சரி – 09
அடுத்த சில நாட்கள் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து போயின.
ஆனால் அந்த மாற்றமில்லாத நாட்களில்தான், ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் மீண்டும் தன் பழைய பாதையைத் தேட ஆரம்பித்திருந்தது.
வீட்டில் சுமதியின் பெயர் யாருடைய வாயிலும் அதிகமாக வரவில்லை. அதற்காக அவளை யாரும் மறந்துவிட்டார்கள் என்பதல்ல.
சில இழப்புகளை தினமும் பேசிக் கொண்டிருக்க முடியாது. பேசாமல் வாழ பழகுவதுதான் மனிதர்களின் மிகப் பெரிய பலமும், மிகப் பெரிய பலவீனமும்.
ஆதினிக்கும் அந்த வீட்டின் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக ஆரம்பித்திருந்தது. பாட்டி எந்த நேரத்தில் மருந்து சாப்பிடுவார், தாத்தாவுக்கு காபியில் எவ்வளவு சர்க்கரை வேண்டும், மூர்த்தி காலை உணவுக்குப் பிறகு தவறாமல் செய்தித்தாள் படிப்பார், வேந்தன் வீட்டை விட்டு கிளம்பும் நேரம் வரை யாரிடமும் தேவையில்லாமல் பேச மாட்டான்… இவை எல்லாம் யாரும் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. சில விஷயங்கள் ஒன்றாக வாழும்போது இயல்பாகவே மனதில் பதிந்து விடுகின்றன.
அன்றும் வழக்கம்போல வேந்தன் காலை உணவை முடித்துவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான்.
கார் சாவியை எடுத்தவன், ஏதோ நினைவு வந்தது போல மீண்டும் திரும்பி தன் அறைக்குள் சென்றான். சில நொடிகளில் ஒரு கோப்புடன் வெளியே வந்தவன், அதை மேசையின் மீது வைத்துவிட்டு அலைபேசியில் யாரோடு பேச ஆரம்பித்தான்.
“ராஜா… அந்த டென்டர் ஃபைல் என் டேபிள்ல இருக்கு. நான் எடுத்துட்டு வந்துட்டேன். க்ளைன்ட் மீட்டிங்குக்கு முன்னாடி எஸ்டிமேட் ஒன்ஸ் வெரிஃபை பண்ணிக்கோ. இந்த ப்ராஜெக்ட் மிஸ் ஆகக் கூடாது.”
அவன் பேசிக்கொண்டே வெளியே சென்றதை கவனித்துக் கொண்டிருந்த ஆதினி, மேசையின் மீது கிடந்த கோப்பை ஒரு கணம் பார்த்தாள்.
அது திறந்து கிடந்ததால், தெரியாமல் அவள் பார்வை அதன் மீது விழுந்தது. வரைபடங்கள், கட்டிடத்தின் முகப்புத் தோற்றம், செலவுக் கணக்குகள், ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்து குறிப்புகள்… அவளுக்கு அவற்றில் எதுவும் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது.
வேந்தன் அலுவலகத்திற்குப் போகிறான் என்பதல்ல… பலருடைய கனவுகளை வீடுகளாக மாற்றும் ஒரு பொறுப்புக்குள் தினமும் நுழைகிறான்.
அந்த எண்ணமே அவள் மனதில் அவனைப் பற்றிய ஒரு புதிய மரியாதையை விதைத்தது.
அதே நேரத்தில், வாசலில் ஒரு ஜீப் வந்து நின்ற சத்தம் கேட்டது.
“மூர்த்தி அண்ணே…” என்ற குரலோடு மூன்று நான்கு பேர் வீட்டுக்குள் வந்தார்கள்.
அவர்களைப் பார்த்த மூர்த்தி, “வாங்க… வாங்க என்ன விஷயம்?” என்று எழுந்து நின்றார்.
“அண்ணே… நாளைக்குள்ள முடிவு சொல்லணும். இல்லன்னா அந்த நிலத்தை அவங்க ஆக்கிரமிச்சிடுவாங்க…” வர்கள் பேசிக்கொண்டிருக்க, மூர்த்தியின் முகம் மெதுவாக இறுகியது.
ஆதினி தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு அமைதியாக விலகினாள்.
அந்த வீட்டில் இரண்டு உலகங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.
ஒருவர் செங்கல், சிமெண்டு, வரைபடங்களோடு எதிர்காலத்தை கட்டிக் கொண்டிருந்தார்.
மற்றொருவர் மனிதர்களின் பிரச்சினைகள், கோபங்கள், சமரசங்களோடு ஒரு ஊரைத் தாங்கிக் கொண்டிருந்தார்.
அந்த இரண்டு உலகங்களுக்கும் நடுவே நின்றிருந்த ஆதினி… இன்னும் எந்த உலகத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்வது என்று தெரியாமல், அமைதியாக வாழ்க்கையைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருந்தாள்.
அந்த வீட்டிலிருந்து கிளம்பிய வேந்தன் நேராக அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ஈரோடு புறவழிச்சாலையில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கே முதலில் சென்றான்.
பெரிய கிரேன்கள் இயங்கும் சத்தம், கலவை இயந்திரத்தின் ஓசை, அங்குமிங்கும் சுமைகளைத் தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள் என்று அந்த இடமே ஒரு தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
கார் உள்ளே நுழைந்ததும் வேலை செய்து கொண்டிருந்த சிலர் இயல்பாகவே கைகளை உயர்த்தி வணக்கம் வைத்தனர். பதிலுக்கு தலையை மட்டும் அசைத்தவன், நேராக கட்டிடம் எழுந்து கொண்டிருந்த பகுதியை நோக்கி நடந்தான்.
“குட் மார்னிங் சார்…” என்று ஓடிவந்த ராஜா, காலையிலேயே திருத்தப்பட்ட வரைபடத்தை அவனிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த வேந்தன், எந்த அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு குறிப்பையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தான். சில நொடிகளுக்குப் பிறகு தான், “இப்போ சரி… இனிமே இந்த மாதிரி measurement miss ஆகக்கூடாது ராஜா. காகிதத்துல வர்ற ஒரு இஞ்ச் தவறினா சரி பண்ணிடலாம், கட்டிடத்துல ஒரு அடி தவறினாலும் பிரச்சனையா மாறிடும்…” என்றான் அமைதியாக.
“சாரி சார்…”
“என்கிட்ட சாரி சொல்லாத. வேலை சரியா நடந்தா போதும்.” அவன் சத்தமாகப் பேசவில்லை. யாரையும் அவமானப்படுத்தவும் இல்லை. ஆனால் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அங்கிருந்தவர்களுக்கு ஒரு பொறுப்பை நினைவூட்டியது.
அந்த நேரத்தில், வயதான ஒரு தொழிலாளி சிமெண்டு மூட்டையைத் தூக்க முயன்று தடுமாறினார். அருகில் இருந்தவர்கள் ஓடிச் செல்லும் முன்பே, வேந்தன் வேகமாக அவரருகில் சென்றான்.
“என்னாச்சு பெரியவரே?”
“ஒன்னுமில்ல தம்பி… கொஞ்சம் தலை சுத்துன மாதிரி…” அவர் சொல்லி முடிப்பதற்குள், “ராஜா… அவரை உடனே clinic-க்கு கூட்டிட்டு போங்க. இன்னைக்கு அவரை வேலை பார்க்க விடாதீங்க. தேவையான சம்பளத்தை deduct பண்ணக்கூடாது…” என்று சொல்லிவிட்டு, அந்த பெரியவரின் தோளில் கை வைத்தான்.
“உடம்பு சரியில்லன்னா சொல்லணும். வேலை எப்பவும் இருக்கு… உடம்பு தான் முக்கியம். அது இருந்தா தான் அடுத்த வேளை பார்க்க முடியும்..”
அந்த முதியவரின் கண்கள் கலங்கின.
“நல்லா இருக்கணும் தம்பி… நீங்க குடும்பம் குழந்தைன்னு நல்லா இருக்கணும்….”
வேந்தன் சிரிக்கவில்லை. “நீங்க நல்லா இருந்தா தான் நான் நல்லா இருக்க முடியும்…” என்று மட்டும் சொல்லிவிட்டு அடுத்த பகுதியை நோக்கி நடந்தான்.
அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த புதிய சைட் இஞ்சினியர் அரவிந்த், அருகில் நின்ற ராஜாவிடம் மெதுவாக, “உங்க MD எல்லார்கிட்டயும் இப்படித்தான் இருப்பாரா?” என்று கேட்டான்.
ராஜா சிரித்தான்.
“கோபம் வந்தா ரொம்ப கோபப்படுவார்… ஆனா காரணம் இல்லாம யாரையும் திட்ட மாட்டார். வேலை விஷயத்துல மட்டும் compromise கிடையாது. அதான் நாங்க இவ்வளவு வருஷமா அவர்கிட்ட வேலை பார்க்குறோம்.”
அந்த வார்த்தைகள் வேந்தனின் காதில் விழவில்லை.
அவன் அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் நின்று, தூரத்தில் உயர்ந்து கொண்டிருந்த இன்னொரு கட்டிடத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
கான்கிரீட்டால் கட்டிடங்களை கட்டுவது எளிது.
ஆனால்…
மனிதர்களின் நம்பிக்கையை கட்டுவது…
அதை விட மிகவும் கடினம்.
அதை இழப்பது…
ஒரே ஒரு தவறு போதும்.
அந்த உண்மையை வாழ்க்கை அவனுக்கு மிகவும் சீக்கிரமாகவே கற்றுக் கொடுத்திருந்தது.
மாலை நேரம் நெருங்கியிருந்தது. வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்திருந்த தாத்தா, வழக்கம்போல மாலை செய்தித்தாளை விரித்துப் படித்துக் கொண்டிருந்தார். உள்ளே சமையலறையில் இரவு உணவுக்கான வேலைகளில் ஆதினி பாட்டிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். அந்த வீட்டில் சுமதி இல்லாத வெற்றிடம் இன்னும் ஒவ்வொரு வேலையிலும் தெரிந்தது. ஆனால் அதை யாரும் வார்த்தைகளால் நிரப்ப முயற்சிக்கவில்லை. வாழ்க்கை எப்படியோ முன்னேறிக் கொண்டே இருந்தது.
அந்த நேரத்தில், வாசலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அவசரமாக உள்ளே வந்த இளைஞன், “மூர்த்தி அண்ணே இருக்காங்களா?” என்று பதற்றமாகக் கேட்டான். சமையலறையிலிருந்து அந்தக் குரலைக் கேட்ட ஆதினி வெளியே வந்தாள்.
“மாமா இன்னும் வரல… ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“ஆமாம்மா… இரண்டு கிராமத்துக்குள்ள சின்ன பிரச்சனை. அண்ணனைக் கூப்பிடத்தான் வந்தேன்.”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாசலுக்கு வெளியே மூர்த்தியின் ஜீப் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கியவர் வீட்டுக்குள் வருவதற்கும் முன், அந்த இளைஞன் நடந்ததை விரைவாகச் சொல்ல ஆரம்பித்தான். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், “சரி… நீ முன்னாடி போ. நான் பின்னாடியே வர்றேன்…” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்தார் மூர்த்தி.
அவருடைய முகத்தில் சோர்வு தெளிவாகத் தெரிந்தது. காலை முதலே வெளியே இருந்த களைப்பு, அதோடு தொடர்ந்து வந்த பிரச்சனைகள்—அனைத்தும் சேர்ந்து அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன.
“மாமா… முதல்ல காபி குடிங்க…” என்று ஆதினி டம்ளரை நீட்டினாள்.
“இப்போ வேண்டாம்மா…”
“காலைல இருந்து ஒண்ணும் சாப்பிடலன்னு பாட்டி சொன்னாங்க…”
அந்த ஒரு வரியில் இருந்த அக்கறை, மூர்த்தியை மறுக்க விடவில்லை. டம்ளரை வாங்கியவர் ஒரு மிடறு குடித்துவிட்டு, “நன்றி மா…” என்று மட்டும் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார்.
அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பாட்டி, மெதுவாகப் புன்னகைத்தார்.
“என்ன பாட்டி?” என்று கேட்டாள் ஆதினி.
“ஒண்ணுமில்லம்மா…” என்று சொல்லிவிட்டு சற்று அமைதியாக இருந்தவர், “இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா… ஆனா மகளா வாழ்ந்துட்டுப் போனவ சுமதி. இப்போ…” என்று சொல்லி நிறுத்தினார்.
ஆதினி அவரை அமைதியாகப் பார்த்தாள்.
“சில உறவுகளை ரத்தம் சேர்க்காது மா… மனசுதான் சேர்க்கும். அந்த மனசை காப்பாத்திக்கிட்டா… குடும்பம் தானா ஒண்ணா நிக்கும்.”
பாட்டியின் குரல் மென்மையாக இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் ஆதினியின் மனதில் ஆழமாகப் பதிந்தன.
அந்த நேரத்தில், வாசலுக்கு வெளியே கார் வந்து நின்ற சத்தம் கேட்டது.
வேந்தன்.
நாள் முழுவதும் வேலை பார்த்த களைப்பு அவன் முகத்தில் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும், வழக்கம்போல முதலில் சுமதியின் புகைப்படத்தைப் பார்த்தான். பிறகு தாத்தாவையும், பாட்டியையும் பார்த்து நலம் விசாரித்தான்.
ஆதினி அமைதியாக ஒரு டம்ளர் காபியை அவன் முன் வைத்தாள்.
“தேங்க்ஸ்…” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவனிடமிருந்து வந்தது.
அந்த வார்த்தை சாதாரணமாக இருந்தாலும், இதுவரை அவளிடம் அவன் சொன்ன முதல் இயல்பான நன்றி அது.
ஆதினி எதுவும் பேசவில்லை.
ஆனால் அந்தச் சிறிய வார்த்தை கூட, அவர்களுக்குள் இருந்த அந்நியத்தின் சுவரில் ஒரு சிறிய கல்லை அகற்றியதைப் போலத் தோன்றியது.
வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது.
வாசல் முன் இருந்த மண்ணில் மழைத்துளிகள் விழுந்து மண்வாசனை பரவியது.
சில மாற்றங்கள்…
பெரிய சத்தத்தோடு வருவதில்லை.
முதல் மழைத்துளியைப் போல…
அமைதியாகத்தான் ஆரம்பிக்கின்றன.
அன்றைய இரவு மழை நீண்ட நேரம் பெய்து கொண்டே இருந்தது. வீட்டின் ஓடுகளில் விழுந்த மழைத்துளிகளின் சத்தம், அந்த அமைதியான இரவுக்கு ஒரு வித்தியாசமான உயிர் கொடுத்துக் கொண்டிருந்தது.
இரவு உணவை முடித்த பிறகு தாத்தாவும் பாட்டியும் தங்களது அறைக்குள் சென்றுவிட, மூர்த்தியும் வழக்கம்போல அடுத்த நாள் சந்திக்க வேண்டியவர்களின் பெயர்களை ஒரு சிறிய குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.
வீட்டின் ஒவ்வொருவரும் தங்களுக்கான வேலையில் மூழ்கியிருந்தாலும், அந்த வீட்டில் முன்பிருந்த இறுக்கம் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை ஆதினியால் உணர முடிந்தது.
சமையலறையை ஒழுங்குபடுத்தி முடித்தவள், மேசையின் மீது இருந்த காலியான டம்ளர்களை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது, வேந்தனின் அலைபேசி ஒலித்தது.
திரையில் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவன் சில நொடிகள் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
பிறகு, “இல்ல… அந்த payment-ஐ நாளைக்கு release பண்ணிடுங்க. தொழிலாளிகளோட சம்பளம் ஒரு நாள்கூட தள்ளிப் போகக் கூடாது. Client payment வரட்டும் என்று wait பண்ண வேண்டாம். Company account-ல இருந்து போடுங்க…” என்று சொல்லிவிட்டு அழைப்பை முடித்தான்.
அந்த வார்த்தைகள் ஆதினியின் காதிலும் தெளிவாக விழுந்தன. அவள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் அவன் மனதில் தொழிலுக்கு இருந்த பொறுப்பு, பணத்தை விட மனிதர்களை முதலில் நினைக்கும் பழக்கம்—அவை அவளை அமைதியாக யோசிக்க வைத்தது.
அதே நேரத்தில் மூர்த்தியின் அலைபேசியும் ஒலித்தது. “சரி… நாளைக்கு காலை எல்லாரையும் ஒன்றிய அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்க. சண்டை பெருசாகுறதுக்கு முன்னாடியே முடிச்சிடலாம்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை வைத்தார். ஒரு நிமிடம் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தவர், தன்னையும் அறியாமல் பெருமூச்சு விட்டார்.
அதை கவனித்த வேந்தன், “அப்பா… உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க…” என்று இயல்பாகச் சொன்னான்.
மூர்த்தி மெதுவாக அவனைப் பார்த்தார். அந்த “அப்பா” என்ற அழைப்பு சாதாரணமாக இருந்தாலும், பல வருடங்களுக்குப் பிறகு அது எந்தத் தயக்கமும் இல்லாமல் வந்திருந்தது.
“நீயும்…” என்று மட்டும் சொல்லிவிட்டு சிரித்தார்.
அந்தச் சிரிப்பைப் பார்த்த தாத்தா, எதுவும் பேசாமல் தன் மூக்குக் கண்ணாடியை கழற்றி வைத்தார். அவருடைய கண்களில் தெரிந்த சிறிய நிம்மதியை யாரும் கவனிக்கவில்லை.
ஆனால்…
ஆதினி கவனித்தாள்.
இந்த வீட்டில் உடைந்திருந்த உறவுகள் ஒரே நாளில் இணையப் போவதில்லை.
ஆனால்…
ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய விரிசல் மட்டும் மறைந்து கொண்டே இருந்தது.
அந்த இரவு உறங்கச் செல்லும் முன், சுமதியின் புகைப்படத்தின் முன் விளக்கை ஏற்றி வைத்த ஆதினி, சில நொடிகள் அங்கேயே நின்றாள்.
“இந்த வீட்டுல… எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா சிரிக்க ஆரம்பிக்கறாங்க அத்தை…” என்று மனதிற்குள் மட்டும் சொல்லிக் கொண்டவள், மெதுவாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
வெளியில் மழை நின்றிருந்தது.
ஆனால்…
அந்த வீட்டின் மீது பல நாட்களாகப் படர்ந்திருந்த துக்க மேகங்கள் மட்டும், மெதுவாக விலக ஆரம்பித்திருந்தன.
1 comment
இந்த வேந்தன் வெளியே கறார் மூஞ்சி, வீட்ல உம்மணாஞ்மூஞ்சியோ ?
😀😀😀
CRVS (or) CRVS2797