தூரம் 16
கூனிக் குறுகி, வார்த்தைகள் வரமறுத்த நிலையில், கால்கள் நிலையில்லாது மண்ணோடு மண்ணாக இழுக்கும் உணர்வில், அப்படியே மண்ணோடு புதைந்துவிட கூடாதா என்று குமுறியவனின் இதயம், ரத்த ஓட்டமின்றி மரித்துப் போவது போல் மூச்சடைத்தது மனைவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்.
சில நிமிடங்களில் மனைவியின் பேச்சினால் சுய கழிவிரக்கத்தில் இருந்தவன், பின் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “கண்டிப்பா போய்தான் ஆகணுமா?” என்றான் வெற்றுக் குரலில்.
“மச்!” என்றாள் சலிப்பாக. முதன்முறையாக மனைவியின் சலிப்புக் குரலைக் கேட்கிறான்.
“சொல்லு, உனக்கு கண்டிப்பா எங்ககிட்ட இருந்து போய்தான் ஆகணுமா?” என்றான் விடாமல்.
மனைவி, ‘ஆமாம்’ என்று சொல்லி விடக்கூடாது என உள்ளுக்குள் அத்தனை தெய்வத்தையும் துணைக்கழைத்ததை, அவன் மட்டுமே அறிவான்.
நினைத்ததெல்லாம் நடக்குமா என்ன? அவன் நினைப்பை தவிடுபொடியாக்கினாள் பூங்கொடி.
“ஆமாம்.” என்றாள் நிதானமாக.
மனைவியின் அந்த நிதானம் ஆடவனுக்கு கிலியைப் பரப்பியது.
“பூம்மா…” என்றான் பயத்தில்.
“ஆமாம், எனக்கு உங்ககிட்ட இருந்து தூரமா போகணும், ரொம்ப தூரமா…” என்றாள் வலி நிறைந்த வார்த்தைகளுடன்.
அந்த வார்த்தைகளில் இருந்த வேதனை அவனையும் தாக்க, செய்வதறியாமல் திகைப்புடன் சில நிமிடங்கள் அப்படியே நின்றான்.
பின் மெதுவாக, “நீ போக நான் ஒத்துக்குறேன்.” என்றான்.
எப்படியும் இந்த பதில்தான் அவனிடமிருந்து வரும் என்று அவள் எதிர்பார்த்ததுதான். அதனால் அவள் மனது ஏமாற்றம் அடையவில்லை.
விழிகள் மூடியபடியே இருக்க, “ம்ம் தேங்க்ஸ்!” என்ற வார்த்தை மட்டும் பதிலாக வந்தது அவளிடமிருந்து. ஆனாலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் நடுங்கிட, இதயமோ வீங்கி வீங்கி துடித்து மரண வலி கண்டது.
“எங்களை ஒதுக்கிட்டு, உங்க அப்பா வீட்டுக்கு நீ போறதில எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு.” என்றான் இளங்கோ நிதானமாக. இப்போது அவன் குரல் தீவிரமாக ஒலித்தது.
அந்தக் குரலில் இருந்த இறுக்கமும் பிடிவாதமும் கொடியை கண் விழித்து அவனைப் பார்க்க வைத்தது.
அவன் பார்வையோ மனைவியின் முகத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது. கொடியோ பதில் சொல்லாமல் அவனையேப் பார்க்க,
“நீ பயந்துக்குற மாதிரி ஒன்னும் சொல்லிடமாட்டேன். என்னோட கண்டிஷனுக்கு ஓகேனா சொல்லு, உன்னை உங்க அப்பா வீட்டுக்கு அனுப்புறேன். இல்லைனா என்னால ஒன்னும் பண்ண முடியாது. நீயும் நம்ம வீட்டுக்குதான் வரணும்.” என்றான் மிகவும் அசட்டையாக.
“என்னால எல்லாம் அங்க வர முடியாது, வரவே முடியாது. அந்த வீட்ல என்னால இருக்கவும் முடியாது. எனக்கு எங்க அப்பா வீட்டுக்கு போகணும், போயே ஆகணும். அதுக்காக உங்க கண்டிஷனுக்கு ஒத்துக்குறேன்.” என்றாள் மெதுவாக என்றாலும் அழுத்தமான குரலில்.
கொடியின் அழுத்தமான பேச்சினால் முகத்தில் அடி வாங்கியதைப் போல உணர்ந்தான் இளங்கோ. அவன் முகம் அவமானத்தில் கன்றிப் போனது.
வலித்தது! ரணமாய் வலித்தது ஆடவனுக்கு. தன்னுடைய பேச்சுக்கள் அனைத்தும் இப்படித்தானே அவளுக்கும் வலித்திருக்கும் என்று அப்போதுதான் புரிந்தது அவனுக்கு.
முடிந்ததைப் பற்றி பேசியோ, அல்லது வாக்குவாதம் செய்தோ எதுவும் ஆகப்போவதில்லை. முதலில் இவளை சரிசெய்ய வேண்டும். அதற்கு பிறகுதான் மற்றதைப் பற்றி யோசிக்க வேண்டும் என முடிவெடுத்தவன், அவளுக்கு அருகில் இருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மனைவியின் முகத்தைப் பார்த்தவாறே,
“உன் நிலைமை, பயம் எல்லாம் எனக்கு புரியுது. நீ உங்க அப்பா வீட்டுக்கு போகலாம், அதை நான் தடுக்கமாட்டேன். ஆனா கூடவே நாங்களும் வரோம். நாங்க என்றால் நான், நம்ம பசங்க எல்லாருமே அங்க வந்துடுறோம். அடுத்து உன்னுடைய எல்லா மெடிக்கல் செலவும் நான்தான் பார்ப்பேன், இதுதான் கண்டிஷன். இந்த கண்டிஷனுக்கு ஓகேனா சொல்லு, இப்படியே உங்க அப்பா வீட்டுக்கு எல்லாரும் கிளம்புவோம்.” என்றான் வெகு நிதானமாக.
கணவனின் பேச்சைக் கேட்ட கொடி ஓய்ந்தே போனாள். இவனிடமிருந்து தனக்கு விமோசனமே இல்லையோ என்று கூட யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கு கோபமும் ஆற்றாமையும் பெருகியது. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டாங்களா இவங்க? விரக்தி அவளின் நெஞ்சின் அடிவரை பரவியது.
“என்னாச்சு கொடிமா, அமைதியாகிட்ட? உனக்கு விருப்பம் இல்லன்னா, ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். நீயும் நம்ம வீட்டுக்கே வந்துடு.” என்றான் அவள் முகத்தில் தோன்றிய உணர்வுக் குவியலை உள்வாங்கிக்கொண்டே.
கணவனின் நிதானம் இப்போது மனைவிக்கு இல்லை. அவனின் நிதானமான பேச்சுக்கள் அவளை சீண்டியிருக்க வேண்டும்.
கோபம் கொப்பளித்த போதும் அவளின் இயல்பு போலவே, “இல்ல… இல்ல… என்னால அங்கே வர முடியாது ப்ளீஸ்… என்னை கொஞ்சம் தனியே இருக்க விடுங்க, இல்லை என்னை இப்படியே விட்டுடுங்க.” என்று கெஞ்சினாள் பேதை.
“ஓ…” எனத் தாடியை தடவியவன், “ஓகே…” என்று பெருமூச்சைவிட்டு, “உனக்கு தனியா இருக்க விருப்பம் இருந்தா இருந்துக்கலாம். ஆனால் அது நம்ம வீட்ல. நீ அங்க வந்து இரு, உன்னை நாங்க யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டோம். பட் உங்க அப்பா வீட்டுக்கு எல்லாம் போக முடியாது.” என்றான் நிர்தாட்சண்யமாக.
இளங்கோவின் பேச்சை கொடியால் ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படியொரு சூழலில் கூட சுயநலமாக யோசிக்கிறானே என்று அவன் மேல் வெறுப்பும் கோபமும் பன்மடங்கு பெருக, “ஏன் இப்படி பண்றீங்க? சாவை கூட எனக்கு நிம்மதியா தர மாட்டீங்களா?” என்றாள் விரக்தியின் உச்சமாக.
“ஏய் வாயை மூடு!” என்று ஆங்காரமாகக் கத்திக்கொண்டே வேகமாக எழ, அதில் பெண்ணவள் அரண்டு போய் அவனை விழித்துப் பார்க்க,
நரம்பு புடைக்க கை முஷ்டியை இறுக்கி மடக்கி தன் தொடையில் வேகமாக குத்திக்கொண்டவன், எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
ஆனாலும் கோபம் குறைவேனா என்றது. “என்னடி விட்டா பேசிக்கிட்டே போற, சாவு அது இதுன்னுட்டு…” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
மேலும், “நீ என்னதான் பேசினாலும் என்னோட கண்டிஷன்ஸ் மாறாது. நீ முடிவு பண்ணிட்டு சொல்லு, நான் வெயிட் பண்றேன். இதுல உங்க அப்பா எங்கேயும் பிரச்சனை பண்ண கூடாது.” என்றான் மிரட்டலாகவும் கோபமாகவும்.
கணவனின் அதிரடி பேச்சில் அதிர்ந்த கொடி, அவனின் மிரட்டலில் மொத்தமாக ஒடுங்கிப் போனாள்.
ஆனாலும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நீங்கதான் நான் தேவையில்லைன்னு முடிவு பண்ணீங்க. அதையே நான் சொல்லும்போது உங்களுக்கு ஏன் கோபம் வருது?
உங்களுக்கு நான் தேவையில்லாத போல எனக்கு நீங்களும் தேவையில்லை. என்னை தனியா விட்டா போதும். ப்ளீஸ் எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்க.” என்றாள் மிகுந்த மன்றாடலுடன்.
ஆனால் இளங்கோவோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நான் சொன்னா சொன்னது தான், இனி முடிவு உன்னுடையது என்பதுபோல அப்படியே அமர்ந்திருந்தான் கல்லுளி மங்கனைப்போல.
அதை கவனித்தவள் ஒரு சலிப்புடன் தன் விழிகளை மூடிக்கொண்டாள். பல நிமிடங்களாக அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, வேறு வழியேயில்லாமல் இளங்கோதான் இறங்கி வர வேண்டியதாகி விட்டது.
“கொடி!” என்றபடி அவளின் கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினான். மனைவியின் கோபத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டுமே என்று யோசிக்கிறான் தான். ஆனால் அதற்காக எல்லாம் அவளை தனியாக விட மனமில்லை. இந்த சிறு பிரிவு நிரந்தர பிரிவாகிவிட்டால் என்ன செய்யது என்று, யோசிக்கிறவனின் பயத்தை அவன் மட்டுமே அறிவான்.
அதனால் அவள் வழிக்கே சென்று தன் வழிக்கு கொண்டு வரலாம் என முடிவு செய்து, “கொடிமா!” என்றான், மீண்டும் தன் கைப்பிடியின் அழுத்தத்தைக்கூட்டி
கணவனின் கையழுத்தத்தம், “ம்ம்…” என்று சொல்ல வைத்தது. இல்லை இல்லை முனக வைத்தது. மெல்ல கைகளை அவனிடமிருந்து உருவ முயன்றாள்.
ஏனோ இந்த திடீர் அனுதாபமும் பாசமும் அவளுக்கு இனிக்கவில்லை. மாறாக மேலும் வெறுப்பைத்தான் கொடுத்தது.
“உனக்கு அதுதான் விருப்பம்னா, உன் மனசுக்கு அதுதான் நிம்மதியைக் கொடுக்கும்னா, நீ உங்க அப்பா வீட்டுக்கே போகலாம். தாராளமா போகலாம், நாங்க யாரும் வரல. ஆனா ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு வரும்போது நானும் கண்டிப்பா வருவேன். அதோட ஹாஸ்பிடல் செலவுகள் எல்லாமே என்னுடையதுதான். இதுக்கு மேல என்னால இறங்கி வர முடியாதுடி. இனி உன்னோட முடிவு தான்.” என்றவன், மனைவியின் கையைப் பிடித்து இதமாக அழுத்திவிட்டபடியே அவளைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனைவியின் அந்தப் பார்வையில் என்ன வரபோகுதோ என்பது போல் அவனும் பார்க்க,
“இந்த வாழ்க்கையில பணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுனு எனக்கு புரிய வச்சது நீங்கதான். இந்த பணம் தான் வாழ்க்கை, இந்த பணம் இல்லன்னா கணவன், மனைவி உறவுகூட ஒன்னுமில்லன்னு புரிய வச்சதும் நீங்கதான்.
இந்த பணத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உங்க மனைவியான எனக்கு நீங்க கொடுக்கல. அப்போ எனக்கு அது புரியல, ஆனா இப்பவும் புரியாம இருந்தா என்னை மாதிரி ஒரு முட்டாள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டாங்க. ஆனா இப்ப நீங்க பண்றது…” என்று முடிக்காமல் அந்த வார்த்தையை பாதியிலே விட்டாள்.
“கொடி நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்ட. உனக்கு பணத்தோட அருமை தெரியணும்னு தான்…” என்று அவன் பதட்டமாக முடிக்கும் முன்னே, பெட்டில் கையைத் தட்டி வேண்டாம் என மறுத்தாள்.
“இல்ல வேண்டாம்… இந்த பணத்தோட மதிப்பு தெரியணும்னு தான் நீங்க எல்லாம் பண்ணீங்க, அதை சொல்ல வேண்டாம் எனக்கு புரியுது. ஆனா அது உங்க பணம் ஆச்சே? இப்பவும் செலவு செய்றேன்னு சொல்றீங்களே, அப்படினா இன்னுமே அதிகமாக செலவாகிடுமே…” என்றாள் அமைதியாக. ஆனால் பேச மிகவுமே திணறினாள் பெண்.
மனைவியின் உங்க பணம் என்ற வார்த்தை, கணவன் என்று மார்தட்டிக் கொண்டிருந்தவனை சரியாக பதம் பார்த்தது.
அவனுக்கே அந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. அவளால் மட்டும் எப்படி முடியும்? அதுவும் உடனே என்றால்? காலம் எடுக்க தானே செய்யும். இரண்டு வருடத்தின் வலிகளை இரண்டு நிமிடத்தில் மறந்துவிடுவாள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
அவள் பக்கமிருக்கும் நியாயத்தையும் வலியையும் மதிக்க வேண்டும் என நினைத்தவன், எப்படி தன் மனைவியை பழைய நிலைக்கு கொண்டு வரப்போகிறோமோ? நிச்சயம் மிக சிரமம் தான் என்பதை உணர முடிந்தது.
இந்த சூழ்நிலையில் எந்த விளக்கம் கொடுத்தாலும், அது சரியாக அவளை சென்றடையாது என்பது புரிய, அதைவிடுத்து இப்போது என்ன பேச வேண்டும் என்று யோசித்து பேச ஆரம்பித்தான்.
“உண்மைதான் கொடிமா, நான் அப்படி எல்லாம் பண்ணிருக்க கூடாது. எல்லாமே என்னோட முட்டாள்தனமும் முரட்டு கோபம் தான்னு எனக்கு புரியுது. அதுக்காக நீ என்னை மன்னிச்சுடுன்னு கேட்க மாட்டேன். நான் செஞ்சது ரொம்ப ரொம்ப தப்புதான்…” என்றான் விளக்கம் கொடுக்கும் பாவனையில்.
பின், “தப்பை தெரியாமல் செஞ்சாதான் மன்னிப்பு கேட்கணும். தெரிஞ்சே செஞ்சுட்டு மன்னிப்பு கேட்கக்கூடாது. நீ என்னை கடைசி வரைக்கும் மன்னிக்க வேண்டாம், ஆனா எனக்கு உன் கூட இருக்கணும். அதுக்கு நான் என்ன வேணா செய்வேன்.” என்றான் மித மிஞ்சிய வருத்தமான குரலில்.
கொடிக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இவனிடம் கோபம் கூட பட முடியவில்லையே என்று தன்மீதே கோபம் வந்தது.
என்னதான் யாரும் வேண்டாம் என்றாலும் குழந்தைகளை நினைத்து அவள் தயங்கத்தான் செய்தாள்.
பிள்ளைகள் எப்படி இருந்தாலும், தாயாக அவள் மனம் இந்தப் பிரிவை எண்ணி கனக்கத்தான் செய்தது.
மகள் பத்தாவது பொதுத் தேர்வில் இருக்கிறாள். அவளுடன் இருக்க வேண்டுமே என்று உள் மனம் கதறத்தான் செய்தது.
இந்த இரண்டு நாட்களாக மகனையும் கவனிக்கிறாள் தானே? அவளை விட்டு இம்மியும் நகராமல் முந்தானையை பிடித்துக் கொண்டு சுற்றுகிறானே?
இவர்களை விட்டு தனியே செல்ல முடியுமா என்று ஒரு மனம் யோசிக்கையில், மற்றொரு மனமோ கண்டிப்பாக போய்தான் ஆக வேண்டும். உன் அருமை இவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் தாயின் அருமை தெரிய வேண்டும், உன்னைப் பற்றி புரிய வேண்டும். அதற்கு இந்த பிரிவு மிக மிக அவசியம். அதன்பிறகு அவர்களாகவே உன்னைத் தேடி வருவார்கள். அதுவரை நீ பொறுத்துதான் ஆக வேண்டும் என புத்தி சொன்னது.
புத்தி சொன்ன மனதின்படி அவர்களைப் பிரிய வேண்டிய கட்டாயத்திற்கு சென்றாள் கொடி.
தன் முகத்தையே வேதனை தழும்பிய பார்வையால் பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள்.
கணவனின் பார்வையில் தெரிந்த வேதனை உண்மை என்று அவளுக்கு புரிகிறது.
அதில் கோபம் இல்லை, அவளுக்கான வேதனையும் வருத்தமும் தான் ததும்பி வழிகிறது என்று புரிகிறது பெண்ணுக்கு.
ஆனாலும் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இரண்டு வருடங்கள்! முழுதாக இரண்டு வருடங்கள் தனிமை எப்படி இருக்கும் என்று அனுபவிக்க வைத்தானே!
ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள் எப்படி கதறி, புழுங்கி அழுதழுது ஓய்ந்திருப்பாள்.
இன்று வந்து அனைத்துக்கும் சமாதானம் செய்வது போல் நடந்து கொண்டால், அவளால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நெடுங்காலமாக புகைந்து கொண்டிருப்பதை விட, ஒரு கணமேனும் பற்றி எரிவது மேல் என்பதைப் போல், இளகிய மனதை இறுக்கிக் கொண்டாள். வழக்கம் போல தன் வலிகளையும் மறைத்துக் கொண்டாள்.
பதிலுக்காக தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம், “நீங்க சொல்றது போல செஞ்சுக்கலாம், என்னை தனியா விட்டா போதும்.” என்று பட்டென சொல்லிவிட்டாள்.
அவன் எதிர்பார்த்த பதிலே விடையாய் கிடைக்க, உள்ளுக்குள் ரணமாய் வலித்தாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்தவன், “ம்ம்…” என்று மட்டும் சொன்னான்.
அடுத்து என்ன பேச வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று கூட புரியவில்லை.
தான் இப்போது என்ன பேசினாலும் அது தவறாகத்தான் போய் சேரும் என்று அவனுக்கு புரிய அமைதி ஆகிவிட்டான்.
கொடி மீண்டும் விழிகளை மூடிக்கொள்ள, அவள் அருகில் அமைதியாக அமர்ந்து கை விரல்களை வருட ஆரம்பித்தான் இளங்கோ.
அவள் வலியைக் குறைக்க நினைத்தானோ, என்னவோ? ஆனால் அது முடியுமா என்ன?
சில நிமிட நேரங்களில் கதவு படார் என திறக்க, வேகமாக உள்ளே வந்தாள் நந்தினி.
தலை கலைந்து, விழிகள் சிவந்து, முகம் வீங்கி வந்து நின்றவளைப் பார்த்த இளங்கோவிற்கு அய்யோ என்றானது. ஓயாமல் அழுதிருப்பாள் என்று பார்த்ததுமே புரிந்தது.
விடாமல் வழிந்த விழிநீரை வேகமாக துடைத்துக்கொண்டே, தன் தமையனைப் பார்த்து “நீங்க இங்க என்ன பண்றீங்க?” அண்ணிக்காக கேள்விகணைகளை தாங்கிய தர்மதேவதை போல ஆங்காரமாக நின்றிருந்தாள்.
என்னுடைய புன்னகையை வேரோடு பிடுங்கி சென்ற பிறகும், என்னால் புன்னகைக்க முடிகிறது. காரணம் உன்னை தண்டிக்க வேறு வழியில்லை என்னிடம். காதலோடு வாழலாம் என்றாய், ஆனால் இன்று காதலே ஓடு என்றாகி போனதே என் வாழ்வு.
***