Home Antiheroதூரம் – 17

தூரம் 17

“ராசாத்தி!” என இளங்கோ திணற,

“நீங்க எதுவும் பேசாதீங்க. எதுக்கு இங்க வந்தீங்க? மதினியை இன்னும் பேசி பேசியே கஷ்டப்படுத்த போறீங்களா?” என கோபமாக கத்த,

“போதும் நந்தினி!” என இளங்கோ அதட்ட, அதில் நந்தினி பதில் பேச முன், “ம்ச்!” என்றாள் கொடி. அதில் இருவரும் கொடியைப் பார்க்க, அவள் விழிகளில் சலிப்புதான் தெரிந்தது.

சலிப்புதான் கொடிக்கு. இளங்கோவையே அவளால் சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, நந்தினியும் சேர்ந்து கொண்டால் என்னதான் செய்வாள்?

“என்ன மதினி, என்ன செய்யுது?” என நந்தினி பதட்டமாக கேட்க, அவளை தள்ளிவிட்டு, “என்ன கொடி…” என இளங்கோவும் பதட்டமாக கேட்க,

‘தண்ணி வேணும்.’ என்றாள், வாய் அருகே கையை வைத்து குடிப்பது போல் சைகையில்.

“இரு… இரு… நான் கொண்டு வரேன்.” என இளங்கோ நகரப்போக, தண்ணீர் பாட்டிலுடன் உள்ளே வந்தாள் அமுதா.

தங்கையின் நிலை அவளுக்கும் நெஞ்சில் குருதி வடிய வைத்தது. எவ்வளவு வலிகள், வேதனைகள்?! எப்படி தாங்கினாளோ என்று நினைக்கையிலே இதயமே வெடித்துப் போனது.

கலங்கிய விழிகளுடன் கொடியைப் பார்த்தபடியே நிற்க, நந்தினி தான் அமுதாவிடமிருந்து பாட்டிலை வாங்கி மூடியில் நீரை ஊற்றி கொடிக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினாள்.

இரண்டு மூடி குடித்ததும் போதும் என்றவள், “எனக்கு தூக்கம் வருது நந்தினி, நீங்க வெளிய இருங்க. எனக்காக நீ சண்டை போடக்கூடாது. எப்பவும் கூடாது…” என பேச திணறினாலும், மெல்ல மெல்ல ஆனாலும் அழுத்தமாக நந்தினியைப் பார்த்துக் கூறினாள் கொடி.

“அதுக்காக சும்மா இருக்கணுமா நானு? அதுவும் இவர் பண்ண வேலைக்கு?” என பல்லைக் கடிக்க,

“ம்ச்! போதும் நந்தினி ப்ளீஸ்…” என்று விழிகளை மூடிக்கொள்ள, “சரி, உங்க முன்னாடி பேசல.” என விறுவிறுவென வெளியேறிவிட, அமுதாவின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.

தங்கையின் கோபத்தை அவளால் உணர முடிந்தது. ஆனால் அதை ஏற்கத்தான் முடியவில்லை. ‘கொடி… கொடி…’ என அவளை கட்டிப்பிடித்து கதற வேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை அடக்க முடியாமல் அப்படியே நிற்க, இளங்கோவும் அப்படியே தான் நின்றான்.

சில நிமிடங்களுக்கு பிறகு, அழுது கொண்டே அமுதா வெளியில் செல்ல, இளங்கோ அவளுக்கருகில் வந்து, “உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடு, முடியலன்னாலும் பரவாயில்ல. ஆனா எங்களை விட்டு போகணும்னு எப்பவும் நினைக்காத. நான் சொன்னது எல்லாம் உனக்கு நினைவில் இருக்கும் தானே? மாமாகிட்ட நீயே பேசு…” என்றவன், அவள் முகத்தைப் பிடித்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

இவை எதற்கும் கொடியிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மரக்கட்டை போல் கிடந்தாள். ஆனால் விழிகள் மட்டும் அவனை கூர்மையாக பார்த்தது. மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனால் இதை உணர முடிந்தது.

அந்த விழிகளில் கோபம், விரக்தி, ஆற்றாமை, வேதனை, வலி என அத்தனை உணர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக பிரதிபலித்தது.

அவனுடைய எந்த விளக்கத்தையும் அவள் எதிர்பார்க்கவில்லை என்று அவனுக்கு உணர முடிந்தது.

மனைவியின் ஒதுக்கம் அவனால் தாங்கவே முடியவில்லை. சில மணி நேரங்களுக்கே இப்படியென்றால்? இரண்டு வருடங்கள் முழுதாக அவளை ஒதுக்கிவிட்டேனே? அவளுக்கு எப்படி வலித்திருக்கும் என அவனுக்குப் புரிகிறது.

புரிந்து என்ன செய்ய? காலம்தான் கடந்து விட்டதே!

“இது உனக்கு பிடிக்காது, கோபம், வெறுப்பு எல்லாம் வரும்னு எனக்குத் தெரியும். ஆனா இது எனக்கு… என்னோட பயத்துக்கான மருந்து.” என்றவன், மீண்டும் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் வெளியில் சென்றான்.

‘இனி முடிவே இல்லாத பாதையில் பயணிக்க போகிறேன், ஆனாலும் முடிவில் வழி காட்ட நீ வருவாய் என்ற நம்பிக்கையில்…’

அனைவரும் வெளியே சென்ற பிறகே கொடியால் இயல்பாக மூச்சுவிட முடிந்தது. தன் இளகிய மனதை எல்லோரும் கொடூரமாக சிதைத்துவிட்டு, இப்போது வந்து மன்னித்துவிடு, மறந்துவிடு என்றால் எப்படி முடியும்?

மயக்கம் போட்டு விழாமல் இருந்திருந்தால், நிச்சயம் யாரிடமும் இந்த நோயைப் பற்றி சொல்லிருக்க மாட்டாள். கிட்டத்தட்ட இதுவும் ஒரு கொலை போலத்தான்.

முதலில் தன் உணர்வுகளைக் கொன்று, தன் சுய விருப்பங்களைக் கொன்று, தன் அன்பைக் கொன்று கணவன், மனைவி என்ற பந்தத்தைக் கொன்று, தன் தாய்மையைக் கொன்று என அனைத்தையும் கொன்ற பிறகு அவள் இருந்தென்ன லாபம், வாழ்ந்தென்ன லாபம்?

அதனால்தான் இப்படியொரு முடிவுக்கு வந்தாள். ஆனால் அது கூட கடவுளுக்கு பொறுக்கவில்லை போல, அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.

நினைவுகள் எங்கெங்கோ சென்றது. வீட்டின் கடைக்குட்டியாய், கவலைகள் என்றால் என்னவென்றே தெரியாமல் கலகலவென சுற்றித் திரிந்த காலங்கள் கண்முன் படமாய் விரிந்தது.

அந்த வீட்டில் அவள்தான் அனைவருக்கும் செல்லம். அக்காக்களின் கணவர்கள் கூட அவளை அப்படி தாங்குவார்கள். அப்படியான நிகழ்வுகளில் ஒரு இளவரசி போல உணர்ந்த காலங்கள் கடந்தே போய்விட்டது.

மீண்டும் அந்த வீட்டில், அவளும் அவள் அப்பாவும் மட்டும். போதும், இனி எதுவும் வேண்டாம். இந்த வாழ்க்கையை மட்டுமாவது எனக்கு நிலை நிறுத்திக்கொடு கடவுளே என வேண்டிக் கொண்டாள்.

இப்படி பல எண்ணங்களுடன் தனக்குள்ளே போராடியவள், ஒரு கட்டத்தில் மருந்தின் வீரியத்தில் நல்ல உறக்கத்திற்கு சென்றாள்.

இங்கு வெளியில் வந்தவனிடம் பிள்ளைகள் இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் கட்டிக்கொண்டு கதற,

“ப்பா… அம்மாவுக்கு என்னப்பா? எனக்கு பயமா இருக்குப்பா. இப்படி எல்லாம் நடக்கும்னே எனக்குத் தெரியவே தெரியாதுப்பா. எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா…” என நர்த்தனா ஒரு பக்கம் அழ,

“நான் எங்கேயும் போகமாட்டேன், அம்மாவ பார்க்கணும். உள்ள கூப்பிட்டு போங்கப்பா, எனக்கு உடனே பார்க்கணும். ஏன் எல்லாரும் அழறாங்க. ப்பா வாங்கப்பா…” என நவீன் ஒருபக்கம் அழ, அவர்களைப் பார்த்து பெரியவர்களும் கலங்க, அந்த இடமே உணர்வு குவியலாய் மாறிப்போனது.

வெகு நேரம் இருவரையும் அணைத்தபடியே அமர்ந்திருந்தான் இளங்கோ. குழந்தைகள் என்பதால் அழுது தீர்த்துவிட்டார்கள். முழு ஆண்மகன் என்ன செய்வான்? தன் உணர்வுகளை அடக்கி இருவரையும் இறுக்கியபடியே இருந்தான். குழந்தைகள் தேம்புவதை நிறுத்திய பிறகே அவர்களை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

“அம்மாவுக்கு நாம பயப்படுற மாதிரி எல்லாம் ஒன்னுமில்ல. நாம பயந்தாதான் அவ இன்னும் பயப்படுவா. அம்மா பயப்படாம, கஷ்டப்படாம இருக்கணும்னா நீங்க ரெண்டு பேரும் அழாம, தைரியமா இருக்கணும். அம்மா இனி ஆறு மாசத்துக்கு ஹாஸ்பிடலுக்கு அடிக்கடி வரணும். அங்க அட்மிட் பண்ணுவாங்க, சர்ஜரி பண்ணணும். இதெல்லாம் பார்த்து அவ பயந்துடக்கூடாது.

அதுக்கு நீங்க ரெண்டு பேரும் அழாம, அவளுக்கு தைரியம் சொல்லணும். நாங்க உங்ககூடவே இருக்கோம்னு சொல்லிட்டே இருக்கணும்.” என அடுத்து நடக்கப் போவதையும், அவர்கள் செய்ய வேண்டியதையும் கூறி, அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து உணவை வாங்கிக் கொடுத்தான்.

தகப்பனின் சமாதானங்களை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு அடையாளமாக, “நான் இனி அம்மா கூட சண்டையே போடமாட்டேன் ப்பா. அவங்களை ஹர்ட் பண்ணமாட்டேன் ப்பா.” என்றாள் நர்த்தனா தேம்பிக்கொண்டே.

நவீனோ, “நான் இனி அம்மா கூடத்தான் இருப்பேன். அம்மாவுக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவேன். அம்மா பாவம், ரொம்ப வலிக்குமா ப்பா? எனக்கு அம்மாவை பார்க்கணும்.” என்றான் மீண்டும் பழைய பல்லவியாக.

குழந்தைகளின் பேச்சில் இளங்கோவிற்கும் அழுகை எட்டிப்பார்த்தது. அதை மறைத்தவன், “இப்போ அம்மா தூங்குறா, அப்புறமா பார்க்கலாம். இப்போ சாப்பிடுங்க.” என்று இருவரையும் சாப்பிட வைத்தவன், டாக்டரிடம் கேட்டு மனைவியைப் பார்க்க இருவரையும் அழைத்துச் சென்றான்.

தாயைப் பார்த்த பிள்ளைகளுக்கு அதிர்ச்சிதான். அதிர்ச்சி என்பதையும் தாண்டி பயம். பயம்தான் அதிகம். சுற்றிலும் மெசின்கள் சூழப்பட்டு, நடுவே துவண்டு போய் கிடந்தவளைக் காண முடியாமல் இருவரும் தகப்பனை இறுக அனைத்துக்கொண்டு, “ப்பா, என்னப்பா இதெல்லாம்? பயமா இருக்குப்பா…” என வாய்க்குள்ளே முனங்க,

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்? நீங்க பயந்தா அவளும் பயந்துப்பா. அழாம, பயப்படாம அம்மாவை ஃபேஸ் பண்ணணும். அப்போதான் அம்மாவும் தைரியமா இருப்பா.” என மெதுவாக என்றாலும், அழுத்தமாக கூறி இருவரையும் கொடியின் அருகில் அழைத்துச் சென்றான்.

மூவரும் அருகில் நின்றாலும் யார் முதலில் அவளை எழுப்புவது என்று திணற, நவீன்தான் தன் தாயின் விரல்களைப் பிடித்து மிருதுவாக வருடிக்கொடுத்தான்.

அந்த வருடலில் விழி மலர்த்திய கொடியின் பார்வையில் விழுந்தது, அணைத்தவாக்கில் நின்றிருந்த மூவரும்தான்.

அதைப் பார்த்த நொடி அவளுக்கு தோன்றிய முதல் எண்ணமே, ‘நான் அவர்களோடு எப்போதுமே இல்லையா?’ என்றுதான்.

ஆனால் அடுத்த நொடியே அவர்கள் முகத்தில் தெரிந்த பயத்தில் மெல்ல சிரித்துக்கொண்டாள்.

“ம்மா…” என்றாள் நர்த்தனா. பல நாட்களுக்கு பிறகு மகள் அழைக்கிறாள் அம்மாவென்று. இனிக்கவில்லை அவளுக்கு. கடைசியாக எப்போது அழைத்தாள் என்ற ஞாபகம் கூட இல்லை.

“ம்மா சாரிம்மா! சாரிம்மா! நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். இனி எப்பவும் இப்படி செய்யமாட்டேன் ம்மா. ப்ராமிஸ்! என்னை மன்னிச்சிடுமா! ப்ளீஸ்மா…” என தேம்பி தேம்பி அழ, கொடியின் விழிகளிலும் நீர் பெருக்கெடுத்தது.

“ம்மா, உனக்கு ஒன்னும் இல்ல சரியா? நாங்க மூனு பேரும் உன்கூட தான் இருப்போம் சரியா? நான் உன்னை பார்த்துப்பேன். அழக்கூடாது, நீ தைரியமா இருக்கணும். அப்போதான் நானும் தைரியமா இருப்பேன். நானும் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்லம்மா. என்னையும் மன்னிச்சிடுமா, நான் இனி எப்பவும் தப்பு செய்ய மாட்டேன். ப்ராமிஸ்மா!” என நவீனும் தேம்பி அழ, தன் மனைவியும் பிள்ளைகளும் அழுது கொண்டிருக்க, அந்த ஆண்மகனால் மட்டும் எப்படி ஒதுங்கிட முடியும்? தலையை இரு கைகளாலும் தாங்கியபடி அந்த ஸ்டூலில் அமர்ந்துவிட்டான்.

விழிகள் கலங்கிச் சிவந்து போயின. பிள்ளைகள் இருவரும் அவளிடம் இருக்க, அவளுமே அவர்கள் கையைப் பிடித்தபடியே பிள்ளைகளைப் பார்த்திருந்தாள்.

அந்த பார்வையில் இருந்த, ‘இவர்களின் பாசமும் அழுகையும் கிடைக்க, நான் என் வாழ்க்கையையே வெறுக்க வேண்டுமோ?’ என்ற மனைவியின் எண்ணம் இளங்கோவிற்கு புரிந்தது. அது கொடுத்த வலி மேலும் மேலும் இதயத்தை ஆழமாக கீறிவிட்டது.

பிள்ளைகளைப் பார்த்து, ‘போதும் அழாதீங்க’ என தலையசைத்து சொல்ல,

“ம்மா, உனக்கு பேச முடியாதா?” என்றான் நவீன்.

‘முடியும்’ என்பது போல கண்களை மூடித்திறக்க,

“அப்போ எங்ககிட்ட பேசமாட்டியா ம்மா? கோபம் போகலையா? எங்களை மன்னிக்கலையாமா? அதுக்குத்தான் பேசாம இருக்கியா?” என நர்த்தனா பாவமா கேட்க,

‘இல்லை’ எனும் விதமாக கொடி தலையசைத்தாலும், பெற்றவள் ஆயிற்றே! பிள்ளைகளை சமாதானம் செய்ய நெஞ்சம் துடித்தது, விழிகள் பரிதவித்தது. வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் திணறினாள் பெண். பிள்ளைகளுக்கு புரிய வைக்க முடியாமல் கணவனைப் பார்த்தாள் பரிதாபமாக.

மனைவியையே கவனித்துக் கொண்டிருந்த கணவனுக்கு உயிர் துடித்தது, மனைவியின் நிலை கண்டு. அதை பிள்ளைகள் முன் காட்டாமல் வேகமாக வந்து பிள்ளைகள் இருவரையும் அணைத்து, “அம்மு இப்படியெல்லாம் பேசி அம்மாவை சங்கடப்படுத்தகூடாது. அம்மாவுக்கு அந்த பெல்ட் போட்டதுனால பேச முடியல. இனி கொஞ்சநாள் அம்மா இப்படித்தான் இருப்பா. நீங்க பயந்து அவளையும் டென்சன் பண்ணக்கூடாது, சரியா?” என மகளிடம் பேசினாலும் மகனையும் அணைத்து சமாதானம் செய்ய,

“சரிப்பா.” என்றனர் இருவரும் ஒன்று போல. நவீன் பிடித்த கையை விடாமல் இருக்க, நர்த்தனாவோ அந்த பெட்டின் ஓரமாகவே அமர்ந்துவிட்டாள்.

நவீன் ஏதோ பேச, நர்த்தனா பதில் பேச என அந்த இடம் ஏதோ சுழன்றது. பெற்றவர்கள் அவரவர் சிந்தனையில் சுழன்றனர்.

பொதுவாக மூவரும் அழுது கரைவது ஒரு தாயாக அவளுக்கு மகிழச்சியைத்தான் கொடுக்க வேண்டும். இன்ப ஊற்றை சுரக்க செய்ய வேண்டும். ஆனால் அவளுக்கோ அனைத்தும் கசப்பின் வாசனையாக இருந்தது.

தான் ஒதுங்க நினைக்கும் போது ஏன் இவர்கள் ஒட்டிக்கொள்கிறார்கள் என்ற கேள்விதான் அவளுக்குள் பெரிதாக முளைத்தது.

சில நிமிடங்கள் கழித்து மருத்துவர் வர, பிள்ளைகளை வெளியேற்றிவிட்டு இளங்கோ உள்ளே வந்தான்.

டாக்டர் கேள்வி கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியவில்லை கொடியால். பேச நினைக்கிறாள் காற்றுதான் வருகிறது. அதை பார்த்த மருத்துவரின் முகம் சுருங்க, இளங்கோவின் முகம் பயத்தைக் காட்டியது.

மரங்கள் கூட இலைகளை இழந்தபின் தானே தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. அதுபோல உன் துன்பங்களை இழந்தபின் நம்மை புதுப்பித்து காதலோடு ஓடுவோம்.

***

You may also like

Leave a Comment

About Me

Featured