந்தது.
அதைப் பார்த்ததும் இளங்கோவின் மனம், ‘அய்யோ’ எனத் துடிக்க, எப்படி இதையெல்லாம் கடந்து வரபோறாளோ என அவனின் மனம் வேதனையடைந்தது.
“பூம்மா… தலைக்கு ஏன் குளிச்ச?” என பேச்சை அவனே ஆரம்பிக்க, அவளோ அவனைத் திரும்பி பார்த்தாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை.
இந்த கூந்தலின் கடைசி குளியல் என்று நினைத்தவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் அளவிற்கு வலி. இதயம் வேகவேகமாய் துடிக்க, அதற்குமேல் அவனால் அங்கு உட்கார முடியவில்லை.
வேகமாக எழுந்தவன் அதைவிட வேகமாக அவளைக் கட்டிக்கொண்டு, அந்த ஈரக்கூந்தலில் முகம் பதித்தான்.
சட்டென்று நடந்த தாக்குதலில் முதலில் அதிர்ந்து தடுமாறியவள் பின் அமைதியாக நிற்க, “முடியலடி… என்னால முடியல… எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டேன். உன்னை இப்படி பார்க்க முடியல பூம்மா…” என உடைந்த குரலில் பேச, கொடியிடமிருந்து வழக்கம்போல பதிலே இல்லை.
மனைவியின் அமைதி அவனை கொல்ல, “பூம்மா உனக்கு என்மேல எவ்வளவு கோபம், வெறுப்பு இருக்கும்னு எனக்குத் தெரியும். அதை நான் தப்பு சொல்லல, ஆனா அதையெல்லாம் இப்போ காமிக்காதடி. நீ சரியாகி வந்த பிறகு உன்னோட ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டு, நான் தாங்கிப்பேன். இப்போ வேண்டாண்டி…” என கெஞ்ச, அப்போதும் அவளிடம் பதிலில்லை.
ஒரு சில நிமிட அமைதிக்குப் பிறகு தன்னை அணைத்திருந்தவனை மெதுவாக விலக்கியவள், புடவை ஒன்றை எடுத்து வைக்க, புரிந்தது போல கனத்த மனதுடன் வெளியில் சென்றான் இளங்கோ.
அண்ணனின் இந்த முகத்தை நந்தினியால் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவனை மன்னிக்கவும் தயாராகவில்லை.
“நதிக்கு இது போர்ட் எக்ஸாமுனு ஞாபகம் இருக்கா, இல்லையா? அவக்கூட யாராச்சும் இருக்கணும், பெரியம்மா இதெல்லாம் கண்டிக்க மாட்டாங்க. இங்கதான் நான் இருக்கேனே, நீ கொஞ்சம் அவக்கூட டைம் ஸ்பென்ட் பண்ணு.” என யாருக்கோ சொல்வது போல சொல்ல, இளங்கோவும் ஏற்கனவே அந்த முடிவிற்குத்தான் வந்திருந்தான்.
முன்னமே மகளைக் கவனிக்க வேண்டும் என்று நினைத்திருக்க, இப்போது கொடியும் உடனில்லை எனும்போது, அவன் பார்த்தே ஆகவேண்டும் என்ற சூழல். அதோடு மனைவியின் சர்ஜரி டைமில் உடனிருக்க வேண்டிய சூழல். அதனால் மெடிக்கல் லீவுக்கு அப்ளை செய்திருந்தான்.
“ம்ம்… மெடிக்கல் லீவுக்கு அப்ளை செய்திருக்கேன்.” என சோர்வோடு கூறி ஹாலில் அமர,
“அப்போ அண்ணிக்காக லீவு போடல, உன் பொண்ணுக்காக தான் லீவு போட்டுருக்க.” என நந்தினி பல்லைக் கடிக்க,
“ஒழுங்கா இடத்தை காலி பண்ணிட்டு ஒடிடு. இல்ல உன் மண்டைய பொளந்துடுவேன்…” என அங்கிருந்த தண்ணீர் ஜாடியை எடுக்க,
“உணமைகள் சில நேரம் இப்படித்தான் சுடும்.” என்றவள் கொடியின் அறைக்குள் ஓடிவிட, “ஊப்ஸ்…” என பெருமூச்சுவிட்டான் இளங்கோ.
‘இந்த சில்வண்டுக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கணவா கண்டேன்?’ என நொந்து போனான். கிடைத்த நேரத்தில் எல்லாம் கொடிக்கும் சேர்த்து வைத்து செய்து கொண்டிருந்தாள் நந்தினி.
கொடிக்கு தேவையான அனைத்தையும் நந்தினிதான் செய்து கொண்டிருந்தாள். இந்த பத்து நாட்களில் நிறையவே மாற்றங்கள். எதிர்மறையான சிந்தனைகள் இப்போது கொடியிடம் ஓரளவுக்கு குறைந்திருந்தது.
சந்திராவும் இரண்டு முறை பார்த்து விட்டு சென்றிருந்தார். வெங்கடேசன், வனிதாவுமே அடிக்கடி வந்து சென்றனர். கந்தவேலும் தன் வயதையும் மீறி தினமும் பார்த்து சென்றார். சர்ஜரி நேரத்தில் நடேசன் விடுமுறை எடுத்து வருவதாக கூறியிருந்தான். அவனுமே தினமும் கொடியிடம் பேசி அவளுக்கு தைரியம் கூறினான்.
குழந்தைகள் முதல்நாள் இரவே கொடியிடம் வீடியோ காலில் பேசியிருந்தனர்.
“ம்மா ஃப்ரைடே ஸ்கூல் லீவு, நாங்க வரோம். நீ பயப்படாத சரியா?” என இருவரும் மாறி மாறி தாய்க்கு தைரியம் கூறினர்.
அவளுமே புன்னகையுடன், ‘சரி… சரி…’ என்பது போல் தலையாட்டினாள். நந்தினிதான் இருவரையும் முறைத்துக் கொண்டே இருந்தாள்.
“அம்மா இந்த அத்தை இன்னும் என் மேல கோவமாதான் இருக்காங்களா? எப்பவும் என்னை முறைச்சுகிட்டே இருக்காங்க.” என கொடியிடம் நர்த்தனா குறை கூற,
“நீ பேசாதடி, உன்ன பார்த்தாலே எனக்கு காண்டாகுது.” என நந்தினியும் சரிக்கு சரிசமமாய் சண்டையிட,
“நீங்க எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருக்கீங்க… இருங்க, எங்க அப்பாக்கிட்ட சொல்றேன்.” என நர்த்தனா முகத்தைத் தூக்கி வைக்க,
“சொல்லு… சொல்லு… எங்க அப்பாவுக்கே நான் பயந்ததில்லை, உங்க அப்பாவுக்கு பயந்துடுவேனா? மரக்கா சைஸ் இருந்துக்கிட்டு பேச்சை பாரு… இந்த வருஷம் போர்ட் எக்ஸாம்தானே, மார்க் மட்டும் கம்மியா வரட்டும்… உன்னையும் உன் அப்பத்தாவையும் ஆஞ்சி புடுறேன் ஆஞ்சி….” என மிரட்ட, கொடியின் முகம் கவலையைக் காட்டியது.
“ம்மா நான் நல்லாத்தான் படிக்கிறேன். அத்த சொல்றத நம்பி நீ பயப்படாதே, கண்டிப்பா நல்ல மார்க் எடுப்பேன்.” என்றவள், “அத்தை நான் நல்லாத்தான் படிக்கிறேன், உங்கள விட அதிகமா மார்க் எடுத்து காட்டுறேன்.” என சவால் விட, கொடியின் முகம் புன்னகையில் விரிந்தது.
குழந்தைகள் அவளை எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். கொடிக்கும் குழந்தைகளின் முயற்சி புரிய சிரித்துக் கொண்டாள்.
இப்படியாக அனைவரும் அவளை சுற்றியே இருந்தனர். அவளுக்கு நோய் பற்றிய பயமே இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
அதோடு நந்தினியும் கொடியோடு நன்றாகவே ஒட்டிக் கொண்டாள். நிறையவே பேசினாள் நந்தினி. கொடியின் மனதில் இருந்த கவலைகள், பயம் என அனைத்தையும் விரட்டும் அளவிற்கு, தான் படித்த கல்லூரி, வேலை செய்த இடத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை, அவள் சிரிக்காமல் கூறி கொடியை சிரிக்க வைத்தாள்.
அண்ணனின் தவறுக்கு தங்கை பிராய்சித்தம் செய்தாளோ?
கொடியும் நந்தினியும் அறையில் இருந்து வெளியில் வர, எங்கேயோ வெறித்தபடி அமந்திருந்த இளங்கோ, இவர்களின் வருகை சத்தத்தில் திரும்பி பார்க்க, இருவர் முகமும் கலங்கி போயிருந்தது. அதைப் பார்த்த இளங்கோவிற்கும் கண்கள் கலங்க, அதை வெளிக்காட்டாமல் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் டைனிங் டேபிளில் அமர, மூவருக்கும் சாப்பாடு வைத்தார் ஆனந்தி.
அவரின் முகமும் சரியில்லை. விட்டால் அப்போதே கதறி விடுவார் என்று பார்க்கும் போதே தெரிந்தது.
“அண்ணி, நீங்க வீட்டுக்கு இன்னைக்கு போங்க. அங்க நிவி தனியா இருப்பா. எப்படியும் டிஸ்சார்ஜ் ஆக மூனு நாளாகும். நான் பார்த்துட்டு சொல்றேன், பிறகு வாங்க. சும்மா அலைய வேண்டாம்.” என இளங்கோ சொல்ல, ஆனந்தி தங்கையின் முகத்தைப் பார்த்தாள்.
அவளும், ‘ம்ம்…’ என்பது போல சைகை செய்ய, “சரி தம்பி, கீமோ பண்ணும் போது உங்க அண்ணனை அனுப்பி வைக்கிறேன்.” என்றவருக்கு குரல் உடைய, அழுகையைக் கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டார்.
அதற்குள் சங்கரும் வந்துவிட அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மீண்டுமொரு முறை மதுரைக்கு பயணம். நந்தினி முன்னால் அமர, சங்கரும் கொடியும் பின்னால் அமர்ந்துகொண்டனர்.
மருத்துவமனை வளாகம் நெருங்க நெருங்க இளங்கோவின் இதயத்தில் பயப்பந்து வேகமாக சுழன்றது. அடிக்கடி திரும்பி தன் மனைவியையே பார்த்துக்கொண்டான்.
அவளோ தந்தையின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இப்போதெல்லாம் அதிகம் உறங்குகிறாள் என நந்தினியின் மூலம் தெரிந்து கொண்டிருந்தான்.
மருந்தின் வீரியம் என்று புரிந்தது. தன் பயத்தை மறைத்து சாதாரணமாக இருக்கவே அவனால் முடியவில்லை. அருகில் திரும்பி பார்த்தான், நந்தினி மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ராசாத்தி!” என்றான் மெல்ல பின்னே இருப்பவர்களுக்கு கேட்காதவாறு.
“ம்ம்…” என அவனைத் திரும்பி பார்க்க,
“அந்த மாப்பிள்ளை வீட்டுல கேட்டுட்டு இருக்காங்கடா. வெங்கடேஷ் காலைல கூட என்னை கூப்பிட்டு பேசினான். நீ என்ன சொல்ற?” என மனைவி பற்றி பேச நினைத்தவன் வேறு பேசினான்.
“ம்ச்! எனக்கு இஷ்டமில்ல… எனக்கு என்னமோ இந்த கல்யாண வாழ்க்கையே பிடிக்கல.” என சலிப்பாக சொல்ல,
“எங்களை வச்சு எதையும் யோசிக்காத. நான் எல்லாத்தையும் சரி செஞ்சிடுவேன். நீ இப்படி இருந்தா நாங்க நிம்மதியா இருக்க முடியுமா? சொல்லு…” என மிகவும் வருத்தமாக பேச,
“அம்மா பாவம், அவங்களை விட்டுட்டு எப்படி? அதோட எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல.” என எதிரே தெரிந்த சாலையை வெறித்தபடி சொல்ல,
“ம்ம்… அப்போ நீ எங்களை நம்பலையா? நான் சித்தியை பார்த்துக்க மாட்டேனா? அப்படியொரு எண்ணம் உனக்கு எப்ப வந்தது? எதனால வந்தது?” என்றான் வலியுடன்.
“ம்ச்! ண்ணா, நான் அந்த அர்த்தத்தில சொல்லல. நீங்க பார்த்துப்பீங்க, ஆனா நான் அவங்க தனிமையை பத்திதான் யோசிக்குறேன். எனக்கு அப்புறம் அவங்க தனியாதானே இருக்கணும்.” என்றாள் பெருமூச்சோடு.
“சரி விடு, வீட்டோடு மாப்பிள்ளையாவே பார்க்கலாம்.” என கிண்டலாக அவன் சொல்ல,
“பெட்டர் அப்படியே பாருங்க.” என்றவள் அவன் அதிர்ந்ததை கூட கண்டுகொள்ளாமல், “அண்ணி நம்ம வீட்டுக்கு வந்தபிறகு தான் என் கல்யாணப் பேச்சை எடுக்கணும்.” என முடிவாக சொல்லிவிட்டாள்.
மருத்துவமனைக்குள் வந்து அனைத்து ஃபார்மாலிடிஸும் முடிந்து அட்மிட் செய்ய மாலையாகிவிட்டது.
முன்னமே நந்தினி சங்கரிடம் பேசியிருந்தாள், “அண்ணா பணம் கட்டட்டும் மாமா. அண்ணி மாதிரி நீங்களும் கோபப்பட வேண்டாம். அண்ணாவும் பாவம் தானே? முதல்ல அண்ணி சரியாகட்டும். அதன்பிறகு நீங்க அவரை என்ன பண்ணாலும் சரி. ஆனா இப்போ வேண்டாம் மாமா…” என மிகவும் தயக்கமாகவே தான் பேசினாள்.
ஆனால் அதற்கு முன்பே நடராஜும் கணேசனும் இதையே பேசியிருந்தனர் அவரிடம். வீம்பு பிடிக்கும் நேரம் இதுவல்ல, நம் பெண் நமக்கு முக்கியம் என்று. சங்கருக்கு முதலில் கோபம் வந்தாலும் பெண்ணின் வாழ்க்கை எனும்போது இறங்கிப் போகத்தான் வேண்டியிருந்தது.
அதனால் அனைத்து செலவுகளும் இளங்கோவே செய்தான். அன்று மாலை அவளுக்கு கவுன்சிலிங் இருக்க, அவன்தான் உடன் சென்றான்.
அடுத்தடுத்து அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு மயக்கம் வராத குறைதான் இளங்கோவிற்கு. எப்படி இந்த வலியிலிருந்து வெளியில் வருவாள் என, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலானது. ஆனால் அவன் மனைவியோ மிகவும் இயல்பாக, நிதானமாக அதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணவளின் மனத்திடத்தை அவன் அறித்திருக்கவில்லை. எதையும் தாங்கும் மன தைரியத்தை அவளுக்கு கொடுத்ததே அவன்தானே. அதை அவன் அறியும்போது? மனைவியின் மனதில் இருக்கும் வேதனைகள் வார்த்தைகளாக வெளிவரும் போது அதை அவன் தாங்கிக் கொள்வானா? பெண்ணவளின் உணர்வுகளை மதிக்க தொடங்கினான். அப்போது அவளின் உள்ளம் நிறைய பேச தானே செய்யும்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
***
1 comment
கொடியது, கொடியது… எந்த வயதிலும் நோய் கொடியது.
😌😌😌
CRVS (or) CRVS 2797