தூரம் 24
தன் வீட்டின் ஹாலில் ருத்ரமூர்த்தியாக அமர்ந்திருந்தான் இளங்கோ. அவனுக்கு எதிரில் நடுங்கிப்போய் நின்றிருந்தாள் கொடி. அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தார் சுப்பு.
கந்தவேலு அந்த நேரம் பார்த்து வீட்டில் இல்லை. ஒருவேளை அவர் இருந்திருந்தால் பிரச்சனையை பெரிதாக்காமல் பார்த்திருப்பாரோ என்னமோ? அல்லது சுப்புவையாவது அடக்கியிருப்பார். ஆனால் அன்று அனைத்துமே கொடிக்கு எதிராக திரும்பியிருந்தது.
மனைவியிடம் கேட்டால் பதில் சொல்லமாட்டாள் என்று நினைத்த இளங்கோ, பரமனிடம் விசாரித்தான்.
அப்போதுதான் அவள் முதல் முறை பணம் வாங்கியது, அதை திருப்பிக் கொடுத்தது, இப்போது பணம் வாங்கியது என எல்லாவற்றையுமே பரமன் இளங்கோவிடம் கூறியிருந்தான்.
சுப்புவிற்குமே இது அதிர்ச்சிதான். மகனுக்கு தெரியாமல் எப்படி இப்படி ஒரு வேலையை பார்த்து வைத்திருக்கிறாள் மருமகள் என்று, பயங்கர கோபம்.
பரமனின் முன்பு பிரச்சனையை பெரிதாக்க விரும்பாத இளங்கோ, “இப்போ கிளம்புங்க, பணத்தை உங்க கடையில வந்து கொடுக்குறோம்.” என அவனை அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் வந்தவன் தான் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
கணவனின் அமைதி, கொடியை பயம் கொள்ள வைக்க, “மாமா…” என்றதும் தான் தாமதம்.
“ச்சீ… வாயை மூடு! என்ன பொம்பள நீ? உன்னை எவ்வளவு நம்பியிருப்பான் என் பையன். அவன் நம்பிக்கையையே உடைச்சிட்டியே… இதுதான் ஒரு குடும்ப பொம்பளைக்கு அழகா? ஒரு பிச்சைக்காரி கூட தன் புருசனுக்கு தெரியாம எந்த இடத்துக்கும் பிச்சையெடுக்க போகமாட்டா. ஆனா நீ இத்தன வருசமா என் பையனை ஏமாத்தி, அவனை பணம் காய்க்கிற மிசினா நினைச்சி வச்சிருக்க.
இதுக்குத்தான் நீயே வேணும்னு என்னைக்கூட மதிக்காம உன்னை கட்டிட்டு வந்தானா? உன்னை தங்கமா தாங்கினதுக்கு நல்ல பலனை கொடுத்துட்ட… இது மட்டும்தான் செஞ்சிருக்கியா? இல்ல, இன்னும் வேற வேலையெல்லாம் செஞ்சிருக்கியா?” என நாக்கில் நரம்பில்லாமல் பேசிக்கொண்டே போனார் சுப்பு.
பொதுவாகவே கொடிக்கு எதிர்த்து பேசி பழக்கம் இல்லை. இப்போது சுப்பு பேசியதற்கும் கதறியழுதாளே தவிர பதில் பேசவில்லை.
“அழுது ஊமை மாதிரி இருந்துதானே இவ்வளவு பெரிய தப்பை செஞ்சிருக்க… நீயெல்லாம் என்ன குடும்ப பொம்பள? அவுத்துவுட்ட மாடு மாதிரி உன்னை விட்டுட்டான் இல்ல, அதான் உன் இஷ்டத்துக்கு ஆடிகிட்டு இருக்க. உன்னை நம்பி பிள்ளைங்கள விட்டா அதுங்களும் உன்னை மாதிரியே பொய் சொல்லி ஏமாத்திட்டு இருக்கும்…” என அடுத்து என்ன பேசியிருப்பாரோ,
“அக்கா போதும்…” என்று சந்திரா சுப்புவை சத்தமிட,
“என்னை எதுக்கு அடக்குற சந்திரா, அவ செஞ்ச காரியத்தை பார்த்தியா? குடும்பத்தையே சந்தி சிரிக்க வச்சிட்டா…” என சந்திராவிடமும் கத்த ஆரம்பித்துவிட்டார்.
“போதும்னு சொன்னேன்க்கா, எதுவா இருந்தாலும் தம்பி பேசட்டும். நீங்க பேசினா பிரச்சனை வேறமாதிரி ஆகிடும். அவங்க பேசி முடிவுக்கு வரட்டும். நீங்க இனி பேசாதீங்க.” என அடக்க, சுப்புவிற்கும் விட மனசில்லைதான். ஆனால் மகனின் முகத்தில் தெரிந்த ஆக்ரோசத்தில், இனி அவனே பேசட்டும் என வாயை மூடிக்கொண்டார்.
ஆனால் அவர் முகத்தில் தெரிந்த வன்மம் கலந்த ஏளனத்தைப் பார்த்த சந்திராவுக்கு, ‘ச்ச்சீய்…’ என்றானது. அவருக்கும் கொடியின் மீது கோபம்தான். தன்னிடமாவது சொல்லியிருக்கலாமே என்ற ஆற்றாமையும் அவருக்குள் இருந்ததுதான். ஆனால் இளங்கோ கடும் கோபத்தில் இருக்கும் நேரம், அவரும் வாயை விட மனமில்லாமல் அமைதியாகிவிட்டார். அதோடு கந்தவேலையும் உடனே வரவழைத்து விட்டார்.
மாமியார் பேசியதைக் கூட கொடி கண்டுகொள்ளவில்லை. ஆனால் கணவனின் அந்த பேரமைதிதான், அவளை உயிரோடு வதைத்தது. எப்படி அவனிடம் பேசுவது எனக்கூட தெரியாமல் தவித்துப் போனாள் பேதை.
தன் மொத்த தைரியத்தையும் வரவழைத்து, அவன் அமர்ந்திருந்த சோபாவின் காலுக்கடியில் அமர்ந்து மீண்டும், “மாமா!” என அழுகையுடன் அழைத்தாள்.
அதுவரை அடக்க முடியாமல் அடக்கியிருந்த மொத்த கோபத்தையும், அவளின் முகத்தைப் பிடித்து தன் அருகில் இழுத்தவன், “ஏன்டி… ஏன் இப்படி பண்ண? எத்தனை தடவை சொல்லி இருப்பேன் உன்கிட்ட, எங்கிருந்து உனக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு? சொல்லுடி… எந்த தைரியத்துல இதெல்லாம் பண்ண?” என வார்த்தைகளை ஆங்காரமாய் உதிர்த்தான் இளங்கோ.
ஏற்கனவே பயத்திலும் அழுகையிலும் சிவந்து வீங்கியிருந்த அவளின் பால் வண்ண முகம், அவன் அழுத்தியதில் ரத்தமே வந்துவிடும் அளவிற்கு சிவந்து போனது.
சந்திராதான் ஓடிவந்து, “தம்பி என்ன பண்ற?” என கொடியை அவனிடமிருந்து விலக்க,
“என்ன பண்ணிருக்கா பாருங்க சித்தி. இதெல்லாம் தெரியாம, நானும் ஆம்பளனு ஊரைச் சுத்திகிட்டு இருந்திருக்கேன். இப்படி கடங்காரன் வீட்டு வாசல்ல நின்னுட்டு போனது தெரிஞ்சா, எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க? பொண்டாட்டி செலவுக்கெல்லாம் பணம் கொடுப்பானோ, மாட்டானோனு எவ்வளவு கேவலமா நினைச்சிருப்பாங்க…” என்றவன் மனைவியை அருவருப்பாக பார்க்க, அந்த பார்வையில் கொடி துடிதுடித்துப் போனாள்.
“மாமா உதவின்னு தான் செஞ்சேன் மாமா, இப்படி எல்லாம் பிரச்சனை வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னை மன்னிச்சிடுங்க மாமா, நான் செஞ்சது பெரிய தப்புதான். உங்ககிட்ட சொல்லாம விட்டது என் தப்புதான். அது பயத்துல… நீங்க இதெல்லாம் செய்யக்கூடாதுனு சொன்னீங்க, அதை மீறி நான் செஞ்சதுனால நீங்க கோபப்படுவீங்கனு தான் சொல்லல. ப்ளீஸ் மாமா… என்னை மன்னிச்சிடுங்க…” என காலில் விழுந்து கதறினாள்.
“ச்சீ… ச்சீ…” என வேகமாக அவளைத் தள்ளிவிட்டவன், “தொடாத என்னை… நீ தொடுறத கூட நான் பாவமா நினைக்கிறேன். உன்னை நம்பினேன், முழுசா நம்பினேன். இதுவரைக்கும் கடன்னு ஒரு பைசா கேட்டு யார்கிட்டயும் நான் போய் நின்னது கிடையாது. கடன் வாங்குறதையே பாவம்னு நினைக்கிறவன் நான். ஆனா நீ எத்தனை தடவை வாங்கி அதை என்கிட்ட மறைச்சு, அந்த பணத்தை கட்டிருக்க. அதுவும் கந்து வட்டிக்கு…
எங்க இருந்து உனக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு? பணத்தை மொத்தமா உன் கையில கொடுத்ததினால வந்த திமிரு தானே இது? நீ எல்லாம் பாத்துக்குவனு உன்னை நம்பி நான் வேலை வேலைனு அலைஞ்சேன் பாரு, எனக்கு இது தேவை தான். எல்லா ஆம்பளைங்க மாதிரி நானும் உன்னை வச்சிருந்தா என் அருமை உனக்கு தெரிஞ்சிருக்கும்…” என வாய்க்கு வந்ததை எல்லாம் நிதானம் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தான் இளங்கோ.
கொடியால் கணவனின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியவில்லை. தான் செய்ததற்கு விளக்கம் கூட அவளால் கொடுக்க முடியவில்லை.
“மாமா… மாமா… அப்படியெல்லாம் பேசாதீங்க, நான் செஞ்சது எல்லாம் தப்புதான்…” என்ன கொடியும் ஒரு பக்கம் கதற,
“உன்னை நம்புனதுக்கு என்ன செருப்பால் அடிச்ச மாதிரி, பதில் கொடுத்துட்ட. உன்னை பார்க்கவே பிடிக்கல, முதல்ல என் முன்னாடி இருந்து போ…” என ஆக்ரோசமாக கத்த,
“தம்பி… தம்பி எதுக்கு இவ்வளவு கோபம்? அமைதியா இரு, பொறுமையா பேசலாம்.” என சந்திராதான் இடையில் திண்டாடினார். சுப்புவோ அப்படியே வேடிக்கை பார்த்தபடி நின்றார்.
“அவளை இங்க இருந்து போக சொல்லுங்க சித்தி, என் கண் முன்னாடி நின்னா இருக்குற கோபத்துக்கு கொலை கூட பண்ணிடுவேன்.” என ஆங்காரமாய் கத்தியவன், தன் வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறி விட்டான்.
அவனுக்கு தன் கோபத்தை அடக்க முடியவில்லை. தன் மனைவியின் இந்த செயலை அவனால் யோசிக்கக்கூட முடியவில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்த தன் மடத்தனத்தையே வெறுத்தான்.
வீட்டில் இருந்தால் மேலும் மேலும் வார்த்தைகளை விட்டுவிடுவோமோ என்றுதான் வெளியேறினான். அவள் மேல் உண்டானது கோபம் மட்டுமல்ல அதையும் தாண்டிய ஒரு அதிர்ச்சி. இவளை திருமணம் செய்ய எத்தனை போராட்டங்கள், வேதனைகள். தன் தாயையே ஒதுக்கினானே? இன்று அவர் முன்பே இதெல்லாம் நடக்க, அவரை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவனால்.
‘நீ விரும்பி திருமணம் செய்தவளின் லட்சணத்தைப் பார்’ என்பது போல இருந்தது அவரின் பார்வையும் செயலும்.
கணேசனை அழைத்து அவள் வீட்டில் இருந்து அனைவரையும் வரவைத்திருந்தான். அவனுக்கு இன்னுமே கொடியின் இந்த செயலை ஏற்கவும் முடியவில்லை, நம்பவும் முடியவில்லை.
எத்தனை நேரம் வெளியில் சுற்றினானோ, மணி மூன்றாகியிருந்தது. வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் வீட்டுக்குள் நுழையும் போது காலையில் அவன் எப்படி விட்டுப்போனானோ அப்படியே அம்ர்ந்திருந்தாள் கொடி. அவளுக்கு அருகில் இரு அக்காக்களும் அமர்ந்திருக்க, எதிரில் இயலாமையுடன் அமர்ந்திருந்தார் சங்கர்.
அவர்கள் வந்து நுழைந்ததில் இருந்து வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார் சுப்புலட்சுமி. கணவன் அடக்கியும் அவர் வாய் ஓயவில்லை. பதிலுக்கு பதில் பேசும் அமுதா கூட வாய் திறக்கவில்லை.
அவர்களுக்குமே இது பேரதிர்ச்சிதானே? தங்கள் கொடியா இப்படி என இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்தே வெளிவரவில்லையே?
இளங்கோவைப் பார்த்ததும் சங்கர் ஒன்றையும் யோசிக்கவில்லை. தன் மகள் செய்தது தப்பு, அதை அவர் மறுக்கவில்லை. அதனால் மருமகனின் காலில் அப்படியே விழுந்துவிட்டார்.
“ப்பா…” என பெண்களின் அலறல்கள் ஒரு பக்கம், “மாமா என்ன பன்றீங்க?” என்ற மருமகன்களின் அதட்டல்கள் ஒரு பக்கம், “அய்யோ அண்ணா…” என சந்திராவின் கதறல் ஒரு பக்கம், “மாமா…” என்ற அதட்டலுடன் அப்படியே அவரருகில் தரையிலேயே அமர்ந்துவிட்டான் இளங்கோ.
தந்தையின் இந்த செயலை எதிர்பார்க்காத கொடி, அதிர்ச்சியில் விழிகள் மங்க, அதற்குள் கன்னம் கன்னமாக அறைந்திருந்தாள் அமுதா.
“ஏன்டி… ஏன்டி… உனக்கு புத்தி இப்படி போச்சு? எத்தனை தடவை சொல்லிருப்பேன் கவனமா இருக்கணும், யாரையும் நம்பாதன்னு கேட்டியா? இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க?” என கதறியபடியே அறைய, ஆனந்தி வந்து தடுக்கும் முன் மயங்கி விழுந்திருந்தாள் கொடி.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில், நடந்த அதிர்ச்சியில் இருந்து யாருமே வெளிவரவில்லை.
சுப்பு இவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என்று நினைக்கவே இல்லை. மனைவி மனைவி என கொடியைத் தாங்கும் மகனுக்கு அவளைப்பற்றி தெரிய வேண்டும் என்றுதான் செய்தார்.
ஆனால் அவரே எதிர்பார்க்காதது, சங்கர் மகன் காலில் விழுந்தது, அமுதா கொடியை அறைந்தது, கொடி மயங்கி பேச்சு, மூச்சுற்று கிடப்பது. இவைகளைப் பார்க்கும் போதே அவருக்கும் பயம் வந்துவிட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் இறுமாப்பாய் அமர்ந்திருக்க,
“கொடி… கொடிமா…” என ஆனந்திதான் அவளை உலுக்க, “அய்யோ…!” என கதற ஆரம்பித்துவிட்டாள் அமுதா.
சந்திரா தண்ணீர் எடுத்துவர, அதை வாங்கி தங்கையின் மயக்கத்தைத் தெளிய வைத்த ஆனந்தி அவளைக் கட்டிக்கொண்டு அப்படியொரு அழுகை.
ஆனால் அதுவரை அழுது கரைந்து கொண்டிருந்த கொடி அப்படியே அமைதியாகிவிட்டாள். எப்போது தன் தந்தை கணவனின் காலில் விழுந்தாரோ, அப்போதே அவள் செத்துவிட்டாள்.
உயிரும் உணர்வும் அற்ற இந்த உடலை இனி யார் அடித்தாலும் கவலை இல்லை. என்ன நடக்குமோ நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.
அடுத்து அங்கு அவள் ஒரு காட்சிப்பொருளாக மட்டும் தான் இருந்தாள். இளங்கோ பேசினான், நிறைய பேசினான். அவனின் காதல் மனைவி என்ற உணர்வெல்லாம் எங்கேயோ காணாமல் போயிருந்தது.
அங்கிருந்த யாருமே இளங்கோவின் இந்த பேச்சை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ஏன் சுப்புவே எதிர்பார்க்கவில்லை. அவருக்குள் இப்போது நிதானம் வர, அது காலம் கடந்தது என அவருக்கு புரியவைத்தான் மகன்.
“என் வீட்டுல இருக்கணும்னா அவ வேலைக்கு போகட்டும். அந்த கடனை அவதான் கட்டணும். யாரும் அவளுக்கு உதவக்கூடாது. நான் சொகுசா வச்சிருக்க போய்தானே அவளுக்கு என் அருமையும், பணத்தோட அருமையும் தெரியல. வேலைக்கு போய் கடனை கட்டட்டும், அப்போ தெரியுமில்ல இந்த பணத்தோட அருமை.
இனி வரவு, செலவெல்லாம் பார்க்க வேண்டாம், இருக்குற நகையை எல்லாம் அம்மா நீங்க வாங்கி வைங்க. அதையும் எப்போ வித்து தொலைப்பாளோனு காவல் காத்துட்டு இருக்க முடியாது.” என்றவன் அப்போதே அவளிடமிருந்து அனைத்தையும் வாங்கி சுப்புவிடம் கொடுத்திருந்தான். அதன்பிறகு தன் அறைக்குள் சென்றவன்தான், அவர்கள் அனைவரும் கிளம்பும் வரை வெளியில் வரவில்லை.
அவன் சொன்ன அனைத்தையும் செய்தாள். தன் கழுத்தில் இருந்த தாலி முதற்கொண்டு அனைத்தையும் கழட்டி கொடுத்தாள். சந்திரா சத்தம் போட, அதை கண்டுகொள்ளவில்லை. வந்திருந்த யாரிடமும் பேசவில்லை.
சங்கருமே பிழை செய்த இடம் அதுதான். மகளுக்காக காலில் விழுந்தார், ஆனால் மகளிடம் ஒருவார்த்தை கூட ஆறுதலாக பேசவில்லை.
அவள் உயிர் துடிக்க துடிக்க, வலிக்க பேசினான் அவள் கணவன். அந்தோ பரிதாபம், அது அவளுக்கு வலிக்கவில்லை. அவள் தான் மனதோடு மறித்துவிட்டாளே? இனி வலித்தாலும் தெரியாதே… யார் பேசினாலும் பேசாவிட்டாலும் என்ன என்ற விரக்தி நிலைக்கு வந்துவிட்டாள்.
பெற்றவர்களும் மற்றவர்களும் இரண்டு நாளில் கோபம் போய் ராசியாகி விடுவார்கள் என்று நினைத்து கிளம்ப, அது தூரமாகி போகும் என அவர்களுக்கு தெரியவில்லை.
பள்ளிவிட்டு வந்த குழந்தைகளைத் தன்னோடு வைத்துக்கொண்டார் சுப்பு.
கொடி என்ன செய்தாலும் சண்டை, அவளை வார்த்தைகளாலே வதைத்தான். குழந்தைகள் முன்னாடியே அத்தனை பேச்சு. பெற்றவர்களின் இந்த சூழலைப் புரிந்து கொண்ட குழந்தைகள் தாய் மீதுதான் தவறோ என நினைத்து அவளிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தனர்.
தன் பிரச்சனையிலேயே இருந்த கொடிக்கும் முதலில் இது புரியவில்லை. நாளடைவில் அவளுக்கு புரியும் போது குழந்தைகள் அவளிடமிருந்து வெகுதூரம் சென்றிருந்தனர்.
நான்கு மணிக்கு எழுந்து வீட்டு வேலையை எல்லாம் முடித்து, இவர்கள் கிளம்பிய அடுத்த நிமிடம் காட்டு வேலைக்கு செல்வாள்.
முற்றிலும் பழக்கமில்லாத வேலை, அவளை மிகவும் கஷ்டப்படுத்தியது. ஆனாலும் அவளது வைராக்கியம் அவளை ஓட வைத்தது.
அரசல் புரசலாக பிரச்சனை வெளியில் தெரிய, அந்த குழு பெண்கள் அவளுக்காக மிகவும் வருந்தினர். அதோடு தங்களோடு வேலைக்கு அழைத்து, அவளுக்கு முடிந்தளவில் உதவினர். வேலையைக் கற்று கொடுத்தனர். அவளுமே அனைத்தையும் கற்றுக் கொண்டாள்.
அவள் ஒதுங்கினாளா? இல்லை அவர்கள் ஒதுக்கினார்களா? தெரியாது. நால்வராக இருந்த குடும்பம் மூவராக அவர்களுக்குள்ளே சுருங்கிப்போனது.
கந்தவேலு மனைவியிடம் பேசுவதில்லை. செய்தியை கேள்விப்பட்ட வெங்கடேஷ் தாயைதான் திட்டினான். வனிதாவும் இதை பெரிதாக எடுக்கவில்லை, காரணம் கிராமங்களில் இதெல்லாம் மிகச் சாதாரணமாக நடக்கிறதுதான். ஏன், அவளுடைய ஊரிலேயே இப்படி லோன் வாங்கி கொடுப்பவர்களை பார்க்கிறாளே, பிரச்சனையை பெரிதாக்கியது தன் தாய் தான் என வெங்கடேஷிற்கும் புரிந்தது.
இளங்கோ இல்லாத நேரம் வந்து தாயை தயவு தாட்சண்யம் இல்லாமல் திட்டிவிட்டான். நடேசனும் சுப்புவைத்தான் சத்தம் போட்டான். நந்தினியும் தன் பெரியப்பனைப் பின்தொடர்ந்து சுப்புவிடம் பேச்சை நிறுத்திவிட்டாள்.
முதலில் கோபத்தில் சங்கர் மகளிடம் பேசாமல் இருந்தார்தான். ஆனால் சந்திராவின் மூலம் அங்கு நடப்பது தெரிய துடித்துப் போனார்.
அய்யோவென்றாகிப்போனது அவருக்கு. பலமுறை வந்து அவளுக்கு சமாதானம் செய்தும் அவள் சிரித்தாளே தவிர பதில் சொல்லவில்லை. ஆனால் உழைத்தாள், வைராக்கியமாக உழைத்தாள்.
உடல் ஓய்வுக்கு கெஞ்சினாலும் உழைத்தாள். அவளது உழைப்பைப் பார்த்து அனைவரும் வியந்துதான் போயினர்.
ஊரில் எல்லோரும் சுப்புவை பேச, அவருக்கோ அசிங்கமாகி போனது. கணவரும் சிறிய மகனும் அவரிடம் பேசாதது வேறு எரிச்சலைக் கொடுத்தது.
ஒரு நாள் இளங்கோ இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கு வந்தவர், மருமகளிடம் பணத்தைக் கொடுத்து, “இத போய் அந்த கந்துவட்டிக்காரனுக்கு கொடுத்து கணக்கு முடிச்சிடு. உன்னால எனக்கு தான் அசிங்கமா இருக்கு. ஊரே கேவலமா பேசுது. இனி நீ எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை. ஆனா காட்டு வேலைக்கு மட்டும் போக வேண்டாம். உன்னால எனக்கும் என் பையனுக்கும் தான் அசிங்கம்.” என்று மிகவும் ஏளனமாகவும் இளக்காரமாகவும் பேசிக்கொண்டே அவளிடம் பணத்தைக் கொடுத்தார் அவர்.
அவளோ அதை வாங்காமல் அவரையே வெறித்துப் பார்த்தவள் சில நொடிகளில், “அன்னைக்கே நான் செத்துட்டேன், இந்த கடனை கட்டி முடிக்கிற வரைக்கும் உடம்புல உயிர் இருந்தா போதும்னு நினைச்சுட்டு இருக்கேன். அதை இப்பவே எடுக்கணும்னு நீங்க நினைச்சா, இந்த பணத்தை நான் வாங்கிக்கிறேன்.” என மிகவும் நிதானமாக கூற அதிர்ந்து போனார் சுப்புலட்சுமி.
“ஏய் என்ன பேசுற?” என கோபமாக கேட்க,
“இந்த பண பிரச்சனையை பத்தி பேசுறதா இருந்தா இனிமே என்கிட்ட பேச வேண்டாம்.” என்றவள் தன் வேலையைப் பார்க்க,
“எவ்வளவு பட்டாலும் உனக்கெல்லாம் புத்தி வராதுடி. காட்டுல மேட்டுல கஷ்டப்பட்டா தான் உனக்கு எல்லாம் வலினா என்னன்னு தெரியும். பாவம் பார்த்து உனக்கு கொடுக்க வந்தேன் பாரு, என்னை சொல்லணும்…” என மருமகளைத் திட்டிவிட்டு திரும்ப, அங்கே கந்தவேல் ஆக்ரோஷமாக நின்றிருந்தார்.
மனைவியின் பேச்சில் கோபம் தலைக்கேற ஓங்கி அறைந்திருந்தார் தன் வயதையும் மீறி.
“நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடி? அவளைத்தான் அன்னைக்கே உயிரோட கொன்னுட்டியே… இன்னும் என்ன பண்ணலாம்னு இங்க வந்து நின்னுட்டு இருக்க?” என மீண்டும் அடிக்கப் போக,
“மாமா வேண்டாம், இந்த பிரச்சனையை இப்படியே விடுங்க.” என்றவள் கிச்சனுக்குள் நுழைந்துவிட்டாள்.
சுப்பு வீட்டிற்கு சென்றுவிட, கந்தவேலுதான் அடுத்து என்ன செய்ய என அறியாமல் நின்றார்.
சங்கரைத் தொடர்ந்து அமுதாவும் ஆனந்தியும் வந்து கொடியைப் பார்த்து சென்றாலும், இவள் அதிகம் அங்கு போவதை நிறுத்திக்கொண்டாள்.
வெங்கடேஷ் வார இறுதியில் குடும்பத்துடன் வந்து தங்கி சென்றான். வெங்கடேஷின் இரண்டாவது மகனுக்கு கொடி வேண்டும். அவனுக்காகவே வார இறுதியில் வந்துவிடுவார்கள்.
வனிதா, கொடியிடம் நல்லமுறையில் பேச, அது பிடிக்காத சுப்பு தன் அண்ணன் மகளை சத்தம் போட, அதைக் கண்ட வெங்கடேஷ் சுப்புவை ஒருவழி செய்துவிட்டான்.
மகளின் சடங்கிற்கு கூட மூன்றாவது ஆள் போல நின்ற கொடுமையை எங்கே போய் சொல்வாள்? வலித்தது தான், ஆனால் என்ன செய்ய முடியும்? தன் வீட்டாள்களோடு சற்றே சமாதானம் ஆனது அப்போதுதான்.
அமுதா தான் அனைத்திற்கும் கொடியை இழுத்து வைத்து செய்யவைத்தாள். பேத்திக்கு ஊரே வியக்கும்படி சீர் செய்தார் சங்கர். அப்போதாவது மருமகனின் கோபம் குறையுமா என்று பார்த்தார்.
கோபம் குறைந்ததுதான், ஆனால் அது இளங்கோவிற்கு அல்ல, சுப்புவிற்கு. அதுவும் காலம் கடந்ததுதானே!
திடீரென சுப்புவிற்கு நெஞ்சுவலி எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கே கொடியும் இளங்கோவும்தான் முழுவதுமாக பார்த்துக்கொண்டனர்.
வெங்கடேஷும் வனிதாவும் பார்த்துவிட்டு இரவே சென்றுவிட்டனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த நான்கு நாட்களும் கொடிதான் பார்த்தாள். தாயாக அனைத்தையும் செய்ய, கூனிக்குறுகி போனார் சுப்பு.
தன் அண்ணன் மகளையும் கொடியையும் தராசில் வைத்துப் பார்த்தார். அவர் குணம் மாறாது தான், ஆனாலும் மனசாட்சி அனைத்தையும் அளந்து பார்த்தது. குணம் மாறாவிட்டாலும் மனம் மெல்ல மெல்ல கொடியின் பக்கம் சாயத் தொடங்கியது.
அவளுக்காக மகனிடம் பேசினார், கெஞ்சினார். பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். இதெல்லாம் பார்த்தாலும் கேட்டாலும் எதிலும் தலையிடவில்லை கொடி.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது பேச்சிதான். தன் பேத்தியின் நிலைக்கு தானும் ஒரு காரணமோ என வெகுவாக கலங்கிப் போனார்.
நாட்கள் இப்படியே கழிந்தாலும் இளங்கோவிடம் எந்த மாற்றமும் இல்லை. கொடியும் அதை எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பிற்கு பிறகு மிகவும் நிதானம் ஆனாள். முன்னமே எதையும் எதிர்பார்த்ததில்லை. இப்போது முற்றிலும் நிறுத்தியிருந்தாள். முடிந்தளவு கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்பதுதான் அவளது ஒரே வேண்டுதலாக இருந்தது.
இந்த இரண்டாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள். நினைக்கவே முடியாத அளவுக்கு மற்றும் அழிக்கவே முடியாத எத்தனையோ நிகழ்வுகள். பெருமூச்சு வந்தது நடராஜிடம்.
எப்படி இளங்கோ இதை சரி செய்யப்போகிறான் என்பதுதான் எல்லோரின் கேள்வியாக இருந்தது.
கொடி சரியாகி வந்தாலே போதும் என்ற வேண்டுதல் மட்டும் தான் அனைவருக்கும் இருந்தது.
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது நம்பிக்கை. அப்படி மாறாவிட்டாலும் சமாளித்து விடலாம் என்பது தன்னம்பிக்கை. இளங்கோவின் காதல் என்ன தரப்போகிறது? நம்பிக்கையா? தன்னம்பிக்கையா?
***