தூரம் 18
கொடியை பரிசோதனை செய்த டாக்டர் இனி பேச வேண்டாம், பேசினால் தொண்டையில் அதிக வலி ஏற்படும் என்று கூறிவிட, இடிந்தே போனான் இளா.
அடுத்தடுத்த நாட்களில் மனைவியின் உதாசினமும் பாராமுகமும் ஒரு பக்கம் அவனை வதைக்க, மறுபக்கமோ மாமானார் மற்றும் சகலைகளின் கோபமும் இளங்கோவிற்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் அதை வெளிப்படுத்தாமல் இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொண்டான்.
மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து பூங்கொடி வீடு வர சரியாக இரண்டு நாட்கள் ஆனது.
‘என்னவும் செய்து கொள்’ என இளங்கோவின் செயல்களை பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்த சங்கர், மருமகனை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல், கொடியை டிஸார்ஜ் செய்ததும் யாரையும் பொருட்படுத்தாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
அந்த இரண்டு நாளில் ஆட்களை வைத்து வீட்டையும் ஓரளவுக்கு சரி செய்திருந்தார்.
மகளின் அறைக்கு ஏசியையும் வாங்கி மாட்டியிருந்தார். கொடியுடன் வீட்டுக்கு வந்த பிறகே மற்றவர்களுக்கு வீட்டின் மாற்றம் தெரிந்தது.
மகளுடன் வந்த மூவரையும் பார்த்தவர் ஆனந்தியிடம், “நான் மில்லு வரை போயிட்டு வரேன் கண்ணு, அதுவரை உனக்கு பாப்பாவை பார்த்துக்க முடியுமா?” என கேட்க,
“ப்பா, என்ன பேசுறீங்க?” என ஆனந்தி அதிர்ந்து கேட்க,
“உனக்கும் வீட்டுல வேலை இருக்கும்ல கண்ணு, அதான் கேட்டேன்.” என்றார் பொறுமையாக.
“நான்… நான் இருக்கேன் ப்பா.” என்று ஆனந்தி திணறும் போதே ஏதோ இருக்கிறது என இளங்கோவிற்கு புரிய, அவன் பார்வை நடராஜை தொட்டு மீண்டது.
அவர் பார்வையும் மனைவியிடம் தான். ஆனால் பார்வை முறைப்பாய் இருந்தது.
“சரி கண்ணு, நான் போய்ட்டு வரேன். நீ கிளம்பும் போது போன் போடு.” என்றவர் யாரையும் பார்க்காமல் கிளம்பிவிட்டார்.
அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க பிள்ளைகள் இருவரும் கொடியுடன் அறையில் இருக்க, ஆனந்தியும் அமுதாவும் வந்தவர்களுக்கு தேவையானதைப் பார்க்க என வீடே பரபரப்பாக இருந்தது.
சங்கரின் வீடு வெளியில் பார்க்க மிகவும் பழைய வீடு போல் இருந்தாலும், உள்ளுக்குள் அனைத்து வசதிகளும் இருப்பது போல் தான் கட்டியிருந்தார்.
மூன்று மகள்களுக்கும் மூன்று அறைகள். பேரன் பேத்திகளுக்கு மாடியில் அறை என நல்ல விசாலமாகவே இருந்தது வீடு.
சங்கர் வெளியேறியதும் நடராஜிடம் வந்த இளங்கோ, “என்ன அண்ணா, ஏன் மாமா அண்ணிக்கிட்ட கோபமா பேசிட்டு போறார்?” என யோசனையாக கேட்கவும்,
“அது இளா…” என முதலில் திணறிய நடராஜ், “மாமா, கொடியை பார்த்துக்க ஆனந்தியை இங்க வந்து இருக்க சொல்லிருக்காரு போல… நிவிக்கும் இதுதானே மாசம். அதனால ஆனந்தி தயங்கி இருக்கா, அதுல மாமாவுக்கு ஆனந்தி மேல கோபம். இதை ஆனந்தி என்கிட்ட சொன்னா, நானும் எதுக்கு நீ முடியாதுனு சொன்ன, நிவியையும் இங்கேயே கூப்பிட்டு வச்சு பார்த்திருக்கலாம். இனி மாமா கேட்டா நான் சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டேன்.” என்றார் நடராஜ்.
“ஓ…” என்று இழுத்தவன், “சரிங்க அண்ணா, உங்களால முடியும்னா பாருங்க. இல்லன்னா நான் நந்தினியை இங்க கொண்டு வந்து விடுறேன். நந்தினி கூட இருந்தா கொடிக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.” என்றான் இளங்கோ.
“எப்படியும் கொடி கூட ஒரு ஆள் இருக்கணுமே இளா. நீ நந்தினிகிட்ட பேசிடு. ஏன்னா நிவிக்கு குழந்தை பிறக்கிற சமயம் எப்படியும் ஆனந்தி ஹாஸ்பிடல்ல இருக்கிற மாதிரி ஆகிவிடும். அப்போ கொடிகூட ஒரு ஆள் வேணும். அமுதா இதுக்கெல்லாம் சரி வரமாட்டா, நீ நந்தினிகிட்ட சொல்லிடு.” என்று விட்டார்.
இளங்கோவிற்கு முன்னம் இருந்தே இதே எண்ணம்தான். எப்படியும் மனைவி தன்னை அருகில் சேர்க்க மாட்டாள் என்று அவனுக்கு தெரியும்.
அதனால் ஏற்கனவே யோசித்திருந்தான் நந்தினியை மனைவியிடம் விடுவதற்கு. இப்போது முடிவே செய்து விட்டான். ஆனால் என்ன, இனி மனைவியையும் தங்கையையும் சேர்த்தே சமாளிக்க வேண்டும்.
ஒருத்தி பேசியே கொல்லுவாள், ஒருத்தி பேசாமல் இருந்தே கொல்லுவாள். சமாளித்துதான் ஆக வேண்டும், வேறு வழியும் இல்லை அவனுக்கு.
இங்கு கொடியை விட்டு பிள்ளைகள் இருவரும் நகராமல் இருக்க, பார்த்த அனைவருக்குமே அவர்களின் பயம் புரிந்துதான் இருந்தது.
ஒருபக்கம் கோபம் வந்தாலும் இனியாவது கொடியின் அருமை புரிந்து, கஷ்டப்படுத்தாமல் இருந்தால் போதும் என்றே நினைத்துக்கொண்டார்கள்.
சாப்பிட்டு அனைவரும் கிளம்ப, பிள்ளைகளை அழைக்க உள்ளே வந்தான் இளங்கோ.
தகப்பனைப் பார்த்ததும் பிள்ளைகள் முகம் வாட, அது புரிந்தாலும் மனைவி கேட்ட தனிமையை வழங்க எண்ணியவன், “நவீ கிளம்பலாம், நாளைக்கு ஸ்கூல் இருக்குல்ல?” எனறு மகனிடம் கூற, அவனுக்கோ உதடு பிதுங்கியது அழுகையில்.
“ப்பா…” என ஆரம்பிக்க,
“நவீ உங்க ரெண்டு பேருக்கும் என்ன சொல்லி கூப்பிட்டு வந்தேன்? நீங்க என்ன ப்ராமிஸ் பண்ணீங்க? இப்போ இங்க வந்து அழுதா என்ன செய்ய?” என மகனை முறைத்தபடி கேட்க,
“ஸாரிப்பா…” என்றவன், “ம்மா, நான் அடுத்து ஃப்ரைடே வரேன். ஸ்கூல்ல இருந்து நேரா இங்கேயே கூப்பிட்டு வர சொல்லுமா. டெய்லி எனக்கு வீடியோ கால் பண்ணணும். ரெஸ்ட் எடுக்கணும். நல்லா சாப்பிடணும், தூங்கணும். எங்களை நினைச்சு பயப்படக்கூடாது. நதியை நான் நல்லா பார்த்துக்குறேன். நீ சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துடுமா, சரியா?” என அழுகையும் கோபமுமாக மகன் பேச, அனைத்திற்கும் சிறு புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டிருந்தாள் கொடி.
“ம்மா, நான்தான் அவனேயே பார்க்கணும், அவன் என்னை பார்ப்பானாம்? எப்படி பொய் சொல்றான் பாரு…” என இருவருக்கும் இடையில் வந்த மகளிடமும் சிறு புன்னகை கொடுத்தாள்.
பிள்ளைகள் இருவரும் தாயிடம் ஒட்டிக்கொண்ட அந்த காட்சி, தேர்ச்சி பெற்ற ஓவியரின் ஓவியம் போல் இளங்கோவின் மனதில் ஆழமாக பதிந்து போனது.
எப்படியான அழகிய தருணங்களை மனைவியிடமிருந்து பறித்திருக்கிறோம் என நினைத்தவனுக்கு, தன்னாலே ஒரு பெருமூச்சு கிளம்பியது.
சரி செய்ய வேண்டும். அனைத்தையும் சரி செய்ய வேண்டும்! அவளுக்காக, அவள் திரும்பி வருவதற்குள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டான்.
ஒரு வழியாக இருவரையும் சமாதானம் செய்து வெளியில் அனுப்பிய இளங்கோ அமைதியாக மனைவியைப் பார்க்க, கொடியும் அவனைத்தான் பார்த்தாள்.
“நான் சொல்லியும் கேட்காம உங்க அப்பா பேச்சை கேட்டுட்டு இங்க வந்துட்ட, இப்போ உனக்கு நிம்மதியா?” என்றான் கூர்மையாக.
“ம்ம்… ஆமாம்.” என்றாள் மனைவியும் சளைக்காமல்.
“இங்கதான் உன்னோட நிம்மதியும் அமைதியும் இருக்கு, அப்படித்தானே? அது உனக்கு கிடைக்கணும்னு தான் உன்னை இங்க அனுப்ப சம்மதிச்சேன்.” என்றதும் கொடியின் இதழில் இனம் புரியா புன்னகை.
அது இளங்கோவிற்கு புரிய, முறைத்துப் பார்த்தான் மனைவியை.
மேலும், “ம்ம் என்னடி?” என்றான் பல்லைக் கடித்து.
பதிலே சொல்லவில்லை கொடி. முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்த சுவற்றை வெறித்தாள் வழக்கம்போல. சில நொடி அமைதியாக இருந்த இளங்கோ, “ஊப்ஸ்…” என பெருமூச்சு விட்டபடி,
“கொடி நான் கிளம்பணும், பிள்ளைங்களும் வெய்ட் பண்றாங்க. நீ இப்படி அமைதியா இருந்தா நான் என்ன நினைக்க?” என்றான். இப்போதும் அவனே இறங்கி வந்தான்.
அப்போதும் அவள் திரும்பியும் பார்க்கவில்லை. எத்தனையோ நாட்கள் அவளை ஏங்க வைத்து, தவிக்க வைத்து மூவரும் அவளிடம் விடைபெறாமலே சென்ற காட்சிகள் கண் முன் நிழலாக ஓடியது.
மீண்டும் ஒரு விரக்தி புன்னகை அவள் இதழில் மலர, இப்போது சரியாக அந்த புன்னகைக்கு அர்த்தம் பிடித்தான் கொடியின் கொம்பன்.
அது கொடுத்த வலியில், “கொடிமா…” என்றான் பரிதாபமாக.
“ம்ச்!” என்று சலித்தாள் கொம்பனின் கொடி.
என்ன பேச என தெரியாமல் தவிப்பாக மனைவியைப் பார்க்க, அவளோ இதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
அவளோ யாருமே இல்லாத அவளுக்கான ஒரு உலகத்திற்குள் சென்று கொண்டிருந்தாள். மனைவியின் அமைதி அவனை உயிரோடு வதைக்க, எப்படி அவளிடம் தன்னை புரிய வைப்பதென்று தெரியாமல் திணறி, கடைசியில் முடியாமல் தோல்வியைத் தழுவ, அவள் தலையில் கையை வைத்து அழுத்தமாக அழுத்திவிட்டு வேகமாக வெளியேறிவிட்டான்.
தன் குடும்பத்தோடு அவன் கிளம்ப, அதுவரையும் கூட சங்கர் வீட்டிற்கு வரவில்லை.
அமைதியாக இளங்கோ வண்டியை ஓட்ட கந்தவேலு தான், “மருமக என்னப்பா சொல்லுச்சு?” என்றார் பரிதவிப்பாக.
“ம்ம் என்ன சொல்லுவா? கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு வர்றேன்னு சொன்னா.” என யோசனையாக சொல்ல,
“ஆனா மாமா, இனிமே புள்ளைய அனுப்பமாட்டேன்னு எங்கிட்ட மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரே தம்பி.” என்றார் கவலையாக.
“ம்ம்ம்… எப்போ? எங்க சொன்னார்?” என்றான் அப்போதும் அசட்டையாக.
“இன்னைக்குத்தான் தம்பி…” என இழுத்தவர், “இனி என் பொண்ணை பார்க்க யாரும் வரக்கூடாது. உங்க வீட்டுல என் பொண்ணு வாழ்ந்தது போதும். மொத்தமா அவ இனி இங்கேயே இருக்கட்டும். நீங்க அடிக்கடி வந்து அவளை கஷ்டப்படுத்தாதீங்கனு சொன்னார் தம்பி…” என முடிக்கும் முன்னே கந்தவேலின் குரல் கரகரத்தது.
“ஏன் தம்பி, உனக்கு இவ்வளவு கோபம்? ஆரம்பத்துலயே நான் படிச்சு படிச்சு சொன்னேன்ல்ல, உனக்கு அவக்கூட இருக்க முடியலன்னா ஊருக்கு அனுப்பிடுன்னு… கேட்டியா? இப்போ எங்க வந்து நின்னுருக்கு பாரு…” என அத்தனை வேதனையில் பேசினார் மனிதர்.
“ப்பா, சித்திக்கிட்ட பேசி நந்தினியை இங்க கொண்டு வந்து விடலாம்னு இருக்கேன். எப்படியும் இந்த வருசம் அவளுக்கு கல்யாணத்தை முடிச்சிடணும். அதனால் வேலையை ரிசைன் பண்ண சொல்லிடலாம். இங்க கொடி கூட இருக்க ஆள் யாரும் இல்ல. வேற யார் வந்தாலும் அவளுக்கு சங்கோஜமா இருக்கும். நந்தினியா இருந்தா பரவாயில்லை.” என அவர் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் வேறு பேச,
மகனைப் பற்றி தெரிந்த கந்தவேலுவோ ஒரு பெருமூச்சோடு, “அதுவும் சரிதான் தம்பி, நானும் நாளைக்கு பேசுறேன்.” என முடித்துவிட,
“நான் வந்து இங்க இருக்கட்டுமா தம்பி?” என திடீரென சுப்பு கேட்க, ஆண்கள் இருவரும் பட்டென்று திரும்பி பார்த்தனர் அவரை.
“ஏன், அந்த புள்ளைக்கு இருக்குற கொற உசுரையும் உறிஞ்சிப்புடலாம்னு பார்க்குறியோ?” என கந்தவேலு கோபமாக கத்த,
“ம்மா பசங்களுக்கு ஸ்கூல் இருக்குல்ல, அவங்களை பார்க்கணும். நீங்கதான் இனி எல்லாம் செய்யணும். அங்க போனா அவங்களை யார் பார்க்குறது?” என இளங்கோவும் எரிச்சலாக கூற, அப்படியே அமைதியாகிவிட்டார் சுப்பு.
‘ஒரு பெண்ணின் காதலை புரிந்துகொள்ள முடியாத ஒருவன், தனக்குக் காதலிக்கத் தெரியும் என்றோ, காதலிக்கிறேன் என்றோ சொல்லிக்கொள்வது அபத்தம்.’ என்ற ஜெயகாந்தனின் வரிகள் மனதில் வந்து அவனை மேலும் குறுகச் செய்தது.
கணவன் கிளம்பிய நொடி மெத்தையில் சாய்ந்தாள் கொடி. அதில் படுத்ததும் ஏதோ அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்தது போல ஒரு நிம்மதி. அந்தச் சுகத்தில் கண்கள் தன்னால் மூடிக்கொள்ள, அவள் விழிகள் மெல்ல நீரைக் கொட்டியது.
அந்த அழுகை துக்கத்தினாலா? இல்லை வேதனையிலா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த அழுகையினால் மனதில் இருக்கும் பாரம் எல்லாம் கரைவது போல் ஒரு சுக அனுபவம் கொடுத்தது. சிறிது நேரம்தான் அந்த சுகத்தை அனுபவித்து இருப்பாள்.
சங்கரின், “கண்ணு…” என்ற சத்தத்தில் சட்டென்று விழிகளைத் துடைத்தவள், பாதித் திறந்து இருந்த கதவைப் பார்க்க, அதை நன்கு திறந்து விட்டபடியே உள்ளே வந்தார் மனிதர்.
“ப்பா…” என்றாள் பெண் வழக்கம் போல உயிரைத் தேக்கிய குரலில்.
“சாப்பிட்டியா கண்ணு?” என்றவரின் குரலும் அதே போலதான் இருந்தது.
“ம்ம்…” என தலையாட்ட, மகளின் கைகளைப் பிடித்தபடி வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தார் மனிதர்.
இருவருக்குள்ளும் பேச்சே இல்லை. பெற்றவரின் உணர்வை உள்வாங்கியபடி மகளும், மகளின் உணர்வை உள்வாங்கியபடி பெற்றவரும், அந்த நிமிடத்தை கடக்க விரும்பாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.
எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்!
அப்பாக்கள் மகளின் பாசத்திற்கு அடிமை
மகள்கள் அப்பாவின் பாசத்திற்கு பேரடிமை!
***