Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 03

காதல் கசக்குதைய்யா – 03

by Vathani S

அத்தியாயம்  – 3

“மச்சி எவ்ளோ நேரம் இப்படி அமைதியாவே வர்ரது, எனக்கு மூச்சு முட்டுது, என்னால முடியாது..” என்ற நிக்கியை முறைத்துப் பார்த்தாள் ஆரணி.

“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா இப்படி வாயை மூடிட்டு வரனும்னு, கொஞ்ச நேரம் சும்மா இருடி..” என வாய் திறக்காமல் ஆரா பேச, “உன் கூட வந்தேன் பாரு, என்னை உங்கப்பா போட்டுருக்க ஷூவாலையே அடிக்கனும்..” எனக் கடுப்பில் பல்லைக் கடிக்க,

“ஒன்னும் பிரச்சினையில்லை, வீட்டுக்கு போனதும் வாங்கித் தரேன், எப்படி அடிக்கனுமோ அப்படி அடிச்சிக்கோ.. இப்போ கொஞ்சம் சும்மா வா.. மனுஷன் கண்ணாடில பார்க்குறார்..” எனத் தன் வாயைக் கப்பென்று மூடிக் கொண்டாள் ஆரணி.

குசுகுசுவென்று பெண்கள் இருவரும் பேசுவது முன்னால் அமர்ந்திருக்கும் ரம்யாவிற்கு கேட்க, திரும்பி இருவரையும் பார்த்து கண்களால் மிரட்டி, கணவரைக் காட்ட, “க்கும்” என்று இருவரும் முகத்தைச் சுழிக்க, காரை ஓட்டிக் கொண்டிருக்கும் பாண்டியனுக்கு இதெல்லாம் தெரியாமாலில்லை. ஆனாலும் ஒன்றும் பேசாமல், சிறு புன்னகையுடன் அமைதியாக வந்தார். சேலம் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை 45ல் இன்டிகோ அவர் கையில் பறந்தது.

காரை பாண்டியன் ஓட்ட, அவருக்கருகில் ரம்யா, பின்னிருக்கையில் ஆரணியும் நிகிதாவும் அமர்ந்திருந்தனர். இரு பெண்களுக்கும் கல்லூரியில் செமஸ்டர் முடிந்திருக்க, மதுரையில் சித்திரைத் திருவிழாவும் ஆரம்பித்திருந்தது. குருவம்மாவும் ஆரணியை கொண்டுவந்து விடு என மகனை நச்சரித்திருக்க, வேறுவழியில்லாமல் இருவரையும் அழைத்துக் கொண்டு மீனாட்சிபுரம் புறப்பட்டு விட்டார் பாண்டியன்.

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு, சேலம் வந்த புதிதில், அந்தப் புதிய ஊருக்கு ரம்யா மிகவும் தினறிப் போனார். பாண்டியனும் மனைவியிடம் அந்த நேரம் பேச்சை சுத்தமாக நிறுத்தியிருக்க, ஒன்றும் தெரியாத இடத்தில், யாரையும் தெரியாமல், எதுவும் புரியாமல் அந்த இடத்தை உள்வாங்கவே சில நாட்கள் தேவைப்பட்டது அவருக்கு. அப்போது ரம்யாவிற்கு மிகவும் உதவியாக இருந்தவர்தான் நிகிதாவின் அம்மா தாரணி. பாண்டியனின் குடியிருப்புக்கு பக்கத்து குடியிருப்பு தான் ஷங்கர் – தாரணியின் குடியிருப்பு.

வந்த அடுத்த நாளே தாரணியின் நட்பு கிடைக்க, அதன்பிறகு எதற்கும் பாண்டியனை எதிர்பார்க்கவில்லை ரம்யா. கணவர் பேசுகிறாரோ இல்லையோ, அன்றைய நாளில் நடந்ததை அப்படியே ஒப்பிப்பார் ரம்யா. ஆரணியும் நிக்கியுடன் நன்றாகவே ஒட்டிக்கொள்ள, அதுவே இருக்குடும்பத்தையும் இணைக்கும் பாலாமாகிவிட்டது. முதலில் பாண்டியன் அவர்களோடு பழகத்  தயங்கினாலும் தாரணியின் கள்ளமில்லா நட்பும், ஷங்கரின் நேர்மையான பேச்சும், நிக்கியின் அன்பும் அவர்களிடம் அன்பாக பழக வைத்தது.

அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு ஆரணியுடன் நிக்கிதாவின் பயணமும் தொடர்ந்தது. முதலில் நிக்கியை அனுப்ப ஷங்கர் யோசித்தாலும், பாண்டியனின் நேர்மையை தினம் தினம் ஸ்டேஷனில் பார்ப்பதாலும், ரம்யாவைப் பற்றி தாரணியின் மூலம் தெரிந்ததாலும் அனுப்ப ஒத்துக் கொண்டார். அதோடு முக்கியக் காரணம் வந்த சில நாட்களிலே நிக்கியும் ஆரணியை விட்டு இருக்க முடியாமல் அவள் பின்னே சுத்த வேறுவழியே இருக்கவில்லை அவருக்கு.

மூவரையும் ஊரில் விட்டு பாண்டியன் சேலம் திரும்பி, மீண்டும் திருவிழாவின் போது சங்கர் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வருவதாகத் திட்டம். ஏனோ தாரணியின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் அவருக்கு தன் தங்கை பவித்ராவையே நினைவுக்கு கொண்டு வரும். அந்த எண்ணங்கள் முதலில் இறுக்கத்தைக் கொடுத்தாலும், காலங்கள், அது கொடுத்த பாடங்கள் என அந்த இறுக்கம் மெல்ல மெல்ல இளக ஆரம்பித்திருந்தது. இப்போது அவரிடம் நல்ல முறையில் பேசிப் பழகுகிறார்.

திண்டுக்கல்லின் மிகப்பிரசித்தி பெற்ற தலப்பாகட்டியில் தன் இண்டிகோவை பாண்டியன் நிறுத்தவும்தான் பின்னே இருந்த இருவருக்கும் மூச்சே வந்தது. “ஷப்பா நான் கூட லேட்டாயிடுச்சு வீட்டுலயே போய் சாப்பிடுவோம்னு நினைச்சு, நிறுத்தாம நேரா மீனாட்சிபுரமே போய்டுவாரோன்னு பயந்துட்டேன் மச்சான்.” என நிக்கி ஆரணியின் காதைக் கடிக்க,

“இதெல்லாம் நமக்காக இல்ல மச்சி, மிசஸ்.பாண்டியனுக்கு. அவங்களுக்கு தலப்பாகட்டில மட்டன் பிரியாணி சாப்பிடுறது ரொம்ப பிடிக்கும். சோ ஹிட்லர் வண்டியை நிறுத்தியிருக்கார், உடனே நமக்குன்னு நினைச்சு ஹேப்பி ஆகிடாத மச்சி..” என ஆரணியும் காதைக் கடிக்க,

“எனக்குத்தான் தெரியுமே மச்சான், நெல்லுக்கு பாயுற நீர், கொஞ்சம் புல்லுக்கும் பாயுமாம். அப்படித்தானே இதுவும். வர வர இவங்க லவ் ஓவர்டோஸ் ஆகுது.” என்ற நிக்கியின் பேச்சை ஆமோபதிப்பது போல,

ஆரணியும் “ஆமா மச்சி ரெண்டு பேரும் பேசமாட்டாங்களாம், ஆனா இவங்களுக்கு என்ன வேணும்னு அவங்களூக்குத் தெரியுமாம், அவங்களுக்கு என்ன வேணும்னு இவங்களுக்குத் தெரியுமாம்.. நாம  கேட்டா, பேசலன்னா என்ன.? இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில சகஜம் தானேன்னு சொல்றாங்க. அன்பாம்.. பண்பாம்.. பாசமாம்.. ஓவர் கடுப்புகள்டா..” என்ற ஆரணியின் கையைப் பிடித்து,

“போதும்.. போதும் இப்பவே சாமியாடாத, இன்னும் த்ரி அவர்ஸ்தான். அப்புறம் ஹிட்லர்க்கிட்ட இருந்து தப்பிச்சிடுவோம். அதுக்குப்பிறகு மீனாட்சிபுரத்துல இருக்குற எந்தக் கோவில்ல வேணும்னாலும் போய் சாமியாடு. நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன். ஆனா இப்போ வேண்டாம். வாய்க்கு எட்டுன பிரியாணியை எட்டி உதைக்க நான் தயாரா இல்லை.” என நிக்கி பல்லைக் கடிக்க,

“எஸ் மச்சான், நமக்கு சோறுதான் முக்கியம், பிரியாணியை ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே ஹிட்லர் போடுற இளையராஜா பாட்டக் கேட்டுட்டு ஒரு தூக்கம். செம்மையா இருக்கும்ல, இந்தக் கோபம், ரோசமெல்லாம் நமக்கெதுக்கு, இருக்கட்டும் பொறுமையா நாளைக்கு காட்டுவோம்.. இப்ப பிரியாணியை ஒரு கட்டு கட்டுவோம்..” என ஆரணியும் ஈயெனப் பல்லைக் காட்ட, “நண்பிடா மச்சான்..” எனத் தோழிகள் இருவரும் கோரசாகச் சொல்லி, அணைத்துக் கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த பாண்டியான் நேராக ரெஸ்ட்ரூம் அருகே செல்ல, ரம்யாவும் அவர் பின்னே வேகமாகச் சென்றார். தனக்குப் பின் திரும்பி ரம்யாவை ஒரு பார்வைப் பார்த்தவர் சற்று தள்ளி ஹோட்டல் வாயிலும், ரெஸ்ட் ரூம் வாயிலும் தெரியும்படி நிற்க, வேகமாக ரம்யா ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தார்.

இப்போது பாண்டியனின் பார்வை வாயிற்புறம் திரும்பி பெற்ற மகளையும், பெறாத மகளையும் பார்த்தது. அப்போதுதான் ஏதோ சொல்லி அசடு வழிய சிரித்து, இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு உள்ளே வருவது தெரிந்தது. அந்த முகங்களில் தெரிந்த மகிழ்ச்சி, இவர்கள் இருவரும் இப்படியே ஒற்றுமையாக, கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என அந்த நேரம் தந்தையாகக் கடவுளை வேண்டிக் கொண்டார்.

அவரது  வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ என்னமோ இருவரும் ஒரே வீட்டுக்கு மருமகள்களாக செல்லும் வரத்தைக் கொடுத்துவிட்டார்.

ரம்யா வெளியே வர, பாண்டியன் அமர்வதற்கான இருக்கையைத் தேடி உள்ளே செல்ல, பெண்கள் இருவரும் ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

 “என்ன தான் பேசுவீங்களோ ரெண்டு பேரும். எப்பவும் ஒன்னாதா சுத்துறீங்க, ஒன்னாதான் இருக்கீங்க அப்படி என்ன பேசுவீங்க, நாங்க வந்து கால்மணி நேரமாச்சு, இங்கே இருந்து இறங்கி வர இவ்வளவு நேரமா..” என மகள்களைத் திட்டிக்கொண்டே ரம்யா உள்ளே செல்ல,

“ம்மா எதுக்கு திட்டுறீங்க, வயசுப் புள்ளைங்கள கூப்பிட்டு வந்துருக்கோமேன்னு கொஞ்சம் கூட கவலையில்லாம, உங்க லவ்வர் கூட ஓடிவந்துட்டு, இப்போ எங்களை திட்டுறீங்களா..?” என ஆரணி பேச, பட்டென்று மகள் முதுகில் ஒன்று வைத்தார் ரம்யா.

“என்ன பேச்சு இது.? அப்பா காதுல விழுந்தா அவ்வளவுதான். இனி சாப்பிட மட்டும் தான் வாயைத் திறக்கனும், வேற எதுக்கும் திறந்த அந்த வாயைக் கோணூசி வச்சுத் தச்சுருவேன் பார்த்துக்கோ..” எனக் கோபமாகப் பேச, “ஏற்கனவே சாப்பிட மட்டும் தான் ஆன்டி வாயைத் திறக்குறோம்.” என்ற நிக்கியை முறைத்தவர், பாண்டியன் அமர்ந்த இடம் சென்று அவருக்கருகில் அமர, அவர்களுக்கெதிரில் பெண்கள் இருவரும் அமர்ந்தனர் உம்மென்று.

நால்வருக்கும் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு வேறென்ன வேண்டும் என்பது போல் பார்க்க, இருவரும் ஒன்றும் சொல்லாமல் உம்மென்று இருக்க, மனைவியிடம் திரும்பி ‘என்னாச்சு’ என புருவம் உயர்த்தினார்.

“அவங்களுக்கு என்ன.? நீங்க இப்போ ஆர்டர் செஞ்சதே போதும். இனி ஊர்ல தினமும் அத்த கரியும் மீனுமா தான் ஆக்கிப் போடுவாங்க, விடுங்க எப்ப பாரு வாய் ரெண்டுக்கும்.. கொழுப்பு, கொழுப்பு..” என கணவனின் ஒரு பார்வைக்கு வரிசையாகப் பேசின தாயை முறைத்தாள் ஆரணி.

“ம்மா.. திஸ் இஸ் டூ மச்.. நீங்க எங்களைத் திட்டுனீங்க, அடிச்சீங்க. அதை சொல்லுங்க. அதை விட்டுட்டு புதுசா கதை சொல்றீங்க..” என்ற ஆரணியை,

“இப்போதானே சொன்னேன், சாப்பிட மட்டும் தான் வாய் திறக்கனும்னு. இப்படியே பேசிட்டு இருந்தா, ஆர்டர் செஞ்சதை கேன்சல் செய்துட்டு கிளம்பலாம்..” என்று மகளை முறைக்க,

“நோ…” என்றுக் கத்திய நிகிதா, “நோ.. நோ… உங்களுக்கு வேண்டாம்னா நீங்க ரெண்டு பேரும் கார்ல போய் சண்டை போடுங்க. நானும் அங்கிளும் சாப்பிட்டு வர்ரோம். நானே இந்த பிரியாணிக்காக மார்னிங்க்ல இருந்து சாப்பிடாம இருக்கேன். நீங்க வேற.?” என இருவரையும் பார்த்துச் சொன்னவள், ஆரணியின் தொடையில் கிள்ளிவிட்டாள்.

பாண்டியன் மூவரின் சேட்டையையும் ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் பேசி முடிக்க, உணவும் வந்துவிட, அதன் பிறகு பேச்சே இல்லை. ரம்யா ஒரு குடும்பத் தலைவி என்பதை நிரூபிக்கும் பொருட்டு, மூவருக்கும் பார்த்து பார்த்து எடுத்து வைத்து தானும் சாப்பிட்டார்.

பாண்டியனும் மனைவியின் தட்டில் எது காலியாகிறதோ அதை அவர் முன் நகர்த்தி வைக்க, அந்த உணவு நேரம் இனிமையாக முடிந்தது.

கணவரிடமிருந்து கார் சாவியை வாங்கிய ரம்யா, பின்னிருக்கையில் பெண்கள் இருவரும் ஏறவும், டிரைவர் சீட்டில் அமர்ந்து சீட் பெல்டை மாற்றியவர், கணவரைப் பார்க்க, அவரும் மனைவியின் அருகில் முன்னிருக்கையில் அமர்ந்து சீட் பெல்டைப் போட்டார்.

அதன்பிறகு அந்த இன்டிகோ ரம்யாவின் கையில் பறந்தது. வழக்கம்போல மனைவி காணாமல் அவரை, அவர் ஓட்டும் வித்தையை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.

இது எப்போதும் வழமைதான். சேலத்தில் இருந்து திண்டுக்கல் வரை பாண்டியன் ஓட்டுவதும், அதன்பிறகு போடி வரை ரம்யா ஓட்டுவதும், ஊருக்குள் நுழைந்ததும் பாண்டியன் ஓட்டுவதும் அவர்களுக்குள் எழுதப்படாத விதிமுறை.

சிறிது நேரத்தில் மூவரும் உறங்கிவிட, மூச்சுக்குத் தேவைப்படும் மூலிகைக் காற்றைப் போல, இதயத்திற்குத் தேவைப்படும் இதமானக் காற்றைப் போல, அந்த நேரம் ஒலித்த ஜானகியம்மாவின் குரலும் ரம்யாவிற்கு அப்படித்தான் இருந்தது. பாட்டுச் சத்தத்தை கொஞ்சமாகக் குறைத்துவிட்டு, தன் காரின் வேகத்தைக் கூட்டினார்.

அடுத்த இரண்டு மூன்றாவது மணி நேரம் கார் போடியைத் தொட்டுவிட, வழக்கமாக நிறுத்தும் பேக்கரியில் நிறுத்தி, பாண்டியனை எழுப்பி விட, முகத்தைக் கழுவியவர் இருவருக்கு மட்டும் காஃபி வாங்கிக் கொண்டார்.

காஃபியை அருந்தியபடியே பின்னிருக்கையை ரம்யா பார்க்க, பாண்டியன் மனைவியைப் பார்த்தார். கருப்பும் இல்லாது, சிவப்பும் இல்லாத மாநிறம் தான் ரம்யா. நீண்ட கூந்தல், மஞ்சள் பூசிய முகம், வகுட்டில் குங்குமம், நெற்றியில் விபூதி, கூந்தலில் சிறு துண்டேனும் பூ, புடவையைத் தாண்டி வேறெதுவும் உடுத்தியதில்லை. கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் அவரது தோற்றம் அக்மார்க் தமிழச்சி தான்.

அந்த தோற்றம் தான் பாண்டியனைக் கவர்ந்தது. திருமணமான புதிதில் மனைவியிடம் பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார். அதனாலே தன் தோற்றத்தை மாற்றும் எண்ணம் கொஞ்சமும் வரவில்லை ரம்யாவிற்கு.

அன்றைய நாளுக்குப் பிறகு சில மாதங்கள் மனைவியை முற்றிலும் தவிர்த்தார். பாண்டியனுக்கு பயந்து தாய் வீடு செல்வதைக் கூட நிறுத்தியிருந்தார் ரம்யா. முடிந்தளவு மாமியார் மாமானாரிடம் மிகவும் பொறுமையாக போக முயன்றார்.

மகன் இருக்கும் போது, மருமகளீடம் ஒருவார்த்தை கூட குருவம்மா பேசுவதில்லை. அவர் கிளம்பிய நிமிடத்தில் இருந்து வார்த்தை எனும் சொல்லம்புகளை மருமகளை நோக்கி எய்ய ஆரம்பித்துவிடுவார். அன்றையத் தவறுக்குப் பிறகு மாமியார் என்ன சொன்னாலும், தலையைக் குனிந்து கேட்டுக் கொள்வாரே தவிர, மறுத்தோ, வெறுத்தோ எதுவும் சொல்வதில்லை.

ஆரணிக்கு சற்று விபரம் தெரிய வீட்டில் நடக்கும் சம்பவங்களை அவள் பாண்டியனிடம் சொல்ல, சொல்ல, அவர் தாயிடம் பேசியிருந்தார்.

“அவ செஞ்சத சரின்னு சொல்லல, ஆனா நீங்க செஞ்சது தப்புதான்.. அவ என்ன செஞ்சிருந்தாலும் நான் வந்ததும் எங்கிட்ட தானே சொல்லியிருக்கனும், அதை விட்டுட்டு நீங்களா ஏன் பேசுனீங்க. அவமேல எனக்கு கோபமே என்கிட்ட அவ சொல்லாம, அவங்க வீட்டுல சொன்னது தான். என்ன அவ புருஷனா, இல்ல இல்ல ஒரு மனுஷனா கூட நினைக்கைலையேன்னு தான் எனக்கு வருத்தம். அதோட உங்களை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போயிட்டாளே, குடும்ப மானம் மறுபடியும் போயிடிச்சேன்னு தான் எனக்கு கோபம்.”

“ அந்தக் கோபத்தை இப்பவரைக்கும் அவ மேலக் காட்டிட்டுத்தான் இருக்கேன், ஆனா அதுக்காக அவளை விட்டுட்டு இருப்பேன்னு நீங்களா ஒரு முடிவுக்கு வருவீங்களா.? உங்களுக்கு எப்படியோ, எனக்கு அவ நல்ல மனைவி, என் பொண்ணுக்கு நல்ல அம்மாதான். இனி நீங்க அவக்கிட்ட எப்படி நடந்துக்குறீங்களோ அப்படித்தான் நான் உங்கக்கிட்ட நடந்துப்பேன். இல்ல நான் இப்படித்தான் இருப்பேன்னு நீங்க சொன்னா, சொல்லிடுங்க இனிமே நாங்க யாரும் இங்க வரல.” என்றுவிட்டார் முடிவாக.

 அதற்குப் பிறகு குருவம்மா நிதானமாகிவிட்டார். கருவேப்பிலைக் கொத்தைப்போல ஒற்றை மகன். அவன் நிம்மதியும் சந்தோசமுமே முக்கியம் என்று நினைத்து மருமகளுடன் மெல்ல மெல்ல தன் உறவை சீராக்கிக் கொண்டார்.  இப்போது இருவருக்குள்ளும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படியே பிரச்சினைகள் வந்தாலும் அது ஆரணியால் மட்டுமே இருக்கும்.

அதற்கு யாராலும் பஞ்சாயத்து செய்ய முடியாது. ரம்யா சொல்லி சொல்லி ஓய்ந்து, கடைசியில் எப்படியோ போங்க என்பது போல் விட்டு விடுவார். நிறைய தனக்காக மாறியிருக்கிறாள்,தன்னையே மாற்றியிருக்கிறாள். இனியாவது அவளுடன் சுமூகமாகி விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

“என்னங்க.. என்னங்க..” என்ற மனைவியின் குரலில் நிகழ்வுக்கு வந்தவர் என்ன என்பது போல் பார்க்க, “என்னாச்சுங்க நான் அவ்வளவு நேரம் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன், எங்கையோ பார்த்துட்டு இருக்கீங்க, உடம்பு எதுவும் சரியில்லையா என்ன.?” எனக் கேட்டுக் கொண்டே நெற்றி, கழுத்தில் கைவைத்துப் பார்க்க,

மனைவியின் கையை பிடித்து தடுத்துவிட்டு, “அதெல்லாம் ஒன்னுமில்ல, சும்மா வேற யோசனை..” என்றவர், “அதென்ன என்னங்க.. என்னங்கன்னு.. மாமான்னு கூப்பிட்டா குறைஞ்சிடுவியா என்ன.?” என பல வருடங்களுக்கு பிறகு மனைவியைச் சீண்டிவிட்டுக் காரை எடுக்க, அதைக் கேட்ட ரம்யாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. காதுகளைத் தேய்த்து விட்டுக் கொண்டு மீண்டும் கணவரையேப் பார்க்க, ஒன்றும் தெரியாதது போல அவரது பார்வை சாலையில் இருக்க, கண்கள் மட்டும் சிரிப்பை சிந்தியது.

அந்த சிரிப்பு அதைப் பார்த்ததும் அந்த நொடி அவர் என்ன உணர்ந்தார் என்றேத் தெரியவில்லை. தன் இத்தனைக்கால பொறுமைக்கு சரியான அர்த்தம் கிடைத்தது போல் உணர்ந்தார். இனி எல்லாம்.. எல்லாமே சரியாகும் என மனதுக்குள் ஒரு குரல் சத்தமாக சந்தோசமாகக் கத்திக் கொண்டது.

தன் இத்தனை வருட ஏக்கத்தையெல்லாம் வெளிக்காட்டுவது போல காரை ஓட்டிக் கொண்டிருந்த கணவரின் அருகில் நெருங்கியமர்ந்து, அவர் கைகளுக்குள் தன் கைகளை விட்டு, தோளில் வாகாக சாய்ந்து கொண்டார்.

 விழிகளில் அருவியாய் நீர் கொட்டினாலும் இதழ்கள் இதமாக புன்னகையை சிந்தியது. மனைவியின் மனநிலை புரிந்தாற் போல, பாண்டியனும் தன் தலையை மனைவியின் மேல் சாய்த்துக் கொண்டார். “ஸாரி” என்ற சொல்லோடு.

ரு குரல் என்ன செய்யும்?

சிலிர்த்து போக முடியும்.

ஓரிரு நொடிகள் ஸ்தம்பித்து போக முடியும்.

கன்னம் தாண்டாத கண்ணீரை காணமுடியும்.

நெஞ்சடைத்து வாய் பேசாத நிலையை உணர முடியும்.

அடுத்து என்ன பேசுவதென்று கூட தெரியாமல் வாயடைத்து நிற்க வைக்க முடியும்.

ஏன் அந்த குரல் அவ்வளவு பிடிக்கிறது?

எவரிடமும் பகிரமுடியா விஷயங்களை பகிர்ந்துருப்பீர்.

எவரிடமும் கிடைக்காத அந்த பெருநிம்மதியை உணர்ந்துருப்பீர்.

யாருமற்ற தனிமையை போக்கியிருக்கும்.

யாரும் காது கொடுத்து கேட்காத உளறல்களை கேட்டுருக்கும்.

நிறைவேறா ஆசைகள்

எதிர்கால கனவுகள்

அவமான சுவடுகள் அனைத்தும்

அருகில் அமர்ந்து அன்புடன் கேட்டிருக்கும்.

ஏன் அந்த குரல் அவ்வளவு ஸ்பெஷல்?

உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும்.

மதிப்பை உயர்த்தச் செய்திருக்கும்.

வளர்ச்சியில் பங்கெடுக்கும்.

இன்பத்திலும் துன்பத்திலும் கூட சேர்ந்து

சிரிக்கும் அழும் புலம்பும்.

வாழ்க்கையே தொலைத்து நிற்கும் போது

சிரிப்பையே மறந்து இருக்கும் போது

விரக்தியில் தவித்திருக்கும் போது

வண்ணங்கள் எல்லாம் மறைந்து இருக்கும் போது

தொலைவில் மனதில் பிடித்த பாடல் ஒன்று ஓடி மனதை தேற்றுவது போல

“அந்த குரல்”

சரியான நேரத்தில்

சரியான விகிதத்தில் வந்து சேர்ந்ததால் அவ்வளவு ஸ்பெஷல்.

ஆதவன் அஸ்தமித்து, நிலாப் பெண் மெல்ல மெல்ல தன் மதிமுகம் காட்டும் நேரம், விடிவெள்ளிகள் ஒவ்வொன்றாய் கண்சிமிட்ட, தங்கள் வாழ்விலும் விடிவெள்ளிகள் முகிழ்க்க ஆரம்பித்ததை இனிமையாக உணர ஆரம்பித்தனர் தம்பதியினர் இருவரும்.

கசக்குமா..?         

You may also like

Leave a Comment

About Me

Featured