Home Ongoing NovelsComedy storyடம்மி பீசு – 09

டம்மி பீசு – 09

by Vathani S

அத்தியாயம் – 09

பேயின் முதல் திட்டம்!”

இரவு இன்னும் ஆழமாகிக் கொண்டிருந்தது.

மாளிகையின் வெளிப்புறத்தில் வீசிய காற்று, பழைய ஆலமரத்தின் கிளைகளை மெதுவாக அசைத்தது. அந்த நிழல்கள் சுவரின் மீது நீண்டு விழுந்து, உயிருள்ள உருவங்களைப் போல மெதுவாக நகர்ந்தன. உடைந்த ஜன்னல்களின் வழியாக நுழைந்த குளிர்ந்த காற்று, மாளிகை முழுவதும் சுற்றிவந்து மீண்டும் வெளியேறியது.

ஆனால்…

அந்த அமைதியின் நடுவே ஒரே ஒரு மனிதன் மட்டும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

வராண்டாவின் ஓரத்தில் விரித்திருந்த பழைய விரிப்பின் மீது, இரண்டு கைகளையும் தலைக்குக் கீழே வைத்தபடி, குழந்தை போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சீனு.

அவனுடைய முகத்தில் பயத்தின் சுவடு கூட இல்லை.

மாறாக, பல நாட்களாக நல்ல தூக்கம் கிடைக்காமல் இருந்த ஒருவன், இப்போது மனநிம்மதியோடு உறங்குவது போலவே தெரிந்தான்.

அந்தக் காட்சியை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த காசிநாதனுக்கு அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்த மாளிகையின் பெயரைக் கேட்டாலே மக்கள் பாதையை மாற்றிச் சென்றிருக்கிறார்கள். சிலர் வாசலிலேயே மயங்கி விழுந்திருக்கிறார்கள். சிலர் உள்ளே வந்ததும் அலறியடித்தபடி வெளியே ஓடியிருக்கிறார்கள்.

ஆனால்…

இன்று…

ஒருவன் இந்த மாளிகையை தங்கும் விடுதி போல பயன்படுத்திக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

காசி மெதுவாகத் திரும்பி மல்லிகாவைப் பார்த்தான்.

“இது எனக்கு அவமானமா… இல்ல இந்த வீட்டுக்கே அவமானமா?”

மல்லிகா சிரிப்பை மறைத்தபடி தோளைக் குலுக்கியாள்.

“இரண்டுமே.”

காசி பெருமூச்சு விட்டான்.

“இல்ல… இனிமேல் இப்படியே விட்டா சரியாவே வராது.”

அவன் மெதுவாக வராண்டாவில் நடந்தான்.

ஒவ்வொரு அடியிலும் அவனுடைய முகம் மாறிக்கொண்டே இருந்தது.

கோபம்…

பிடிவாதம்…

அதற்குள் ஒரு சிறிய போட்டி மனப்பான்மை.

இறுதியாக வராண்டாவின் முனையில் நின்றவன், இருளில் மூழ்கியிருந்த தோட்டத்தை நோக்கிப் பார்த்தான்.

“இன்னைக்கு,” என்று தனக்குத்தானே சொன்னான்.

“சின்ன சின்ன வித்தையெல்லாம் வேண்டாம்.”

மல்லிகா அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.

“அப்போ?”

காசியின் முகத்தில் மெதுவாக பழைய கம்பீரம் திரும்பி வந்தது.

“இந்த வீட்டுல நான் முதல் நாள் பேயா ஆனப்போ… எந்த சக்தியைப் பயன்படுத்தினேனோ…”

அவன் ஒரு கணம் நின்றான்.

“அதே சக்தியை இன்னைக்கு பயன்படுத்தப் போறேன்.”

மல்லிகாவின் முகத்தில் இருந்த சிரிப்பு மெதுவாக மறைந்தது.

அவள் காசியை பல ஆண்டுகளாகப் பார்த்தவள்.

அவன் இப்படி பேசும்போது…

அது வெறும் மிரட்டல் இல்லை என்பதை அவளுக்குத் தெரியும்.

“காசி…”

“ம்?”

“அளவா பண்ணு.”

“ஏன்?”

“அவன் தைரியசாலி. தப்பே இல்ல.”

“தைரியம் வேற…”

காசி மெதுவாகச் சிரித்தான்.

“பேயை சாதாரணமா நினைக்கிறது வேற.”

என்று சொல்லிவிட்டு, சீனு தூங்கிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி மெதுவாக நடந்தான்.

அந்த இரவு…

காசிநாதன் முதல் முறையாக…

தன் முழு பேய் சக்தியைப் பயன்படுத்த முடிவு செய்தான்.

ஆனால்…

அவன் எதிர்பார்க்காத ஒரு சம்பவம்…

இன்னும் சில நிமிடங்களில்…

அவனுடைய திட்டத்தையே தலைகீழாக மாற்றப் போகிறது.

வராண்டாவின் ஓரத்தில் விரிக்கப்பட்டிருந்த பழைய விரிப்பின் மீது, எந்தக் கவலையும் இல்லாத குழந்தையைப் போல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சீனு. அவனுடைய சீரான மூச்சுச் சத்தம் மட்டும் அந்த இரவின் அமைதிக்குள் மெதுவாகக் கலந்துகொண்டிருந்தது. நிலவொளி அவன் முகத்தின் மீது விழுந்து, பயமென்ற உணர்வு அவனுடைய கனவுகளைக்கூட எட்டவில்லை என்பதைப் போல அமைதியைப் பரப்பியது.

காசிநாதன் மெதுவாக அவன் அருகில் வந்து நின்றான்.

எழுபத்தைந்து ஆண்டுகளாக உயிரோடு இருந்த மனிதர்கள் அவன் முகத்தை நேராகப் பார்த்ததே இல்லை. பார்த்தவர்கள் பயத்தில் நடுங்கினார்கள். சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓடினார்கள். இன்னும் சிலர் மயங்கி விழுந்தார்கள்.

ஆனால் இப்போது…

ஒரு மனிதன் அவன் அருகிலேயே நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

அந்தக் காட்சி காசியின் மனதில் எரிச்சலையும், ஆச்சரியத்தையும் ஒன்றாக எழுப்பியது.

“இது சரியில்லை…” என்று அவன் மெதுவாக முணுமுணுத்தான்.

அவன் வலது கையை மெதுவாக உயர்த்தினான்.

அந்த நொடியே, வராண்டா முழுவதும் வீசிய காற்று திடீரென்று வேகம் பிடித்தது.

ஜன்னல் கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் படபடவென்று அடிக்க ஆரம்பித்தன.

நீண்ட வராண்டாவில் தொங்கிக்கிடந்த பழைய விளக்குச் சட்டி மெதுவாக ஆடத் தொடங்கியது.

கீழே இருந்த முற்றத்தில் உலர்ந்து கிடந்த இலைகள் அனைத்தும் சுழன்றெழுந்து காற்றோடு சேர்ந்து சுற்றின.

மல்லிகா அமைதியாக அவனைப் பார்த்தாள்.

இந்த சக்தியை காசி எப்போதும் கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்துவான்.

ஏனென்றால், இந்த மாளிகையின் உயிரற்ற அமைதியை ஒரு கணத்தில் மாற்றிவிடும் ஆற்றல் அதற்கு இருந்தது.

காற்று இன்னும் பலமாக வீசியது.

ஒரு பழைய ஜன்னல் திடீரென்று முழு வேகத்தில் மூடிக்கொண்டது.

டமார்!

என்ற சத்தம் மாளிகை முழுவதும் எதிரொலித்தது.

அந்தச் சத்தத்தைக் கேட்ட சீனு சட்டென்று விழித்துக்கொண்டான்.

ஒரே நொடியில் எழுந்து அமர்ந்தவன், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.

காசியின் முகத்தில் மெதுவாக வெற்றிப் புன்னகை மலர்ந்தது.

“இப்போதான் ஆரம்பம்…” என்று மனதிற்குள் நினைத்தான்.

சீனு சில நொடிகள் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தான்.

காற்று இன்னும் பலமாக வீசியது.

வராண்டாவின் மறுமுனையில் இருந்த கதவு மீண்டும் மெதுவாக அசைந்தது.

டார்ச்சை எடுத்த சீனு, அந்தத் திசையில் ஒளியை அடித்தான்.

எதுவும் இல்லை.

அவன் மெதுவாக எழுந்து ஜன்னலின் அருகே நடந்தான்.

காற்று நேராக உள்ளே புகுந்துகொண்டிருந்தது.

ஜன்னலின் ஒரு பக்கம் உடைந்திருந்ததால், காற்றின் அழுத்தத்தில் கதவு அடித்துக்கொண்டே இருந்தது.

சில நொடிகள் அதைப் பார்த்துக்கொண்டிருந்த சீனு, மெதுவாகச் சிரித்தான்.

“அட… இதுதானா?”

என்று சொல்லிக்கொண்டு, அருகில் கிடந்த ஒரு உடைந்த மரத்துண்டை எடுத்தான்.

அதை ஜன்னல் கதவின் இடுக்கில் சிக்கவைத்து, அசையாமல் இறுக்கமாக வைத்தான்.

ஒரே கணத்தில்…

கதவு அசைவது நின்றுவிட்டது.

காற்று இன்னும் வீசியது.

ஆனால்…

இப்போது எந்தச் சத்தமும் இல்லை.

மாளிகை மீண்டும் அமைதியாகிவிட்டது.

காசிநாதன் அப்படியே நின்றுவிட்டான்.

அவன் மெதுவாக ஜன்னலைப் பார்த்தான்.

பிறகு சீனுவைப் பார்த்தான்.

மீண்டும் ஜன்னலைப் பார்த்தான்.

“மல்லிகா…”

“ம்?”

“நான் பயமுறுத்த ஆரம்பிச்சா…”

“ம்…”

“இவன் maintenance ஆரம்பிக்கிறானே!”

மல்லிகா வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பை அடக்கினாள்.

“காசி…”

“என்ன?”

“இந்த வீட்டுக்கு இதுவரைக்கும் பேய் காவலாளிதான் இருந்தது.”

“அதனால்?”

“இன்னைக்கு இருந்து…”

அவள் சீனுவைப் பார்த்தபடி மெதுவாகச் சொன்னாள்.

ஒரு கேர் டேக்கரும் கிடைச்சுட்டான் போல.

காசி பதில் சொல்லவில்லை.

அவன் முகத்தில் இருந்த தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருந்தது.

கீழே…

சீனுவோ ஜன்னலை இன்னொரு முறை சோதித்துப் பார்த்துவிட்டு, திருப்தியாகத் தலையசைத்தான்.

“இப்போ சத்தம் வராது…”

என்று சொல்லிக்கொண்டு மீண்டும் விரிப்பில் வந்து படுத்தான்.

இரண்டு நிமிடங்களுக்குள்…

அவன் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டான்.

வராண்டாவில் வீசிய காற்று மட்டும்…

காசிநாதனின் பெருமையை மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தது.

வராண்டா முழுவதும் மீண்டும் அமைதி நிலவியது. சில நிமிடங்களுக்கு முன்பு காற்றின் வேகத்தில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்த ஜன்னல்கள் இப்போது அசைவின்றி நின்றன. சுவரோரம் தொங்கியிருந்த பழைய விளக்கின் சங்கிலி மட்டும் இன்னும் சிறிது நேரம் ஆடிக்கொண்டிருந்து மெதுவாக நின்றது. அந்த அமைதிக்குள் சீனுவின் சீரான மூச்சுச் சத்தம் மட்டும் தெளிவாகக் கேட்டது. எவ்வளவு பெரிய சத்தம் கேட்டாலும், எவ்வளவு வினோதமான சம்பவம் நடந்தாலும், அதற்கெல்லாம் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டு மீண்டும் பழைய அமைதிக்கே திரும்பிவிடும் அவனுடைய இயல்பு, காசிநாதனின் மனதில் இதுவரை இல்லாத ஒரு குழப்பத்தை உருவாக்கியிருந்தது. அவனைப் பார்த்தாலே எரிச்சலாக இருந்தது. அதே நேரத்தில், அவனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மெதுவாக வளர ஆரம்பித்திருந்தது.

காசிநாதன் வராண்டாவின் மறுமுனைக்குச் சென்று நின்றான். கீழே முற்றத்தில் நிலவொளி பரவியிருந்தது. அந்த வெளிச்சத்தில் பழைய கிணறும், அதன் அருகே நின்றிருந்த வேப்பமரமும், காற்றில் ஆடிய கொடிகளும் உயிரோடு இருப்பதைப் போலத் தோன்றின. உயிரோடு இருந்த காலத்தில் எத்தனை இரவுகளை இந்த வராண்டாவில் நின்றபடி கழித்திருக்கிறான் என்ற நினைவு திடீரென்று மனதில் தோன்றியது. விருந்தினர்களின் சிரிப்புச் சத்தம், சமையலறையில் பாத்திரங்கள் உரசும் ஓசை, திருவிழா நாட்களில் வீட்டிற்குள் ஓடி விளையாடிய குழந்தைகள்… அந்த நினைவுகள் அனைத்தும் ஒரு கணம் அவன் கண்முன்னே தோன்றி மறைந்தன. எழுபத்தைந்து ஆண்டுகளாக அந்த வீட்டில் வாழ்ந்தது அவனும் மல்லிகாவும் மட்டுமே. பேச யாருமில்லை. சிரிக்க யாருமில்லை. இன்று மட்டும் அந்த வெறுமைக்குள் ஒரு அந்நியன் வந்து, பயப்படாமல் தூங்கிக்கொண்டிருப்பது அவனுக்கே புதிதாக இருந்தது.

மல்லிகா மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள். அவளுடைய முகத்தில் வழக்கமான குறும்புச் சிரிப்பு இருந்தாலும், காசியின் மனநிலையை அவள் புரிந்துகொண்டிருந்தாள். “இன்னும் கோபமா?” என்று மென்மையாகக் கேட்டாள். காசி உடனே பதில் சொல்லவில்லை. சில நொடிகள் கழித்து, “கோபம்னு சொல்ல முடியாது. ஆனா, எனக்கு இதுவரைக்கும் இப்படியொரு தோல்வி கிடைக்கல,” என்றான். “நீ தோற்றுட்டேன்னு யார் சொன்னது?” என்று மல்லிகா சிரித்தபடி கேட்டாள். “நான் பயமுறுத்துறேன்… அவன் காரணம் கண்டுபிடிக்கிறான். நான் சத்தம் போடுறேன்… அவன் ஜன்னலைச் சரி பண்ணுறான். நான் காற்றை எழுப்புறேன்… அவன் மரக்கட்டையை அடைச்சு வைக்கிறான். இதைத் தோல்வி இல்லன்னா என்ன?”

மல்லிகா சற்றுநேரம் அமைதியாக இருந்தாள். பிறகு கீழே தூங்கிக்கொண்டிருந்த சீனுவைப் பார்த்தபடி, “காசி… நீ ஒரு விஷயத்தைக் கவனிக்கவே இல்ல,” என்றாள். காசி திரும்பிப் பார்த்தான். “என்ன?” “இவன் உன்னோட சண்டை போடவே வரல. உன்னை ஜெயிக்கணும்னு வரல. அவன் மனசுல ஒரு சந்தேகம் இருக்கு. அதுக்குப் பதில் தேடத்தான் வந்திருக்கான்.” காசி சிந்தனையில் மூழ்கினான். அந்த வார்த்தை அவனுக்குள் எதிரொலித்தது. உண்மையிலேயே சீனுவின் முகத்தில் அவன் வெறுப்பையோ, அகந்தையையோ பார்த்ததில்லை. எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது.

அந்த நேரத்தில் தூக்கத்தில் இருந்த சீனு மெதுவாகத் திரும்பிப் படுத்தான். அவனுடைய உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. இருவரும் தன்னிச்சையாக அவனை நோக்கிப் பார்த்தார்கள். “அம்மா… கவலைப்படாத… நான் ஜெயிச்சுட்டு வரேன்…” என்று மிகவும் மெல்லிய குரலில் சொன்னவன் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் மூழ்கிவிட்டான். அந்த ஒரு வாக்கியம் காசியின் மனதை அசைத்தது. இதுவரை அவன் கண்களுக்கு சீனு ஒரு பிடிவாதக்கார இளைஞன் மட்டும்தான். ஆனால் அந்தச் சொற்களுக்குப் பிறகு, குடும்பத்திற்காக ஏதோ நிரூபிக்க நினைக்கும் ஒரு சாதாரண மகனாகத் தோன்றினான்.

“அவனுக்கும் யாரோ காத்திருக்காங்க போல,” என்று காசி மெதுவாகச் சொன்னான். மல்லிகா அமைதியாகத் தலையசைத்தாள். “ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும் காசி. நாம பார்க்குறது முகத்தை மட்டும். உள்ளே இருக்குற பாரத்தைப் பார்க்க முடியாது.” அந்த வார்த்தைகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையில் சில நொடிகள் அமைதி நிலவியது. இரவு மெதுவாக விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கிழக்கு வானத்தின் கருமை சிறிது சிறிதாக மங்க ஆரம்பித்தது.

காசிநாதன் மீண்டும் சீனுவைப் பார்த்தான். சில மணி நேரங்களுக்கு முன்பு வரை அவனை எப்படியாவது பயமுறுத்த வேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாக இருந்தது. ஆனால் இப்போது அவனுடைய மனதில் வேறொரு கேள்வி எழுந்திருந்தது. இவ்வளவு தைரியமா இருக்குற இந்தப் பையன் உண்மையிலேயே யார்? இந்த மாளிகையோட கதையைத் தேடுறானாஇல்ல அவனோட வாழ்க்கைக் கதைக்கே ஒரு முடிவைத் தேடிக்கிட்டு இருக்கானா?” அந்தக் கேள்விக்குப் பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம், பயமுறுத்த வேண்டும் என்ற ஆசையை மெதுவாக மிஞ்ச ஆரம்பித்தது.

வராண்டாவின் வெளிப்புறத்தில் முதல் பறவையின் கீச்சொலி கேட்டது. இரவு முடிவதற்கான அறிகுறி அது. காசிநாதன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு மெதுவாகத் திரும்பி நடந்தான். இந்த இரவு அவனுக்குப் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால், ஒரு புதிய மனிதனைப் பற்றிய புதிய கேள்விகளை மட்டும் கொடுத்திருந்தது. அந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் பயணம்… அவனுக்கே தெரியாமல் தொடங்கியிருந்தது.

விடியற்காலையின் முதல் ஒளிக்கீற்றுகள் வானத்தின் ஓரத்தில் மெதுவாகப் பரவ ஆரம்பித்தன. இரவு முழுவதும் மாளிகையை ஆக்கிரமித்திருந்த கருமை, ஒவ்வொரு நொடியும் பின்வாங்கிக்கொண்டே இருந்தது. உடைந்த ஜன்னல்களின் வழியாக உள்ளே நுழைந்த மங்கலான வெளிச்சம், பல ஆண்டுகளாக மூடியிருந்த அறைகளின் கதவுகளைத் தொட்டு, தூசியால் மூடப்பட்ட தரையில் நீண்ட கோடுகளை வரைந்தது. இரவு நேரத்தில் மர்மமாகத் தோன்றிய அதே மாளிகை, விடியலின் ஒளியில் வயதாகிப்போன ஒரு முதியவரைப் போல அமைதியாக நின்றது.

வராண்டாவில் விரித்திருந்த விரிப்பின் மீது படுத்திருந்த சீனு மெதுவாகக் கண்களைத் திறந்தான். சில நொடிகள் மேற்கூரையைப் பார்த்தபடியே படுத்திருந்தவன், தான் எங்கே இருக்கிறான் என்பதை நினைவுபடுத்திக்கொண்டதும் சிறிய புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான். இரவு முழுவதும் அவன் எதிர்பார்த்த எந்த அமானுஷ்ய சம்பவமும் நடக்கவில்லை என்ற எண்ணம் அவனுக்குள் உறுதியை ஏற்படுத்தியது. கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்துவிட்டு, பையைத் திறந்து முகம் துடைக்க ஒரு சிறிய துணியை எடுத்தான். பின்னர் கீழே முற்றத்தில் இருந்த கிணற்றை நோக்கிப் பார்த்து, “தண்ணீர் இருந்தா முகம் கழுவிக்கலாம்,” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு படிக்கட்டைப் பார்த்து நடந்தான்.

மேல்மாடியின் தூணருகே நின்றிருந்த காசிநாதன் அந்தக் காட்சியை அமைதியாகக் கவனித்தான். “இரவு முழுக்க இங்கத் தூங்கிட்டான்… காலையில எழுந்ததும் வீட்டுக்காரன் மாதிரி வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டானே,” என்று அவன் மெதுவாக முணுமுணுத்தான். அருகில் நின்றிருந்த மல்லிகா சிரிப்பை அடக்க முடியாமல், “இன்னும் கொஞ்ச நேரம் போனா வாசல்ல கோலம் போடுறான்னு மட்டும் சொல்லாத,” என்றாள். காசி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ சிரிக்கிறதெல்லாம் சரிதான். ஆனா இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்னு எனக்கு புரியல,” என்றான். மல்லிகா அவனை நோக்கி, “அதைத் தெரிஞ்சிக்கணும்னா பயமுறுத்துறதை விட பேசிப் பாரு,” என்று சாதாரணமாகச் சொன்னாள்.

அந்த வார்த்தை காசியின் மனதில் ஒரு நொடி நின்றது. பேசிப் பாரு… எழுபத்தைந்து ஆண்டுகளாக யாரிடமும் அவன் பேசவே இல்லை. அவனைப் பார்த்தவர்கள் அலறி ஓடிவிட்டார்கள். நின்று அவன் பேச்சைக் கேட்ட மனிதர் ஒருவர்கூட இல்லை. அந்த எண்ணமே அவனை ஒரு கணம் அமைதியாக்கியது.

இதற்கிடையில் சீனு கீழே இறங்கி முற்றத்தை அடைந்தான். கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தான். கிணற்றுக்குள் தண்ணீர் இன்னும் இருந்தது. பழைய இரும்பு வாளியும் கயிறும் அப்படியே கிடந்தன. அவற்றை மெதுவாக இழுத்து மேலே கொண்டுவந்தான். “அடடே… இன்னும் நல்லாத்தான் இருக்கு,” என்று ஆச்சரியப்பட்டவன், முகம் கழுவிக்கொண்டான். குளிர்ந்த தண்ணீர் முகத்தில் பட்டதும் புத்துணர்ச்சி ஏற்பட்டது. கிணற்றின் ஓரத்தில் நின்றபடி மாளிகையை முழுவதுமாகப் பார்த்தான்.

“இது பேய் வீடா… இல்ல வரலாறு மறந்த வீடா?” என்று மெதுவாகச் சொன்ன அந்த வார்த்தை காசியின் காதில் தெளிவாக விழுந்தது.

அவன் இதயம் ஒரு நொடி துடித்தது.

வரலாறு மறந்த வீடு…’

அந்த வார்த்தை அவனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

இந்த மாளிகையை மக்கள் பேய் வீடு என்று மட்டுமே நினைவில் வைத்திருந்தார்கள். ஆனால், ஒருகாலத்தில் இது ஒரு குடும்பத்தின் சிரிப்புகளால் நிறைந்த வீடு என்பதையும், இங்கே வாழ்ந்த மனிதர்களின் கதைகளையும் யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை.

சீனு முகத்தைத் துடைத்துக்கொண்டு மீண்டும் மேலே ஏறத் தொடங்கினான். படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென்று நின்றான். சுவரில் பொருத்தப்பட்டிருந்த பழைய மரப்பலகை ஒன்று அவன் கவனத்தை ஈர்த்தது. தூசி படிந்திருந்த அந்தப் பலகையில் மங்கலாக சில எழுத்துகள் தெரிந்தன. துணியால் அதை மெதுவாகத் துடைத்தான்.

தூசி விலகியதும் எழுத்துகள் தெளிவாகின.

காசிநாதன் இல்லம்.”

சீனு அந்தப் பெயரை மெதுவாக வாசித்தான்.

“காசிநாதன்…”

அந்தப் பெயரை அவன் வாய்விட்டு உச்சரித்த நொடியே, காசிநாதன் அப்படியே உறைந்து நின்றான்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு…

முதல் முறையாக…

யாரோ ஒருவர்…

அந்த மாளிகைக்குள் நின்றபடி அவனுடைய பெயரைச் சொல்லியிருந்தான்.

அவன் கண்களில் ஒரு விசித்திரமான ஒளி தோன்றியது.

அது கோபமுமில்லை.

மகிழ்ச்சியுமில்லை.

மறக்கப்பட்ட ஒரு மனிதன்…

தன் பெயரை மீண்டும் கேட்கும்போது ஏற்படும் சொல்ல முடியாத உணர்வு.

அந்த உணர்வோடு காசிநாதன் அமைதியாக சீனுவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அங்கேயே…

ஒரு பேய்க்கும்…

ஒரு மனிதனுக்கும் இடையிலான உறவு…

அவர்களுக்கே தெரியாமல்…

மெதுவாக மாறத் தொடங்கியது.

You may also like

1 comment

M. Sarathi Rio July 23, 2026 - 11:29 am

சீனு சண்டை போடவும் வரலை, ஜெயிக்கவும் வரலை, தன்னை நிருபிக்கவும், தன்னோட குடும்ப சூழ்நிலைக்காக பணம் சம்பாதிக்கவும் வந்திருக்கான்.
அது சரி, இந்த கபிலன் எங்கே போனான்..?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured