தூரம் 19
கொடி வீட்டிற்கு வந்து முழுதாக ஒரு வாரம் முடிந்திருந்தது. வார இறுதியில் சொன்னதைப் போலவே பிள்ளைகள் இருவரும் வந்து தங்கி செல்ல இளங்கோவும் இங்கேதான்.
பற்றாக்குறைக்கு வனிதாவும் வெங்கடேஷை இழுத்துக் கொண்டு பிள்ளைகளோடு வந்துவிடுவாள்.
ஆனந்தியின் மகள் நிவியும் மருத்துவமனைக்கு செல்லும் வரை இங்கேயே இருக்கட்டும் என, நடராஜ் கொண்டு வந்து விட்டுவிட, அமுதாவின் மகனும் இங்கிருந்தே கல்லூரிக்கு செல்ல, வீட்டில் எப்போதும் ஆட்கள் இருந்துகொண்டே இருந்தனர்.
சீனி சாரும் அவர் மனைவி கவிதாவும் இடையில் ஒரு நாள் வந்து கொடியைப் பார்த்துவிட்டு சென்றனர்.
கணவரின் மூலம் கொடியின் நிலைமையை அறிந்த கவிதாவிற்கு மனது தாங்கவில்லை. இளங்கோவைப் பிடித்து உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.
சங்கருக்கோ வார இறுதியே பிடிக்காமல் போனது. ஒரு தடவைக்கே இப்படியென்றால், இன்னும் ஆறு மாதத்தை எப்படி சகிப்பது என எரிச்சலானார்.
திருமணமான புதிதில் தன் மகளின் வாழ்க்கையை யோசித்து பார்த்தார். கொடி இங்கு வந்து போனாலும் சரி, இவர்கள் அங்கு போய் வந்தாலும் சரி, தேவி உடனே ஊர் மண்ணை எடுத்து மகள் குடும்பத்திற்கு திருஷ்டி கழிக்காமல் விட்டதில்லை.
ஊரே மெச்சும் அளவிற்கு வாழ்ந்து வந்தவர்கள். யார் கண் பட்டதோ? இன்று மீளா முடியாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.
பேரன், பேத்தியிடம் கூட பேச்சை நிறுத்தியிருந்தார் மனிதர். பிள்ளைகளைப் பார்த்ததும் மகள் முகத்தில் தெரிந்த ஒளியில் மட்டுமே எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.
அவளுக்கு பிடிக்கவில்லை என்று முகத்தில் சின்ன மாற்றம் தெரிந்தாலும், யோசிக்காமல் வெளியில் அனுப்பியிருப்பார்.
இதில் இளங்கோ வேறு, எப்படியும் மனைவியிடம் பேசலாம் என நினைக்கும் நேரம், எப்படித்தான் இந்த நந்தினிக்கு மூக்கு வேர்க்குமோ? வந்து இருவருக்கும் இடையில் அமர்ந்து கொள்வாள்.
ஆம், சந்திராவிடம் பேசி நந்தினியை அழைத்து வந்து மனைவியிடம் விட்டிருந்தான்.
இன்று மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொடிக்கு அப்பாய்ன்மென்ட் வாங்கிருந்தான் இளங்கோ.
அதனால் பிள்ளைகளை பள்ளியில் விட்டதோடு நேராக மாமானார் வீட்டிற்கு வந்திருந்தான்.
பிள்ளைகள் இருவரையும் சுப்பு பார்த்துக் கொண்டாலும், சந்திராவும் அவ்வப்போது உதவினாலும் கொடியைப் போல பொறுமையாக அவர்களுக்கு எடுத்து செய்ய முடியாமல் திணறித்தான் போயினர்.
இதில் தினம் ஒரு பஞ்சாயத்து என இளங்கோவிடம் வர ஆரம்பிக்க, தலையைப் பிய்த்துக் கொண்டான் அவன்.
மனைவி எப்படித்தான் சமாளித்தாளோ என அடிக்கடி நினைத்துக் கொள்வான்.
காரின் முன் பக்கம் மாமனார் ஏறுவார் என்று எதிர்பார்க்க, அவரோ பின்பக்கம் மகளின் அருகில் அமர்ந்து கொண்டார்.
அவருக்கு அடுத்து அமுதா அமர, முன்பக்கம் கணேசன் அமர்ந்து கொண்டான்.
அதைப் பார்த்ததும், “ஊப்ஸ்…” என பெருமூச்சு விட்டுக் கொண்டவன், முன்பக்க கண்ணாடியில் மனைவியைப் பார்த்தவாறே காரை எடுத்தான் இளங்கோ.
பயணத்தில் உறக்கம் பாதி, விழிப்பு பாதி என இருந்த கொடியைப் பார்க்க, அனைவருக்கும் வேதனையாக இருந்தது.
ஒரு வழியாக அந்த தனியார் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்கள் உள்ளே வர, அங்கு சரியாக சீனி சாரும் கவிதாவும் இவர்களுக்காக காத்திருந்தனர்.
மகளின் கையைப் பிடித்தவாறு சங்கர் நடக்க, அவருக்கு பின்னே அமுதாவும் கணேசனும் செல்ல, அதைப் பார்த்த கவிதா இளங்கோவை, ‘உனக்கு இது தேவைதானா?’ என்பது போல் பார்த்தார்.
கவிதாவின் பார்வையை உணர்ந்த இளங்கோ, “என்னாச்சு மேம்?” என்றான் கடுப்பாக.
“என்ன என்னாச்சு? எனக்கு ஒன்னும் ஆகலையே… நீங்க ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்க? கொடி கூட போங்க…” என அவரும் கடுப்பாக சொல்ல,
“மேம் நான் போறது இருக்கட்டும், நீங்க ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?” என தானாக அவரிடம் சென்று தலையைக் கொடுத்தான்.
“கோபமா இருக்கேனா? நானா? அதுவும் உங்க மேலயா? எனக்கு என்ன பைத்தியமா, உங்க மேல கோபமா இருக்குறதுக்கு?” என மேலும் கடுப்பாக பேச, மனைவியின் கோபத்தை அறிந்த சீனி, விட்டால் இளங்கோவை இங்கேயே அடித்து நொறுக்கி விடுவாள் என புரிந்து,
அதைத் தடுக்கும் எண்ணத்துடன், “கவி சும்மா இரு, வந்த இடத்துல எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்க?” என மனைவியை அடக்கினார்.
“ம்ம்… எனக்கு வேண்டுதல், இவர்கிட்ட சண்டை போடணும்னு…” என கணவரிடம் எரிச்சலைக் காட்டியவர் வேகமாக முன்னே நடக்க ஆரம்பித்தார்.
கவிதாவின் கோபத்தைப் பார்த்த இளங்கோ சீனி சாரிடம், “மேம்க்கு என்னாச்சு சார்?” என்றான் இயல்பாக.
“யோவ் உனக்கு நெஜமாவே புரியுதா? இல்ல புரியலையா? அவ உன் மேலதான் கோவமா இருக்கா, எதுக்கு கோபமா இருக்கானு உனக்கு எதுவுமே தெரியலையா? இல்ல புரிஞ்சும், புரியாத மாதிரி நடிக்கிறியா?” என அவர் பல்லைக் கடிக்க,
“கூல் சார்! எனக்கும் புரியுது, அவங்க கோபமும் சரிதானே? நீங்க மேமை எதுவும் சொல்ல வேண்டாம், நான் சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன் சார். என்னை நம்புங்க. என் கொடியை மறுபடியும், என்கிட்ட கொண்டு வந்துடுவேன்.” என்றான் வலி நிறைந்த நம்பிக்கை புன்னகையுடன்.
“சாரி இளா, அவ பேசுனதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். நீயும் கொடியும் எப்படி அன்யோன்யமா வாழ்ந்தீங்கனு நாங்க பார்த்திருக்கோம். அந்த வாழ்க்கையை கெடுத்துக்கிட்டியோ, கொடியை ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டியோனு தான் அவளுக்கு உன் மேல கோபம்.
சீக்கிரம் எல்லாத்தையும் சரி செஞ்சு, கவி கோபத்தையும் குறைச்சிடு. அப்பதான் உன்கிட்ட அவ நார்மலா பேசுவா.” என்ற சீனி சார்,
“சரி வா உள்ள போகலாம். அங்க போய் உன் வொய்ஃப்கிட்ட எதையாவது சொல்லி வச்சிருக்க போறா…” என சிரித்தபடியே அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
பத்து நிமிடங்கள் கழித்து தான் இவர்களை உள்ளே அழைத்தார் மருத்துவர்.
கொடியின் மருத்துவ அறிக்கையை நன்றாக படித்து பார்த்தவர், “பயப்பட வேண்டாம் மிஸ்டர் இளங்கோ. இது ஸ்டார்டிங் ஸ்டேஜ் தான். ஏற்கனவே உங்களுக்கு உங்க டாக்டர் சொல்லி இருப்பார். ஸ்டார்டிங் ஸ்டேஜ் என்பதால் க்யூர் பண்றது சுலபம். ரெண்டு கீமோ கண்டிப்பா தேவைப்படலாம். அதுக்குப் பிறகு சர்ஜரியை பிளான் பண்ணிக்கலாம். இப்போ எடுத்துக்கிட்டு இருக்கிற மெடிசின்ஸவே கண்டினியூ பண்ணிக்கலாம். கீமோவுக்கு அப்புறம் மெடிசன் சேஞ்ச் பண்ற மாதிரி இருக்கும். கீமோவுக்கு ரெண்டு நாள் முன்னாடி பேஷண்ட் அட்மிட் ஆகிடணும். ஃபர்ஸ்ட் கீமோ டேட் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்.” என்றவர், “எனி கொஸ்டின்ஸ்?” என அனைவரையும் பார்க்க,
இளங்கோவும் சீனியும் மாறி மாறி சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள, அவர்களுக்கு மிகவும் பொறுமையாக பதில் அளித்தார் மருத்துவர்.
பின் கொடியிடம் சில கேள்விகள் கேட்டு குறித்துக் கொண்டார். அதோடு, “இன்னைக்கு ஒரு இன்ஜெக்ஷன் மட்டும் போட்டுக்கலாம், இது வீக்லி ஒன்ஸ் எடுத்துக்குறதுதான். அடுத்து கீமோவுக்கு வரும்போது போட்டா போதும்.” என்று முடித்துவிட்டு இளங்கோவை குறிப்பாக பார்த்தார்.
அந்த பார்வையை உணர்ந்தவனுக்கு உள்ளுக்குள் வேகமாக ஒரு பயபந்து சுழன்றது. என்னதான் மனைவி முன்னே தன்னை தைரியமாக காட்டிக்கொண்டாலும், அவன் எந்தளவிற்கு பயந்து போயிருக்கிறான் என்பதை அவன் மட்டுமே அறிவான்.
மகளின் அருகில் அமர்ந்திருந்த சங்கர் வேகமாக எழுந்து மருத்துவரின் கையைப் பிடித்து, “ஐயா என் பொண்ணுக்கு பேச்சு வரலன்னாலும் பரவாயில்லீங்க, அவ உசுர காப்பாத்தி கொடுத்தா போதும்ங்க. எம்புட்டு செலவானாலும் பரவாயில்லீங்க. என் பொண்ணை காப்பாத்தி கொடுத்துடுங்க சாமி. உங்க வம்சம் நூறு வருசம் தழச்சி கிடக்கும் சாமி…” என கண்ணில் வைத்துக்கொண்டு அழ,
அதைப் பார்த்த அமுதாவும் அழ, கொடியோ முகத்தில் எந்தவித உணர்வுமின்றி தன் தகப்பனையே விழியெடுக்காமல் கண்ணில் நீர் பொங்க பார்த்தாள்.
சட்டென்று நடந்த இந்த நிகழ்வை யாரும் எதிர்பார்க்கவில்லை. இளங்கோவின் பார்வை மனைவியைத் தாண்டி எங்கும் செல்லவில்லை. இந்த சூழலை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணற, கணேசன் வந்து சங்கரைப் பிடித்து அமரவைக்க கவிதா, அமுதாவை சமாதானம் செய்தார்.
கொடி அருகில் அமர்ந்த தகப்பனின் கையை இறுக்கமாக பிடித்து, ‘எனக்கு சரியாகிடும் ப்பா, நீங்க இப்படியெல்லாம் இருக்காதீங்க.’ என சைகையில் கொடி சொல்ல,
“சரி கண்ணு… சரி கண்ணு…” என்றவர் வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்த்தார்.
“ஐயா நாங்க எதிர்பார்க்கிறதே, பேஷண்டுக்கு இந்தளவு தைரியம் இருக்கணும்னுதான். உங்க பொண்ணுக்கு அது இருக்கு. சீக்கிரம் அவங்க நலமாகி உங்ககிட்ட நல்லா பேசுவாங்க. நீங்க அவங்களை நல்லா பார்த்துக்கோங்க, அது போதும்.” என்று உறுதியாக சொல்ல,
“சரிங்கய்யா… சரிங்கய்யா…” என்றவர், அவருக்கு நன்றி சொல்ல,
“வெளியே உட்காருங்க, நர்ஸ் வந்து உங்களை இன்ஜெக்ஷன் போட கூப்பிட்டுகிட்டு போவாங்க.” என அனைவரையும் அனுப்பிவிட்டு இளங்கோவைப் பார்த்தார்.
அனைவரையும் வெளியே அனுப்பியவன் மருத்துவர் முன் கலக்கமாக அமர, “நத்திங் மிஸ்டர் இளங்கோ, இந்த நோய் வந்த பேஷண்டுக்கு மன உறுதியும், அதை ஃபேஸ் பண்ற தைரியமும் அதிகமாக இருக்கணும். இப்போ கீமோ செய்யும் போது, அவங்க முடி எல்லாம் கொட்ட ஆரம்பிக்கும். அதை பார்க்கிற நிறைய பேஷண்ட் பயந்து போவாங்க.
அதனால கீமோவுக்கு முன்னாடி நாங்களே மொட்டை போட்டுட்டு வந்துடுங்கனு சொல்லிடுவோம். அதுதான் நல்லதும் கூட. இல்லைன்னா பேஷண்ட் ரொம்பவே பயந்து, அவங்க தைரியத்தை குறைச்சிக்கிறதும் இல்லாம, ஸ்ட்ரஸ் லெவலையும் ஏத்திப்பாங்க. இதெல்லாம் அவங்க ஹெல்த்துக்கு நல்லதில்ல. சோ கவனமா எடுத்து சொல்லி புரியவைங்க.
நம்ம ஹாஸ்பிடல்லயே இதுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்குறோம். அதுக்காகத்தான் டூ டேஸ் முன்னாடி அட்மிட் ஆக சொல்றோம்.” என நிறுத்த, புரிந்தது என்பது போல் தலையாட்டினான் இளங்கோ.
அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சிலேயே அவனின் பயத்தை உணர்ந்தவர், “இனிதான் நீங்க தைரியமா இருக்கணும், உங்க வொய்ஃப், உங்க சைல்ட்ஸ், உங்க ஃபேமிலி என எல்லோரையும் சமாளிக்கணும். முக்கியமா உங்களை. எஸ், முதல்ல நீங்க உங்களை சமாளிச்சு, சமாதானம் செய்துக்குங்க. அப்போதான் அடுத்தவங்களை சமாளிக்கமுடியும்.” என்றார் புன்னகையுடன்.
“ஓ… ஓகே டாக்டர்…” என்றான் சுரத்தே இல்லாமல். பின் அவரிடம் விடைபெற்று வெளியில் வர, கணேசனும் சீனி சார் மட்டும் அங்கே இருக்க, மற்றவர்கள் கொடியுடன் இன்ஜெக்ஷன் போட மற்றொரு தளத்திற்கு சென்றிருந்தனர்.
வெளியில் வந்தவன் அங்கிருந்த சேரில், தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
இளங்கோவின் நிலையைப் பார்த்த கணேசன் “என்ன இளா, கொடிக்கு வேறெதுவும் பிரச்சனையா?” என பயமும் பதட்டமுமாக கேட்க,
‘இல்லை’ என்பது போல் தலையாட்டியவன், சில நொடிகள் கழித்து, உள்ளே நடந்ததைக் கூற கணேசனுக்கும் வேதனையாக இருந்தது.
“மாமா சொன்ன மாதிரி அவளுக்கு பேச்சே வரலன்னாலும் பரவாயில்ல ண்ணா, உசுரோட முழுசா கிடைச்சா போதும். எவ்வளவு வலியில, எத்தனை நாள் கஷ்டப்பட்டாளோ? என் கோபத்தால அவளை மொத்தமா சிதைச்சிட்டேனே ண்ணா. இப்போ எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு அவக்கிட்ட நான் நல்லா பேச…?” என வேதனையாக பேசியவன்,
“எனக்கெல்லாம் நல்ல சாவே வரக்கூடாது ண்ணா…” என்றான் வாழ்க்கையே வெறுத்துப் போன குரலில்.
“ஹேய் உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நீதான் தைரியமா இருக்கணும். இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. ஒவ்வொரு முறையும் இந்த ஹாஸ்பிடலுக்குள்ள வரும்போது இருக்குற தைரியம், இங்க இருந்து போகும்போதும் இருக்கணும். அதை கொடிக்கு நீதான் கொடுக்கணும்.” என்றவர்,
“தைரியமா இருய்யா. இப்படி உன்னை பார்த்தா, எல்லோரும் என்னமோ ஏதோனு பயப்படுவாங்க.” என தன் வயது, பதவி என அனைத்தையும் மறந்து, இளங்கோவிற்கு சமாதானம் செய்து கொண்டிருந்தார் சீனி சார்.
இருவரையும் வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்த கணேசனுக்கு, இளங்கோவும் கொடியும் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் படமாக ஓடியது.
கோபங்களும் கட்டுப்பாடுகளும் என் அன்பின் வெளிப்பாடுகளே! இதை நீ புரிந்து கொள்வாய் என நான் நினைக்க, நீயோ எனை பிரிந்து என்னையே, ‘கொல்’கிறாய்.
***
1 comment
Super, super, super, super, super
😉😉😉
CRVS (or) CRVS 2797