Home Love - Family - Romanceமுத்தமழை – 52

முத்தமழை – 52

by Vathani S

முத்தமழை – 52

“ஏன் தம்பி அப்படி சொன்ன?” என்ற ராஜலட்சுமியின் விழிகள் கலங்கி வழிந்தது.

 “ம்மா.. அதுதான் எல்லா பிரச்சினைக்கும் சரியான தீர்வா இருக்கும்னு தோணுது, நான் வந்ததே இங்க யாருக்கும் பிடிக்கல. அவங்களால என்னையை ஏத்துக்க முடியல. அப்புறம் எப்படி வல்லியையும், என் குழந்தையையும் ஏத்துக்கிட்டு, அனுசரிச்சு போக முடியும். உங்க எல்லாருக்கும் பயந்து, இந்த கல்யாணமே வேண்டாம்னு சொன்னவளை கிட்டத்தட்ட மிரட்டித்தான் மேரேஜ் பண்ணேன், அப்போ அவளை நான் எப்படி பார்த்துக்கணும்..” என்றான் கர்ணன் வேதனையாக.

“தம்பி அப்படியெல்லாம் சொல்லாதப்பா.. எனக்கு உன் மேல கோபமே இல்ல, கொஞ்சம் வருத்தம் தான்.. நான் உனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கும் போது, நீ அவளைப்போய்.. அதுதான் எனக்கு வருத்தம்.. அதுக்காக அப்படியே இருந்துடுவேனா? கொஞ்ச நாள்ல என்னோட வருத்தம் போயிடும் ப்பா.. அதுக்கு கூட உன்னால வெய்ட் பண்ண முடியாதா? உன் மேல வருத்தப்படவோ, உன்னை கண்டிக்கவோ எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றியா?” என்றார் ராஜலட்சுமியும் வருத்தமாக..

ம்மா… என்னை நீங்க அப்படி நினைக்கிறீங்களா? தப்புத்தான்.. உங்களை மீறி நான் செஞ்சிருக்ககூடாது தான். ஆனா எனக்கு அவளைத்தான் பிடிச்சிருந்தது. அவளுக்கும் என்னை பிடிச்சிருந்தது. அப்பாவோட ஆசையும் அதுதான். அப்படி இருக்கும் போது என்னால எப்படி வல்லியை விட முடியும். எனக்காக என் கூட நிக்கிறவளை ஒதுக்கி வைக்க சொல்றீங்களா?” என்றவனின் குரல் சற்று கடுமையாகியிருந்தது.

“தம்பி நான் அப்படி சொல்ல வரல.. எனக்கு அந்த குடும்பம் மேல பெருசா எந்த ஒரு நல்ல அபிப்ராயமும் இல்ல, ஆனா எப்படியோ நம்ம வீட்டு சம்மந்தி ஆகிட்டாங்க. அதை அப்படியே நிறுத்திருக்கனுமில்ல. யாழியையும் உள்ள இழுத்து.. அதை என்னால இப்பவும், எப்பவும் ஒத்துக்க முடியாது தம்பி. நம்ம யாழி அங்க போய் கஷ்டப்படுவா?” என்றார் அழுகையாக.

“ம்மா… உங்க கோபமும், ஆதங்கமும் ரொம்பவும் சரிதான், நான் இல்லைன்னு சொல்லவே இல்லை. ஆனா யாழியோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம என்ன பேச முடியும். அவளுக்கு வெற்றியைத்தான் பிடிச்சிருக்கு. வெற்றியும் ரொம்ப நல்ல பையன். இதுக்கு மேல என்ன வேணும் உங்களுக்கு..”

“நல்ல பையனா இருந்தா மட்டும் போதுமா தம்பி.. தொழில் வேண்டாமா? நம்ம அளவுக்கு வசதி வேண்டாமா? சொல்லப்போனா நம்மளை விட வசதியான இடத்துல தான் பொண்ணு கொடுக்கனும்.. ஆனா இவ..?”

“ம்மா.. இந்த பேச்சை இப்போ பேசுறதுல எனக்கு விருப்பம் இல்ல. ஆனா வசதியும், பணமும் ஒரு பொண்ணை புகுந்த வீட்டுல சந்தோசமா வச்சிடாது. நம்ம வனி அங்க சந்தோசமா இருக்காளா? இருக்கான்னு மட்டும் சொல்லிடாதீங்க.. நான் பார்த்த வரைக்கும் அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கல..”

“தம்பி.. வனிக்கு கல்யாணம் ஆகி  ஆறு வருசம் ஆகிடுச்சு. இனி அவளைப்பத்தின கவலையே இல்லை. அவ பொழச்சுப்பா.. ஆனா யாழி..?” 

“ம்மா.. இப்போ நாம யாழி பத்தி பேச வேண்டாம்..” என்றான் எரிச்சல் குரலில். 

“புரியுது தம்பி.. ஆனா யாழி விசயத்துல என்னோட முதலும், கடைசியுமான நிலைப்பாடு இதுதான் தம்பி..” என்றுவிட்டார் அவரும் முடிவாக. 

“சரி ம்மா.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. அவளுக்கு மேரேஜ் பத்தி பேசும் போது, இதெல்லாம் பார்த்துக்கலாம்..” என்று கர்ணா எழப்பார்க்க, அப்போதுதான் நடந்த அனைத்தும் ஞாபகம் வர “தம்பி..” என்றார் அவன் கையைப் பிடித்து,

“என்ன ம்மா..” என்றவனிடம் “தம்பி நீ இருக்கும் போதே அவ்வளவு பணத்தை எடுத்துட்டு போய் சூதாட்டத்துல விட்டுட்டு ஏமாந்துட்டு வந்துருக்காங்க. இவங்களை நம்பி எப்படி தம்பி சொத்தை பிரிக்க சொல்ற, கொஞ்ச நாள்ளயே மொத்தத்தையும் தோத்துட்டு தெருவுல நிப்பாங்க தம்பி..” என்றார் ராஜலட்சுமி கலவரமாக.

“எனக்கு மட்டும் இதுல விருப்பமா என்ன? ஆனா அவங்களோட நடவடிக்கைகள் அப்படி இல்லையே.. அவங்களோடதும் சேர்த்து நான் ஏமாத்திட்டு போறமாதிரி நினைக்கிறாங்க. எனக்கு அதுல விருப்பம் இல்ல ம்மா.. இனி தனியா இருக்குறதுதான் நல்லது..” என்றான் கர்ணனும் முடிவாக.

“ஆனா எனக்கு விருப்பமில்ல தம்பி.. அவங்க ரெண்டு பேருக்கும் உன் அளவுக்கு விவரம் இல்ல, சொத்தைக் கொடுத்தா மொத்தமா ஏமாந்துட்டு வந்து நிப்பாங்க. அதை என்னால பார்க்க முடியாது தம்பி. அப்படி ஒன்னு நடந்தா, நான் உயிரோடவே இருக்கமாட்டேன் தம்பி..” என்றவரின் அழுகையை எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தாள் வனிதா. 

ராஜி கீழே விழுந்ததுமே அவளுக்குள் பயம் வந்துவிட, கண் விழிக்கும் வரைக்கும் வாயைத் திறக்கவே இல்லை. அதிலும் கர்ணனின் முகத்தில் தெரிந்த கோபத்திலும், சுந்தரும் ரமேஷும் பேசிய பேச்சிலும் தான் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருந்தது. 

அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என்று மருத்துவர் கூற, ராஜிக்கு மயக்கம் தெளிந்த பிறகே அனைவருக்கும் நிம்மதியானது.

அதிலும் ராஜி மகளின் பக்கம் பார்வையைக் கூட திருப்பாதது, வனிதாவிற்கு தன் தப்பின் தீவிரம் புரிய, அழுதபடியே அந்த அறையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டாள்.

இப்போது கர்ணனும், தன் தாயும் பேசுவதைக் கேட்டு எரிச்சல் புசுபுசுவென கிளம்பினாலும், சூழ்நிலைக் கண்டு அமைதியாகிவிட்டாள்.

“ம்ம் சரி இப்போதைக்கு நான் எதுவும் பண்ணல. ஆனா இப்படியே இருக்கவும் மாட்டேன். இன்னொரு முறை இவ” என வனிதாவைக் காட்டி “இவ வீட்டுக்குள்ள பிரச்சினை பண்ணக்கூடாது. அப்படி மட்டும் ஆரம்பிச்சா, நான் யோசிக்கவே மாட்டேன். அப்பாவைக் கூப்பிட்டு கிளம்பிடுவேன்..” என்று முடித்துவிட்டான்.

கர்ணன் பேசியதில் ராஜலட்சுமிக்கு அத்தனை கோபம் வந்ததுதான். ஆனால் இப்போது அவனை பகைத்துக்கொள்ள முடியாதே! அதனால் அமைதியாக இருந்துகொண்டார்.

ஹாஸ்பிடல் களேபரங்கள் முடிந்து அன்றே வீடு வந்துவிட்டார் ராஜலட்சுமி. 

வனிதா, சுமித்ரா என யாரையும் அருகில் விடவில்லை. அவருக்கு அனைத்துமே யாழினியும், பாட்டியுமே பார்த்துக் கொண்டனர்.

“சித்தி..” என பார்வதி பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொள்ள, “வனி பேசுனதுல தப்பில்ல தானே ராஜி..” என்றார் கசப்பாக.

“சித்தி அவளைப்பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே.. கோபத்துல பேசினதெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க.. நான் அவளைக் கண்டிக்கிறேன். நீங்க வருத்தப்படாதீங்க சித்தி. அவளுக்காக உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” என்ற ராஜியிடம்,

“ம்மா நீங்க ஏன் மன்னிப்பு கேட்கனும். ஏன் இதை அவ கேட்கமாட்டாளா? எவ்வளவு திமிர் இருந்தா பெரியவங்ககிட்ட இப்படி பேசுவா.. கூப்பிட்டு பாட்டிக்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க..” என்றாள் யாழினி ஆத்திரமாக.

“யாழிமா.. விடு! மன்னிப்பு கேட்டுட்டா மட்டும் அவ பேசினது இல்லைன்னு ஆகிடுமா? இனி இதை யாரும் பேசாதீங்க..” என்று பொதுவாக சொல்லிவிட்டு வெளியில் செல்ல, 

“ம்மா உங்களுக்கு பால் கொண்டு வரேன்..” என யாழியும் வெளியில் செல்ல, இருவரையும் முறைத்தபடி உள்ளே வந்தாள் வனிதா..

****

இங்கு சொக்கலிங்கத்தின் அறையில் மருமகளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார் மனிதர். அப்போதுதான் அறைக்குள் வந்தான் கர்ணன். அவன் கையில் போன், முகத்தில் அடக்க முடியாத கோபம். அதை கவனித்ததுமே வல்லிக்கு பயமாக இருந்தது.

“என்ன பாவா?” என கலக்கமாக கேட்க, அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தந்தையின் கையைப் பிடித்து அமர்ந்துவிட்டான்.

கணவனின் அமைதி பெண்ணுக்கு பீதியைக் கிளப்ப, “என்ன ப்பா.?” என்றாள் மீண்டும்.

“ம்ச்..” என்றவன் “என் மேல கோபமா ப்பா?” என்றான் தந்தையிடம்.

‘அப்படியெல்லாம் இல்லை’ எனும் விதமாக தலையசைக்க, கையில் இருந்த போனைக் காட்டி “அர்ஜூன் ப்பா.. அந்த ஜிகேகிட்ட பெரிய அமவுன்ட் தான் பெரியப்பா வாங்கிருப்பார் போல, அக்காவோட மாமனார் மூலமா பேசிருக்கார்.” என்றதும் சொக்கலிங்கம் பயத்துடன் மகனைப் பார்த்தார்.

“இந்த தகவலைச் சொன்னது மட்டும் இல்லாம, சொத்தையும் கையோட பிரிச்சிடுங்க.. எங்க மருமகளுக்கு வர வேண்டியதை சரியா கொடுத்துடுங்க. அதுவரை மருமக இங்கேயே இருக்கட்டும்னு சொல்லி அக்காவை விட்டுட்டு போயிட்டாங்களாம். அக்காவும் சொத்தெல்லாம் பிரிக்கக்கூடாது, நான் இனி அங்க போகமாட்டேன்னு அர்ஜூன் கூட சண்டையாம்.. என்ன ப்பா செய்ய?” என்றதும், சொக்கலிங்கத்திற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

இந்த நேரம் பார்த்தா தனக்கு உடல்நிலை இப்படியாக வேண்டும் என மறுகியவர், மகனிடம் ‘நீ என்ன செய்யலாம்னு நினைக்கிற?’ என்று கேட்டார்.

“நம்ம திருப்பூர் மில்லோட இன்சூரன்ஸ் அமவுன்ட்  ஏழு கோடி சாங்க்ஷன் ஆங்கிடுச்சு ப்பா.. என்னோட சேவிங்க்ஸ் ஒரு கோடி இருக்கு. வேற என்ன பண்ணனு இன்னும் யோசிக்கல ப்பா.. அங்க இருக்குற வீட்டை விக்கலாமானு யோசிக்கிறேன்..” என்றதும் லிங்கம் வேண்டாம் என வேகமாக தலையசைத்தார்.

‘அது உன்னோடது, உனக்கு வேணும்..’ என்றவர் ‘நாளைக்கு அங்க போயிட்டு வரலாம். கவிதா வீட்டுக்காரர் ரொம்ப நல்லவர். அவருக்குத் தெரியாமதான் இதெல்லாம் நடந்திருக்கும். நீ எதுக்கும் அவர்கிட்ட பேசிப்பாரு..’ என்று கூற, ‘சரி’ எனும் விதமாக தலையை ஆட்டிக்கொண்டான்.

“போலாம் வல்லி..” என மனைவியோடு தன் அறைக்கு வந்தவனுக்கு மனதே ஆறவில்லை.

“பாவா… ஏன் நீங்க இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்கீங்க.. இப்போதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க. உடனே எல்லாம் முடிஞ்சிடாது. அதுதான் நாளைக்கு அங்க போகலாம்னு சொல்லிருக்கார்ல, போய் பேசிட்டு வாங்க. அதுக்குப் பிறகு பொறுமையா யோசிங்க. இப்பவே ஏன் யோசிச்சு டென்சன் ஏத்திக்கிறீங்க..” என மனைவி சமாதானம் செய்ய,

“எனக்கு அங்க யார் கூடவும் பெருசா பழக்கமில்ல அம்மு. நம்ம கல்யாணம் டைம்தான் பெரியப்பா கூடவே பழக்கம் ஆச்சு. அங்க அடிக்கடி போவேன். பெரியம்மாவும், அக்காவும் என்னை நல்லா பார்த்துப்பாங்க. பெரியப்பா இப்படி ஒரு முடிவு எடுப்பார்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. அவரோட இழப்புல இருந்தே இன்னும் யாரும் மீண்டிருக்க மாட்டாங்க. அதுக்குள்ள அவர் இப்படி ஒரு பிரச்சினையை இழுத்துட்டு வந்துருக்கார். எப்படி அர்ஜூன் மேனேஜ் பண்ணுவான்னு தெரியல. நம்மக்கிட்ட இருக்கு, கொடுக்கலாம். ஆனா அம்மாவும், சுந்தரும் என்ன சொல்வாங்க தெரியல..” என்றான் வேதனையாக.

“உங்களுக்கு இவ்ளோ கஷ்டமா இருந்தா, அப்பாக்கிட்ட சொல்லி பணம் கேட்கவா?” என்றாள் கவலையாக.

“ஏய்.. ச்சீ என்னடி நீ..? நாமளே கொடுக்கலாம். நம்மக்கிட்ட இருக்குடா. தேவைன்னா கண்டிப்பா மாமாக்கிட்ட கேட்கலாம். இப்போதைக்கு இதை சொல்லி அவரை டென்சன் பண்ணாத..” என்றான், மனைவி தன் கவலைகளை உணர்ந்து, தனக்காக யோசித்ததில் மகிழ்ந்து போனான்.

“சரி.. சரி.. நான் அப்பாக்கிட்ட கேட்கல. ஆனா நீங்களும் இப்படி ரெஸ்ட்லெஸ் ஆகாதீங்க. நம்ம வீட்டுல நடக்கிற பிரச்சினையே எனக்கு பிபியை கூட்டிடும் போல, நீங்க வேற புதுசு புதுசா ஒரு பிரச்சினையை இழுத்துட்டு வரீங்க..”

“அடியே.. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?”

“எப்படி.. எப்படியோ இருக்குத்தான். இப்படி டென்சன் ஏத்தி, பிபி இன்கிரீஸ் ஆச்சுனா என்ன செய்யன்னு கவலையா இருக்குத்தான். ஏற்கனவே வயசான மனுசனுக்கு வாழ்க்கை கொடுத்துட்டேனேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் பாவா..” என சிரிக்காமல் கணவனிடம் வம்பு வளர்க்க, 

“நான் வயசான ஆளா..? எல்லாம் நான் கொடுக்குற செல்லம்..” என கடுப்பாக முறைத்தவனைப் பார்த்து, மையலாக புன்னகைத்தாள் பெண்.

“நிஜமாவே.. உனக்கு ஃபீலிங்கா.?” என நொடியில் முகம் மாறியவனை முறைத்தவள், அவனைத் தள்ளிவிட்டு குளியலறை செல்ல, “மலையேறிட்டா மங்கம்மா” என முணுமுணுத்தபடியே, மனைவிக்கு முன்னே சென்று, அவளையும் உள்ளே இழுத்து கதவை மூடியவனுக்கு, மனைவியை கொஞ்சி தீர்க்கும் வேகம்..

“ம்ச் விடுங்க.. போங்க.. என்ன பண்றீங்க? நோ… ட்ரெஸ் மேல கை வைக்கக்கூடாது..” என்ற மனைவியின் கோபத்திற்கும், சினுங்கலுக்கும் மத்தியில் தன் தேவையை முடித்தே வெளியில் வந்தான் வல்லபியின் கர்ணன்.

You may also like

1 comment

M. Sarathi Rio July 22, 2026 - 6:40 pm

அட ராமா..! திரும்ப இன்னொரு பிரச்சினையா ? இருக்கிற பிரச்சினையையே தீர்க்க முடியலை, புதுசா இது வேறயா ?

😉😉😉
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured